’எறும்புகளை நசுக்க சுத்தியல்?!’ தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு நியமனமும் சர்ச்சையும்!

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்திகளின் உண்மை சரிபார்ப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநிலத் தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சிறப்பு அமலாக்கத்துறையின் கீழ் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதன் தலைவராக ’யூ-டர்ன்’ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யூ-டர்ன் நிறுவனம் உண்மை சரிபார்ப்பு, போலிச் செய்திகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது என சமகாலத் தமிழ்ச் சூழலில் முக்கிய இடம் பெறும் ஊடகமாகக் கருத முடியும். உதாரணமாக, கொரோனா காலகட்டத்தின் தொடக்கத்தில், தப்லீக் ஜமாத்தினர் குறித்த போலிச் செய்திகளை ஒன்றிய அரசு பரப்பியபோதுm, விகடன் முதலான பாரம்பரிய ஊடகங்கள் அதனை விசாரணையின்றி வெளியிட்டபோதும், அதன் உண்மைத் தன்மையை யூ-டர்ன் தளம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் தலைவராக ஐயன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டிருப்பது, வழக்கமாக போலிச் செய்திகளை இணையத்தில் பரப்பும் சங் பரிவார் கும்பல், இனவாதத் தமிழ்த் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சியினர் முதலானோரையும், இணையத்தில் தீவிரமாக திமுக எதிர்ப்புக் கதையாடல்களை (Narratives) உற்பத்தி செய்யும் சவுக்கு சங்கர், கஸ்தூரி முதலானோரையும் கடுமையான எதிர்ப்பில் ஈடுபடச் செய்திருக்கிறது.

பின்-உண்மை (Post Truth) காலகட்டத்தில் அரசியல் fact checking என்ற துறை லாபம் கொழிப்பதாக மாறியிருக்கிறது. இது உலகம் முழுவதும் வலதுசாரிகளின் எழுச்சியோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது. மேலும், செய்திகளை மக்கள் நுகரும் தன்மையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பாரம்பரிய ஊடகங்கள் BREAKING NEWS என்ற பெயரில் உடனுக்குடன் தகவல்கள் அளிப்பதாகக் கூறி, போலிச் செய்திகளை வெளியிடுவது, நீண்ட காலமாக மையநீரோட்ட ஊடகங்கள்மீது பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி முதலான பல்வேறு மாற்றங்களின் தொடர்ச்சியில் இந்த Fact-checking துறையை அணுக வேண்டியதாக இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசின் கீழ் Fact checking Unit அமைப்பை உருவாக்குவதற்காக அறிவிப்பை வெளியிட்டதோடு, சட்டத் திருத்தமும் மேற்கொண்டது. இதனை எதிர்த்து அரசியல் பகடியாளர் குனால் கம்ரா, Editors Guild of India முதலானோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர். ’ஒரு அரசு உண்மை சரிபார்ப்பில் ஈடுபடும் என்றால், அந்த அரசு ‘உண்மை’ என எதைக் கருதுகிறது?’ என மனுதாரர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், ‘இந்தச் சட்டம் அரசுக்கு அதீத அதிகாரத்தை அளிப்பதோடு, குற்றம் சாட்டப்படும் நபருக்கான பாதுகாப்பு குறித்த விவரங்கள் எதுவுமின்றி இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் டிசம்பர் 1ஆம் தேதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலிச் செய்திகளின் உண்மை சரிபார்க்கப்படும்போது அவற்றை உண்மை (True), பொய் (Fake), தவறாக வழிநடத்தும் செய்தி (Misleading) எனப் பிரிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், இதில் அரசு ’தவறாக வழிநடத்தும் செய்தி’ என்பது ஒருவரை சரியாகவும் வழிநடத்தலாம்; கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதனை அணுக வேண்டும் எனக் கூறியுள்ளதோடு, இந்தச் சட்டத் திருத்தத்தையும், ஒன்றிய அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவையும் ‘எறும்புகளைக் கொல்ல எடுத்து வரப்பட்டிருக்கும் சுத்தியல்’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.

’ஒன்றிய அரசு தொடர்பான எந்தத் தகவலையும் சரிபார்க்கலாம்’ என இந்தச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பொருள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு ஒன்றிய அரசின் தரப்பில் பதில் தெரிவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசு உருவாக்கும் உண்மை சரிபார்ப்புக் குழுவில் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி, ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் ஒரு பிரதிநிதி, ஊடகத்துறை நிபுணர், சட்ட நிபுணர் ஆகியோர் இடம்பெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோதச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் சமீபத்தில் கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் அரசுகளால் Fact checking unitகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் Fact checking மேற்கொள்வதற்கான சர்வதேச அங்கீகாரம் வழங்கும் IFCN அமைப்பு கர்நாடக அரசோடு இணைந்து பணியாற்றுவதற்கு மறுத்துள்ளது. மேலும் அரசுகளோடு இணைந்து பணியாற்றும் எந்த fact checking நிறுவனத்திற்கும் அங்கீகாரம் அளிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது. இதனால் IFCN அமைப்பின் அங்கீகாரம் பெற்ற fact checking நிறுவனங்கள் எதுவும் கர்நாடக அரசோடு பணியாற்ற மறுப்பு தெரிவித்துள்ளன.

Alt-News நிறுவனர் பிரதீக் சின்ஹா இந்தச் சட்டத் திருத்தம் போலிச் செய்திகளைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, அதனைத் தடுக்கவோ மேற்கொள்ளப்படாமல் அரசுக்கு எதிரான விமர்சனங்களை மேற்கொள்வோரை ஒடுக்குவதற்காகவும், அரசு தனது இமேஜை பாதுகாப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதோடு அவரும் கர்நாடக அரசோடு இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

IFCN அமைப்பு அரசுகள் fact checking cellகளை உருவாக்குவதற்குப் பதிலாக, நேர்மையான fact checking அமைப்புகளுக்கு அவர்களின் பணியைக் கண்காணித்து மானியம் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஊடகத்துறையில் சுதந்திரம் பாதிக்கப்படாமல் இருக்க, தற்போது ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றி வரும் நடைமுறை இது.

ஒன்றிய அரசு தனது விமர்சகர்களை வேட்டையாடக் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் தமிழ்நாட்டில் நேரடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அவரின் கீழ் மாநிலம் முழுவதும் பணியாற்றும் வகையில் 80 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் வெளிப்படையான அரசாணையோ, அறிவிப்போ இல்லாமல் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் போலிச் செய்திகளைக் களையெடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்திருப்பது உண்மைதான். அதற்காக, வெளிப்படையற்ற பதவி நியமனங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது திமுக அரசுக்கு மற்றொரு சறுக்கல்.

Fact Checking என்பது ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டிய பணி; அதனை அரசு மேற்கொள்ளும் போது, அது இயல்பாகவே அரசின் கொள்கைப் பிரச்சார நடவடிக்கையாக, கொள்கை விளக்க நடவடிக்கையாக மாறும் இயல்பு பெறுகிறது. இதன் காரணமாகவே, இந்தச் செய்திகளின் உண்மை சரிபார்ப்புக் குழு நியமனத்தையும், ஒன்றிய அரசின் இந்தச் சட்டத் திருத்தத்தையும் நாம் எதிர்க்க வேண்டியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் இன்று காங்கிரஸ் கட்சியை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. இதனை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

-ர. முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.