‘சுவாசிக்கும் அனைத்து உயிர்களுக்கும்!’ – ஆஸ்கர் தவறவிட்ட இந்தியப் பொக்கிஷம்!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக இந்திய சினிமா சார்பில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெறப்பட்டிருப்பது செய்திகளிலும், இணையப் பகிர்வுகளிலும் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. சிறந்த ஆவணக் குறும்படங்களின் பிரிவில் The Elephant Whisperers படமும், சிறந்த பாடல் பிரிவில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும் ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது இந்தியாவின் பெருமிதம் எனக் கொண்டாடப்படுகின்றன.

ஆஸ்கர் விருதுகள் நீண்ட காலமாகவே கறுப்பினத்தவர்கள், பெண்கள் உள்ளிட்டோரைப் புறக்கணிப்பதாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஒவ்வொரு ஆண்டும் முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய முற்போக்கு முலாம் பூசப்பட்ட முதலாளித்துவ காலகட்டத்தில், இந்த விமர்சனங்களுக்கு இடமளிக்காமல் இருக்கவும், சமகாலத்தில் தம் இருப்பை நிலைநாட்டவும் சற்றே அனைவரையும் உள்ளடக்கிய அரசியலைப் பேச முன் வந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, ‘பாராசைட்’ ஆஸ்கர் விருதுகளை வென்றது; இன்று ‘நாட்டு நாட்டு’ வென்றிருக்கிறது.

ஆஸ்கர் 2023 – இந்தியாவைச் சேர்ந்த வெற்றியாளர்கள்

’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை முன்வைக்கும் ஒன்று. அதில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான பாவனை இருந்தாலும், சாவர்க்கர் போன்ற இந்துத் தேசியவாதிகள் இந்திய சுதந்திரப் போரில் கடைப்பிடித்த ‘தந்திர’ உத்தியின் நியாயத்தைப் பேசுகிறது; வெளிப்படையாகவே பழங்குடிகளை இந்து மதத்தின் பிரிவினராக சித்தரிக்கிறது. ராமாயணத்தை முன்வைத்து பார்ப்பனர்கள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையைக் கோருகிறது. இந்திய சுதந்திரம் பற்றிய ஒரு திரைப்படத்தில் வெளிப்படையாகவே காந்தி, நேரு ஆகியோரைப் புறக்கணித்ததோடு, இந்து தேசியத்தைத் தீர்வாக முன்வைக்கிறது. இந்த காரணங்களுக்காகவே ‘ஆர்.ஆர்.ஆர்’ ஓர் வலதுசாரி திரைப்படம் எனத் தெளிவாக வாதிடலாம்.

அதே வேளையில் உலகளவில் அதிக திரைப்படங்களை உருவாக்கும் நாடாக இந்தியா இருந்து வந்தாலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயர் இப்போது தான் ஒலித்திருக்கிறது என்று இந்திய சினிமா ஆர்வலர்கள் கூறுவதிலும் உண்மைத்தன்மை இருக்கிறது. இந்திய வெகுஜன சினிமா தொடர்ந்து பல ஆண்டுகளாக சர்வதேச அரங்குகளில் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹாலிவுட் உடனான ஒப்பீட்டளவில், இந்திய சினிமாவில் ‘மியூசிக்கல்’ பாணியில் சேர்க்கப்படும் பாடல்களைக் காலாவதியான வடிவங்களாக மேற்கத்திய திரைமேதைகள் பலரும் கருதுகின்றனர். எனினும், இந்தியாவின் சமகால முக்கிய இயக்குநர்களுள் ஒருவரான அனுராக் காஷ்யப் போன்றோர் இந்திய சினிமாவின் பலமே பாடல்கள் தான் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். அந்தத் தொடர்ச்சியில் பார்க்கையில், ‘நாட்டு நாட்டு’ பெற்றிருக்கும் அங்கீகாரம் முக்கியமானது. ஆனால் அதற்கு இந்தப் பாடல் தகுதி பெற்றதுதானா என்பது விவாதத்திற்குரியது.

நாட்டு நாட்டு பாடல் – ஆர்.ஆர்.ஆர்.

ஆவணக் குறும்படப் பிரிவில் வெற்றி பெற்றிருக்கும் The Elephant Whisperers அடிப்படையில் அழகியலைச் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒன்று. மனித – விலங்கு உறவுகள் என்பது சர்வதேச அளவில் பார்வையாளர்களைப் பரிவுடன் ஈர்க்கக்கூடியவை என்பதாலும், அதில் இடம்பெற்றிருந்த கதை மாந்தர்களின் அப்பாவித்தனம், யானைகளையே பார்த்திராத அமெரிக்காவின் ஆஸ்கர் விருதுக் குழுவினரின் ஆச்சர்யங்கள் முதலானவை இந்த விருது பெறுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் – உதாரணமாக மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடிகளிடையே இந்து முன்னணி போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளால் அவர்களின் வாழ்க்கையில் நிகழும் சமூக மாற்றங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை எதிர்கொள்ளும் சூழலியல் மாற்றங்கள், மசினகுடி போன்ற யானை வழித்தடங்கள் மீதான பெரு நிறுவனங்களின் பார்வை, யானை வாழ்விடங்கள் நிறுவன ரீதியாக அழிக்கப்படுவது முதலான எந்த அரசியலுக்குள்ளும் செல்லாமல் பழங்குடி தம்பதியின் வாழ்க்கையை முதலாக மாற்றி பெருமிதம் ஈட்டியிருக்கிறது இந்த ஆவணப்படக்குழு. இந்த விருதுகளால் ஆவணப்படத்தை இயக்கியவர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் மட்டுமே ஆதாயம் சேரும் என்பதை மறுக்க முடியாது. ஆஸ்கர் விருது பெற்றவுடன் The Elephant Whisperers ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் நன்றி தெரிவிக்கும் பதிவில், இந்தப் படத்தில் காட்டப்பட்டிருந்த பொம்மன், பெள்ளீ ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும், அவர்கள் இருவரும் இந்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டார்களா என்ற ஒரு சர்ச்சையும் உருவாகியிருக்கிறது.

The Elephant Whisperers

ஆஸ்கர் விருதுகளைப் பெரிதாக எண்ணாத திரைமேதைகள் பலரும் பிரான்ஸ் நாட்டின் கான் விழாவைக் கொண்டாடுவார்கள். தற்போதைய சூழலில், கான் விழாவும் தீவிர முதலாளித்துவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாலும், இந்தியாவின் சத்யஜித் ரே, பிமல் ராய், வி. சாந்தாராம், ராஜ் கபூர், மிரிணாள் சென், நந்திதா தாஸ், அனுராக் காஷ்யப், நீரஜ் கய்வான் ஆகியோரின் படைப்புகள் கான் விழாவில் கௌரவிக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த போதும், விருது பெறாமல் போன ஆவணப்படம் ‘All That Breathes’ கடந்த ஆண்டு கான் விழாவின் விருதுகளைப் பெற்றிருந்தது.

சிறந்த ஆவணப்படப் பிரிவில் பரிந்துரையில் இருந்த ‘All That Breathes’ படம் இந்தியாவின் சமகால அரசியலை மறைமுகமாகப் பேசும் முக்கியமான படைப்பு. டெல்லியின் நகர்ப்புறமயமாக்கலால் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள், காற்று மாசு முதலான பிரச்னைகள் பருந்துகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், உடல் நலிவுற்று வானில் இருந்து விழும் பருந்துகளுக்கு சிகிச்சை அளிக்கும் மூன்று முஸ்லிம் சகோதரர்களின் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.

சூழலியல் பிரச்னைகளைப் பேசும் படமாக, மீண்டும் விருது விழாக்களைக் குறிவைக்கும் மனித – விலங்கு உறவு குறித்த படமாக இது உருவாக்கப்பட்டாலும், படப்பிடிப்பின் நடுவே குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், டெல்லியில் முஸ்லிம்கள் மீதான வெறியாட்டம் முதலானவை அதே காலகட்டத்தில் நிகழ்ந்ததால், அவையும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுக் கொண்டன. ‘இந்த ஆவணப்படத்தில் அரசியல் இடம்பெற்றது தவிர்க்க இயலாத ஒன்றாகி போய்விட்டது. இதில் காட்சிப்படுத்தப்படும் சகோதரர்கள் அரசியல் ஈடுபாடு இல்லாத தனிநபர்கள். இதை ஒரு சூழலியல் படமாகவும், இரண்டு சகோதரர்களின் மனப் போராட்டத்தின் கதையாகவும் மட்டுமே அடையாளப்படுத்த விரும்புகிறேன். ஆனால் இந்தியாவின் அரசியல் சூழல் அவர்களின் வாழ்க்கையின் மீது படிந்துவிட்டது’ எனக் கூறுகிறார் இதன் இயக்குநர் ஷௌமிக் சென்.

All That Breathes

பெருநகரங்களில் வாழும் எலிகள், ஆமைகள், ஆந்தைகள், பருந்துகள் என வெவ்வேறு உயிரினங்களைக் காட்சிப்படுத்தியுள்ள இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிமொழி வழக்கமான ஆவணப்படச் சட்டகங்களுக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் Supermen of Malegaon, Khatiyabaaz, The World before Her முதலான ஆவணப்படங்கள் இதே பாணியில் உருவாகியிருக்கின்றன. நிபுணர்களின் பேட்டி, பின்னணி குரல்களின் மூலமாக கதை சொல்வது முதலான பழைய பாணியை உடைத்து, புனைவுக் கதைகளில் எழும் சுவாரஸ்யத்தைப் போலவே ஆவணப்படத்திலும் எழுமாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது All That Breathes. புனைவுத் திரைப்படங்களே ஆவணப்படங்களைப் போல உபதேசம் செய்பவையாக கற்பனை வறட்சியில் உருவாக்கப்படும் சமகால சூழலில் இந்த ஆவணப்படத்தின் திரைமொழி மிக முக்கியமானது.

பருந்துகளுக்கு உணவளிப்பதையும், சிகிச்சை தருவதையும் தாம் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மதத்தின் போதனைகளில் இருந்து எடுத்துக் கொள்வதாகக் கூறும் இந்தச் சகோதரர்களுள் ஒருவர், ஷாஹீன்பாக் போராட்டத்தில் கலந்துகொள்ள தன் மனைவி அழைக்கும் போது அவரை மட்டும் அனுப்பி வைப்பதும், தான் செய்யும் பணியைத் தன்னை விட்டால் யாரும் செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். ’சுவாசிக்கும் அனைத்து உயிர்களுக்கும்’ என்று பொருள்படும் இந்தப் படத்தின் தலைப்பு, டெல்லியின் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படும் பருந்துகளைக் குறித்தாலும், சமகால தேச அரசுகள் சிறுபான்மையினரின் குடியுரிமை மீது நிகழ்த்தும் தாக்குதலையும் சூசகமாக குறிக்கிறது. படத்தின் இறுதியில், டெல்லியின் காற்று மாசு நிலையும், சமூக அரசியல் சூழலும் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதைப் போலவும், தினம் நூற்றுக்கணக்கில் நோய்வாய்ப்பட்டு விழும் பருந்துகளும், சிறுபான்மை முஸ்லிம் சமூகமும் ஏறத்தாழ ஒரே போல இருப்பதாகவும் பதிவு செய்திருக்கிறது ‘All That Breathes’ ஆவணப்படம்.

ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஆவணப்படமாக ‘நவல்னி’ வெற்றி பெற்றிருக்கிறது. ரஷ்ய அதிபர் புடினின் அதிதீவிர விமர்சகரும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்ஸி நவல்னி மீதான கொலை முயற்சி பற்றிய ஆவணப்படம் இது. ரஷ்யா – உக்ரைன் போர் உச்சகட்டத்தில் இருக்கும் சூழலில் இந்த ஆவணப்படத்திற்கான அங்கீகாரம் என்பது அமெரிக்காவின் மெசெஜாக இருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே ‘All That Breathes’ ஆவணப்படம் விருது பெறாமல் போயுள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘The Elephant Whisperers’ ஆகியவற்றின் வெற்றிக் களிப்பில், ‘All That Breathes’ பேசுபொருளாகாமல் போனது வருத்தம். மேலும், இது இந்தியாவில் இன்னும் வெளியாகததால் பலருக்கும் சென்றடையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ‘All That Breathes’ ஆவணப்படத்தைத் தரவிறக்கம் செய்து மட்டுமே பார்க்க முடியும்.

– ர. முகமது இல்யாஸ்

  • ‘RRR’ திரைப்படம் ஹாட்ஸ்டார், Zee5, நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய தளங்களில் கிடைக்கிறது.
  • ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது.
  • ‘All That Breathes’ ஆவணப்படம் HBOMax தளத்தில் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.