என்றும் ’நினைவில்’ வீரப்பன்!

ஒரு சமூகம் என்றும் தனது கடந்த கால நினைவுகளால் உயிர்த்துக் கொள்கிறது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவுகளை தனிநபர்களின் உரையாடல்கள் வழியாக, கலைப் படைப்புகள் வழியாக, செய்தி ஆவணங்களின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரு சமூகத்தின் கொண்டாட்டம், துயரம், காதல், வெற்றி, தோல்வி, அவமானம், அந்த சமூகம் விரும்பும் தலைவர், வெறுக்கும் தலைவர், மரணம், கொலை, கொள்ளை, நோய், மழை, பஞ்சம் முதலான அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டு, நினைவுகளாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழங்கப்படுகின்றன.

மனிதர்களின் படங்களையும், குரல்களையும் பதிவு செய்யும் தொழில்நுட்பங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட, அவை சமூகங்களின், தனி மனிதர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக மாறின. ஆவணப்பதிவுகளை நகலெடுக்கும் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, நினைவுகளின் பெட்டகங்கள் காட்சிப்படுத்தப்படுபவையாக மாறின.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நாஜிக்களால் யூத மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பிறகு, இறந்த மக்கள் பயன்படுத்திய செருப்பு முதல் அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் வரை கூட்டு நினைவின் அங்கமாக, இனப்படுகொலையை நினைவுகூறும் ஒன்றாக மாறியது. கடந்த காலத்தின் தனிநபர் நினைவு என்பதும், ஒரு சமூகத்தின் கலாச்சார நினைவு என்பதும் அழிக்க முடியாத ஆவணங்களாக மாறும் போது, அவை மீண்டும் நிகழ் காலத்தின் அரசியலில் தனித்த இடம் பெறும் ஒன்றாக மாறுகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சட்டையின்றி அமர்ந்திருந்த ஒற்றைப் படம் தமிழ்நாட்டு மாணவர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கியது. ஒரு சமூகத்தின் கூட்டு நினைவை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு ஆவணம் – ஒரு சிறிய புகைப்படம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.

1980களின் இறுதியில் இருந்து 2000களின் தொடக்கம் வரை, தமிழ்நாட்டின் முக்கிய பேசுபொருளாக இருந்தவர் வீரப்பன். அன்றைய காலகட்டத்தில் ‘சந்தனக் கடத்தல்’ வீரப்பன் என்ற அடைமொழியோடு அவரது பெயர் இடம்பெறாத நாளிதழ்களையோ, வார இதழ்களையோ பார்ப்பது அரிது. பிற சினிமாக்களைப் போல, தமிழ் சினிமாவும் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் விவகாரங்களை சினிமாவில் கதைக்களமாக மாற்றும் பண்பைக் கொண்டது. இதன் காரணமாகவே சினிமா என்பது கலாச்சார நினைவுகளின் தளமாக இயங்கும் கலையாக அறியப்படுகிறது. உதாரணமாக, கீழ்வெண்மணி பற்றிய நினைவுகளை ’முரட்டுக்காளை’ (1980) படத்தில் பார்க்க முடியும். நேரடியாக அந்த சம்பவத்தைக் குறிக்காவிட்டாலும், பார்வையாளர்களால் அதன் நேரடித் தன்மையை உணர முடியும். சமீபத்தில் லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தின் அடிப்படையில் வெளிவந்த ’ஜப்பான்’ (2023) படத்தையும் உதாரணமாக சொல்ல முடியும். ஒவ்வொரு திரைப்படமும் அதன் கதாபாத்திரங்கள் – கதாநாயகன்/வில்லன், கதைக்களம், காட்சி, கதையின் பின்னணி என ஏதேனும் ஒரு இடத்தில் சமகால கலாச்சார நினைவுகளைக் கொண்டே இயங்கி வருகின்றன.

தொண்ணூறுகளில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் வீரப்பன் குறித்த நினைவுகளைப் பார்க்க முடியும். கேப்டன் பிரபாகரன் (1991) இதற்கான மிகப்பெரிய உதாரணம். வீரப்பன் வழக்கில் முக்கியமான நபரான வன அதிகாரி ஸ்ரீநிவாஸ் போலவே உருவாக்கப்பட்ட விஜயகாந்த கதாபாத்திரத்திற்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயர் சூட்டப்பட்டதும் கலாச்சார நினைவின் ஒரு பகுதி. மன்சூர் அலிகானின் ‘வீரபத்ரன்’ கதாபாத்திரம், முழுக்க முழுக்க வீரப்பனைத் தழுவி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெய் ஹிந்த் (1994), அசுரன் (1995), விஜய் நடித்த சந்திரலேகா (1995) முதலான பல்வேறு திரைப்படங்களில் வீரப்பனின் சாயலைக் காண முடியும். வீரப்பன் கொல்லப்பட்ட சில ஆண்டுகளில், மணிரத்னம் ‘ராவணன்’ என்ற பெயரில் வீரய்யா என்ற கதாபாத்திரத்தை நாயகனாக்கி, வீரப்பனின் கடத்தல் பாணியை மையப்படுத்தி, சமகால ராமாயணம் ஒன்றை உருவாக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது.

கற்பனை படைப்புகள் ஒருபக்கம் இப்படியிருக்க, மறுபக்கம் தமிழ்நாட்டின் நாளிதழ்கள், வார இதழ்கள் வீரப்பனை சாகசவாதியாகவும், கொடூரராகவும் மாறி மாறி சித்தரித்து வந்தன. இதில் நக்கீரன் இதழின் பங்கு முக்கியமானது. நக்கீரன் இதழ் வீரப்பன் பற்றிய செய்திகளின் வழியாகவே வளர்ந்தது என்றால் அது மிகையாகாது. இவற்றின் வழியாக சமீபத்தில் Zee5 தளத்தில் வெளிவந்த ’கூச முனிசாமி வீரப்பன்’ ஆவணப்படத் தொடரை அணுக வேண்டியதாக இருக்கிறது.

கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான The Hunt for Veerappan தொடர் காவல்துறையின் தரப்பின் கதையைச் சொல்வதாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்ததால், ‘கூச முனிசாமி வீரப்பன்’ அதோடு ஒப்பிடப்படுகிறது. மேலும், இது வீரப்பன் தரப்பு நியாயங்களை வீரப்பனே கூறுவதாலும் கூடுதல் மதிப்பைப் பெறுகிறது. இந்த இரண்டு ஆவணப்படத் தொடர்களுமே வீரப்பன் என்ற மனிதரின் நினைவைத் தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் பல்வேறு காரணங்களுக்காக கிளறும் பணியைச் செய்கிறது. இதழியலில் newsworthy என்றொரு வார்த்தை உண்டு. எவையெல்லாம் செய்தியாக மாற்றம் செய்யப்படும் தன்மை கொண்டவை என்பதைத் தேர்ந்தெடுக்கும் பண்பு கொண்ட நிகழ்வுகள் அவ்வாறு அழைக்கப்படும்.

வீரப்பன் விவகாரம் முழுவதுமே க்ரைம், மக்கள் விரோத காவல்துறை, காடு – வன உயிர்ப் பாதுகாப்பு, ஒசாமா பின்லேடனைப் போல தேடுதல் வேட்டை, தமிழ்த் தேசியம், இறுதியாக வன்னியர் சாதி ஒருங்கிணைப்பு எனப் பல முனைகளைக் கொண்டது. இவை எப்போதுமே தமிழ்ச் சமூகத்தின் கூட்டு நினைவின் ஓர் அங்கமாக இடம்பெறக் கூடியவை என்பதால் இதுகுறித்த செய்திகள், ஆவணங்கள் ஆகியவை தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் விற்பனை செய்யப்படும் சந்தைப் பொருளின் அந்தஸ்தைப் பெறுகின்றன.

மீண்டும் ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடருக்கு வருவோம். வீரப்பனுக்கும் சீமான், ரோஹிணி, என்.ராம் போன்றொருக்கும் என்ன தொடர்பு? இது மிகவும் அடிப்படையான கேள்வி. வீரப்பன் தானே பேசிய 9 மணி நேர வீடியோவை காட்டிற்குள் சென்று எடுத்து வந்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன் ஏன் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை? இதுவும் அடிப்படையான கேள்வி. இவற்றிற்கு எந்தப் பதிலும் இல்லாத நிலையில் இருந்தே இந்தத் தொடரை மதிப்பிட முடியும்.

நக்கீரன் கோபால் தமிழ் ஊடகத்துறையில் முக்கியமான நபர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனரல்லாத தலைமை கொண்ட நாளிதழ் நிறுவனமாக ‘நக்கீரன்’ பாமரர்களாலும் வாசிக்கப்பட்டது மாபெரும் சாதனை. மேலும், இன்றுவரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக பத்திரிகையாளர்கள் பலர் இயங்கும் சூழலில், ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே அவரைக் கடுமையாக விமர்சித்து, கடும் அடக்குமுறைகளுக்கு ‘நக்கீரன்’ இதழும், அதன் ஆசிரியர் கோபாலும் உள்ளானதும் புறந்தள்ளத்தக்கது அல்ல. ஆனால் வீரப்பன் விவகாரத்தில் நக்கீரன் கோபால் முன்வைக்கும் கருத்துகள் முன்னுக்குப் பின் முரணானவை.

வீரப்பன் தொடர்பான அவரது முதல் செய்தி குறித்த விவகாரத்தைப் பல மேடைகளில் பல விதமாக அவர் பேசியிருக்கிறார். ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடரில் அவர் சொல்லும் கதையும், தமிழ் ஊடகங்களின் தன்மையை ஆய்வு செய்து The News Event: Popular Sovereignty in the Age of Deep Mediatization என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கும் பிரான்சிஸ் கோடியின் புத்தகத்தில் கோபால் கூறியிருக்கும் கதையும், வீரப்பனை முதன்முதலாக படம் எடுத்த ‘நக்கீரன்’ இதழின் முன்னாள் பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன் கூறும் கதையும் வெவ்வேறானவை.

நக்கீரன் கோபால் தமிழ் ஊடக உலகின் சீமான் என்பது எனது கருத்து. சீமானுக்கு வன்னிக் காடும், பிரபாகரனும் எப்படியோ, அதே போல சத்தியமங்கலம் வனப்பகுதியும், வீரப்பனும் நக்கீரன் கோபால் பொருள் ஈட்டுவதற்கான மைலேஜ் மட்டுமே. இதில், ‘கூச முனிசாமி வீரப்பன்’ என்ற ஒரே தொடரில் நக்கீரன் கோபாலும், சீமானும் ஒருசேர இடம்பெற்றிருப்பது நிச்சயம் நான் எதிர்பார்க்காத ஒன்று.

‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரு தேர்ந்த ஆவணப்படம் கிடையாது. அதனைச் சிலர் docudrama என வரையறுக்கின்றனர். இந்த ஆவணப்படம் என்ன செய்கிறது என்றால், நக்கீரன் தரப்பில் இருக்கும் வீரப்பனின் 9 மணி நேர நேர்காணல்களைப் பல பகுதிகளாக பிரித்து, அதன்மேல் பல்வேறு துறையினரின் நேர்காணல்கள் மூலமாக கதையைக் கூறுகிறது. வழக்கமாக அனைத்து ஆவணப்படங்களும் இந்த பாணியில் இயங்கினாலும், இதில் கூடுதலாக, தமிழ்த் தொலைக்காட்சிகளின் க்ரைம் செய்திப் பகுதிகளில் வரும் ‘சித்தரிக்கப்பட்டவை’ போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. அவை பார்வையாளர்களுக்கு எல்லா விதமான உணர்வையும் வலிந்து திணிக்கின்றன. தொடக்கத்தில் காட்டு ராஜா போல வீரப்பனின் பிம்பத்தை உருவாக்குவது, பாலார் குண்டுவெடிப்பை மிகவும் சினிமாத்தனமாக காட்சிப்படுத்துவது, வொர்க்‌ஷாப் கொடூரங்களை நேரடியாக பார்வையாளர்களுக்குக் கடத்துவது என ஆவணப்படத்தின் சட்டகத்தைத் தாண்டி இயங்குகிறது.

The Hunt for Veerappan குறுகிய நேரத்திற்குள் மொத்த கதையையும் சொல்ல முயல்கிறது. அதில் வீரப்பனின் மனைவியின் நினைவுகூறல் இருக்கிறது; வொர்க்‌ஷாப் துயரங்களை மேற்கொண்ட காவல்துறை அதிகாரியின் மனமாற்றம் இடம்பெற்றிருக்கிறது. ‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடரைப் போல, dramaticகாக பார்வையாளர்களை ஏமாற்றாமல், அதன் எல்லைக்குள் நின்று உருவாகியிருக்கிறது. இரண்டு ஆவணப்படங்களுமே ஒரே puzzleன் இரண்டு பகுதிகளைப் போல இயங்குகின்றன.

ஒரு ஆவணத்தின் அரசியல், அது கூட்டு நினைவில் ஏற்படுத்தும் பங்கு, கடந்த காலத்தை ஜனநாயகப்படுத்தும் நெறி முதலானவை குறித்த பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுவதும் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டிஜிட்டல் காலத்தில் எண்ணிலடங்காத பிரதிகளை எடுக்க சாத்தியம் இருக்கும் சூழலில், வீரப்பனின் நேரடியான வீடியோ என்பது 30 நொடிகளாக பிரித்து பிரித்து ராமதாஸ் ஆதரவு, ரஜினிகாந்த் ஆதரவு, வீரப்பனின் வீரம், யானையைக் கொல்வது எப்படி, குரங்கு போல கத்துவது எப்படி, வீரப்பன் thug life எனப் பல்வேறு பாகங்களாக பரப்புவதற்குப் பயன்படும். வழக்கம்போல, வீரப்பனுக்கு மொத்த அத்தாரிட்டியாக இருக்கும் நக்கீரன் தரப்பிற்கு லாபம் ஈட்டுவதற்கும் பயன்படும்.

பிரான்சிஸ் கோடி தனது புத்தகத்தில் நக்கீரன் கோபால் தன்னிடம் மிகுந்த ஆர்வத்தோடு பேசியதைக் குறிப்பிட்டபடியே, வீரப்பன் – நக்கீரன் கோபால் உறவை ’ஒட்டுண்ணி உறவு’ என வர்ணிக்கிறார். இருவரும் தத்தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டதாக அவர் கூறுகிறார். வீரப்பன் மறைந்தாலும், அவரைப் பற்றிய ஆவணங்கள் கோபாலுக்குக் கூடுதலான அதிகாரத்தை அளிக்கின்றன.

நினைவுகளும், ஆவணங்களும் ’கவனப் பொருளாதார’ காலகட்டத்தில் முதலாளிகளுக்குச் சந்தைப் பொருள்கள் மட்டுமே. இதில் இடதுசாரிகளை உள்ளடக்கினாலும், இறுதியில் லாபம் மட்டுமே நோக்கம்.

  • ர. முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.