அறிமுகம்

ஊடகங்கள் பெரும்பாலும் அரசுகளை சார்ந்தோ அல்லது பெருநிறுவனங்களை சார்ந்தோ தான் இயங்குகின்றன. பொது மக்களிடையே வலுவாக செல்வாக்கு செலுத்தி வரும் இந்த மையநீரோட்ட ஊடகங்களுக்கு தெளிவான சார்புநிலை உண்டு.

ஒவ்வொரு ஊடகமும் எப்படி செய்திகளை வழங்குகிறது, செய்திகளை எவ்வாறு தேர்வு செய்கிறது, எந்தெந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறது, எப்படியான செய்திகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது / தவிர்க்கிறது, துறைசார் வல்லுநர்களாக எவர்களை முன்னிறுத்துகிறது போன்ற அம்சங்களின் மூலம் அது எதன் பக்கம் ஒத்திசைந்து செல்கிறது என்பது புலப்படும். எனினும், பெரிய ஊடகங்கள் ரொம்பவும் நுணுக்கமாக தங்களுடைய கருத்துநிலையை வெளிப்படுத்தக்கூடியவை. ரோஷன் முஹம்மது சாலிஹ் எனும் பிரிட்டிஷ் இதழாளர் சொல்வது போல, அடிப்படையில் எல்லாமே பிரச்சார ஊடகங்கள்தாம்; அவற்றுக்கு மத்தியிலுள்ள வேறுபாடு என்னவென்றால், அவற்றின் பிரச்சாரத்தை எந்த அளவுக்கு நுணுக்கமாக அவை செய்கின்றன என்பதிலேயே உள்ளது. செய்தி பத்திரிகைகள் மட்டுமின்றி அனைத்து விதமான ஊடகத்துக்கும் இது பொருந்தும்.

இன்றைய நிலையில் ஊடகங்கள் சாமானியர்களின் பக்கம் இல்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்குரிய இடமும் ஊடகத்துறையில் இல்லை. ஆதிக்க சமூகங்களே மையநீரோட்ட ஊடகத்தில் (குறிப்பாக வடமாநில ஊடகங்களில்) கோலோச்சுகின்றன என்பதை பல ஆய்வுகள் நிறுவுகின்றன. இப்படியான சூழலில், அனைத்து விதமான ஊடகங்களையும் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் மோசமான போக்குகள் மீது கூர்மையான விமர்சனங்களை முன்வைப்பதோடு, ஆரோக்கியமான போக்குகளையும் முனைவுகளையும் ஊக்குவிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நமக்கிருக்கிறது. அந்த நோக்கில் readbetweenlines.com எனும் தளம் உருவாக்கப்படுகிறது.