புதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்

‘மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.

வளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ,மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்துவந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.

தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது… – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.

இது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

தினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பன கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும்; இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.

இந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.

‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல… பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.

(நன்றி: குரல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.