‘எல்லாம் மாறும்’ என்ற அழகான பொய்! – ‘மாமன்னன்’ விமர்சனம்!

அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்புகளை அளித்திருந்தது ‘மாமன்னன்’. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் என முன்னணி நடிகர்களின் வித்தியாசமான காம்போ அத்தகைய எதிர்பார்ப்புகளை வலுப்படுத்தியது. ’மாமன்னன்’ ஆடியோ லான்ச் ஏறத்தாழ உதயநிதி ஸ்டாலினின் ‘பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா’ பாணியிலேயே அமைந்திருந்தது. அவரது ஃபேர்வெல் திரைப்படத்திற்கான அறிமுகமாகவும், ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் வெற்றி விழாவாகவும் நடந்த அந்த நிகழ்ச்சியை இயக்குநர் மாரி செல்வராஜின் அறச்சீற்றம் வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றது.

‘தேவர் மகன்’ படத்திற்கான பதிலடியாக தனக்கு உருவான கேள்விகளின் வழியாக ‘மாமன்னன்’ படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். வடிவேலுவின் மாமன்னன் தன் கட்சியின் மூத்த சகாக்களோடு இருக்கும் காட்சிகள் தேவர் மகன் இசக்கியை நினைவூட்டின. ஒரு தலைமுறையின் மாற்றமாக, சமகால தலித் இளைஞனின் கோபத்தின் பிரதிபலிப்பாக உதயநிதி நடித்திருக்கிறார். இசக்கியை மாமன்னனாக மாற்றியதில் மாரி செல்வராஜிற்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ, அதே அளவிலான பங்கு உதயநிதிக்கும் இருக்கிறது.

நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதன் அரசியல் பல திரைப்படங்களில் ஏற்கனவே இடம்பெற்றவை. ’படையப்பா’ படத்தின் நீலாம்பரி – படையப்பா ஆகியோரின் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும் காட்சி அத்தகையது. விஜய் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படத்திலும் வில்லனான அப்பாவுக்கு எதிராக தன் அம்மாவை அமர வைத்து, எழுந்து நிற்க விடாமல் சுயமரியாதையைக் காக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் சமகால அரசியல் சூழலில், தொடர்ந்து திமுகவின் மூத்த தலைவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தலித் சமூகத்தைச் சேர்ந்த கட்சிக்காரர்களையும், இஸ்லாமியர்களையும் இவ்வாறு நடத்துவதன் பின்னணியில் இயங்கும் சாதிய அரசியலை ‘மாமன்னன்’ தொட்டுச் சென்றிருப்பது சிறப்பு.

சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘முதல்வருக்கு சாதிய விவகாரங்களிலும், பாஜக எதிர்ப்பிலும் வீரியமாக இயங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால் ஒரு கட்சி என்ற அடிப்படையில் பலரையும் பகைத்துக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலும், கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினாலும் செயல்பட முடியாமல் இருக்கிறார்’ எனக் கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எம்.பி ஒருவரைச் சந்தித்தபோது, அவரும் ஏறத்தாழ இதே கருத்தைக் கூறினார். ‘கொள்கை பேசினால் வாக்குகளை இழக்க நேரிடும்… கொள்கை பேசும் இளைஞர்களை மேடையேற்றாதீர்கள்’ என வெளிப்படையாகவே பேசும் இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இருக்கும் வரை, திமுகவுக்குப் பின்னடைவு மட்டுமே’ என நொந்துபோய் கூறினார். இவர்கள் மட்டுமின்றி, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவரும், தலித் சமூகத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவரும் திமுகவுக்குள் நிலவும் சாதிய, மதப் பாகுபாடு குறித்து, பண்ணையார்த்தனங்கள் குறித்து புலம்பியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே வழக்கமான சமூக வலைத்தள உரையாடல்களில் அடிக்கடி இடம்பெறும் நபர்கள்; மேடைகளிலும் ஊடகங்களிலும் மூர்க்கமான திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள்.

திமுகவுக்குள் இருக்கும் இத்தகைய குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறது வடிவேலுவின் ’மாமன்னன்’ கதாபாத்திரம். இது வரவேற்பிற்குரியது. இதனைப் பேசியிருப்பது திமுகவின் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின். ஃபகத் ஃபாசில், வடிவேலு போன்ற தேர்ந்த நடிகர்களுக்கு இடையில் உதயநிதிக்கான இடம் ‘மாமன்னன்’ படத்தில் நன்றாகவே வந்திருக்கிறது. ‘நெஞ்சுக்கு நீதி’ படத்திற்குப் பிறகு, மீண்டும் அருந்ததியர் சமூகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அரசியல் தேவைகள், முற்போக்கு பாவனை முதலாளித்துவத்திற்கான லாப வேட்டை என ‘மாமன்னன்’ படத்தை எந்தக் கோணத்திலும் பார்க்கலாம். அதில் முகாந்திரம் இல்லாமல் இல்லை என்றாலும், உதயநிதியின் நேர்காணல்களில் அவருடைய அரசியல் நேர்மை வெளிப்படுகிறது. தனது அரசியல் நிலைப்பாட்டின் எல்லையை சற்றே விரிவு செய்திருக்கிறார். கட்சிக்குள் தன்னை மீறி யாரும் இல்லை என்பதால் சாதியக் குரல்கள் முணுமுணுக்கக் கூடும்; எனினும் தன் அரசியல் இதுதான் எனத் தன்னை ஒப்படைத்திருக்கிறார். இப்படியான சூழலில் சினிமாவை விட்டு அவர் நீங்குவது சரியல்ல. இது தற்காலிகமான முடிவாக இருந்தால் நலம்.

குடியைக் கொண்டாடும் படங்கள், பெண்களைத் திட்டும் கதாபாத்திரங்கள், மாடர்ன் லும்பன் கதாநாயகன் – காமெடியன் காம்போ போன்ற அடையாளங்களின் மூலமாக உதயநிதி தனது சினிமா கரியரைத் தொடங்கிய அதே காலகட்டத்தில் தான் பா.ரஞ்சித் சினிமாவுக்குள் பெரும் மாற்றங்கள் செய்தார். புறக்கணிக்கவே முடியாத அத்தகைய மாற்றம்தான் உதயநிதியை இங்கே அழைத்து வந்திருக்கிறது. ஏழாம் அறிவு இட ஒதுக்கீடு வசனத்திற்கு இன்று வருத்தம் தெரிவிக்கும் கலைஞரின் பேரன் உதயநிதி வெறும் பத்து ஆண்டுகளின் இடைவெளியில் சமூக நீதி crash course முடித்து, முதல்வர் ஆசையில் மிதப்பது திராவிட இயக்கத்திற்கு நேர்ந்திருக்கும் துயரம். மொத்தத்தில் ‘மாமன்னன்’ அவருக்கு நிச்சயம் நல்வாய்ப்பாக அமைந்திருக்கிறது. ’பராசக்தி’ மூலமாக உச்சத்திற்கு சென்ற கலைஞரின் இறுதித் திரைப்படமாக கொங்கு வேளாளர் சாதியை ஈர்க்கும் ‘பொன்னர் சங்கர்’ அமைந்தது திராவிட இயக்கத்தின் பின்னடைவின் சின்னமாக இருக்கும் சூழலில் வரலாற்றைத் திருத்தும் முயற்சியாக அதே கொங்கு வேளாளர்களால் ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்த இளைஞனாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் உதயநிதியின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

இந்திய சினிமா வரலாற்றில் பா.ரஞ்சித் வருகை ஓர் முக்கிய நிகழ்வு. அவரது திரைப்படங்கள் சாதி வெறியர்கள் தொடங்கி ‘முற்போக்கு’ முகாம் வரை கடும் எரிச்சலை ஏற்படுத்தியவை. இன்றும் ரஞ்சித் ஏன் பெரியாரைப் பேசவில்லை என அவருக்கு அக்னிப் பரீட்சை வைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். ரஞ்சித்தின் திரைப்படங்கள் மீது பலருக்கும் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அவரது குரல் தவிர்க்கவே முடியாதது. ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களில் வரும் தலித் நாயகர்கள் சாதியக் கட்டுப்பாட்டை உடைப்பவர்கள். அதனை வன்முறையாக, சாதிய ஒழுங்கிற்கு நேரும் சிக்கலாக அணுகுபவர்கள் பலரும் இருக்கின்றனர். அத்தகையோருக்கு பணிந்து போகும், பரிவைக் கோரும் ‘பரியேறும் பெருமாள்’ பிடித்திருக்கிறது. ஆனால் அதே மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ மீண்டும் வன்முறையாகத் தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் ‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜால் ஈர்க்கப்பட்டவர்.

குறைந்தபட்சமாக திரைப்பிரதிக்குள் கதாபாத்திரங்கள் தங்களுக்கான சினிமாத்தன நீதியை அடித்துப் பெறுவதைக் கூட ஏற்காத சமூக ஒழுங்கிற்குள் ‘மாமன்னன்’ மாரி செல்வராஜின் படமாகவும் அல்லாமல், உதயநிதியின் படமாகவும் அல்லாமல், ‘பரியேறும் பெருமாள்’ காட்சிமொழியின் வழியாக, ‘கர்ணன்’ போல மாற முயன்று தடுமாறிப் பெரும் தோல்வி அடைகிறது. கோயில் குளத்தில் ‘பன்றி மேய்க்கும் சிறுவர்கள்’ குளிப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, தொடர்ந்து கட்சிக்காரனான மாமன்னனின் கையறுநிலை, எம்.எல்.ஏ மாமன்னனின் இயலாமை, அதிவீரனின் பயிற்சிக்கூடக் காவலாளி தாக்கப்படுவது, பன்றிகள் கொல்லப்படும் காட்சி என மிக நீண்ட சாதிய வன்கொடுமைக் காட்சிகளைப் பார்க்கும்போது சிலருக்கு பரிதாபம் தோன்றலாம்; சிலருக்குக் குற்றவுணர்வு தோன்றலாம். சிலருக்குக் கொண்டாட்டமாகவும் இருக்கலாம். இவை ஒருபக்கம் இருக்க, இடைவேளைக் காட்சியின் எழுச்சி படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் கடும் சரிவை நோக்கி நகர்ந்தது.

சாதியச் சமூகத்தின் பிரச்னையாகத் தொடங்கும் திரைப்படம் இறுதியை நோக்கி நகரும் போது மாமன்னனுக்கும் ரத்தினவேலுவுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னையாகவே சுருங்கிவிடுகிறது. ‘சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ போல, தேர்தல் மூலமாக சுயமரியாதையை வெல்ல முடியும் என மாறும்போதே, ‘மாமன்னன்’ அதன் தொடக்கத்தில் முன்வைக்கும் கருத்தியலுக்கு முரணாக மாறிவிடுகிறது. ஒரு திரைப்படமாகவும், குறிப்பாக சமூக விடுதலையைப் பேச முயன்று, மீண்டும் பழைய சுழற்சிக்குள் வெறும் ‘மாமன்னன்’ என்ற கதாபாத்திரத்தின் விடுதலையாக மாறிவிடுகிறது.

‘கர்ணன்’ கண்ணபிரானுக்கு நேர்ந்த முடிவைப் போல அல்லாமல், ‘மாமன்னன்’ ரத்தினவேலு மீண்டும் அதே சமூகத்தின் ‘பெரிய மனிதராகவே’ நீடிக்கிறான். அவனுக்கான முடிவு என்பது அவனது கௌரவத்தின் இழப்பாக மட்டுமே இருக்கிறது. உதயநிதி அல்லாமல் வேறு யார் அதிவீரனாக நடித்திருந்தாலும், படத்தின் முடிவு இப்படியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

’மாமன்னன்’ படத்தின் அரசியலைப் பேச உதயநிதி – மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் சமரசம் செய்திருக்கின்றனர். உதயநிதி தனது எல்லையை சற்றே விரிவடைய செய்திருக்கிறார்; மாரி செல்வராக் தனது எல்லையைச் சற்றே சுருக்கியிருக்கிறார். உதாரணமாக ‘சாதிச் சங்கம்’ என்று சொன்னால் உதயநிதிக்கு அரசியல் ரீதியாக பிரச்னை எழும் என்பதால் அதனைக் கூட ‘சங்கம்’ என்றே அழைக்கின்றனர். சாதி என்ற சொல்லே வராமல், குறியீடுகளின் வழியாகவே தனக்கான குறுகிய எல்லையில் தன் அரசியலைப் பேச முயன்றிருக்கிறார் மாரி செல்வராஜ். உதயநிதி ஸ்டாலின் என்ற நடிகர் – அரசியல்வாதிக்கு ‘மாமன்னன்’ திரைப்படம் மூலமாக தனக்கான இமேஜை, பெரிதும் பாதிப்பின்றி, வளர்த்துக்கொள்ள முடியும். ஆனால் மாரி செல்வராஜ் போன்ற இளம் இயக்குநர்களுக்கு இது நிச்சயம் பின்னடைவு.

’திராவிட இயக்கத்தைப் புறக்கணிக்கிறார்’, ‘நீலச் சங்கி’ என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்ட பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோர் தரப்பில் இருந்து ‘சார்பட்டா பரம்பரை’, ‘மாமன்னன்’ முதலான நேர்மையான விமர்சனங்கள் தமிழ்ச் சமூகத்தின் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ‘மாமன்னன்’ நேரடியாகவே திமுக தலைமை இந்தப் பிரச்னைகளைக் களையும் நோக்கம் கொண்டதாக இருப்பதாகவே உதயநிதி மெசேஜ் தருகிறார்; திமுகவின் மாமன்னன்களோடு நிற்பதாக உதயநிதியும், முதல்வர் ஸ்டாலினும் திரைப்படங்களின் மூலமாக வெளிப்படுத்தினாலும், அதிகாரம் கொண்ட அவர்களால் கூட ரத்தினவேலுக்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம். அது ‘மாமன்னன்’ திரைப்பிரதிக்கு வெளியே மட்டுமல்ல, உள்ளேயும்தான் என்பதை உணர்த்துகிறது கிளைமாக்ஸ்.

எல்லாம் மாறும் என்ற அழகான பொய்யைத் தந்த மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி!

  • ர.முகமது இல்யாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.