மரிச்ஜாப்பி: உண்மையும் வழுவும்! – ஹரிலால் நாத் புத்தகத்தின் மீதான விமர்சனம்! – மு.அப்துல்லா

1

‘மரிச்ஜாப்பி இனப்படுகொலை’ என்பது மேற்கு வங்கத்தை ஆண்ட இடது முன்னணி அரசின் மீதான களங்கமாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த மக்கள் எல்லை மாநிலமான மேற்கு வங்கத்தைத் தவிர்த்து வளமற்ற தண்டகாரண்ய வனப்பகுதியில் தங்கவைக்கப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு 1977ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தவுடன் நம்பிக்கையுடன் அவர்கள் மரிச்ஜாப்பி சுந்தரவனப் பகுதிகளை நோக்கிப் புலம்பெயர்கிறார்கள்.

புதிய அகதிகளை அங்கு தங்கவைக்க முடியாத சூழல். ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு அவர்களைத் திரும்ப தண்டகாரண்யத்திற்கே அனுப்ப நினைக்கிறது. 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகதிகளுக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஐம்பதிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள்வரை கொல்லப்பட்டதாக பரவலாகக் கருதப்படுகிறது. மரிச்ஜாப்பியில் புலம்பெயர்ந்த அகதிகள் ‘நாமசூத்திரர்கள்’ எனப்படும் தலித்துகள் ஆவர். சிபிஎம் அரசின் அரச பயங்கரவாதமாக இன்றுவரை விவாதிக்கப்படுகிறது மரிச்ஜாப்பி.

இந்நிலையில், திட்டமிட்டு இடதுசாரி அரசைக் குற்றஞ்சாட்டும் பொதுவான கருத்துகளை மறுக்கும் வண்ணம் ஹரிலால் நாத் என்பவர் ‘மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது?’ என்ற நூலை 2020ஆம் ஆண்டு வங்கத்தில் வெளியிடுகிறார். அதன் நேரடித் தமிழாக்கத்தை ஞா. சத்தீஸ்வரன் மொழிபெயர்க்க, தமிழ் மார்க்ஸ் குழுவும் பாரதி புத்தகாலயமும் இணைந்து தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

நூலின் மையப்பொருள்: ‘இனப்படுகொலை என்று சொல்லி ஆயிரக்கணக்கானவர்களை சிபிஎம் அரசு கொன்றதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம் பொய். அரசுத் தரப்பில் கூறும் இரண்டு பலிகளே உண்மையில் மரிச்ஜாப்பியில் நடந்தவை. இடதுசாரி அரசு என்றாலே அவர்கள் வன்முறையாளர்கள் என்று பொதுமக்களை திசைதிருப்பவே மரிச்ஜாப்பி கையிலெடுக்கப்பட்டு வந்துள்ளது. அகதிகள் மேல் இடது முன்னணி அரசு கொண்ட கரிசனம் அதற்கு முன்பு எந்தக் கட்சியிடமும் இருந்ததில்லை. அங்கு அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படும் ஏதும் நடக்கவில்லை.’

நூலின் சிறப்பாக, இடது முன்னணி அரசு அகதிகளிடம் கொண்ட அக்கறை பல இடங்களில் எடுத்துக் கூறப்படுகிறது. அதேபோல், நூல் தொடர்ந்து வாதிடும் ஒரே விஷயம்: பலியானவர்களின் எண்ணிக்கை. இதற்கு முன்பு மரிச்ஜாப்பியை பிரச்சாரம் செய்த அனைவரும் நேரத்திற்கு ஏற்றார்போல் ஒரு எண்ணிக்கையைச் சொன்னார்கள். அவை யதார்த்தக்கு முரணானவை என்று அம்பலப்படுத்தப்படுகிறது.

மரிச்ஜாப்பியை பற்றிய இதுவரையிலான வாய்மொழிகள், எழுத்துகள் அனைத்தையும் இந்நூல் மறுக்கிறது. அதற்குச் சரியான பதிலடியைக் கொடுக்கவும் தவறவில்லை. ஆதலால், மேற்கூறிய இரண்டு விஷயங்களை அடியொற்றியே இந்த நூலின் முரண்களையும் பலவீனங்களையும் கவனப்படுத்த விரும்புகிறேன். ஒருவிதத்தில் ஆசிரியர் வழியில், முந்தைய பதிவுகள் அனைத்தையும் மறுத்துவிட்டு இந்த நூலில் மட்டுமே அவரிடம் முரண்படுவதைக் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன்.

2

பிரிவினைக் காலத்தில் நடந்த இடப்பெயர்வுகள் எல்லை மாநிலங்களில் சமச்சீரற்ற நிலையை ஏற்படுத்தின. கிழக்கு பாகிஸ்தான் அருகிலிருந்த மேற்கு வங்கத்திலும் பல்வேறு குடிப்பெயர்வுகள் நடந்தது. பிரிவினைக் காலத்தில் இரு நாடுகளுமே தத்தமது குடியேறிகளை ஏற்றுக்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் 1958 வரை குடியேறியவர்களை அன்றைய மாநில அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால், 1960களுக்குப் பிறகு குடியேறிகள் வருவது சுமையாக மாறிப்போனது. ஒன்றியத்தையும் மேற்கு வங்கத்தையும் ஆண்ட காங்கிரஸ் கட்சி குடியேறிகளை ஒடிசா, மத்தியப் பிரதேசம் எல்லைப்பகுதியான தண்டகாரண்ய வனத்தில் தங்க வைத்தது. இதை அன்றைய மேற்கு வங்க சிபிஎம் கடுமையாக எதிர்த்தது.

1977ஆம் ஆண்டு சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது. தண்டகாரண்யம் போன்ற வளமற்ற பகுதியில் வாழ விரும்பாத அகதிகள் மேற்கு வங்கத்தை நோக்கிப் படையெடுக்கிறார்கள். மாநிலத்தின் பொருளாதாரச் சூழல் இடது முன்னணி அரசை நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. முந்தைய அரசுகளைப் போல் அகதிகள்மீது வன்முறையைப் பிரயோகிக்க அரசு விரும்பவில்லை. அதேநேரத்தில், ஆரம்பம் முதலே அவர்களை ஏற்கவும் விரும்பவில்லை.

அகதிகளை மேற்கு வங்கத்தில் குடியமர்த்துவதன் மூலம் ஆளும் இடது முன்னணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளான ஜனதாவும் காங்கிரஸும் நினைக்கின்றன. ஆதலால், மரிச்ஜாப்பி சுந்தரவனத்திற்குள் அகதிகள் குடியேற நினைத்ததை எதிர்க்கட்சிகளின் சதி என்பதோடு மட்டுமே நூல் சுருக்குகிறது. அகதிகளை எதிர்நிலையில் நிறுத்தவில்லை என்றாலும், எதிர்க்கட்சிகளின் சதிக்கு ஆட்பட்டவர்கள் என்றே அவர்களை விவரிக்கிறது.

முதல்வர் ஜோதிபாசுவின் கூற்றுப்படி, சுயநல சூழ்ச்சிக்காரர்களின் பொய், புரட்டு, ஆசை வார்தைகளை நம்பியே அகதிகள் மரிச்ஜாப்பிக்கு வந்தனர். ஆனால், அவர்கள் தண்டகாரண்யத்தை விட்டு வெளியேற நியாயமான காரணங்கள் இருந்தன. அவை பெரும்பாலும் ‘சூழ்ச்சிகள்’ என்று அழைக்கப்பட்டு கடந்து செல்லப்படுகின்றன. அதற்காக சட்டவிரோதமாக வந்தவர்கள், அழையா விருந்தாளிகள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவும் நூலாசிரியர் தயங்கவில்லை.

‘தண்டகாரண்யத்திலிருந்து திரும்பி வந்த ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் அனைவரும் நிலையான இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர் என்பதில்லை. அழையா விருந்தாளிகளைப் போலவும், ஏதாவது நடக்கிறதா என்றுதான் பார்ப்போமே என்னும் மனநிலையுடன் சிலர் வந்திருந்தனர். ஆனால், பெரும்பான்மையானோரின் வருகைக்குப் பின்னால் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட முயற்சிகள் இருந்தன. அந்தத் திட்டமும் வெளிப்படையானதாகவோ உணர்ச்சிவசப்பட்டதாகவோ இருக்கவில்லை. முழுத் திட்டத்தையும் நம்பிக்கையுடன் செயல்படுத்த முடியும் என்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டுதான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிரச்சார உக்திகளும் திறமையாக வகுக்கப்பட்டிருந்தன.’ [P.87]

சிபிஎம் தலைவர் ஜோதிர்மய் பாசுவின் கூற்றுப்படி, ‘சுந்தரவனம் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது. சில அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அகதிகளின் அவல நிலையை அதிகரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் கைகோர்த்துள்ளனர். தண்டகாரண்யத்திலிருந்து மரிச்ஜாப்பி வரத் தூண்டிவிடப்பட்டனர்.’ [விரிவாக P.151,152]

இதனால் எதிர்க்கட்சியின் ஆதரவாளர் சதீஷ் மண்டல் போன்ற தலைவர்களுடன் இணைந்து அகதிகள் உள்ளூர் மக்களின் படகுகளைத் திருடுவது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ஆயுதம் கடத்துவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. மரிச்ஜாப்பியில் இணை அரசாங்கம் நடத்தப்பட்டது; ஆதலால், 144 தடை உத்தரவு, தீவிரக் கண்காணிப்பு மூலம் நெருக்கடிக்கு ஆளாக்கி அகதிகளை வெளியேற்ற முடிந்தது. சிலர் தங்களைக் கட்டுப்படுத்தும் தலைவர்களால் வெளியேற நினைத்தும் முடியாமல் தவித்தனர்.

3

அகதிகளின் துயர்களைக் கையாள்வது இன்றுவரை அரசுகளுக்குச் சவாலான விஷயம்தான். அகதிகளுக்கு ஒன்றிரண்டு சலுகைகள் கொடுத்தால் உள்ளூர் மக்கள் கோபமடைவார்கள். ஆதலால், அவர்களை எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டியிருக்கிறது. அகதிகள்மீது அக்கறை காட்டும் அதே நேரத்தில், அவர்களை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றியாக வேண்டும் என்ற கையறு நிலையில் இடது முன்னணி அரசு இருந்தது. இந்தச் சூழலையே இந்நூல் நேரடியாக அரசுத் தரப்பிலிருந்து பேசுகிறது. அரசு-அகதிகளுக்கு இடைப்பட்ட உள்ளூர் மக்களின் வாதம் ஏதும் இதில் இல்லை.

ஹரிலால் நாத்தின் நூலின் மிகப் பலவீனமான அம்சமாக நாம் பார்ப்பது, காவல்துறை தகவல்களையே (Police Narration) அவர் சார்ந்திருக்கிறார் என்பதுதான். கம்யூனிஸ ஆட்சியில் போலீஸ் அனைவரும் கம்யூனிஸ்டுகளாகவே இருப்பார்கள் என்ற விதத்தில் ஆசிரியர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதனால், தெரிந்தோ தெரியாமலோ அகதிகள் அனைவரும் எதிர்நிலையில் அந்நியச் சக்தியாக அணுகப்படுகிறார்கள். அகதிகள் தங்கியிருந்தபோது நடந்த மூன்று மோதல்களுக்கும், தூண்டிவிடப்பட்ட அகதிகளே காரணம் என்கிறார்.

சதீஷ் மண்டலின் குழு வன்முறையை ஏற்படுத்த முயல்கிறது. ஆதலால், ‘இவ்வாறு தான்தோன்றித்தனமான மனநிலையுடன் இறுதி முயற்சியாக அவர்கள் நதியில் கண்காணிப்பிலிருந்த காவலர்களைத் தாக்கி மோதலை உருவாக்குகின்றனர். ஜனவரி 31 (1979) அன்று 144 தடையுத்தரவை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் ஆயுதங்களுடன் நதியைக் கடந்துவந்து நான்கு காவல் முகாம்களைத் தாக்குகின்றனர். காவலர்களைத் தாக்கி முகாமில் உள்ள அகதிகளை அழைத்துச் செல்வதே அவர்களின் முதன்மை நோக்கம். காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்னும் அளவுக்கு அகதிகளின் வன்முறை இருந்தது.’ [முழுமையாக P.105, 106]

சூழ்ச்சியாளர்கள் சிலரின் கட்டாயத்தின் பேரில் இருந்தாலும் அவர்களுக்காக வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு இறங்குகிறார்கள் அகதிகள். அந்த நேரத்தில் மரிச்ஜாப்பியில் அப்போது மொத்தமே பத்திலிருந்து பன்னிரண்டாயிரம் அகதிகள் மட்டுமே இருந்தனர் என்று அடிக்கடி சொல்கிறார் ஆசிரியர். அப்படியிருக்கையில், இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அகதிகளில் இருந்த சிலர் என்பதை விட அகதிகள் என்றே கூறிவிடுகிறார். இறுதியாக, அகதிகளுக்கு இருந்த நிர்ப்பந்தம், இடதுசாரி அரசு என்பதால் காவல்துறைக்கும் இருந்தது. வேறு வழியில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்கிறது நூல்.

ஜனவரி 31 அன்று நடந்த முதன்மையான வன்முறையைப் பின்வருமாறு விவரிக்கிறார் உள்துறை அமைச்சர் திரு. படேல்:

‘ஜனவரி 31, 1979 அன்று சுமார் 1000 அகதிகள் படகு மூலம் ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள குமிர்மாரிக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். காவல்துறையினர் தடுக்க வந்தபோது, அகதிகள் சிலர் காவல்துறையினரை அம்புகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ஒரு காவலர் காயமடைந்துள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் நான்கு சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. இதனால் பின்வாங்கிய அகதிகள் விரைவில் மீண்டும் கூட்டமாகச் சேர்ந்து காவல்துறையினரைத் தாக்கினர். காவல்துறை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அகதிகள் இருவர் உயிரிழந்தனர் (நூலின் மற்ற இடங்களில் அந்த இருவர் அகதிகள் அல்லர், உள்ளூர்க்காரர்கள் என்கிறார் ஆசிரியர்). நான்கு பேர் காயமடைந்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உட்பட காவல்துறையினர் 48 பேர் காயமடைந்தனர்.’ [மேலும் P. 153, 154]

ஆளும் கட்சியினர், கட்சிப் பத்திரிக்கையான கணசக்தியை மேற்கோள் காட்டி ஆசிரியர் பேசுவதை ஓரளவிற்கு ஏற்கலாம். ஆனால், அகதிகளை எதிர்நிலையிலும் காவல்துறையை அனுதாபமாகவும் அணுகியதற்கு முக்கியமாகத் துணைபோனவர் காவல்துறை கண்காணிப்பாளர் அமிய சாமந்த். அவரின் வாதமே நூல் முழுக்கப் படர்ந்திருக்கிறது. வேறு ஊடகங்கள், பொதுமக்களின் கருத்துக்கள் இடம்பெறாததால் அவர் சொல்லும் தகவல்கள் மட்டுமே செய்களாகியிருக்கின்றன. பொதுவாக காவல்துறை அமைப்பு எவ்வாறு இயங்கும், செய்திகளை எவ்வாறு கட்டமைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் தரப்பிலிருந்து வரும் ஒரு நூல், கண்ணை மூடிக்கொண்டு போலீஸ் கதையை மட்டும் ஏற்கச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

4

‘சுந்தரவனக் காடுகளில் கைவிடப்பட்ட நிலம் என்று எதுவும் இல்லை. இருந்ததெல்லாம் பாதுகாக்கப்பட்ட வனபூமி மட்டுமே. அங்கு வாழ்வதற்கான அனுமதியை எந்த அரசாலும் வழங்க முடியாது’ என்று பல இடங்களில் குறிப்பிடப்படும் கருத்தே இந்நூலின் மையப் பிரச்சினை. ஏனெனில், வங்க அகதிகளை தண்டகாரண்யத்தில் தங்கவைக்க காங்கிரஸ் முடிவெடுத்தபோது அவர்களை சுந்தரவனத்தில் குடியமர்த்தப் போராடிய கட்சி சிபிஎம். இக்கருத்தை ஆசிரியர் மறுக்கவில்லை; ஆனால் அற்பமான வாதம் கொண்டு நியாயப்படுத்துகிறார்.

‘1950களில் வங்காளி அகதிகளுக்கு மேற்கு வங்கத்தில்தான் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரியவர்கள் இடதுசாரிகள்தான் என்பதில் சந்தேகமில்லை. அந்த நேரத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலத்தின் யதார்த்தம், இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் 1970களின் பிற்பகுதியில் அப்படியே இருக்கவில்லை. பல விசயங்களும் மாற்றமடைந்துவிட்டன. முன்பிருந்த மாநிலத்தின் சமூக பொருளாதார நிலைமைகள், பயன்படுத்தப்படாத நிலம், மக்கள் தொகை அடர்த்தி இவையனைத்தும் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு நிறைய மாறிவிட்டன.’ [தொடர் காரணங்கள் P.231, 232, 235]

1970களின் பிற்பகுதியில் நிலைமை மாறிவிட்டது என ஆசிரியர் சொல்வது இடது முன்னணி ஆட்சிக்குப் பிறகு என்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும். ஏனெனில், தசாப்தக் கணக்கில் பொதுமைப்படுத்தி, ஆரம்பத்தில் மட்டுமே சிபிஎம் போராடியதாகக் கடத்த முயல்கிறார் ஆசிரியர். 1970களுக்கு பிறகும் அகதிகளுக்கு சிபிஎம் வாக்குறுதி கொடுத்ததை இந்நூல் வசதியாக மறைக்கிறது.

உதாரணத்திற்கு, 1974ஆம் ஆண்டு டிசம்பரில் தண்டகாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அகதிகள் சுந்தரவனப் பகுதியில் குடியேற நம்பிக்கை அளித்தார் ஜோதிபாசு. அதேகாலத்தில், ‘இடது முன்னணி ஆட்சியமைத்தால் அகதிகள் மேற்கு வங்கத்தில் தங்க வைக்கப்படுவீர்கள்’ என ராம் சட்டர்ஜி உள்ளிட்ட இடது முன்னணித் தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். 1975ஆம் ஆண்டு இடது முன்னணியைச் சேர்ந்த எட்டு கட்சிகள் அகதிகளை மீண்டும் சுந்தரவனத்தில் தங்கவைப்பது பற்றிக் கலந்தோசித்து, அந்தத் திட்டங்களை ஆளுநரிடம் மனுவாகக் கொடுக்கிறார்கள். [1]

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1977ஆம் ஆண்டு இடது முன்னணி ஆட்சியைப் பிடிக்கிறது. இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் சமூக-பொருளாதார சூழல் எந்தளவிற்கு மாறியது என்று புரியவில்லை. இதன் மூலம் அறியவருவது, ஹரிலால் நாத் கூறும் சூழ்ச்சிக் கதைகள் எந்தளவிற்கு உண்மையோ, அந்தளவிற்கு இடது முன்னணியின் பொய்யான வாக்குறுதியால் அகதிகள் ஏமாற்றப்பட்டதும் உண்மை. அதை நேர்மையாக இந்நூல் பேசவில்லை. மாறாக, ஒரு சில இடங்களில் மலினமாக விளக்குகிறார் ஆசிரியர்.

‘… அகதிகள் (சதிகாரத்) தலைவர்களை நம்பி, எப்படியோ சமாதானமடைந்து வீட்டை விட்டு வெளியேறினர். இடது முன்னணி அரசு நேரடியாக அவர்களை ஏற்றுக்கொள்ளாது என்று மனத்திற்குள்ளேயே ஊகித்திருந்தனர். பண்படுத்தப்பட்ட நிலத்தை அவர்கள் வாழ்வதற்காக விட்டுதர மாட்டார்கள். இருப்பினும் சொந்த முயற்சியால், கடந்த காலத்தைப் போல், அரசு மற்றும் தனியார் நிலத்தை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தங்கிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் போராடி அந்நிலத்திற்கான உரிமையைப் பெற வேண்டும். ஆனால், கடந்த காலத்தில் நிலம் கையகப்படுத்தியபோது இருந்த நிலைமை வேறு, இப்போது இருக்கும் நிலைமை வேறு என்று அவர்கள் சிந்திக்கவில்லை அல்லது சிந்திக்க விரும்பவில்லை. இடையில் இரண்டரை தசாப்தங்களுக்கு மேல் கடந்துபோய்விட்டன.

நிலம் கையகப்படுத்துவதற்காக அவர்களின் இலக்காக இருந்தது சுந்தரவனம். சுந்தரவனத்தில் அளவற்ற நிலம் இருப்பதாக தண்டகாரண்ய அகதிகளிடம் பரப்பட்டிருக்கிறது. சதுப்புநிலக்காடுகளை மட்டும் கஷ்ட்டப்பட்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கே சொந்தமான கனவு பூமி உருவாக்கப்பட்டுவிடும். இத்தகைய வண்ணமயமான கனவுகளோடு 1978ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வங்கத்தை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்குகின்றனர்.’ [P. 71,72] [2]

5

மரிச்ஜாப்பியில் தொடர்புடைய பொதுமக்கள், அகதிகளின் வாரிசுகள் இன்றும் இருக்கும் சூழலில் அவர்களிடம் உரையாடுதல் போன்ற எந்தச் சமூகவியல் பார்வையையும் இந்நூல் வழங்கவில்லை. சமகாலச் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகத் தகவல்களை மறுக்கும் இடங்களில் மட்டும் அவற்றைப் பயன்படுத்துகிறார் ஆசிரியர். விமர்சனப்பூர்வமான அணுகுமுறைக்கு அதை மேலும் பயன்படுத்தியிருக்கலாம்.

இந்நூலை பலவீனமானதாகக் கருதுவதற்குக் காரணம், அது சுயவிமர்சனம் என்பதை கருத்தில்கொள்ளவே இல்லை. ஏற்பு-மறுப்பு ஆகியவற்றைக் கொண்டே எதிராளிகளையும் உடன்பட வைக்கும் உரையாடல்களை நிகழ்த்த முடியும். அவ்வாறு செய்யாத குறையை ராஸ் மல்லிக்கை கையாண்ட இடத்தில் பார்க்க முடிகிறது. இடதுசாரி ஒவ்வாமையாளரான மல்லிக், பெயரிடப்படாமல் குறிப்பிட்ட ஒரு தகவலையும் பூதாகரமாக்கிய பலி எண்ணிக்கையையும் விளக்கியுள்ளார் ஆசிரியர். ஆனால், ராஸ் மல்லிக் தனது வாதத்தைப் பலப்படுத்தும் இடமே, சிபிஎம் கொடுத்த தொடர் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தபிறகு பொய்யானதைக் குறித்தே இருக்கிறது. அதனைக் கட்டுடைக்கப் போனால் சில தவறுகளை ஒப்புக்கொள்ள நேர்ந்துவிடுமோ என்றஞ்சி கடந்து செல்லப்பட்டுள்ளது.

காவல்துறை வாதங்களைப் போல் கட்சி பிரச்சாரகராகவே ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறார் ஆசிரியர். அங்கெல்லாம் வாதம்-எதிர்வாதம் மட்டுமே உள்ளது. இடது முன்னணியை வீழ்த்தவே செல்வாக்கிழந்த காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கியது; இடதுசாரி அரசைக் கவிழ்க்க இந்துத்துவர்கள், அறிவுஜீவிகள், மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள், உண்மையான இடதுசாரிகள் என அறிவித்துக்கொண்டவர்கள் அனைவரும் களமிறங்கினர் போன்ற வாதங்கள் சதிக் கோட்பாடாகவே தெரிகிறது.

வெகுமக்கள் சில சமூக விரோதிகளின் தூண்டுதலின் பேரில் செயற்பட்டார்கள் என்ற வாதம் நமக்குப் பழக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் எந்தளவிற்கு அகதிகளின் துயரை அரசியல் செய்தனவோ, அதேயளவு அவர்கள்மீது கரிசனம் கொண்ட இடது முன்னணியும் அரசியல் செய்திருக்கிறது. அதுதான் அவர்களின் ஆட்சியில் குடியேறிகள் பிரச்சனையை தவிர்க்க முடியாத ஒன்றாக்கியிருக்கிறது. இது தொடர்பான ஆசிரியரின் கூற்றுடன் நிறைவுசெய்கிறேன்:

‘1977இல் இடது முன்னணி ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், தண்டகாரண்யத்தில் இருந்து அகதிகள் மரிச்ஜாப்பிக்கு வந்ததும், மீண்டும் திரும்பிச் சென்றதுமான பதினைந்து மாதகால அத்தியாயம் நடந்திருக்கவே செய்யாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.’

Notes:

  1. Atig Ghosh, LEFT FRONT GOVERNMENT IN WEST BENGAL (1971-1982), Considerations on “Passive Revolution”
    & the Question of Caste in Bengal Politics, P.19

(அதிக் கோஸ் சிபிஎம் பதிப்பகமான LeftWord ல் புத்தகம் வெளியிட்டவர்)

  1. மேற்கோள்கள் சுருக்கமானதாக இருந்தாலும் ஆசிரியர் சொல்ல வருவதைக் கடத்தியிருக்கிறேன். குறிப்பாக, முன்னும் பின்னும் வெட்டப்பட்ட இந்த மேற்கோளில் இந்த இடத்தில் ‘தலைவர்களை’ என்று மட்டுமே வரும்போது ‘(சதிகார)’ என்ற அடைப்புக் குறியை சேர்த்து முழுமையான அர்த்தத்தை நிறைவு செய்திருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.