‘இங்கு நிலவும் அனைத்து தீவிர நிலைகளிலிருந்தும் நான் உங்களுக்குச் சொல்ல வருவது, நீங்கள் உங்கள் அடையாளங்களோடு ஒன்று திரளுங்கள். உங்கள் மரபார்ந்த வலிமையைத் தவிர வேறொன்றும் இங்கில்லை. அதுவே உங்களுக்கான சிறந்த பாதுகாப்பு. இதற்கு அர்த்தம் நாம் மற்றவர்களோடு கசப்புணர்வோடோ வஞ்சகத்தோடோ நடந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. உங்கள் தேவைகளையும் உரிமைகளையும் காக்க உங்களது வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே நீங்கள் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.’
முகமது அலி ஜின்னா, 1940 லாகூர் மாநாட்டு உரையில்..
இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் தொடங்கி முதன்மை எழுத்தாளர்களின் படைப்புகள் வரை அனைத்தும் வட இந்தியாவைச் சுற்றியே உள்ளன என்றொரு குறைபாடு இங்குள்ளது. மேலும் இவை, காலனியக் காலத்தில் காங்கிரஸ், அது முன்னெடுத்த தேசியப் போராட்டம் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. சமூகத்தளத்தில் போராடிய அம்பேத்கர், பெரியார், வர்க்கச் சுரண்டலை முதன்மையாக எதிர்த்த இடதுசாரிகள், பிராந்தியங்களில் போராடிய சமய – மொழி மறுமலர்ச்சியாளர்கள் என அனைவரும் பொது வெளிச்சத்திலிருந்து தொலைவிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சிறுசிறு இயக்கங்களின் அரசியல் கருத்தரங்குகள், சமூக வலைத்தள உரையாடல்கள் என்பவற்றில் மட்டுமே இவை தொடர்ந்து பேசப்பட்டுவருகின்றன.
வங்காளத்தில் கீழைத்தேயச் சிந்தனையாளர்களால் தொடங்கப்பட்டு இயங்கிவந்த ‘ஆசிய சமூகம்’ (Asiatic Society of Bengal) இந்திய வரலாறுகளைக் ‘கண்டுபிடித்து’ எழுதியதிலிருந்து இந்திய வரலாற்றின் பொருள், அதனை வெளியிட வேண்டிய சூழல் மற்றும் தேவைகள் சில அரசியல் காரணங்களைக் கொண்டிருந்தன. ஜேம்ஸ் பிரின்சிப் என்ற கீழைத்தேய நாணயவியலாளர் ‘தேவனப்ரியா பிரியதரிசி’ என்று குறிப்பிடப்பட்ட அசோகரைக் கண்டடைந்ததன் மூலம் ‘ஒன்றுபட்ட’ அல்லது ‘அகண்ட’ இந்திய ஆளுகைக்கான முன்னுதாரணம் பிரிட்டிஷ் அரசுக்குக் கிடைத்தது. (1)
காலனிய வரலாற்றாய்வாளர்கள், கீழைத்தேயச் சிந்தனையாளர்களைத் தொடர்ந்த தேசியவாதிகள் பின்காலனிய இந்தியாவிற்கான வலிமையான வரலாறுகளை முதலாமவர்கள் வழி தொடர்ந்தார்கள். பின்வந்த மார்க்சிய வரலாற்றாளர்கள் மற்றும் நேருவிய தாராளவாதிகள் வரலாற்றிலும் சமகாலத்திலும் சில இடையூறுகளையும் நெகிழ்வுகளையும் ஏற்படுத்தினர். ஆனால், காலனியம் முன்பு போட்டுக்கொடுத்த பாதையில் ‘தேசியவாதச் சட்டகம் வழி வரலாற்றைக் காண்பதும், சமகாலத்தை மதிப்பிடுவதும்’ என்ற ஒருபடித்தான சிந்தனையை யாராலும் தவிர்க்க முடியவில்லை.

தேசியவாத வரலாற்றில் தங்களின் பங்களிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன என்று சொல்பவர்கள் ஒருபுறம், தாங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளோம் என்று மாற்று வரலாறுகளைத் தேடியவர்கள் மறுபுறமும் புதிய ஆய்வுகளை வழங்கின. தமிழ்நாட்டின் திராவிட இயக்க வரலாறு தலித் தலைவர்கள் மற்றும் போராட்டங்களின் பங்களிப்பைப் பேசவில்லை என்று குற்றம் சாட்டி 90-களுக்கு பிறகு தலித் சிந்தனை மரபு எழுச்சி அடைந்தது. இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இதே மனக்குறை உள்ளது. தலித் எழுச்சி போல் ஓர் அலையாக எழவில்லை என்றாலும் ஆங்காங்கே சில தனிநபர்கள் இந்தியத் தேசிய வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கை வெளிச்சப்படுத்த தொடங்கினர்.
முஸ்லிம் வரலாற்றாளர்கள் முன் காங்கிரஸ் மைய செக்குலர் அரசியல், எதிராக ‘மதவாத’ முஸ்லிம் அரசியல் என்ற இருமையும், பிரிவினையும் சவாலாக இருந்தன. செக்குலர் நாடான இந்தியாவில் காங்கிரஸ் பேசிய செக்குலர் நிலைப்பாடே நேர்மையான நிலைப்பாடு என்ற நிர்பந்தத்தைக் கடப்பது அவர்கள் வாழ்ந்த சுதந்திர இந்தியாவில் எளிதல்ல. ஆதலால், ‘பிரிவினைக்கான மொத்த காரணத்தையும் முஸ்லிம்கள் மீது சுமத்த முடியாது’ என்று பேசும் முஸ்லிம் அறிஞர்கள், அதனைக் கவனமாகக் காங்கிரஸ் வழி அணுகினர். காங்கிரஸிலிருந்த இந்துத்துவர்களின் தீவிரமான அரசியல் (Radical Politics) காங்கிரஸின் செக்குலர் நிலையிலிருந்து தனித்துப் பார்க்க வேண்டும் என்பார்கள் குஹா போன்ற லிபரல் சிந்தனையாளர்கள் (2). இதுபோல், காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்களின் பங்கு, பிரிவினைக்கு எதிரான நிலைப்பாடுகளைப் பேசியவர்கள் அதனை முஸ்லிம் அரசியலிலிருந்து விலக்கிப் பார்த்தார்கள். இந்துத்துவ எதிர்ப்பு, முஸ்லிம் தன்னிலை எனப் பேசியவர்களால் கூட தேசியவாத சட்டகத்தை மீற முடியவில்லை. இந்தியக் குடியுரிமைப் போராட்டத்தில் பேசும்போது, ‘இந்திய வரலாற்றைப் பண்டிட்களே எழுதினார்கள். பின்னாளில் எழுதிய ஒருசில முஸ்லிம் வரலாற்றாளர்களும் பண்டிட்களைப் போலவே எழுதினர்’ என்று முஸ்லிம் தன்னிலையை கேள்வி எழுப்பினார் ஷர்ஜீல் இமாம்.(3)
முஸ்லிம்கள் மீதுள்ள அரசியல் பழிகளை நீக்கும் நல்லெண்ணத்தில் தோன்றிய நவீன ஆய்வாளர்கள் கூட கூர்மையான அரசியலைத் தங்களின் தாழ்வு மனப்பான்மைக்குள் புதைத்தனர். அரசியலற்ற முஸ்லிம்களை விடுவிக்க வரலாற்று நிலைகளுக்குப் புறம்பாக அரசியல் முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்கினர். இட ஒதுக்கீடு, சாதி எதிர்ப்பு உரையாடலுக்குப் பிறகே சாதியவாதம் பெருகியது என்று சொல்வது போல் முஸ்லிம் அரசியலுக்குப் பிறகே ’மதவாதம்’ தலைதூக்கியது. அதற்கு முன் முஸ்லிம்கள் இணக்கமாக மகிழ்வான வாழ்வு வாழ்ந்தார்கள் என்ற இலட்சிய திளைப்பில் மூழ்கினர். ‘முஸ்லிம்கள் தனி வாக்காளர் முறையில் தனியாக அதிகாரத்தைக் கண்டதால் மத அரசியல் உருவெடுத்தது. இது பிரிட்டிஷின் சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார் முஷிருல் ஹசன் (4). ஜாமியா மில்லியாவில் பேராசிரியர் தொடங்கி துணை வேந்தராக இருந்து ஓய்வு பெற்ற ஹசன் முக்கிய வரலாற்றிஞராக கொண்டாடப்படுகிறார்.

ஷம்சுல் இஸ்லாம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சாவர்க்கர், கோல்வாகர் போன்ற இந்துத்துவத் தலைவர்களை விமர்சித்து நூல்கள் எழுதியிருக்கிறார். ஹசனால் ஆதர்சம் பெற்று அவரை அதிகம் மேற்கோள் காட்டிய நூலாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது அவரின் Muslims Against Partition: Revisiting the Legacy of Allah Bakhsh and Other Patriotic Muslims. இந்திய முஸ்லிம்கள் பிரிவினைக்கு எதிராக இருந்தார்கள் என்று நிறுவும் இந்த நூல் பிரிவினை என்ற கொடும்பாவத்திற்கான காரணத்தை அரசியல் முஸ்லிம்களான முஸ்லிம் லீக் தலையில் வைக்கிறது. பதிலாக, அரசியலில் தலையிடாத, தேசியவாதம் மற்றும் காங்கிரஸ் செக்குலர் அரசியலுக்கு எந்த மறுப்புமின்றி வாழ்ந்த அசல் தேசியவாத (அவருக்குத் தேசபக்த – Patriotic) முஸ்லிம்களை இந்நூல் கொண்டாடுகிறது.
காலனியத்திற்கு எதிரான போராட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத, பிரிட்டிஷ் காலனிய அதிகாரத்திற்கு உடனிருந்து ‘காட்டிக்கொடுப்பார்களாகச்’ செயற்பட்ட இந்துத்துவர்கள் இன்று தேசபக்தியின் முற்றுரிமையை வைத்திருக்கிறார்கள். தேச விடுதலை போராட்டத்தில் தங்கள் சமூக, பொருளாதார, நவீனத்துவ பலன்களை விட்டுக்கொடுத்த முஸ்லிம்கள் அதற்கு எதிராகக் காட்டப்படுகிறார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினைக்கான மொத்த காரணமும் அவர்கள்தான் என்று அநீதியாகப் பிரச்சாரம் செய்துவரும் நாட்டில் உண்மையான வரலாற்றைப் பேசுவது அவசியம். ஆனால், அந்த உண்மைக்காகச் சிலர் எடுத்துக்கொள்ளும் வழிமுறை முஸ்லிம்களைத் தேச கட்டமைப்புக்கு எதிராக, மற்றமையாக (Others) எந்த இயங்கு முறை காட்டுகிறதோ அதோடு கைகோர்க்கிறது. அதனாலேயே, ஷம்சுல் இஸ்லாம் போன்றவர்களின் உண்மைகள் நீதியைக் கோருவதாக இல்லாமல் தேசியவாத செக்குலர்களிடம் தங்கள் நியாயத்திற்காக இறைஞ்சுவதாக உள்ளது.
தேசியவாத பண்பிற்கு ஏற்றாற்போல் பெரும்பான்மைவாத இந்துத்துவர்கள் செய்த ஆதார குற்றங்களை இரண்டாம் பட்சமாக்கி, முஸ்லிம் கட்சிகளின் அரசியலைக் குற்றத்திற்கான ஆதாரமாக்கியுள்ளார் ஷம்சுல். ‘இந்தியப் பிரிவினைக்கு எதிரான முஸ்லிம்கள் – தேசபக்த முஸ்லிம்களின் மரபு குறித்த மீளாய்வு’ என்ற பெயரில் அவரின் நூலை இந்தாண்டு தமிழில் கொண்டுவந்துள்ளது எதிர் வெளியீடு. விஜி என்ற பேராசிரியர் மொழிபெயர்த்துள்ளார். நூலில் தேசம், தேசபக்தி என்று வியந்தோதும் ஆசிரியரின் கருத்தியல் சிந்தனைகளைப் பற்றி விவாதிக்கப் போவதில்லை. அது அவரின் நிலைப்பாடு, உரிமையும்கூட. அவர் கொடுக்கும் தகவல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கம் கொடுக்கப் போவதுமில்லை. மாறாக, அவர் எவ்வாறு தகவல்களைக் கட்டமைக்கிறார், முஸ்லிம் அரசியலை இந்துத்துவ வன்முறையோடு ஒப்பிடுகிறார், அது சமகாலத்தில் எப்படி எதிரொலிக்கும் (குறிப்பாகத் தமிழ்ச் சூழலில்) போன்றவற்றைக் கவனப்படுத்துகிறேன்.

இந்துத்துவமும் முஸ்லிம் லீகும் ஒன்று!
இந்துத்துவமும் முஸ்லிம் லீகும் ஒன்று என்று ஷம்சுலுக்கு ஆதர்சமான மதச்சார்பற்ற வரலாற்று அறிஞர்களே சொல்லி வரும்போது அவர் சொல்வதில் ஆச்சரியமில்லை. ‘திரிபுவாத இந்து தேசியம், முஸ்லிம் தேசியம் என்ற பிரிவினைக் கோட்பாட்டில் ஜின்னாவும், சாவர்க்கரும் ஒரே நேர்கோட்டில் பயணித்தவர்கள்’ என்று ஜின்னாவையும் சாவர்க்கரையும் ஒப்பிட்டு மொழிபெயர்ப்பாளர் குறிப்பு எழுதுகிறார். இந்த நூலின் அரசியல் நிலைப்பாடுகள் உணர்ந்தே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று புரிய வருகிறது.
நூல் முழுக்க இவ்வாறே ஒப்பீடு நடக்கிறது. அது எந்தளவிற்கு நியாயமற்றது என்றால், இந்துத்துவர்களின் வெறுப்பு பிரசாரங்களையும் லீகின் அரசியல் கோரிக்கைகளையும் ஒன்றாக மட்டுப்படுத்தியது. உதாரணத்திற்கு, இந்து மகாசபை மற்றும் காங்கிரஸ் இரண்டிலும் இருந்த பாய் பரமானந்த் என்ற இந்து தேசியத் தலைவர் இந்துக்களுக்கு இந்து ஆட்சியாளர்கள் முக்கியம். முஸ்லிம்களுக்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் முக்கியம். இந்த முரண் வரலாற்றிலேயே உள்ளது என்று வரலாற்று ரீதியாக ஒரு பகைமையை நிறுவினார். ‘இந்து தேசிய இயக்கம்’ என்ற பரமானந்தின் குறிப்பை ஜின்னாவின் 1940 லாகூர் மாநாடு உரையோடு ஒப்பிடுகிறார் ஆசிரியர். ‘இந்துக்களும் முஸ்லிம்களும் கலாச்சாரம், வாழ்நிலை எனத் தனித்து வாழ்கிறார்கள். இருவரும் வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களிலிருந்து உத்வேகம் பெற்றிருக்கிறார்கள்’ என்ற குறிப்பு பரமானந்தின் கூற்றோடு ஒத்துப்போகலாம். ஆனால், இரண்டும் வெவ்வேறு சூழல்களோடு, வேறுபட்ட பொருளைக் கோரியவை.
பரமானந்த் முஸ்லிம்களை வரலாற்றிலிருந்து இந்திய நிலத்திற்கு மாற்றானவர்கள், அந்நிய ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களைப் போற்றுபவர்கள் என்று கூறி முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பை உண்டாக்க முயன்றார். ஆனால், ஜின்னாவின் உரைகள் என்றுமே இந்து குழுமத்தின் மீது பகைமை கொண்டதில்லை. மேலும், அரசியல் உரையாடல்களில் மட்டுமே அவர் அதிகம் கவனம் செலுத்துவார். உதாரணமாகச் சொல்லப்பட்ட ஒரு மேற்கோளை குறிப்பிட்டு இருவரையும் ஒப்பிடும் ஆசிரியர் (பக்.45), சேமித்த தகவல்களைக் கருத்துருவாக்கம் செய்யத் தவறியிருக்கிறார்.
முஸ்லிம் லீகே எதிரி!
ஷம்சுல் இஸ்லாம் முஸ்லிம் தன்னிலை ஈடுபாட்டை தனக்கு தெரிந்த விதத்தில் விளக்குகிறார் என்று மட்டும் கடந்து போக முடியாததற்குக் காரணம் இந்நூல் கொண்டுள்ள இந்துத்துவ சாய்வு. அதாவது, பிரிவினை முதற்கொண்டு இந்தியாவில் நிலவிய/நிலவிவரும் அரசியல், முஸ்லிம் லீகின் மதவாத அரசியல் விளைவாகவே தோன்றியது என்கிறார். இதனாலேயே, முஸ்லிம் லீகைக் குற்றச்சாட்டும் போதெல்லாம் அதைத் தனியாகக் கண்டிப்பார். இந்து மகாசபா, ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவர்களைக் குறைகூற அவர்களை முஸ்லிம் லீகோடு ஒப்பிட்டுக் கண்டிப்பார்.

‘காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபா இரண்டிலும் இருந்துகொண்டு இந்தியாவின் பன்மை கலாச்சாரத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள், முஸ்லிம் லீக் போலவே தேசப் பற்றற்றவர்களாகவும், தேச விரோதிகளாகவும் இருந்தனர்’(பக். 34), ‘இந்தியாவை பிளவுப்படுத்தியவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் பிரிவினைவாதிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது’ (பக். 81), ‘ஒன்றுபட்ட இந்தியாவை முஸ்லிம் லீக் போன்ற கொடிய எதிரியைக் கொண்டு வீழ்த்துவது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை’ (பக். 253), ‘சுவாரஸ்யமாக, இருதேசக் கோட்பாட்டுப் பிரச்சனையில் சாவர்க்கர் முஸ்லிம் லீக்குடன் உடன்பட்டார்’ (பக். 269), ‘முஸ்லிம் லீக்கும், இந்து தேசியவாதிகளும் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதிலாக, அது இஸ்லாமுக்கும் இந்து மதத்துக்கு இடையிலான சண்டையாக நிலைமையை மாற்றி அமைத்தனர்’ (பக். 271).
இந்த உதாரணங்கள் தொட்டு நூலின் ஈடுபாடு லீகை ஆதார குற்றவாளியாகக் கருதுகிறது. இந்து இயக்கங்கள், காங்கிரஸில் உள்ள இந்து தேசியவாதிகள் (அவர்கள்தான் காங்கிரஸில் பெரும்பான்மை என்றாலும் அது காங்கிரஸ் இயல்பு அல்ல) செய்த தவறுகள் யாவும் யதேச்சையானது. அவர்கள் தவறுகளுக்கு இலக்கொன்றும் இல்லை. இந்து தேசியவாதிகள்தான் முதலில் இருதேசக் கொள்கையை அறிமுகப்படுத்தினாலும், பின்னாளில் அவர்களின் தீவிர ஈடுபாடு முஸ்லிம் லீகிற்கு எதிர்வினையாக (Counter) நடந்தது என்று போதிக்கிறது இந்நூல்.
ஜின்னாவின் பாகிஸ்தான்?
நூலின் தலைப்புத் தொட்டு இந்த ஆய்வு விவாதிக்கும் மையப் புள்ளி – பிரிவினை. ’வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற ஒற்றைத் தேசத்தை அரசியல் முஸ்லிம்கள் அராஜகமாகப் பிரித்துவிட்டார்கள் என்று மட்டும் ஷம்சுல் அவதூறு பரப்பவில்லை. மாறாக, இஸ்லாமிய அரசியலுக்கு இங்கு என்ன வேலை?, அதன் உருவாக்கமே பிரிவினையை ஊற்றுக்கண்ணாகக் கொண்டு தொடங்குகிறது என்று பேசுகிறார். சற்று மிகையான மதிப்பீடாகத் தெரியலாம். தேசிய இனங்கள், பிரதிநிதித்துவம், தேசிய அரசில் விளிம்புநிலையினரின் தேவை போன்ற எந்த அரசியல் புலமும் அவர் கண்களுக்குத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை செக்குலர் என்று சொல்லப்படும் காங்கிரஸ் வரம்புக்குள் செயற்படும் முஸ்லிம் அரசியல் தேச மற்றும் நியாயமான அரசியல். அவர் கருத்தியல் மற்றும் முறையியலை மேற்கூறியபடி பேசப்போவதில்லை. ஆனால், அதற்காக அவர் தகவல்களைக் கையாளும் முறை எந்தவித அடிப்படையுமற்றது.

‘இந்தியாவிற்குள் முஸ்லிம்கள் ஒரு தனித் தேசியத்தைச் சார்ந்தவர்கள் என்ற கருத்தியல் உருவாகக் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பிடித்தது. முதல் கட்டத்தில், முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து அடிப்படை வேறுபாடுகளுடன் ஒரு தனி தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பெரும்பான்மையினரிடமிருந்து பாதுகாப்பு தேவையென்றும் கூறப்பட்டது. இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களுக்குத் தனித் தாயகம் வேண்டுமென்ற கோரிக்கை எழவில்லை. இரண்டாவது கட்டத்தில், முஸ்லிம்கள் தனித் தேசியத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் தங்கள் தாயகத்தை, அதாவது பாகிஸ்தானை அமைத்துக்கொள்ள முழு உரிமையும் உண்டு என்று வாதிடப்பட்டது. பாகிஸ்தானுக்கான கோரிக்கையின் பின்னணியில் உள்ளக் கருத்து என்னவென்றால், முஸ்லிம்கள் இந்தியாவில் சிறுபான்மைச் சமூகம் அல்ல, மாறாக ஒரு தனித்துவமான தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள், எனவே அவர்களுக்கென்று ஒரு தேசிய அரசு இருக்க வேண்டும்.’ (பக். 61,62)
முஸ்லிம் லீக் தோன்றியதே பிரிவினை என்ற நீண்டகால இலக்கை கொண்டிருந்ததாகவும், அதை மெல்ல தசாப்தம் கழித்து அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் முதலில் சொல்கிறார். இரண்டாவது, ‘பெரும்பான்மையினரிடமிருந்து பாதுகாப்பு’ என்று அவர்கள் கோரியதை மாபெரும் சதிக்கோட்பாடு போல் சித்தரிக்கிறார். மொத்தத்தில், லீக் தோற்றம் முதல் அதன் ஒவ்வொரு கால பரிமாற்றத்திற்கும் வளர்ந்துவந்த இந்துத்துவ அச்சுறுத்தல் போன்ற எந்த புறக்காரணிகளும் நடக்கவில்லை. அங்கு நடந்தது முழுக்க முழுக்க அரசியல் முஸ்லிம்களின் நயவஞ்சகமான சூழ்ச்சி மட்டுமே என்று புரிய வைக்கிறார் ஆசிரியர்.
முஸ்லிம் லீக் அதற்கு முந்தைய முஸ்லிம் இயக்கங்களை விடத் தனது செயற்பாட்டை நவீன அரசியலுக்குள் பொருத்திக்கொள்ள முயன்றது. பிரிட்டிஷ் காலனியத்திற்கு அப்பாலான எந்த விழுமியங்களையும் அவர்கள் தேடவில்லை. முஸ்லிம் அடையாளம் என்பதைக் கூடக் கூடுதலாக அரசியலாக மட்டுமே பயன்படுத்தினார்கள். வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து உருவான இந்து தேசிய எழுச்சி லீகின் தோற்றத்திற்கு முக்கிய காரணம். வங்க தேசியத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இரண்டாம்பட்சமானதன் பொருட்டு ‘முஸ்லிம் தனிப்பிரதிநிதித்துவத்தின் தேவையை’ முஸ்லிம் உயர்வர்க்கக் குழுக்கள் உணர்ந்ததனர். 1906-ம் ஆண்டு முஸ்லிம் லீக் உருவானது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசவேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு காரணம் இல்லை. ஷம்சுல் சொல்வதற்கு முற்றிலும் மாறாக, சரியாக லீகின் பத்தாவது ஆண்டில் அது தன்னை தேசியவாத குடைக்குள் நிறுத்திக்கொண்டது. 1916-ம் ஆண்டு காங்கிரஸ்-முஸ்லீம் லீக் இரண்டும் கைகோர்த்து ‘லக்னோ ஒப்பந்தத்தில்’ (Lucknow Pact) கையெழுத்திட்டனர். முஸ்லிம்களின் தனிவாக்காளர் முறையைத் தேசிய நலனில் ஒருபகுதியாக அங்கீகரித்தது காங்கிரஸ். ‘இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பிரிட்டிஷை எதிர்ப்போம்’ என்று உறுதியேற்றனர். லீகின் தொடர் செயற்பாட்டில் தேவையான மாற்றமாகவும், காங்கிரஸ் லீகில் உள்ள தேசியவாதிகளை அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்தமும் தவிர்க்க முடியாமல் இருந்தது. எனவே, தொடர்ந்து அவர்கள் இணைந்து செயற்பட்டார்கள்(5). ‘நமது தாய்நிலம் நமது வழிமுறையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கான ஒருங்கிணைவே இந்த ஒப்பந்தம். நம் இரு சகோதரிய (Sister Community-யை சகோதர(ர்) சமூகம் என்று சொல்லலாம்) சமூகங்களின் இணக்கமான ஒருங்கிணைவின் மூலமே இந்தியாவிற்கான உண்மையான முன்னேற்றத்தை வெல்ல முடியும்’ என்றார் ஜின்னா.

பின்னாளில் காங்கிரஸ்-லீக் முரண், லிபரல் தேசியவாதியான ஜின்னா முஸ்லிம் அரசியலுக்குத் தலைமை தாங்கியது போன்ற அனைத்திற்கும் நேர்மறையான வரலாறு அரசியல்-முஸ்லிம்களுக்கு உள்ளது. (அன்றைய) இந்தியாவிற்கான தேசிய கீதத்தை இயற்றிய கவிஞர் இக்பால் பின்னாளில் அந்த தேசிய நிலைப்பாடுக்கு எதிரானது வரை வரலாற்று நியாயங்கள் உள்ளன. ஆனால், முஸ்லிம் லீகை வாதத்திற்கு கூட ஒரு சமூக-அரசியல் இயக்கமாக ஏற்காதவர் ஷம்சுல் இஸ்லாம். அவர் போன்ற வட இந்திய தேசியவாத அறிவுச்சூழலில் சிக்கிய ஆய்வறிஞர்களுக்குப் பாமரர்களால் கூட எளிய உதாரணங்களைக் கொடுக்க முடியும் என்பதே மேற்காணும் ஆரம்பநிலை குறிப்புகள்.
‘1937-ம் ஆண்டு கூட முஸ்லிம்கள் தனி தேசிய இனமல்ல என்று சொன்ன ஜின்னா 1940-ல் தனி இனங்கள் என்கிறார்’ போன்ற வாதங்கள் போகிற போக்கில் சொல்வது ஆய்வு நூலில் வருமா என்பது புதிர். ஏனெனில், இங்கு நிலைப்பாடுகள் ஏன் உருவாகின்றன, மாறுகின்றன போன்ற எவ்வித புறக்காரணிகளையும் பேசப்போவதில்லை என்ற பிடிவாதம் மட்டுமே நூலில் எஞ்சுகிறது. 1937 தேர்தலும், அதில் காங்கிரஸ் அடைந்த வெற்றியும் இந்திய அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜின்னாவைப் பொறுத்தவரை அது காங்கிரஸின் இந்து அரசு முற்றிலுமாக நிறுவப்பட்டது. காங்கிரஸிலிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை புறந்தள்ளியது, முஸ்லிம் லீகை கலைக்கச் சொல்லியது, வாக்குக் கொடுத்த கூட்டணி ஆட்சியை மறுத்தது போன்ற பட்டியல் நீள்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இந்தி மொழி ஆதிக்கம் உச்சம் பெற்றது, கிழக்கிந்தியாவில் பழங்குடியினர்களிடம் பாராமுகம் காட்டியது, தலித்துகளுக்கு அது காங்கிரஸின் கருணை முகத்திரை கிழிந்து அச்சுறுத்தல் நிறுவப்பட்டது (6) என காங்கிரஸ் நவகாலனிய ஆண்டைத் தனத்தை (paternalism என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஐயன் கோப்லாண்ட்) காட்டியது. இதற்கு முன்பு பல சம்பவங்கள் இருந்தாலும், இந்தியாவின் பிற அரசியல் தரப்புகளின் நிலைப்பாடுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது அந்தக் காலம்.
1940-ம் ஆண்டு மார்ச்சில் நடந்த லாகூர் முஸ்லிம் லீக் மாநாடு தீர்மானம் ‘பாகிஸ்தான் தீர்மானம்’ என்று பொதுவாக அறியப்படுகிறது. ஆனால், அதனை ஆய்வுப் புலங்களில் தொடர்ந்து பயன்படுத்துவது மோசமான செயல். ஏனெனில், அந்த மாநாட்டில் ஜின்னாவின் தலைமை உரையிலோ, தீர்மானத்திலோ ‘பாகிஸ்தான்’ என்ற சொல் இடம்பெறவில்லை. ‘முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ‘சுயாட்சி ஆளுகைகளாகவும் ‘ (Independent States) – அதில் அவர்களின் தன்னாட்சியையும் இறையாண்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்’ என்பதே தீர்மானத்தின் சாரம். இதனை ‘பாகிஸ்தான் வலியுறுத்தல்’ (Pakistan Demand) என்று முதலில் பரப்பியது தி இந்து நாளிதழ். பிறகு அது ‘பாகிஸ்தான் தீர்மானம்’ என்று பொதுவாக மாறியதன் முக்கிய காரணம் அந்த இதழ்தான் (7). 1933-ம் ஆண்டு சவுத்ரி ரஹ்மத் அலி என்ற முஸ்லிம் தலைவர் முதன்முதலில் பாகிஸ்தான் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். ஆனால், அதை லாகூர் தீர்மானத்தோடு இணைத்துப் பேசியவர்கள் முஸ்லிம் லீக் அல்லாதவர்களே.

மேலும், ஜின்னாவின் இரு அரசாட்சி அறிவிப்பை மதவாதமாகச் சுருக்குவது குறுகியவாதம் என்றால், சாவர்க்கரின் இருதேசக் கோட்பாட்டோடு ஒப்பிடுவது அற்பவாதம். ஏனெனில், ஜின்னாவின் உரையில் இந்து மக்கள் தொகுதியின் மீது வெறுப்பைக் காணமுடியாது. மேலாக, அவர் உரையாடலையே அரசியல் தளத்திற்குள் மட்டுமே வைத்துக்கொண்டார். காங்கிரஸிலேயே ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் செய்த இந்து மேலாண்மையைக் காங்கிரஸிற்கு எதிரான அரசியல் சொல்லாடலிலேயே எதிர்த்தார். அதைத்தாண்டிய கலாச்சார அரசியல் அவருக்குத் தேவையற்றதாக இருந்தது. அதன் நீட்சியே இந்துத்துவ இயக்கங்கள் போன்ற எதனோடும் அவர் கவனம் செல்லாமல் இருந்தது.
லாகூர் தீர்மானத்திலிருந்து லீகின் போக்கு எந்த மாற்றமும் இன்றி பிரிவினையை நோக்கி இருந்ததாகச் சொல்வதும் பிழை. ஏனெனில், 1943-ம் ஆண்டு தனி அரசாட்சி என்பதைக் கைவிட்டு வலிமையான கூட்டாட்சி சுயாட்சி என்ற முடிவிற்கு வந்தது லீக். இதன் தொடர்ச்சியாகவே 1946-ம் ஆண்டு காபினட் குழு (Cabinet Mission) திட்டத்தில் ஒரே ஒன்றியத்தில் கூட்டாட்சி என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், லாகூர் தீர்மானத்தின் போது பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், 1946-ம் ஆண்டு அதைச் சாதிக்க அரசியல் ஆட்டம் ஆடியது வரலாற்று முரண்.
‘இந்த இடத்தில் காங்கிரஸ் மற்றும் லீகின் கணக்குகள் நிலைமாறியிருந்தன. அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், 1920-களிலிருந்து அரசியல் கருத்தியலின் மையமாக இருக்கிறோம் என்று சொல்லிவந்த காங்கிரஸின் நம்பகத்தன்மை லீகின் அரசியல் மற்றும் முஸ்லிம் வாக்காளர் முறைமை முன் தகர்ந்தது. ஆனால், லீக் புதிய பலத்தோடு என்ன செய்திருக்கிறது?.. லாகூர் தீர்மானம் இயற்றிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகும் முஸ்லிம் பெரும்பான்மையுள்ள இறையாண்மை மாகாணங்களைப் பிரிப்பது எப்படி, இந்து பெரும்பான்மை மாகாணத்திற்குள் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது போன்ற எந்த தீர்வையும் ஜின்னா கண்டறியவில்லை. ‘பாகிஸ்தான் முழக்கத்தோடு’ நடந்த அனைத்து விஷயங்களையும் 1943-ம் ஆண்டு அவர் மறுத்தார். முஸ்லிம்களின் புகழ்பெற்ற தலைவர் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு விஷயத்தைச் சொல்லாமல் செய்தார். லாகூர் தீர்மானத்தில் ‘அரசு’ என்பது ‘அரசுகள்’ (State – States) என்று தவறாக இடம்பெற்றதாகக் கூறி பன்மையை நீக்கினார். காங்கிரஸ் மற்றும் லீகின் தனி ஈடுபாடுகளைத் தீர்க்க முடியாத பிரிட்டிஷ் அரசு இருவர்களையும் ஒருங்கிணைந்த திட்டத்திற்குள் கொண்டுவர முயன்றதாக ஜின்னா கருதினார். அப்படியெனில், துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்கள் தன்னாட்சி அதிகாரத்தோடும், மைய அரசு அவர்கள் விவகாரத்தில் தலையிடாதவாறு பலவீனமாகவும், அதேநேரத்தில் தன்னாட்சி இந்து பெரும்பான்மை மாகாணங்களில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு வலுவான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணமும் முடிவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், கேபினட் குழுவின் தீர்மானம் ஜின்னாவின் பார்வைக்கு நெருக்கமாக ஒத்துப்போனது’ என்கிறார் பெர்ரி ஆண்டர்சன்.(8)
‘ஒரே ஒன்றியத்தில் வலிமையான கூட்டாட்சியைப் பிரிவினையை விட ஆபத்தாக பார்த்தார் நேரு’ என்கிறார் ஆண்டர்சன். ஆரம்பம் முதலே, காலனியத்தின் தொடர்ச்சியாக நவகாலனிய இலட்சியம் கொண்டிருந்த காங்கிரஸ், மையப்படுத்தத் தேசத்தில் பிடிவாதமாக இருந்தது. விளைவாக, கேபினட் குழு தீர்மானத்தில் அவர்கள் உட்படக் கையெழுத்தான தீர்மானத்தை உடைத்துப் பிரிவினை எனும் இரத்த வெறியாட்டத்தைத் தொடங்கி வைத்தது காங்கிரஸ். அதுபற்றி ஏதும் இந்த நூலில் இருந்தால்தான் ஆச்சரியம்.

காங்கிரஸ் கழிவிரக்கம்
‘காங்கிரசின் ஊசலாட்டமும் துரோகமும்’ என்ற துணைத் தலைப்பு ஒன்று இந்த நூலில் உள்ளது. காங்கிரஸின் செக்குலர் அரசியல் எந்தளவிற்கு இந்து பெரும்பான்மைவாத அணித்திரட்சியை மேற்கொண்டது, சிறுபான்மையினர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவத்தை மறுத்தது என்பது முதல் கேபினட் குழு தீர்மானத்தை உடைத்த நேருவின் வஞ்சகம் வரை அதில் பேசியிருப்பார் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும். மாறாக, முஸ்லிம் லீகை எப்படி முஸ்லிம்களின் ஒற்றை பிரதிநிதியாகக் காங்கிரஸ் நடத்தலாம், 1940-க்கு பிறகு ஜின்னாவிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி காந்தி அவரை எப்படி பெரிய ஆளாகக் காட்டலாம், எல்லாவற்றிற்கும் மேலாக ஜின்னாவை ‘காயிதே ஆஸம்’ என்று எப்படி காந்தி அழைக்கலாம் போன்ற அன்பு பிணக்குகளே அதில் நிரம்பியிருக்கிறது.
ஷம்சுல் இஸ்லாமின் தீவிர தேசியவாத உடன்பாடு அவரை முஸ்லிம் அரசியலையே வெறுக்க வைக்கிறது. அதனாலேயே, லீகை ஒரு அரசியல் தரப்பாக (காந்தியின்) காங்கிரஸ் பார்த்ததை அவரால் ஏற்க முடியவில்லை. லீகை முக்கிய சக்தியாக பார்த்ததால் பிற முஸ்லிம் இயக்கங்களைத் தவிர்த்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் இருக்கலாம். அவர்கள் அனைவரும் காங்கிரஸிடம் உள்முரண்கள் கொண்டிருந்தவர்கள். மேலும், அதனோடு பயணித்தவர்கள் என்ற விதத்தில் அவர்களைப் பெரிய சக்தியாகக் கருதும் அளவிற்குக் காங்கிரஸின் இந்து அரசியலில் இடம் இல்லை. லீகிற்கு இணையாகக் காங்கிரஸ் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். அவரின் தாக்கம், காந்தியின் அரசியல் பயணத்தில் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர்கள் செய்த பல சாதிய கொடுமைகளை இந்த பிரிவில் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். ஆனால், அந்த கொடுமைகள்தான் காங்கிரஸாகவும் அது கோரும் சமூகமாகவும் இருக்கிறது என்று காணத் தவறுகிறார். விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் காங்கிரஸில் அதிக காலம் தலைவராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் கூட 1940-களில் காங்கிரஸ் தவறவிட்டவற்றையும், பிரிவினையைத் தூண்டியதையும் புலம்பலாகப் பதிவு செய்திருக்கிறார்.(9)

முஸ்லிம் அரசியல் நீக்கம்
இந்தியத் தேசிய விடுதலைக்காகப் போராடிய முஸ்லிம்கள், பொதுவாக அறியப்படுவது போல் பிரிவினைக்குக் காரணம் (பெரும்பாலான) முஸ்லிம்கள் அல்ல போன்ற பொருள்களைத் தாங்கி வந்திருக்கும் இந்த நூலில் அதற்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மீதுள்ள பழி முஸ்லிம் அரசியலைப் பலி கொடுப்பதன் மூலம் நீக்கப்பட்டுள்ளது. ஒரு நவீன சட்டகத்தை மையமாக வைத்து பெரும்பான்மைச் சமூகத்தினரை அதன் பண்பாகவும், அவர்களின் அரசியல், தவறுகள், தீமைகள் யாவும் அந்த சட்டகத்திற்கு உட்பட்டது என்றும், மீதமுள்ள சிறுபான்மையினரின் சிறு முன்னெடுப்பும் சட்டகத்தை அச்சுறுத்தக்கூடியது என்றும் கூறும் தேசியவாதமே முஸ்லிம்களைத் தொடர் அவதூறுகளுக்கு ஆளாக்கியது. அந்த இயங்குமுறையை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களை விடுவிக்கிறேன் எனும் இந்த நூலில் எந்தப் பொருளும் இல்லை. மாறாக, ஒருவிதத்தில் இந்துத்துவ வடிவமைப்பு அனைத்தையும் பிரதிபலிக்கும் ஆபத்தாகவே தெரிகிறது.
தமிழில் இந்த நூலைக் கொண்டுவந்திருக்கும் ‘எதிர் வெளியீடு’ முஸ்லிம் அரசியல் மீது ஒவ்வாமை கொண்டது என்று சொல்வதை விட, ‘முற்போக்கு டாக் லைனோடு’ எது வந்தாலும் அதுகுறித்து எவ்வித தேடலும் இன்றி வெளியிடுகிறது என்று புரிந்துகொள்ளலாம். நூலின் தலைப்பு பலரையும் கவர்ந்து வாங்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இதன்வழி தமிழ்ச் சூழலில் முஸ்லிம் அரசியல் மீது அச்சவுணர்வைத் தூண்டும் காரணிகள் பல உள்ளன. அரசியலற்ற நல்ல முஸ்லிம்கள் vs அரசியல் பேசி அடாவடி செய்த கெட்ட முஸ்லிம்கள் என்ற பிரபல கடமையை எதிர் ஆசிரியர் குழு (?) சுலபமாக செய்திருக்கிறார்கள்.இதுவே, தமிழ் மொழிப்பெயர்ப்பை முன்வைத்து இந்த கட்டுரையை எழுதியதற்கு காரணம். மேலே கூறியதுபோல், முஸ்லிம் வரலாறு போதிய வெளிச்சமின்றி இருக்கிறது அல்லது அவதூறுகளால் நிரம்பியிருக்கிறது. தமிழ்ச்சூழலில், குறிப்பாகச் சமகாலத்தில் மையநீரோட்ட அரசியலால் கேள்விக்குள்ளாக்கப்படும் முஸ்லிம் தன்னிலைகள் குறைந்தபட்ச ஆரம்பநிலை விவாதங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அந்தவேளையில், ஒரு லிபரல், இடதுசாரி பின்னணியிலிருந்து வரும் இந்த நூல் அதை பின்னிழுக்கிறது.
பிரிவினைக்குப் பிறகு ‘இந்திய’ முஸ்லிம்களின் அரசியல் உரையாடல்கள் அனைத்தும் ‘தேசத்திற்கு முரணானவை, விரோதமானவை’ என்று கூறி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அரசியல், கலாச்சாரம், பிரதிநிதித்துவம் என அனைத்து வெளிகளிலும் விடுதலை இந்தியாவில் இது வினையாற்றியது. இந்துத்துவ வன்முறைகள் நேரடியாக இதை செய்தால், லிபரல், இடதுசாரிய, பிராந்திய நேச சக்திகள் ‘அடிப்படை பிரச்சனைகளுக்கும் அசல் போராட்டத்திற்கும் இடைஞ்சலானவை, மடைமாற்றும் அரசியலால் நடப்பவை, பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு அவசியமற்றவை’ என்று கூறி பாராமுகம் காட்டுகின்றன. இந்தியத் தேசிய அரசில் முஸ்லிம்களின் மொத்த வாழ்வாதாரங்களும் நெருக்கடிக்கு ஆளானாலும் பெரும்பான்மையினரின் தன்னிறைவு அதை அர்த்தமற்றதாக கருதும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குடியுரிமை திருத்தச் சட்டம் முதல் கும்பல் படுகொலைகள் வரை எதைப்பற்றியும் பேசாத ‘காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு’ எழுந்த ஆதரவு அதை மீண்டும் உணர்த்தியது. பாசிச எதிர்ப்பு போருக்கான வெகுஜன அரசியலுக்கு இதைவிட விலைகொடுக்க முஸ்லிம்களுக்கு ஏதும் இருக்காது.
- மு.அப்துல்லா
Notes
- Romila Thapar, Early India – From the Origins to AD 1300, Penguin, P.16
- Ramachandra Guha, The Past and Future of Indian National Congress, The Caravan, March 2010
- Evita Das, Akshat Jain & Shahrukh Khatib, What was Sharjeel Imam Saying At AMU?, Raiot, Feb 5, 2020
- Mushirul Hasan, Islam in the Subcontinent, Manohar Publishers 2006, P.197
- Mushirul Hasan, Nationalism and Communal Politics in India 1885-1930, Manohar Publishers 2006, P.81
- Dr. B.R. Ambedkar, What Congress and Gandhi have done to the Untouchables?, P.166
- Md. Abdullah Al Zobair, Lahore Resolution 1940, Academia.edu
- Perry Anderson, The Indian Ideology, Three Essays Collective 2017, P.66
- See Maulana Abul Kalam Azad, India Wins Freedom