சமகால தமிழ் சினிமாவில் தேவர் சமூகத்தின் கதையாடல்களை வன்முறையோடும், பெருமிதத்தோடும் முன்வைக்கும் படைப்பாளிகளுள் முக்கியமானவர் முத்தையா. ’குட்டிப் புலி’ தொடங்கி, ‘கொம்பன்’, ‘மருது’, ‘தேவராட்டம்’, ’விருமன்’ முதலான அவரது அனைத்து திரைப்படங்களும் சாதியப் பெருமிதக் குறியீடுகளாலும், சாதியக் கட்டமைப்பை வீரம் பொருந்திய கலாச்சாரமாக சித்தரிக்கும் காட்சியமைப்புகளாலும் நிரம்பியிருப்பவை; மேலும், அவை குடும்பப் பிணைப்பு என்ற புள்ளியில் இருந்து சாதிய, ஆண் மையவாதக் கண்ணோட்டத்தை மீண்டும் சமகால சமூகத்தில் உற்பத்தி செய்பவை. மண்வாசனைத் திரைப்படங்கள் என அழைக்கப்படும் கிராமம் சார்ந்த, குறிப்பாக தென் மாவட்டங்களின் நிகழும் கதைக்களங்களைக் கொண்ட இந்த வகைத் திரைப்படங்களில் இத்தகைய பண்புகள் இருப்பது பல அறிஞர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், முத்தையாவின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்கள் முற்றிலும் வேறுபடுவதோடு, சாதியப் பெருமிதத்தின் பெண் முகமாக அடையாளம் பெறுகின்றனர்.
கிராமப் புற சினிமாவுக்கே உரிய, குறும்பு செய்யக்கூடிய, வெள்ளந்தியான, நகரத்தின் கலாச்சாரத்தால் சீண்டப்படாத பெண் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியைப் போல தோற்றம் கொண்டிருந்தாலும், வழக்கமாக ஆண் நாயகர்களுக்கு உரிய மிடுக்கும், தோரணையும் முத்தையாவின் பெண்களுக்கு இருப்பதைக் காண முடியும். இது அவரின் எல்லா திரைப்படங்களிலும் பல்வேறு பெண் கதாபாத்திரங்களில் இடம்பெற்றிருக்கின்றன. தன் சொந்த சாதி ஆண்களோடு மல்லுக்கு நிற்பதையும், தனக்கான வெளியைக் கோருவதிலும் இந்தக் கதாபாத்திரங்கள் தைரியமான பெண்களாக முன்வைக்கப்படுகின்றனர். எனினும், இத்தகைய கதாபாத்திரங்கள் சாதியக் குழுவின் விசுவாசத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், சாதியின் மானம், சொத்து, உள்சாதித் திருமணம் முதலானவற்றைப் பாதுகாப்பவர்களாக இந்த சித்தரிப்புகளைக் கருத முடியும். சமீபத்தில் திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் கவின் விவகாரத்தில் அவரது காதலி சுபாஷினி பேசிய வீடியோவில் தனது பெற்றோரைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் இதனோடு பொருத்த முடியும். சுபாஷினியின் கையறுநிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய அதே வேளையில், சாதியத்தின் இயங்குமுறை அவரை வைத்தே மீண்டும் சாதிய ஒழுங்கைப் பாதுகாக்க வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முத்தையாவின் பெரும்பாலான திரைப்படங்கள், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அறிமுகப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள் வழக்கமான மென்மை, தாய்மை முதலான பண்புகளில் இருந்து விலகி, வீரம், மானம், துணிவு முதலான பண்புகளோடு காட்சிப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெண்களின் ‘சரியான’ கோபத்தில் இருந்தே, சாதியைப் பாதுகாக்கும் கூறுகளின் வழியாக, கதையின் மையத்தை விளக்குகின்றன முத்தையாவின் திரைப்படங்கள். உதாரணமாக, ‘குட்டிப் புலி’ திரைப்படத்தின் தாய்-மகன் உறவின் பிணைப்பைக் காட்டும் எல்லையில், மகனின் எதிரியைத் தாயே கொலை செய்வதாக திரைப்படம் முடிவடைகிறது. இறுதியில் ‘பெண்மையே வீரம்’ என்று பார்வையாளர்களுக்கு கூறப்படுகிறது. அவரது ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’,.’தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ ஆகிய அனைத்து திரைப்படங்களிலும் இப்படியான பெண் கதாபாத்திரங்கள் முதன்மையாக இடம்பிடித்திருப்பதைக் காணலாம். மென்மையோடும், ஆணின் துணையாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்ட கிராமத்துப் பெண்களைப் போல அல்லாமல், முத்தையாவின் நாயகிகள் ஒப்பீட்டளவில் துணிச்சல் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இவை முற்போக்காக தோன்றினாலும், இந்தப் பெண் கதாபாத்திரங்களின் மையம் என்பது சாதியைப் பாதுகாத்தலில் ஊன்றியிருக்கிறது.
முத்தையாவின் பெண்கள் ஆண் நாயகர்களைப் போல ‘வீரம்’ என்பதை வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். அவரது குரல்கள் துணிச்சலாக எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றன. எனினும், அது சாதி தரும் உயர்வான மனநிலையில் இருந்தும், பெருமிதத்தில் இருந்தும், ‘மானம்’, ‘கற்பு’ முதலான பழமைவாத நெறிகளிலும் வேரூன்றியிருக்கின்றது. முத்தையாவின் பெண்கள் எழுப்பும் குரல்கள் சாதியை எதிர்த்து அல்ல; சாதியைப் பாதுகாப்பதற்கு எழுகின்றன. இந்தப் பெண்களுக்கு முத்தையா வழங்கும் ‘வீரம்’, ‘துணிச்சல்’ ஆகிய குணநலன்கள் சாதியையோ, நிலவும் பிற அசமத்துவ இடைவெளிகளையோ எதிர்த்துக் கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, அவை சாதிய ஒழுங்குமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த பயன்படுகின்றன. இத்தகைய வழமையான சினிமாவில் இடம்பெறும் ஆணுக்கே உரிய குணநலன்களைப் பெண் கதாபாத்திரங்களுக்கு மடைமாற்றவும், அவர்களுக்கும் நாயக பிம்பத்தை வழங்கவும் தமிழ் சினிமாவின் வெகுஜனத் திரைப்பட வடிவம் இடமளிக்கிறது.
தமிழ் சினிமாவின் மதுரையை மையப்படுத்திய தேவர் சாதி பெருமிதத்தைப் பேசும் திரைப்படங்கள் குறித்து நேர்த்தியான ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ’மதுரை ஃபார்முலா’ திரைப்படங்கள் என அழைக்கப்படும் இந்தத் திரைப்படங்களில் பொது அம்சமாக, நிலம், சொத்து முதலான மூலதனங்களைக் கொண்டிருக்கும் தேவர் சமூகத்தின் ஆண்மையைப் போற்றுபவையாக இருக்கின்றன. இதனை வன்முறை, சாதிய கிராம அளவீடுகளின் அடிப்படையிலான நெறிகள், மானம், பழிவாங்குதல் முதலானவற்றின் வழியாக இந்தத் திரைப்படங்கள் கட்டமைக்கின்றன. இங்கு ஆண்மை என்பது சாதியோடு நேரடியாக தொடர்புபடுத்தப்படுகிறது. அதற்கு அரிவாள் முதலான ஆயுதங்கள், முறுக்கு மீசை, முழங்காலுக்கு மேல் மடித்து கட்டப்படும் வேட்டி, சுற்றிலும் அடியாள்கள் முதலான பொருள்களும், அலங்காரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ‘மானம்’ காப்பதே சாதிய வாழ்வின் முதன்மைக் குறிக்கோள் என்னும் கருத்தை சமூகத்தின் பொதுப்புத்தியாக கட்டமைக்க இந்தத் திரைப்படங்கள் அதற்கு ஆண்கள் ’வீரம்’ என்பதையும், பெண்கள் கற்புநெறி தவறாமல் — பிற சாதி ஆண்களோடு புழங்காமல் — இருப்பதையும் முன்வைக்கின்றன மதுரை திரைப்படங்கள்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளியான மண்வாசனைத் திரைப்படங்களின் நாயகிகள் பாலியல் ரீதியாக அடிபணிபவர்களாக, நவீனத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாலும், மீண்டும் ஆணாதிக்க, சாதிய சுழலுக்குள் சிக்கியவர்களாக, தனது ஆசைகளைக் கைவிட்டு முடிவை ஏற்பவர்களாக சித்தரிக்கப்பட்டனர். 2000களின் மதுரை சார்ந்த திரைப்படங்களைச் சேர்ந்த பெரும்பாலான நாயகிகள் சாதியை எதிர்த்து, காதலை முதன்மைப்படுத்துபவர்களாகவும், அதன் காரணமாக கொல்லப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். சாதியின் யதார்த்தத்தைக் கலைக்க முயன்றதற்காக இந்த நாயகிகளை அந்தந்த கதையாடல்களே தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. 2010களுக்குப் பிறகு, முத்தையாவின் நாயகிகளின் சித்தரிப்பு சாதியை மீறி காதலிக்கும் பெண்களாக அல்லாமல், சாதியைப் பாதுகாக்கும் பெண்களாக இருக்கின்றனர். உணர்வு, உறவு முதலானவற்றின் பெயரால் சாதியை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யும் பொறுப்பு கொண்டோராக இருக்கும் முத்தையாவின் நாயகிகள், சாதிய ஆணாதிக்கப் பெருமிதத்தின் நீட்சிகளாக செயல்படுகின்றனர். பிற பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கினாலும், வன்முறையின் சுழற்சி தொடர்ந்தாலும், சாதி மானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முத்தையாவின் நாயகிகளின் முதன்மைப் பணி. ’16 வயதினிலே’ மயிலு, ‘தேவர் மகன்’ பஞ்சவர்ணம், ‘பருத்தி வீரன்’ முத்தழகு ஆகிய நாயகிகளோடு முத்தையாவின் நாயகிகளை ஒப்பிடும்போது இதனைத் தெளிவாக உணர முடியும்.
முத்தையாவின் நாயகிகள் இப்படியாக உருவாக்கப்படுவதன் மூலமாக, தேவர் சாதியின் பெண்ணுக்கான இலக்கணமும், குணநலன்களும் பொதுப் புத்தியில் உருவாக்கப்படுகின்றன; ‘இதுதான் இயற்கை’ என்று இயல்பாக்கம் செய்யப்படுகின்றன. 2010களின் தொடக்கத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் உருவாகப்பட்ட தலித் அல்லாத அனைத்து சாதியினர் கூட்டமைப்பு என்பது திராவிட இயக்கத்தின் நீண்ட வரலாற்றில் ஒரு அவமானகரமான நிகழ்வு. அதில் சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களைப் பாதுகாப்பது முதன்மை நோக்கமாக சொல்லப்பட்டது; அதன்மூலமாக சாதியையும், சொத்துகளையும் பாதுகாப்பதை அந்த இயக்கம் முன்னெடுத்தது. முத்தையாவின் நாயகிகளை இந்த சமூக, அரசியல் நிகழ்வுகளின் விளைபொருளாகக் கருதுவதற்கு இடமுண்டு. ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் சாதியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆணவக் கொலைகளில் ஆதிக்க சாதிப் பெண்கள் தனி நபர்களாக பாதிக்கப்பட்டாலும், பிற பெண்கள் சாதிய நிறுவனத்தின் துணையுடன் சாதியின் மானத்திற்கும், அகமணமுறைக்கும் அரணாக செயல்படுகின்றனர். திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை விவகாரத்தில் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் சுர்ஜித்தின் தாய் இந்த வகையைச் சேர்ந்தவர். சாதி மானத்தையும், குடும்ப மானத்தையும் காப்பாற்றும் பொறுப்பு, அவருக்கு அடுத்ததாக சுபாஷினிக்கு அவர் விரும்பியோ, விரும்பாமலோ திணிக்கப்படுகிறது; சாதியமைப்பின் தூய்மை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை நிகழும் சாதிய வன்முறைச் செயல்கள் திராவிட அரசியலின் போதாமைகளை வெளிக்காட்டுகின்றன. நவீன திராவிட அரசியலின் இயக்கச் செயல்பாடுகளும், அரசியல் கணக்குகளும் இடைநிலைச் சாதிகளின் உருமாற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. முத்தையாவின் பெரும்பாலான திரைப்படங்கள் திமுக, அதிமுக முதலான திராவிடக் கட்சிகளின் மூலதனத்தால் உருவானவை. தேவர் ஜெயந்தி போன்ற சாதிய அடிப்படையிலான குருபூஜை நிகழ்ச்சிகள் கடந்த சில பத்தாண்டுகளில் தோன்றியவை என்னும் போது, அவற்றை அரசியல் ரீதியாக அங்கீகரித்திருக்கின்றன திராவிடக் கட்சிகள். இது ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு தலைவர் என்று படர்ந்திருக்கிறது. முத்தையாவின் திரைப்படங்களில் வெளிப்படும் பிரம்மாண்ட காட்சியமைப்புகள் (Spectacle) இத்தகைய சாதியக் கலாச்சார நிகழ்வுகளின் மூலமாக யதார்த்தத்தை வந்தடைகின்றன. திரைக்கும், உண்மைக்கும் இடையிலான வெளி சுருக்கப்படுகிறது. இப்படியான புற யதார்த்ததை சினிமா உற்பத்தி செய்யும் சூழலில், சாதியத்தை முன்னிறுத்தி, பொருளாதார ஆதாயத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பது இன்றியமையாத தேவையாக உருவெடுத்திருக்கிறது.

முத்தையாவின் பெண் கதாபாத்திரங்களை மேலோட்டமாக அணுகும் போது, ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களாக தெரியலாம். திரையில் காட்டப்படும் ஆண்களைப் போன்ற துணிச்சலும், நிலக்கிழார்களைப் போன்ற உடல்மொழியையும் கொண்டிருந்தாலும், இந்தப் பெண் கதாபாத்திரங்கள் சாதியமைப்பின் அலங்காரப் பொருள்களாக இயங்குகின்றனர். அவர்களின் அதிகாரத் தோரணை ஆண்களையே எதிர்த்தாலும், வன்முறையை ஊக்குவித்தாலும், அது சாதி, குடும்ப மானம், குலப்பெருமை முதலானவற்றைக் காப்பதற்காக மட்டுமே பணியாற்றுகிறது. தேவர் சமூகப் பெண்களைக் கடவுளர்களாக, சினிமாவின் அழிக்க முடியாத ஹீரோயிச தன்மை கொண்டவர்களாக முத்தையாவின் திரைப்படங்களில் காட்டப்படும் சித்தரிப்புகள் சாதியமைப்பை மீறுவதைத் தடுக்கின்றது; பெண்களை மீண்டும் சாதிய குடும்ப அமைப்புமுறைக்குள் விதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நிலைநிறுத்துகிறது; வன்முறையை நியாயப்படுத்துகிறது.
பல்வேறு துறைகளில் சமகாலத்தில் நிகழ்ந்திருக்கும் பெண்களின் முன்னேற்றம் காரணமாகவும், குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிரச்னைகளைப் பற்றிய, மக்களைக் குடும்பங்களாக திரையரங்கிற்கு வரச் செய்யும் சந்தைப் பொருள்களாக உருவாக்கப்படும் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பாரம்பரியத்தின் பல கூறுகளை மீறுவதாக உருவாக்கப்படுகின்றனர்; குடும்பங்களைக் கவரக்கூடிய தொலைக்காட்சி சீரியல்களும் இத்தகைய துணிச்சலான பெண்களின் கதைகள் தாம். இந்த இழையை முத்தையாவின் திரைப்படங்கள் சாதிய நோக்கில் திரிக்கின்றன.
தமிழ்நாட்டில் நிகழும் ஆணவக்கொலைகள் குறித்த ஈ.பி.டபிள்யூ ஆய்வில், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்கள் இத்தகைய வழக்குகளில் மூன்று விதமான களங்கங்களைச் சுமப்பதாகக் கூறப்படுகின்றது. முதலாவதாக, சாதி மீறி காதலிப்பதால் உருவாவது; இரண்டாவது, கொல்லப்பட்ட தனது காதலனுக்காக நீதி கேட்கத் தவறுவதால் உருவாவது; மூன்றாவதாக, கொல்லப்பட்ட தனது காதலனுக்கு நீதி கேட்டு, சொந்த குடும்பத்தையே எதிரிகளாக்குவதால் உருவாவது. கவின் ஆணவக் கொலையில் சுபாஷினியின் நிலையும் இத்தகைய களங்கங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வது மட்டுமே அவர் முன் இருக்கும் வாய்ப்புகள். எனினும், சுபாஷினி வெளியிட்ட வீடியோ காலம் காலமாக சாதியச் சமூகம் உற்பத்தி செய்யும் ஒழுங்குமுறையின் திரைக்கதை வடிவமாக இருக்கிறது. தனது காதல் குறித்த உண்மையைச் சொல்லத் துணிந்த சுபாஷினி, தனது பெற்றோர் குறித்து பேசும் போது தடுமாறுகிறார். முத்தையாவின் திரைப்படங்கள் அரசியல், கலாச்சார வெளிகளில் உருவாக்கும் தாக்கத்தின் விளைவுகளாக சுபாஷினி, அவரது தம்பி சுர்ஜித் ஆகியோரைக் காண முடியும். காதலுக்கு, சாதியத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டிருந்தாலும், சுபாஷினியும் முத்தையாவின் நாயகிகளைப் போலவே வளர்க்கப்பட்டிருக்கிறார். மானம் என்பது காதலில் அல்ல; சாதியின் பெருமிதத்தைக் காப்பதில் இருப்பதாக அவருக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. தான் மிகவும் நேசித்த காதலனே கொல்லப்பட்டாலும், உண்மையை எதிர்கொள்ளாமல், புதைக்கும் அளவுக்கு சாதியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்மீது இன்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பெண் என்னும் இயல்பே சாதியின் காவலாளியாக மீள்கட்டமைப்பு செய்யப்படுகிறது. அவளின் காதலும், காதலின் இழப்பும் சாதிய மானத்திற்குக் கொடுக்கப்பட்ட விலையாக மாறுகிறது.
- ர. முகமது இல்யாஸ்.
NOTES:
- ஆணவக் கொலைகளின் காலம் : காதல்-சாதி-அரசியல் / ஸ்டாலின் ராஜாங்கம். நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2016
- Con-scripts of cinema: caste and criminal spaces in select contemporary Tamil films – Dickens Leonard – 2011 – M. Phil dissertation, University of Hyderabad.
- Honour killings in Tamil Nadu. (2025, July 6). Economic and Political Weekly. https://www.epw.in/journal/2025/26-27/perspectives/honour-killings-tamil-nadu.html
- Madurai formula films: Caste pride and politics in Tamil cinema – K Damodaran, H Gorringe. South Asia Multidisciplinary Academic Journal, 2017
- Narrating seduction: vicissitudes of the sexed subject in Tamil nativity film – Sundar Kaali – Making meaning in Indian cinema, 2000 – Oxford University Press, New Delhi.