தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகி, அமேசான் ப்ரைம் தளத்தில் உருவாக்கப்பட்ட ‘மாடர்ன் லவ்’ தொடரின் இரண்டு சீசன்களும் அழகியலோடு சமகால உறவுகளில், குறிப்பாக நியூ யார்க் நகரப் பின்னணியில், நிலவும் அன்புப் பரிமாற்றம் குறித்த கதைகளைப் பேசுபவை. இதில் ‘லவ்’ என்பது sexual, romantic, familial, platonic, self love என வித்தியாசப்படுத்தப்பட்டு பேசப்பட்டிருந்தது. ‘மாடர்ன் லவ் மும்பை’, ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகியவை ஏறத்தாழ இதே சட்டகங்களுக்கு உட்பட்டிருந்தாலும், தமிழில் ‘லவ்’ என்பது இன்னும் ஆண்-பெண் காதல் உறவுகளுக்குள் நிகழும் ஒன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதுவே ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரின் முதல் சிக்கல்.
‘லாலாகுண்டா’ என்றால் எனக்கு வண்ணாரப்பேட்டையில் நிகழ்ந்த குடியுரிமை எதிர்ப்புப் போராட்டம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தியாகராஜன் குமரராஜாவுக்கு நினைவு என்பதே ஒரு பறவை என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஃபீல் குட் என்ற அம்சம் அழகாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் இது பேசும் அரசியல் வட இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு எதிராக பரப்பப்படும் பொய்ச் செய்திகளுக்குத் தீனியிடுவதாக அமைந்திருந்தது. சுமார் ஒரு ஆண்டுக்கு முன், திருவல்லிக்கேணியில் ‘இமைகள்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது, அதே வழியில் சென்று கொண்டிருந்தபோது, யாத்ராம்மாவை (டீ.ஜே.பானு) காண முடிந்தது. திருவல்லிக்கேணி என்பதால் இறுதியில் வீணையைக் கொடுத்துவிட்டார்கள் என்றும் தோன்றியது. ‘இமைகள்’ நல்ல படம் எனக் கருதுகிறேன்.
ரிது வர்மா நடித்திருந்த குறும்படம், சென்னையை மையப்படுத்தாமல் தமிழ் இணையச் சூழலின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெறுவதற்காகவே ஏகப்பட்ட ரெஃபரன்ஸ்களை வைத்திருந்ததாக நினைக்கிறேன். ‘மின்னலே’ ரெஃபரன்ஸ், நீலாம்பரி ரெஃபரன்ஸ் தொடங்கி, தமிழ் இணைய woke சாதி ஒழிப்பாளர்களின் பதிவுகளில் அடிக்கடி தென்படும் mandatory ’நீங்க என்ன ஆளுங்க?’ என்பதும், இறுதியில் பரத்வாஜ் ரங்கனை இங்கிலிஷ் பேசும் ப்ளூ சட்டை எனக் கலாய்த்தது வரை இணையத்தை டார்கெட் செய்திருந்தார்கள். ஒரு கதாசிரியர் வருகிறார்; நலன் குமாரசாமி வந்து, ‘இதுவும் கடந்து போகும்’ என்கிறார். ஆக எந்த வகையில் மாடர்னும் இல்லாத, சென்னையும் இல்லாத லவ் ஸ்டோரியாகவே இது அமைந்தது. இதில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தை மாடர்ன் என்ற பெயரில் வலிந்து திணித்திருக்கிறார்கள்.
‘மார்கழி’ – இந்தத் தொடரின் அத்தனை அம்சங்களையும்- சென்னையின் நிலம், மனிதர்கள், காதல் உறவு, பிரதிநிதித்துவம் ஆகியவற்றைப் பேசியிருந்தது. இந்த ஆந்தாலஜியில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி. இளையராஜா முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். பாரதிராஜாவின் ‘பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’ ஓர் ஆண்மய்யவாத சினிமா. கிஷோரின் தவிப்பு, ரம்யா நம்பீசனின் பெருந்தன்மை, விஜயலட்சுமியின் தயக்கம் ஆகிய அனைத்தையும் அழகாக பதிவுசெய்திருந்தார் பாரதிராஜா. சென்னையின் மெட்ரோ பயணங்களில் பாலு மகேந்திராவுக்குச் சமர்பிக்கப்பட்டிருந்த மாண்டேஜ் காட்சிகள் எப்போதும் மனதில் நிற்கும்.
இறுதியாக, ‘நினைவோ ஒரு பறவை’. ஒரு சினிமா ரசிகனாக இந்தப் படத்தைப் பெரிதும் ரசித்தேன். சினிமாவுக்குள் சினிமா என்ற மெடாசினிமா பாணியிலான ‘நல்ல’ படங்கள் தமிழில் மிகக் குறைவு. தியாகராஜன் குமாரராஜா அதில் அட்டகாசமான பணியைச் செய்திருக்கிறார். சிகரெட் பாக்ஸ்கள், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் வரும் ஏலியனின் வீட்டில் வாழும் வாமிகா, The eternal sunshine of the spotless mind படத்தை நினைவுகூரும் காட்சியமைப்புகள், உச்சபட்சமாக பாலுறவுக் காட்சி படமாக்கப்பட்ட விதமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டிருக்கும் அசாத்திய பாய்ச்சல். ஆனால், இதிலும் சென்னை எங்குமே இல்லை. சினிமாவை அகநிலை சார்ந்த ‘கலை’ என்பதாகவும், புறநிலையில் வெறும் ‘வியாபாரம்’ என்பதாகவும் மட்டுமே கருதுவதால், தியாகராஜன் குமாரராஜாவின் படமும் அழகியல் என்பதோடு சுருங்கிவிடுகிறது.
‘மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜியில் பெரும்பாலும் சென்னையின் நிலமோ, சமகால உறவுகளோ பெரிதும் இடம்பெறவே இல்லை. தன் மீது மிகுந்த பாதுகாப்பு உணர்வு கொண்ட ரஷ்ய வாயில் காவலாளி மீது ஒரு பெண் வைத்திருக்கும் தந்தைக்கு நிகரான மதிப்பு, பைபோலார் நோயால் பாதிக்கப்பட்டு, தன் சுயத்தின் மீதான அன்பைப் பெருக்கும் பெண்ணின் கதை, இறந்த கணவனின் காரை அவர் நினைவாக வைத்திருக்கும் பெண்ணின் கதை, இரண்டு டீனேஜ் பெண்களுக்கு இடையில் தோன்றும் காதல், பெற்றோருடனான அன்புப் பரிமாற்றம், ஆண்-பெண் நட்பு முதலான பல்வேறு தீம்களில் ‘மாடர்ன் லவ்’ கதைகளைப் பார்த்ததால், ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் மாடர்ன் என்பதைத் தேட வேண்டியதாக இருந்தது.
பரத்வாஜ் ரங்கனுடனான நேர்காணலில் ‘கதாபாத்திரத்திற்கு தேவி எனப் பெயர் வைத்திருப்பதால், அதன் மீது தயாரிப்பு தரப்பிற்கு ஆட்சேபனை இருந்தது. ‘தேவி’ என்பது கடவுளைக் குறிக்கும் என்பதால் அவர்கள் தயங்கினார்கள். எனக்கு அப்படியெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லை. எந்தப் பெயராக இருந்தாலும், எனக்கு பிரச்னை இல்லை’ எனப் பேசியிருந்தார் தியாகராஜன் குமாரராஜா. மேலோட்டமாக, அறிவுஜீவியாகத் தெரிந்தாலும், ‘காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ என்ற தலைப்பில் படம் இயக்கும் முத்தையாவுக்கு இருக்கும் குறைந்தபட்ச அறிவுகூட தியாகராஜன் குமாரராஜாவுக்கு இல்லை என்று தோன்றியது. இதனால்தான் அவரது கதாபாத்திரங்களுக்கு எளிதாக கே, Sam எனப் பெயர் சூட்டிவிட முடிகிறது.
மனித வாழ்வு என்பதே அபத்தமானது; இந்த அபத்தத்தில் அழகியலுக்கு ஓர் இடமுண்டு. அதைத்தான் எனது படங்களில் கொண்டு வருகிறேன். இதில் அரசியல் குறித்தோ, காட்சிகளின் பொருள் குறித்தோ நான் விவரிக்கப் போவதில்லை என எல்லா நேர்காணல்களிலும் தவறாமல் சொல்லி வருகிறார் தியாகராஜன். ஒரு கலைப் படைப்பின் அரசியல் குறித்த பார்வை என்பது படைப்பாளிக்குத் தேவையில்லை; படைப்பாளி என்பவன் படைப்பின் வடிவத்தை அழகியலோடு (Aesthetic over politics) உருவாக்கித் தருபவன் என்ற ரீதியில் அவரது நேர்காணல்கள் இருக்கின்றன. போதாக்குறைக்கு, இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து கடவுள் மறுப்பு பேசும் அவரது நேர்காணல்களின் துணுக்குகள் வெட்டப்பட்டு, Woke நாத்திகர்களால் பரப்பப்படுகிறது. பெரியார் பேசிய கடவுள் மறுப்புக்கும், தியாகராஜன் பேசும் கடவுள் மறுப்பும் இடையில் மாபெரும் இடைவெளி இருக்கிறது,
’நினைவோ ஒரு பறவை’ படத்தில் ஒரு இடத்தில் சென்னையின் நிலத்தைக் காண முடிந்தது. ரிசர்வ் வங்கி அருகில் இருக்கும் சப்வே பகுதியில் சமீபத்தில் வரையப்பட்டிருந்த ஓவியங்களில் பின்னணியில் வாமிகாவும், அவரது காதலனும் இருக்கும் மாண்டேஜ் காட்சிகள் அழகியலுக்காக பயன்படுத்தப்பட்டன. ரிசர்வ் வங்கி சப்வே ஓவியங்களில் இந்து மதம் சார்ந்த ஓவியங்கள் முதலில் வரையப்பட, சென்னை மாநகராட்சி தலையிட்டு, அனைவரையும் உள்ளடக்கிய ஓவியங்களை – மீனவக் கிராமம், முஸ்லிம் பெரியவர், கிறிஸ்தவ தேவாயலம், விளிம்புநிலை மனிதர்களின் முகங்கள் ஆகியவற்றை இடம்பெறச் செய்தது. இந்தச் சுவரை நாம் மனிதர்கள் புழங்கும் பொது இடங்களில் அனைவரையும் உள்ளடக்கிய ஓவியங்களாக, அரசியலோடு நான் அணுகுகிறேன். தியாகராஜன் குமாரராஜா அதனை வெறும் அழகியலாக, அவரது படத்திற்கான பேக் ட்ராப்பாக மட்டுமே சுருக்கிவிடுகிறார். இது தன் படைப்பை மட்டுமின்றி, ஓர் மாநகரத்தின் அரசியல் நிலைப்பாட்டையே சீர்குலைத்துவிடுகிறது.
சினிமாவின் அழகியலை மட்டுமே தீர்மானமாக முன்வைக்கும் தியாகராஜன் குமாரராஜா போன்ற இயக்குநர்கள், சினிமா என்பது அடிப்படையில் ஓர் சமூக-கலாச்சாரத்தின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் பண்டம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனைப் புரியாத/புரிந்து கொள்ள மறுப்பதால் அவரது படைப்புகள் வெறுமையை மட்டுமே பரப்புகின்றன. அதனோடு நின்றும் விடுகின்றன.
‘மாடர்ன் லவ் சென்னை’ – மாடர்ன், சென்னை ஆகிய இரண்டுமே இல்லாத ரொமாண்டிக் ‘லவ்’ கதைகள்.