தியாகராஜன் குமாரராஜா — பொறுப்பற்ற துறப்பில் நிலைப்பாடுமில்லை, நேர்மையுமில்லை! ‘அவையம்’ கலந்துரையாடலை முன்வைத்து…

‘ஒவ்வொருவரும் இங்கு மதிப்பிடப்படுகிறார்கள். நீங்கள் யார் என்பது விஷயமில்லை. ஆனால், ஒருவரை ஏற்பது, அங்கீகரிப்பது மற்றும் மதிப்பிடுவது மனித நிலையின் தேவையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.’

— அலிஜான்ட்ரோ இனாரிட்டு (மெக்ஸிகன் இயக்குநர்)

1

தமிழ்த்தேசியம் மற்றும் இடதுசாரிய அரசியல் பேசும் மே 17 இயக்கத்தின் ‘அவையம் வாசிப்பு வட்டம்’ பல்வேறு ஆளுமைகளை அழைத்துக் கலந்துரையாடல் நடத்துகிறது. சமீபத்தில் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா இதில் கலந்து கொண்டு உரையாடினார். குமாரராஜா போன்ற வெகுஜன இயக்குநர் இத்தகைய கூட்டங்களில் கலந்து, அதில் உரையாடல் வடிவில் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளித்தது ஆரோக்கியமானது. இந்த நிகழ்வின் முதல் பகுதி ‘திசை புக்ஸ் ஸ்டோர்’ தளத்தில் வெளியாகியுள்ளது. அரசியல் நிலைப்பாடுகளை மறுக்கும் குமாரராஜா அரசியல் இயக்க கூட்டத்தில் பங்கேற்றதே முதல் சுவாரஸ்யம். எனவே, இந்த காணொளியில் கவனப்படுத்த வேண்டிய விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

தமிழ் சினிமா ஊடகவியலில் போதாமை இருப்பதற்குக் காரணம் சினிமாகாரர்களிடம் முரண்படுவதால் இழக்கப்படும் தொடர்புகள். இது சினிமாவை நம்பிய ஊடகத்தின் வணிகத்தைப் பாதித்துவிடும். எனவே, சினிமா நேர்காணல்கள் பல செயற்கையான வியந்தோதலை கொண்டிருக்கின்றன. இதற்கு நேர்மாறாக, குமாரராஜாவிடம் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி வைத்த கேள்விகள் யாவும் இயல்பாகவும் கூர்மையாகவும் இருந்தது. எவ்வித சினிமா சம்பிரதாயங்களும் இன்றி சமூக யதார்த்தம் அதிலிருந்தது. ஊடகவியலுக்கு இது ஓர் பரிந்துரை.

இயக்குநர் குமாரராஜாவின் அரசியல் சரித்தன்மையை (Political Correctness) ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல. உதாரணத்திற்கு, திராவிட இயக்க சினிமா போன்ற அரசியல் பிரச்சார சினிமா இப்போது வெற்றிபெறாததற்கும் சமூகத்தின் அரசியல் திரட்சி வீழ்ந்ததற்கும் காரணம் உலகமயத்தின் நுகர்வு சிந்தனை என்கிறார் குமாரராஜா. ‘மக்கள் சுகபோகமாக வாழும்போது, அவர்கள் தங்கள் வாழ்வில் மேலும் மேலும் ஆசைப் போட்டியில் உழலும்போது அது தேவைப்படவில்லை’ என்கிறார். உலகமயத்தில் மக்கள் தன்னிறைவான (Sophisticated) வாழ்க்கை வாழ்கிறார்கள், சாதாரண மக்கள் கார், வீடு வாங்க நினைப்பது நுகர்வு ஆசை என்பதையெல்லாம் எதிர்த்து விவாதிக்க வேண்டியதில்லை. அவருடைய புரிதலை அவரிடமே விட்டுவிடுவோம்.

மாறாக, தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இடத்திற்கேற்ப மாற்றுவது, தாம் உறுதிப்படப் பேசும் விஷயத்தை சில நேரத்தில் நழுவ விடுவது, அனைத்திலும் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, அதையே ஒரு நிலையாக முன்னிறுத்துவது போன்ற அவரின் வழக்கமான அம்சங்களை விவாதிக்க விரும்புகிறேன்.

2

‘தமிழ் சினிமா அரசியலில் பா.ரஞ்சித் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. காலப்போக்கில் எது தேவையோ அதை சினிமா எடுத்துக்கொள்கிறது. அந்தவிதத்தில் கடந்த எட்டு பத்தாண்டில் பெரியாரின் தேவை அதிகமாயிருக்கிறது. இன்று நடிகர்களே அதற்கு முன் வருகிறார்கள். நெருக்கடியான கால கட்டம் என்பதால் அது இப்போது நடக்கிறது. அந்த தேவை நீண்டகாலம் நீடிக்கக் கூடாது என்றும் நினைக்கிறேன்’ என்பது குமாரராஜாவின் வாதம்.

முதலில் இந்த நெருக்கடிக் காலம் பற்றி ஒப்புக்கொள்கிறார் குமாரராஜா. கேள்விகள் அதையொட்டி இருப்பதால் பெரியாரைப் பற்றியும் பேசியிருக்கிறார். இது ஏற்கக் கூடிய வாதம் என்றாலும், இவற்றை தனித்தனியான யதேச்சை நிகழ்வாக எடுத்துக்கொள்கிறார். ரஞ்சித் தயாரிக்கும் படங்கள் போல் அதற்கென தொடர் முன்னெடுப்போ, அதைக் காக்க வேண்டிய பொறுப்போ அவருக்குப் பொருட்டில்லை.

‘பா. ரஞ்சித் தனது கொள்கைகளைப் பேச வேண்டியே சினிமாவுக்கு வந்தவர். ஆனால், நான் சினிமா எடுப்பதற்கு மட்டுமே வந்திருக்கிறேன். இவை இரண்டும் சேர வேண்டும் என்று சொன்னாலும் அவை வேறாக இருப்பதில் தவறு இல்லை’ என்கிறார். சமூக தொடர்பற்ற தமிழ் இலக்கிய மனநிலைக்கே மீண்டும் வந்து சேர்கிறார் குமாரராஜா. நம் இலக்கிய மடாதிபதிகள் அனைவரும் பின்நவீனத்தை ஸ்ருஷ்டிப்பது போல் குமாரராஜாவும் தொடர்ந்து அதற்குப் பூசை செய்கிறார்.

தான் நேர்த்தியான சினிமா எடுக்க மட்டும் வந்தவன், பா.ரஞ்சித் சினிமா எடுத்தாலும் அவருக்கு ஒரு தேவை, கொள்கைப் பிடிப்பு உள்ளது என்று குமாரராஜாவின் பதிலைப் புரிந்து கொள்கிறேன். இப்போது, இரண்டில் எது உண்மையான கலப்படமற்ற சினிமா என்று கேட்டால், இரண்டும்தான் என்று அவர் சுலபமாகப் பதிலளித்துவிடுவார். ஆனால், பா. ரஞ்சித்தின் படங்கள் அதனளவில் சினிமாவாக இல்லை. அது வேறு சில புறக்காரணிகளை தன்னோடு கொண்டிருக்கிறது. பா. ரஞ்சித் போன்றவர்களுக்குள்ள நிர்ப்பந்தத்தின் பொறுத்து அது தேவைப்படுகிறது. ஆனால், பா. ரஞ்சித் கொண்டுள்ள சமூக நிலைப்பாடு இல்லாமலும் சினிமா சாத்தியம். அது அதனளவில் சினிமாவாக இருக்கும் என்று இதை விவரிக்கலாம். இன்னும் கொஞ்சம் கடும்போக்கு காட்டினால், மக்கள் மற்றும் சமூக கூட்டுணர்விலிருந்து தோன்றிய கலையை அதனிலிருந்து துண்டிப்பதை அதன் தூய வடிவம் எனக் குமாரராஜா சொல்வதாக எண்ணலாம்.

‘அரசியல் சார்பற்ற கலை போதுமானது. அவர்கள் அதில் நேர்த்தியான இலக்கை அடைந்தாலே போதும்’ என்று நேரடியாகச் சொல்கிறார். இதற்கு அவர் சொல்லும் உதாரணம், ‘சங்க இலக்கியங்களை இன்று நாம் அழகியலாகப் பார்க்கிறோம். அப்போது அது தீவிர அரசியல் விளைவாக தோன்றிருக்கலாம். அதேபோல், வெறும் கலைகளும் ஏதோவொன்றை பின்னாட்களில் பார்வையாளர்களுக்கு வழங்கும்’ என்பதாக இருக்கிறது.

நேரடி அரசியல் எனப்படும் சமூக சினிமா – எதிராக அழகியலைக் கொண்டுள்ள கலை சினிமா என்ற இருமையாகக் காண்பதே முதல் பிழை. சினிமாவில் சமூக அக்கறை என்பது எடுத்துக்கொண்ட களத்தில் பிரதிபலிக்கும் அறவுணர்வும் சமூக யதார்த்தமும் ஆகும். பெண்கள், விளிம்புநிலையினர், தொழிலாளர்கள் எனப் பாத்திரங்களில் கொள்ளும் கவனத்தை பொறுத்தது. இவற்றை ஒரு கலை சினிமா மீறினால் அது சினிமாவின் குற்றமல்ல. அதைக் கொண்டாடும் மக்களின் குற்றம் என்கிறார் குமாரராஜா.

குமாரராஜாவிடம் அகலாத இலக்கிய மனமும் பின்நவீன போதனையும் இருப்பதற்கு ஏதுவாக அவர் உரையாடல் ஜெயமோகனை நினைவுபடுத்துகிறது. முழுமையான பொருத்தப்பாடாக, ஜெயமோகன் போன்ற இந்துத்துவராக அவரை சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, தனது நிலைக்கு ஏற்றாற்போல் எப்படி மற்றவர்களை அவர் உள்ளிழுக்கிறார் என்று காண்கிறேன். பா.ரஞ்சித்தை குறிப்பிட்டுப் புகழும் குமாரராஜா அவர் போல் தான் சினிமா எடுக்க அவசியமில்லை என்கிறார். சாதி என்றில்லாமல் எந்த சமூக ஈடுபாடும் சினிமாவுக்கு இரண்டாம் பட்சமானது. சனாதன எதிர்ப்பாளர் நாராயண குரு, திராவிட இயக்க வேரைக் கொண்ட திருமாவளவன் போன்ற தலைவர்களை அவர்கள் நிலைப்பாட்டை நீக்கி அபகரிப்பார் ஜெயமோகன். இந்த தன்வயப்படுதலில் அவரவர்களின் அடிப்படை சாரம் நீர்த்துப்போகிறது. குமாரராஜா இந்த நேர்காணலில் அதிகம் மேற்கோள் காட்டிய பராசக்தி படத்தை மற்றொரு உதாரணமாக சொல்வேன்.

3

‘திராவிட அரசியல் சினிமாக்களில் பராசக்தி மிகப்பெரும் தாக்கம் செலுத்தியது. அதன் செல்வாக்கு இன்றும் நீடிக்கிறது’ என்கிறார் குமாரராஜா. ஆனால் வன்முறை பற்றிப் பேசிய மற்றொரு இடத்தில், ‘இன்று உங்களுக்கு வன்முறையாகத் தோன்றுவது மற்றொருவருக்குத் தோன்றாது. உங்களுக்கு இயல்பாகத் தோன்றுவது கூட மற்றவருக்கு வன்முறையாகத் தோன்றும். எது வன்முறை என்று வரையறுப்பீர்கள். ‘அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்’ என்று சொன்ன பராசக்தி படம் அன்று பலருக்கும் ஏற்பில்லாமல் இருந்திருக்கும். அது எடுக்கக் கூடாது எனலாமா’ என்று அழகாக ஒப்பிட்டிருப்பார்.

குமாரராஜாவின் வன்முறை குறித்த ஏற்பை பின்பு பார்க்கலாம். மாறாக, தாம் கொண்டாடும் ஒரு படத்தை மற்றொரு இடத்தில் விடுவிப்பது (objectify) பற்றி நோக்குகிறேன். இங்குப் பராசக்தி பிற்கால சினிமாக்களுக்கு போதித்த அரசியல் மரபு நீக்கப்பட்டு, பெயரளவிலான முற்போக்கு அடையாளமாக மட்டுமே அடைக்கப்படுகிறது.

பராசக்தியை இன்றைய வன்முறையோடு ஒப்பிடுவது முதலில் எந்தளவிற்கு அபத்தமானது. உதாரணம், உரையாடலில் பேசப்பட்ட வன்முறை சினிமாக்கள் யாவும் எளிய மக்களிடமிருந்து தோன்றியது அல்ல. சொல்லி வைத்தார் போல் நெல்சன், லோகேஷ் படங்களில் வன்முறை புரியும் நாயகர்கள் அனைவரும் அரசின் பிரதிநிதியாக இருக்கிறார்கள். ’அனிமல்’ படத்தில் மாநில முதல்வர் வீட்டின் பிறந்தநாள் விழாவுக்கு வந்து செல்லும் அளவிற்கான சலுகையாளன் (Privilaged) வன்முறை நிகழ்த்துகிறான். வன்முறையை அரசியல் ஆதர்சமாக கொண்ட அரசு நாட்டை ஆளும் சூழலில் இவர்கள் அனைவரும் அதைப் பிரதிபலிக்கிறார்கள்.

பராசக்தியோ அது வெளிவந்த சமகாலத்தில் அரசின் ஏற்பாகவும் கலாச்சார மேலாதிக்கமாகவும் இருந்த கருத்தியலை எதிர்த்தது. அதற்கான சூழல், தேவையை விட்டுவிட்டு அதை மீறல் சினிமாவாக சுருக்குவது பொருளற்றது. பராசக்தி கொண்ட அரசியல் வேரை குமாரராஜவால் கைக்கொள்ளவே முடியாது. சூப்பர் டீலக்ஸில் எளிய மனிதன் கடவுள் நம்பிக்கையை வசைபாடிய அவரால் சாதியைப் புனிதப்படுத்தாமல் இருக்க முடிந்ததா.

4

இன்றைய வன்முறை சினிமாக்கள் சமகால வலதுசாரி உளவியலைக் கடத்துகிறது என்று சரியாகக் கவனப்படுத்தினர் திருமுருகன் காந்தி. இதற்குப் பதிலளித்த குமாரராஜா, வன்முறையை எதிர்ப்பதை ஏற்கவில்லை. ‘எல்லாவிதமான படைப்பும் எல்லா காலத்திலும் வந்திருக்கிறது. மக்கள் பார்க்கமாட்டோம் என்று முடிவெடுத்து படம் ஓடவில்லை என்றால் அவர்கள் எடுப்பதை நிறுத்திவிடுவார்கள்’ என்றார்.

இது தந்திரமான (Diplomatic) பதில் என்று வெளிப்படையாக மறுத்தார் திருமுருகன் காந்தி. பார்வையாளர் ஒருவரும், ‘சமூகத்தில் எந்த பண்டம் விற்றாலும் வாங்குவதற்குச் சிலர் இருப்பார்கள். கொடுப்பதை நிறுத்தினாலே நுகர்வு குறையும். இயக்குநர்களுக்கு அதற்கான அறவுணர்வு இல்லையா?’ என்று நேரடியாகக் கேட்டார்.

பதிலாக, ‘நல்லது, கெட்டது என்று அவரவர் நிலையைப் பொறுத்தது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் திட்ட உரிமையுள்ளது. அதை ஏற்பவர்களும் உண்டு. மற்றவர்கள் பார்ப்பதைத் தடுக்க முடியாது. உலகம் என்ன பார்க்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய முடியாது. இங்கு எது அறம் என்று யார் சொல்வது’ என்று அப்பட்டமான வலதுசாரி லிபரல்வாதத்தை பொழிந்தார். குமாரராஜாவை முன்னிலைப்படுத்திப் பேசக் காரணம், அவர் வாதங்கள் சமூக விரோத செயற்பாடுகளுக்கும் இசைவைத் தருவதற்கு வழிகோலுகிறது. நேர்த்தியான சினிமா திறன் கொண்டவரிடம் இது ஆபத்தானது என்று பேசியிருக்கிறோம். அந்த இடத்திற்குத்தான் வந்து நிற்கிறார்.

’அனிமல்’ போன்ற இந்துத்துவ பயங்கரவாத சினிமா வருவது அவருக்குத் தவறல்ல. அதை வெற்றிபெற வைப்பதே தவறு என்று மக்கள் மீதே பழிபோடுகிறார். நீங்கள் ஏற்கவில்லை என்றாலும் அதை உருவாக்கப் படைப்பாளனுக்கு உரிமை உள்ளது என்கிறார். இங்கு அவர் கருத்து சுதந்திரத்தை மட்டும் பேசவில்லை, சினிமா வணிகத்தின் தூதுவராகவும் இருக்கிறார்.

பாலஸ்தீன இனப்படுகொலையை ஒட்டி பாலஸ்தீன சினிமா, ஆவணப்படங்கள் பேசுபொருளாகின்றன. அதுபோல் ஈழ சினிமா உருவாகத் தடுக்கும் சூழல் பற்றிக் கேட்கிறார் திருமுருகன் காந்தி. குமாரராஜா சொல்லும்போது, ‘அது நாம் பண்ணலாம் என்று நினைத்தால் பண்ணிரலாம். சென்சார், தியேட்டர் நெருக்கடி பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது. எதாவொரு இடத்திலும் அதைச் சாத்தியப்படுத்தலாம்’ என்கிறார்.

இதே வாதம் வன்முறை சினிமாக்களுக்கும் பொருந்துமல்லவா?! கவலைப்படாமல் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்த்தால் அதற்கு எதிரான திறந்த விவாதத்தை, செயற்பாட்டை முன்னெடுக்கலாம்தானே! ஆனால், அது வர்த்தகம் சார்ந்தது. அதைத் தொந்தரவு செய்து தனது வர்த்தகத்தில் சமரசம் செய்யும் தேவை திரைத்துறையினருக்கு இல்லை. மாறாக, ஈழம் பற்றிய சினிமா என்றால் அது வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட தேவை என்பதால் சோதனை செய்யலாம்.

டரண்டினோவால் ஆதர்சம் பெற்ற குமாரராஜாவின் ஆரண்ய காண்டத்தில் இடம்பெற்ற பெரிதும் அறியாத நிழலுக வன்முறையையோ, மாரி செல்வராஜின் கர்ணனில் சமூகத்திற்கு எதிரான போக்கை வெளிப்படுத்திய வன்முறையையோ யாரும் கேள்வி கேட்கவில்லை. சட்டம், மனித உரிமை, வரலாற்று வழியிலான அஹிம்சை உறவு போன்றவற்றை தகர்த்து வன்முறையை அரசு இயந்திரத்தின் மாற்று வடிவமாகக் கற்பிக்கும் லும்பன் இயக்குநர்களையே கேள்வி கேட்கிறார்கள். ஆனால், அவர்களையும் துறையின் வர்த்தக நலன் பொருட்டு வரித்துக் கொள்கிறார் குமாரராஜா.

அனைத்தையும் கைவிடும், தட்டிக் கழிக்கும் குமாரராஜாவின் கருத்துச் சுதந்திரம் வர்த்தக சூழலை மையம் கொண்டதாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. எதிர்ப்படும் அனைத்தையும் துறந்துவிடுவது பாதுகாப்பானதாக நினைக்கிறார். நவீன உறவுகள் (Live-in) நுகர்வு சிந்தனையின் வெளிப்பாடுதானே தவிர, வேறில்லையே என்று ஒருவர் கேட்கயில், அதை இரண்டு படங்களில் கையாண்டவரால் உறுதியாக (determined) பதில் சொல்ல முடியவில்லை. தாம் சார்ந்த விஷயங்கள், கொண்ட தீர்மானங்களையே தியாகராஜன் குமாரராஜா பொறுப்பற்று துறப்பதில் நிலைப்பாடுமில்லை, நேர்மையுமில்லை.

5

அவையம் வாசிப்பு வட்டத்தில் உரையாடிய குமாரராஜாவின் இரண்டாம் பாகம் வீடியோவில் சினிமா, கலை, அரசியலுக்கு இடைப்பட்ட நிலையைப் பேசியிருக்கிறார். இதில் அவரின் ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட தொடர்பை ‘தியாகராஜன் குமாரராஜா; உள்ளடக்கமற்ற கலை, கலைக்கு மேலான சரக்கு!’ கட்டுரை கவனப்படுத்துகிறது.

உதாரணமாக, ‘சூப்பர் டீலக்ஸில் அனைவரையும் உள்ளடக்கிய மொழி, இனத்தோடு வெறுப்பிற்குரிய சாதியை ஒப்பிட்டு ஏன் வசனம் வைத்தீர்கள் என்று கேட்டால், ‘அந்தக் கதாபாத்திரத்திடம் கேள்’ என்று பின்நவீன பாவனை செய்வார் என்று குறிப்பிட்டிருக்கும். அதை அப்படியே இதில் சொல்லியிருக்கிறார்.

6

குமாரராஜா உரையாடலில் மூன்றாம் பாகம் வீடியோ கவனிக்கத்தக்கது. அதில் அவர் கட்டியெழுப்பிய பிம்பம் சிறிய கேள்விகளால் தகர்கிறது. ‘எது தேவையோ அதுவே தர்மம், நமக்கு எதிரில் உள்ளவனுக்கும் அது உள்ளது. நாம் எதையும் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது’ என்று தனது முதல்பட ஒன்லைனை உறுதியாக வாதாடுகிறார் குமாரராஜா. இதன் அரசியல் அபாயம் குறித்தும், ஏற்றத்தாழ்வு சமூகத்தில் அது புரியும் வன்முறை குறித்தும் உடைத்துப் பேசிய திருமுருகன் காந்தியின் மறுப்பைக் காணொளியில் அவசியம் காணுங்கள்.

அனைத்தையும் துறந்த குமாரராஜாவால் (ஒருவர் அவரை முனிவர் என்கிறார்) எப்படி இப்பொடியொரு ஆதிக்க சிந்தனைக்கு வந்து சேர முடிகிறது என்ற கேள்வி எழுகிறது. அவரிடம் ஒரு புராதன நிர்ணய மனம் உள்ளது. அதாவது, நிலவும் யதார்த்தத்தை மட்டுப்படுவது. சட்டம், விதிகள், ஒழுங்கு என அனைத்திலிருந்தும் அப்பாலான ஒன்றை முன்னிறுத்துவது. சாக்ரடீஸ் தொடங்கி தொன்மைக்கால உதாரணங்கள் உட்பட ஒருசில மேற்கோள்களை நடைமுறைக்கு மாற்றாக வைப்பது. இதில், அனைத்திற்கும் மேற்பட்டவன் என்ற சனாதன நோக்கே எஞ்சுகிறது.

சூப்பர் டீலக்ஸில் சாதியை புனிதப்படுத்தியது பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து எதிர்கொள்வதால், ‘அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’ என்று ஒருவழியாக ஒப்புக்கொள்கிறார். குமாரராஜாவுக்கு சாதியைக் கொண்டாடும் நோக்கமோ தேவையோ இல்லை. ஆனால், தனது உறுதிப்பாடற்ற மனநிலையில் அவர் நிலைப்பாடற்ற தர்க்கம் புரிந்ததால் அந்தக் காட்சி அவ்வாறு வெளிப்பட்டது. அது எதிர்க்கப்பட வேண்டிய முழு பொறுப்பும் அவரையே சாரும். இதனை வைத்தே நேரடியாக ஒருபுறம் நிற்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்திருக்கலாம்.

ஒரு இயக்குநருக்கு அரசியல் நிலைப்பாடு முக்கியமா என்பது கேள்வி. குமாரராஜாவின் பதில், ‘இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இருக்க வேண்டும் என்று சொல்வதும் தப்பு, இருக்கக் கூடாது என்பதும் தப்பு…’

இதை நீங்கள் புரிந்துகொள்ளத் தேவையில்லை. வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், எது தேவையோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.