சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி உஸ்மான் என்ற நபரின் பேஸ்புக் பதிவு வைரலானது. வேறு மதத்தைச் சேர்ந்த தன் ஆண் நண்பரோடு உணவகம் சென்றிருந்த புர்கா அணிந்த இளம்பெண்ணிடம் கலாச்சாரக் காவலர் போல நடந்ததோடு, அதனை விரிவாக பெருமிதத்துடன் தன் பேஸ்புக் பக்கத்திலும் எழுதியிருந்தார் திருச்சி உஸ்மான். அதற்காக கடுமையான எதிர்வினையையும் எதிர்கொண்டார். எந்தவொரு தனி நபரையும் மிரட்டுவது, அவர்களின் நடத்தைக்குத் தீர்ப்பு எழுதுவது, அதன் மூலமாக தன் கலாச்சாரத் தூய்மையும், மதத் தூய்மையும் பாதுகாக்கப்பட்டுவிட்டதாகக் கருதுவது முதலான அனைத்தையும் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போதைய நவீனமயமாக்கப்பட்ட சமூகத்தில் தனியுரிமை என்பதை நிலைநாட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் பொது வெளியாக (Public Sphere) சமகால இணைய ஊடகங்கள் உருவாகியிருக்கின்றன. அந்த வகையில், ஒருவரின் கருத்து ஆதரிக்கப்படுவதும், எதிர்க்கப்படுவதும் இந்த வெளியில் நிகழ்கின்றன. திருச்சி உஸ்மான் போன்ற நபர்கள் உதிரிகளாக கலாச்சாரக் காவலர்களாக செயல்படுவதைப் பலரும் கண்டித்தது எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் அந்தக் கண்டனங்களின் இடம்பெற்றிருந்த மையமான இஸ்லாமிய வெறுப்பை நாம் உற்றுப்பார்க்க வேண்டியிருக்கிறது. இங்கே திருச்சி உஸ்மான் மீதான கண்டன மீம்கள் ஓர் உதாரணம் மட்டுமே.
வழக்கமான மீம் டெம்ப்ளேட்களில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி சேர்க்கப்பட்டு, சமீப காலங்களில் ‘பச்ச சங்கிகளை’ ட்ரால் செய்துகொண்டிருக்கின்றனர் பல்வேறு இணையத் தரப்பினர். இதன்மூலமாக, தொப்பி, புர்கா முதலான இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள் அனைத்து இஸ்லாமியர்களையும் குறிக்கும் விதமாகப் பொதுமைப்படுத்தப்படுவதோடு, ’பிற்போக்கு’ என்பதாகக் கட்டமைக்கப்படுகின்றன. பாஜகவின் சமீபத்திய தேர்தல் கார்ட்டூன்களில் தொப்பியோடு இடம்பெற்ற பறவை பொம்மைக்கும், இந்த மீம்களுக்கும் பெரிதும் வேறுபாடு இல்லை. பாஜக தரப்பில் இது ‘எதிரி’ என்று சுட்டுவதற்காக தொப்பி பயன்படுத்தப்படுகிறது; இங்கே குறிப்பிடப்படும் இணையத் தரப்பில் இது ‘பிற்போக்கான முஸ்லிம்’ என்பதைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்நாட்டில் முஸ்லிம்களிடையே தொப்பி அணியலாமா வேண்டாமா என்று கடந்த பல பத்தாண்டுகளாக விவாதம் இன்னும் முடிவுறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு முஸ்லிம்களுள் கணிசமானோருக்குத் தொப்பி அணியும் பழக்கம் இல்லை. அது உலகமயமாக்கலின் விளைவாகவும் நிகழ்ந்திருக்கிறது; மத அடிப்படையில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளின் தாக்கத்தின் விளைவாகவும் நிகழ்ந்திருக்கிறது. ஆக, தொப்பி என்பது முஸ்லிம்களிடையே வெவ்வேறு கோணங்களில் இருந்து அணுகப்படுகிறது. ஆனால் சாதி இந்துத் தரப்புக்குத் தொப்பி என்பதே முஸ்லிம்களை மற்றமையாக்கும் கருவியாக மாறியிருக்கிறது.
நாஜி ஜெர்மனியில் செய்தி ஊடகங்களில் யூதர்களைக் குறித்து வெளிவந்த கார்ட்டூன்கள் ஜெர்மானிய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. யூதர்கள் அணியும் வெவ்வெறு விதமான தொப்பிகளைப் பயன்படுத்தி, நாஜிக்கள் தங்கள் இன வெறுப்பைக் கார்ட்டூன்களில் வெளிப்படுத்தினர். கார்ட்டூன்களில் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களிடையே யூதர்களைத் தனித்துக் காட்டுவதற்காக இந்தத் தொப்பிகள் பயன்படுத்தப்பட்டன. அது தற்போதைய சமூக ஊடகங்களின் கால கட்டத்திலும் நிகழ்கிறது.
9/11க்குப் பிறகு, உலகமயமாக்கப்பட்ட சம காலத்தில் உலகின் எந்தவொரு பகுதியில் ஓர் முஸ்லிம் திருச்சி உஸ்மான் போன்ற கலாச்சாரக் காவலராக இயங்கினாலோ, வேறு எந்தவொரு தவறைச் செய்தாலோ அதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியிருப்பது பலரும் அறிந்தது. அதே போல, உலகின் எந்தவொரு பகுதியில் ஓர் முஸ்லிம் எந்தவொரு தவறைச் செய்தாலும் அதனை இங்கிருக்கும் இணையத் தரப்பின் இஸ்லாமிய வெறுப்பும், வன்மமும் வெளிப்படுவதற்கு வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது.
மீம்களில் முஸ்லிம்களிடையே இருக்கும் சிலரை (அனைவரையும் குறிப்பிடவில்லை என்ற disclaimer நிச்சயம் இடம்பெற்றிருக்கும்) மட்டுமே கலாய்க்கிறோம்; மற்றபடி எங்களுக்கு இஸ்லாமிய வெறுப்பெல்லாம் இல்லை எனக் கூறுவோருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இங்கே உதாரணமாக குறிப்பிடப்பட்டிருக்கும் திருச்சி உஸ்மானின் பேஸ்புக் பக்கத்திற்குச் சென்று அவர் எத்தனை படங்களில் தொப்பி அணிந்திருக்கிறார் என்று பாருங்கள்; அதே வேளை அவரைக் கலாய்த்து வெளியிடப்பட்ட எத்தனை மீம்களில் தொப்பி எடிட் செய்து சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் பாருங்கள். இங்கே நான் கூறியிருப்பது புரியும்.
மீம்கள் உருவாக்கியிருக்கும் மொழி என்பது சமகால இணையத் தலைமுறையினருக்கும், இணையத்தில் புழங்குவோருக்கும் மட்டுமே புரியும் மொழி. அதனை ‘பச்ச சங்கி’ என்பதும், தற்போதைய தொப்பி மீம்களையும் இஸ்லாமிய வெறுப்பு என்று மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
- ர. முகமது இல்யாஸ்.