‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!

கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவின் ‘ஊடகப்பரப்பு’ பிரம்மாண்டமான மாறுதல்களைப் பார்த்திருக்கிறது. ஊடகப் பரப்பு என்பது அமெரிக்காவில் வசிக்கும் அர்ஜூன் அப்பாதுரை என்ற இந்திய ஆராய்ச்சியாளரால் முதலில் பயன்படுத்தப்பட்டது. காட்சி ஊடகங்கள் உலகில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், உலகளாவிய பண்பாட்டுப் பாய்ச்சல்களில் பொதுஊடகங்களின் பங்கையும் விவரிக்கவும் பொருத்தவும் பயன்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை வலிமைப்படுத்துவதற்கு ஊடகங்களில் பெரும்பகுதியினர் ஆற்றி வரும் பங்கு பாரட்டப்பட வேண்டிய அதே நேரத்தில் சில செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஓடைகள், இணையத் தளங்கள் செயல்படும் முறைகளில் பல மோசமான போக்குகளையும் பார்க்க முடிகிறது. இவற்றில் “பணத்துக்கு செய்தி”யும் பிற வெளிப்படையான வணிகப் போக்குகளும் அடங்கும்.

1990களில் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு புதிய தகவல் தொழில்நுட்பங்களும் விளம்பரதாரர்களுக்கு ஆதாயம் கொடுக்கும் இலக்காக மாறிய வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுக் கலாச்சரமும் ஊடகங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளரச்சியடைய வழிவகுத்தன.

உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிடும் போது இந்தியாவின் செய்தித் தாள்கள்/பத்திரிகைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்திய செய்தித் தாள்கள் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி எகனாமிஸ்ட் தகவலின் படி, இந்தியா இப்போது உலகின் அதிவேகமாக வளரும், மிகப்பெரிய செய்தித் தாள்களின் சந்தையாக இருக்கிறது. விலைக்கு விற்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கையில் சீனாவை முந்தி 11 கோடி பிரதிகள் தின விற்பனையைக் கொண்டிருக்கிறது.

முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி – கார்டியன்

தொலைக்காட்சி ஓடைகளின் எண்ணிக்கை வளர்ச்சி பல மடங்காக அதிகரித்திருக்கிறது. 1991ல் ஒரே ஒரு பொதுத்துறை ஒளிபரப்பாளராக தூர்தர்ஷன் இருந்தது. இப்போது 600க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஓடைகளுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நாட்டிலிருந்து ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருகிகறது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இருக்கும் 250க்கும் அதிகமான பண்பலை வானொலிகளின் எண்ணிக்கை இன்னும் 5 ஆண்டுகளில் 1,200 ஆக உயரும். இந்திய பயனாளர்களுக்கென இயங்கும் இணைய தளங்களின் எண்ணிக்கையை யாரும் கணிக்கவில்லை.

ஆனால், எண்ணிக்கை அதிகரிப்பு தர அதிகரிப்பாக மாறவில்லை. முதலாளித்துவ அமைப்பின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு விரோதமாக, ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி வெளிப்படையாக தரக் குறைவுக்கு வழிவகுத்திருக்கிறது. பார்வையாளர்களைக் கைப்பற்றும் போட்டியின் கூடவே உள்ளடக்கத்தை ‘சிறுமைப்படுத்தும்’ போக்கு வளர்ந்தது. தொலைக்காட்சி ஓடைகள் மிகவும் பொருத்தமற்ற, பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனார்கள். 1991ஆம் ஆண்டில் வெளிநாட்டு மூலதனத்தை பெறும் விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு முதலில் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் முதல் வரிசையில் இருந்தது பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் கண் வைத்துக் கொண்டிருந்த ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் (சாட்டிலைட் டெலிவிஷன் ஆசிய மண்டலம்) குழுமமும் ஒன்றாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

முர்டோக் நிலவரங்களை தெளிவாக புரிந்து கொண்டவர். அவரது இந்திய பேரரசு இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வினியோகத்திலிருந்து செய்தி, பதிப்பித்தல் மற்றும் திரைப்படம் வரை பரந்திருக்கிறது. ஸ்டார் இந்தியா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய (வருமான அடிப்படையில்) ஊடக பெருநிறுனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அது 8 மொழிகளில் செயல்படும் 32 ஓடைகளில் இருப்பதில் அதிகமான பார்வையாளர்களைக் (வாரத்துக்கு 17 கோடி பார்வையாளர்கள்) கொண்டிருப்பதாக சொல்கிறது. இந்த ஓடைகள் ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஒன், ஸ்டார் கோல்ட், சேனல் வி, ஸ்டார் ஜல்சா, ஸ்டார் ப்ரவாஸ், ஸ்டார் வேர்ல்ட், ஸ்டார் மூவிஸ், ஸ்டார் உத்சவ் மற்றும் கூட்டு நிறுவனங்களாக ஏசியாநெட், ஸ்கை நியூஸ், FX, பாக்ஸ் கிரைம், ஸ்டார் விஜய், ஸ்டார் நியூஸ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிற. ஸ்டார் குழுமம் டாடா குழுமத்துடன் கூட்டு வைத்து ‘நேராக-வீட்டுக்கு’ என்ற டிடிஎச் வினியோக சேவையையும் வழங்கி வருகிறது.

இந்திய செயல்பாடுகள்

“யார் மில்லியனர் ஆக விரும்புகிறீர்கள்” என்ற பிரிட்டிஷ் நிகழ்ச்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு புகழ் பெற்ற “யார் கோடீஸ்வரன் ஆவார்” என்ற விளையாட்டு நிகழ்ச்சியை, தான் ஸ்டார் பிளஸ் சேனலில் நடத்த முடிவு செய்திருப்பதாக 2005ம் ஆண்டு புது தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கிறார், திரைப்பட நடிகர் ஷாருக்கான்.

நியூஸ் கார்ப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் “அடுத்த தலைமுறை” வாய்ப்பு என்று முர்டோச்சினாலேயே குறிப்பிடப்பட்டது. முர்டோச்சின் இந்திய முயற்சிகளின் வெற்றி கெட்டிக்காரத்தனமான வணிக மற்றும் மேற்கத்திய முறைகளை உள்ளூர் அணுகுமுறையுடன் செயல்படுத்தியதை நம்பியிருக்கிறது. அவர்தான் இந்தியாவின் முதன் முதலில் ஒரு இசைத் தொலைக்காட்சி (சேனல் வி), ஒரு 24×7 செய்தி தொலைக்காட்சி (ஸ்டார் நியூஸ்), பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றின் வெற்றிகரமான இந்திய வடிவம் (“கோடீஸ்வரன் ஆகப்போவது யார்”, இங்கிலாந்தின் “மில்லியனர் ஆக விரும்புவது யார்” என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) ஆகியவற்றை உருவாக்கியவர். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு தகவல் தொடர்பு துறை பேராசிரியாராக இருக்கும் தயா கிஷன், ‘முர்டோக்மயமாக்கப்படும்’ இந்திய ஊடகம் என்பதை “ஊடக வலிமை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வினியோக அமைப்புகளையும், உலகளாவிய நிகழ்ச்சி தயாரிப்பு பின்னல்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பன்னாட்டு, பல்ஊடக தனியார் பெருநிறுவனங்கள் கைக்குப் போவதாக” வரையறுக்கிறார்.

பெரு நிறுவன குழுமங்களின் கையில் ஊடக உடைமை குவிதல்; விளம்பர வருமானத்தை நம்பி இருப்பதால் மதிப்பீடுகளுக்காக அதிகரித்துக் கொண்டே போகும் போட்டி; அடிக்கடி தெளிவற்று வரையறுக்கப்பட்ட “உடனடி செய்தி” மீதான மிகையான சார்புநிலை; “எக்ஸ்குளூசிவ்” என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், “எதுவாயிருந்தாலும் சரி” என்ற செயல்உத்தி; வசதிபடைத்த நடுத்தர மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்தல் (விளம்பரதாரர்களுக்கு அதிக ஆதாயம் தரும் பிரிவினர்); செய்தி உள்ளடக்கத்தைக் கவர்ச்சி மயமாக்குதல், மீச்சிறு பொது அறிவு நிலைக்கு பொருந்தும்படி செய்தி அளித்தல்; விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் இடையிலான நெருக்கமான பொருத்தமற்ற உறவு; செய்தியை விலைபொருளாக மாற்றுவது: இவை அனைத்துமே இந்திய ஊடகத்துறையின் பெரும்பகுதிகளில் காணக் கிடைக்கும் முர்டோச் மயமாக்கலின் வெளிப்பாடுகள்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் முதல் டேப்ளாய்டுகளில் ஒன்றான த ஹெரால்டு செய்தித்தாளைத் தொடங்கிய ஜேம்ஸ் பென்னட் எனபவர், “கற்பிப்பதற்காக இல்லை, திடுக்கிட வைப்பதற்காகத்தான் செய்தித் தாள்கள்” என்று சொல்லியிருந்தார். துஸ்சு மற்றும் பிறரின் கருத்துப்படி, ஸ்டார் குழுமத்தின் ஓடைகள் பரபரப்பானதாகவும், நகர, மேற்கத்திய, நுகர்வுக் கலச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவும் இருக்கும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் முன்னணி வகித்தன. குறிப்பாக பாலியல் உள்ளடக்கத்தையும் பிரபலங்களை துதி பாடும் கலாச்சாரத்தையும் இந்தியர்களைப் பிடித்து ஆட்டுவதாகச் சொல்லப்படும் மூன்று Cகளான குற்றம், கிரிக்கெட், திரைப்படம் இவற்றையும் குறி வைத்தார்கள். கூடவே, இந்தியாவின் பெரும்பாலான செய்தித்தாள்கள் வெளிப்படையான பக்கசார்புடன் செயல்படுகின்றன. முர்டோச் நடத்தும் பாக்ஸ் நியூஸ் மற்றும் பிற நியூஸ் கார்ப் ஊடக அமைப்புகளைப் போன்றே வெளிப்படையாக அடாவடியான நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

ஸ்டார் செய்தி நிகழ்ச்சி “சன்சனி” (இந்தியில் பரபரப்பு என்று பொருள்) நகரக் குற்றங்கள், பாலியல் வன்முறை, கொலை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. அதே போன்று “ரெட் அலெர்ட்” என்ற நிகழ்ச்சி, குற்றங்களை காவல் துறை கையாளுவதைப் பற்றி டேப்ளாய்டுகளின் பாணியில் உண்மை விபரங்களை பின்தள்ளி பேசுகின்றது. செய்திகளை நாடகத்தனமாகவும் பரபரப்பாகவும் மாற்றுவதே நோக்கமாக இருக்கிறது. பெரும்பாலும், ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் சித்தரிக்கப்பட்ட குற்ற நிகழ்ச்சிகளுடன் பொருத்திக் காட்டும் உத்தியையும் பயன்படுத்துகிறார்கள். தி இந்துவின் தலைமை ஆசிரியர் என் ராம் அண்மை காலங்களில் ஊடக செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி வருத்தப்பட்டு சொல்லும் போது “இது ஒரு கவலைப்படத்தக்க போக்கு” என்று குறிப்பிட்டார். “எங்கும் புகுந்து விடும் உளவு பார்க்கும் ஒளிப்படக்கருவிகள் துப்பறியும் ஊடக உத்திக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்திருக்கின்றன”

பிரபலமானவர்களுக்கும் அவர்களின் பாலியல் வாழ்க்கைக்கும் பரவலாக இடம் கொடுக்கும் போக்கு ஸ்டார் நியூசில் மட்டும் இல்லை. ஊடக விமர்சகர் சேவந்தி நீனன் சொல்வது போல “திரு எம் தயவால் நாம் எப்போதையும் விட அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறோம்” “அவரது நிகழ்ச்சிகள் மேம்படுத்துவையாகவோ, அறிவூட்டுபவையாகவோ இல்லை என்பது பொருட்டே இல்லை. வேறு யாருடையதும் அப்படி இல்லைதான்”

உதாரணமாக டிவி டுடே குழுமத்தின் ஆஜ் தக் நிறுவனம் “கபரேன் படாபட்” (உடனடி செய்திகள்) என்ற முழக்கத்துடன் தேஜ் (வேகம் என்று பொருள்) என்ற ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தது. இந்த தொலைக்காட்சி “நீளமான விவாதங்கள், தேவையற்ற அலசல்களில்” ஈடுபடாது என்று உறுதியளித்தார் அதன் தலைமை அலுவலர் அரூண் பூரி. விற்பனை/பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதையே வணிக முறையாக கொண்டிருக்கும் ஊடக நிறுவனத்திற்கு செய்தியின் திடுக்கிடச் செய்யும் மதிப்புதான் அதிமுக்கியமாகப் போய் விடுகிறது. செய்திகளை முந்தித் தருவதற்காக கழுத்தை அறுக்கும் உத்திகளைப் பயன்படுத்தும் இந்திய ஊடகத் துறையின் சில பிரிவினர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஜூன் 2007-ல் ஊடகங்களை காட்டு மிருகமாக உருவகித்து, பத்திரிகையாளர்களை கட்டுப்பாடற்ற பசியுடன் அலையும் விலங்குகளுடன் ஒப்பிட்டதை நினைவூட்டுகிறார்கள்.

மும்பையில் ஜூலை 13 ஆன்று நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகள் தொடர்பான ஒளிபரப்பின் ஒரு பகுதி முர்டோக் நிறுவனங்களில் அடிக்கடி குழப்பமாக வரையறுக்கப்படும் பிரேகிங் நியூஸ் மீதான மிகையான சார்புநிலை; எக்ஸ்குளூசிவ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், எதுவாயிருந்தாலும் சரி என்ற உத்தி;

நவம்பர் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிய ஊடக செய்திகள் இது போன்ற பல பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. அதிகமாக திடுக்கிட வைக்கும் காட்சிகளையும் ஒலித்துணுக்குகளையும் தேடும் இடிபிடியில், மிக மோசமான உணர்வுகளை மதிக்காத முறைகள் பின்பற்றப்பட்டன, பல நேரங்களில் சரிபாரக்கப்படாத தகவல்கள் உண்மை என வழங்கப்பட்டன. இந்திய ஊடகங்களின் ஒரு பகுதியினர் தர்மத்துக்கு மாறாக நடந்து கொண்டதற்கு இன்னொரு வெளிப்படையான உதாரணம் 2008 மே மாதம் நடந்த 14 வயதான் ஆரூஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி செய்தி அளித்த முறைகளும், அதை கதை போல மாற்றுவதற்கு செய்த முயற்சிகளும் ஆகும். ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகரித்து வரும் விளம்பரதாரர்களின் செல்வாக்கின் விளைவாக, விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் நடுவில் ஒரு காலத்தில் இருந்த சீனப் பெருஞ்சுவர் உடைவதைப் பார்க்க முடிகிறது. 2003-ல், பென்னட் கோல்மன் நிறுவனம் (பிசிசிஎல், டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், மகராஷ்டிரா டைம்ஸ் போன்ற அவற்றின் பிரிவுகளில் சந்தையின் முதல் இடத்தில் இருக்கும் பத்திரிகளை வெளியிடும் நிறுவனம்) “பணத்துக்கு செய்தி” தருவதற்கு மீடியா நெட் என்ற சேவையை ஆரம்பித்தது. அதன் மூலம் விற்பனை நிகழ்வுகளுக்கும் பிரபலமானவர்களின் நிகழ்வுகளுக்கும் கட்டணம் வாங்கிக் கொண்டு பத்திரிகையாளர்கள் அனுப்பப்பட்டார்கள். அதன் போட்டியாளர்கள் ‘இந்த செயல்முறை பத்திரிகையாளர் தர்மத்தை வெளிப்படையாக மீறுவது’ என்று புகார் சொன்ன போது, பிசிசிஎல் நிர்வாகம், ‘இந்த விளம்பரதலையங்கங்கள் நாளிதழின் முக்கிய பகுதியில் இல்லாமல், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டுமான சமூக துணுக்குகளடங்கிய பலவண்ண துணைப் பகுதியில் மட்டுமே வெளியாவதால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்’ என்று பதிலளித்தது.

பணத்துக்குச் செய்தி

மீடியாநெட் நல்ல விதமாக செய்தி வெளியிடப்படுவதற்காக நாளிதழ்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் காசு கொடுக்கும் ‘பணத்துக்கு செய்தி’ வெளியீட்டை நிறுவனமயாமாக்கியது. செய்தி போல வேடம் பூண்டிருக்கும் இது, சாதாரண விளம்பரங்களை விட தாக்கம் அதிகமானது. வாசகர் அல்லது பார்வையாளர் இதில் சொல்லப்படும் தகவல்கள் பத்திரிகையாளரால் தன்னிச்சையாக திரட்டப்பட்டது என்று எண்ணுவார்.

மற்ற ஊடக நிறுவனங்களும் பிசிசிஎல்லின் அடிச்சுவடுகளை ஒற்றி பின் தொடர ஆரம்பித்து விட, இந்த நிழல் வழிமுறை அரசியல் செய்திகளுக்கும் பரவி 2009 மக்களவை தேர்தலில் பரவலாக கையாளப்பட்டது. குறிப்பிட்ட வேட்பாளரை பாராட்டி அல்லது ஆதரித்து அல்லது அவரது அரசியல் எதிரிகளைக் குறை சொல்லி எழுதுவதற்கு உரிய ‘விலைப்பட்டியல்’ அல்லது ‘பொதிகள்’ வினியோகிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்த வேட்பாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது.

நிறுவனமாக இல்லாத வடிவத்தில் (ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமின்றி சட்ட விரோதமானதுமான), இந்த செயல்பாடுகளை நிரூபிப்பது மிகவும் கடினமானது, ஏனெனில் இந்த பண பரிமாற்றங்கள் அதிகாரபூர்வமான பதிவுகள் எதுவும் இல்லாமலேயே நடைபெறுகின்றன. இது பி சாய்நாத் எழுதி தி இந்துவில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் சுட்டிக் காட்டுவது போன்று பல வேடிக்கையான சம்பவங்களுக்கு வழி வகுத்தது . எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் மறுத்தாலும், அவரது சாதனைகளையும் திறமைகளையும் பாராட்டும் ஒரே மாதிரியான கட்டுரைகள் இரண்டு போட்டி போடும் நாளிதழ்களில் சில நாட்கள் இடை வெளியில் எப்படி வெளியானது என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

இந்திய பிரஸ் கவுன்சில், பணத்துக்கு செய்தி பற்றி அறிக்கை எழுதுமாறு ஒரு துணைக் குழுவை பணித்தது (அந்தக் குழுவில் இந்த கட்டுரையாளர்களில் ஒருவரான பரஞ்சோய் குகா தகுராலும் ஒருவர்) அந்த அறிக்கை சந்தர்ப்பம் சார்ந்த சாட்சியங்களை வைத்து முன்னணி செய்தித்தாள்களைக் குறிப்பிட்டு அவர்கள் செய்தி போன்ற உருவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட தனிநபர்களுக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டதை விளக்கியது.

செல்வாக்கு வாய்ந்த பதிப்பாளர்களின் குழு முயற்சிகளால் ஜூலை 31, 2010 அன்று நடந்த கூட்டத்தில் கை தூக்கி வாக்கெடுப்பு மூலம் (முறையான வாக்கெடுப்பு இல்லாமலேயே) முடிவு எடுக்கப்பட்டு பெரிதும் நீர்த்துவிக்கப்பட்ட வடிவத்தில் இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் துணைக்குழுவின் 71 பக்க முழு அறிக்கை கசிய விடப்பட்டு பல இணையதளங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்தார். ஜூலை 15ஆம் தேதி இந்தூரில் நடந்த மறைந்த பிரபாஷ் ஜோஷி (பணத்துக்கு செய்தியை தீவிரமாக எதிர்த்தவர்)யின் 75வது நினைவு நாளில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர், “பிரஸ் கவுன்சில் பணத்துக்குச் செய்திகள் பற்றிய தனது அறிக்கையை பொதுவில் வைக்க முடியாமல் இருப்பது ‘ரகசிய கலாச்சாரம்’ மற்றும் சுய ஒழுங்குபடுத்தல் தொடர்பாக முழு துறையில் நிலவும் போக்குகளின் அறிகுறி என்று குறிப்பிட்டார்.
“தனியார் ஒப்பந்தங்கள்”

“தனியார் ஒப்பந்தங்கள்” என்ற திட்டம் இன்னொரு கவலை தரும் போக்காக இருக்கிறது. பிசிசிஎல் ஆரம்பித்து வைத்த இந்த திட்டத்தின்படி பெருநிறுவனங்களின் பங்குகளைப் பெற்றுக் கொண்டு விளம்பர பகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்தத்திட்டத்தின் வெற்றி, பிசிசிஎல்லை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. பிசிசிஎல் பேச்சாளர்கள், செய்திக் கட்டுரைகளின் உள்ளடக்கம் விளம்பரதாரர் மற்றும் பிசிசிஎல் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னாலும், விற்பனை-ஆசிரியர் பிரிவுகளுக்கிடையேயான சுவரின் பலவீனத்தைக் கணக்கில் எடுக்கும் போது பொறுப்புகளுக்கிடையேயான முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வாடிக்கையாளருக்கு சாதகமான செய்தி வெளியிடப்படுவதாலோ, பாதகமாக செய்தி வெளியிடப்படாமல் இருப்பதாலோ, பத்திரிகை நிறுவனம் விளம்பரதாரர் நிறுவனம் இரண்டுமே ஆதாயம் பெறுகின்றன.

சமீப ஆண்டுகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியும், பரிவர்த்தனை செய்த போது இருந்த கூடுதல் மதிப்பிலேயே மதிப்பு நிர்ணயிக்கும் வருமான வரித் துறையின் வழிகாட்டல் முறையும் தனியார் ஒப்பந்த திட்டத்தின் கவர்ச்சியை ஓரளவு குறைத்திருக்கிறது. மீடியாநெட்டைப் போலவே, தனியார் ஒப்பந்த முறையும் பிசிசிஎல்லால் ஆரம்பிக்கப்பட்டு உடனடியாகவே மற்றவர்களால் பின்பற்றப்பட ஆரம்பித்தது. ஆகஸ்டு 27, 2010ல் செபி நிறுவனம் (இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கழகம்) ஒரு ஊடக நிறுவனம், தான் வெளியிட்ட அல்லது ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களில் அதற்கு இருக்கும் நலன்களை வெளிப்படையாக தெரிவிக்க வேணுடம் என்ற வழிகாட்டுதலை உருவாக்கியது. ஆனால், இந்த வழிகாட்டுதல் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

எதிர்பார்க்கும்படியாக விளம்பரதாரர்கள் வாங்கும் திறன் அதிகமான சமூக பிரிவுகளையே குறி வைக்கிறார்கள். வாசகர்கள்/பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமே செய்தி அலசலின் நோக்கமாக இருக்கும் போது, தவிர்க்க முடியாத பின் விளைவாக பன்முகத்தன்மை குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரே மாதிரியாள அதுவும் நகர, வசதி வாய்ந்த நடுத்தர வர்க்க நுகர்வோர்களுக்கு சார்பான உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்கிறோம்.

2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது ஊடகங்களின் வர்க்க சார்பு நிலை கண்டனத்துக்குள்ளாகியது. ஐந்து நட்சத்திர தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடந்த நிகழ்வுகளுக்கு தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சாதாரண மக்கள் கொல்லப்பட்ட சத்ரபதி சிவாஜி முனையத்தில் நடந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டன. வெளிப்படையான ஊழலை விட மோசமான ஊடக உலகத்தைப் பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளிலிருந்து தனிமைப்படுத்தும் போக்கு இதில் இருக்கிறது. நோம் சாம்ஸ்கி, ஊடக பிரநிதித்துவத்தை பெருநிறுவன குழுமங்கள், பத்திரிகை பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் இணைந்து அவர்களது நலன்களுக்கு சேவை செய்யுமாறு உருவாக்குவது என்று வரையறுத்த “சம்மதத்தை உற்பத்தி செய்தலை” ஒத்திருக்கிறது இது.

ஒழுங்குபடுத்தல்

இந்தப் பிரச்சனைக்கு ஒழுங்குபடுத்தல் ஒரு தீர்வாக இருக்கலாம், குறிப்பாக, கூட்டு சேர்த்தல், போட்டியைத் தவிர்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒழுங்குபடுத்தல் முக்கியமானது. பிரஸ் கவுன்சிலின் அதிகாரம் அச்சு ஊடகத்தின் மீது மட்டுமே இருக்கிறது, அரை நீதி அமைப்பான அதற்கு தண்டிக்கும் அதிகாரமும் எதுவும் இல்லை.

பிப்ரவரி 2008-ல் இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு படுத்து ஆணையம் (TRAI) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு “ஊடக உடைமைக்கான பரிந்துரைகள்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. இன்னும் வெளியிடப்படாத இந்த அறிக்கையில் (அறிக்கையின் ஒரு பிரதி இந்த கட்டுரையாளர்களிடம் உள்ளது), “மூன்று ஊடக துறைகளான அச்சு, தொலைக்காட்சி, வானொலி பிரிவுகளில் பன்முகத்தன்மையும் வேற்றுமையும் பராமரிக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வாதிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியின் உதவியோடு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குறுக்கு ஊடக உடைமைகளை கட்டுப்படுத்தவும், ஒளிபரப்பாளருக்கும் வினியோகிப்பவருக்கும் இடையே இடைவெளியைப் பராமரிப்பதன் மூலம் போட்டிச் சந்தைக்கு எதிரான நடத்தைகளையும் ஊடக ஏகபோகத்தையும் தடுக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவின் தற்போதைய ஊடக சட்டங்களின் முக்கிய பிரச்சனை அவை தனிப்பட்ட நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், ஊடக குழுமங்களையும் பெரு நிறுவனங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பல பெரிய பெருநிறுவன குழுமங்கள் வெவ்வேறு நிறுவனங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் இந்த கட்டுப்பாடுகளை முழுவதுமாக தவிர்த்து விடுகின்றன. டிராயின் பரிந்துரைகள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யுகே, இந்தியா மற்றும் பிற இடங்களில் இருக்கும் எல்லா அரசாங்கங்களின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுடன் விருப்ப-வெறுப்பு நிலை இருந்தாலும் ஊடக உறவுகளை வளர்ப்பதை விரும்புகிறார்கள். நியூஸ் ஆப் த வேர்ல்ட் தொடர்பான தொலைபேசி ஒட்டுக் கேட்பு நிகழ்வும் முர்டோச்சுகள் மற்றும் நிறுவனத்தின் உயர் ஊழியர்கள் பொதுவில் விசாரிக்கப்பட்டதும், இந்திய ஊடக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

*****

பரஞ்சோய் குகா தாகுர்தா ஒரு சுயேச்சை பத்திரிகையாளர், கல்வியாளர்.

அலீஸ் சீபிரைட் இந்தியாவில் பணிபுரியும் ஒரு பிரிடிஷ் பத்திரிகையாளர்.

கட்டுரை-படங்கள: ப்ரண்ட் லைன், தமிழாக்கம்: குமார்

(நன்றி: வினவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.