தி இந்து: போயஸ் தோட்டத்தின் மீடியா பூசாரி

தமிழ்ப் படங்களில் பட்டாபட்டி வேட்டி கட்டிய கிரிமினல்கள் அளவுக்கு, கோட்டு சூட்டு கிரிமினல்களை பார்க்க முடியாது. ஆள் பாதி ஆடை பாதி எனும் இமேஜை மூலதனமாகக் கொண்டே இன்றைய கிரிமினல்கள் ‘தொழில்’ செய்கிறார்கள்.

கோட்டு சூட்டு உளவியலை சாதகமாக பயன்படுத்தியே தமிழ் இந்து தினசரி தனது சந்தர்ப்பவாதத்தை வணிகம் செய்கிறது. இருப்பினும் எந்த ஒரு குற்றவாளியும் குற்றச் செயல் செய்யும் போது கண்டிப்பாக தடயங்களை மறந்து விட்டே செல்கிறான். அவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்.

“தி இந்து” மட்டும் தனது தோற்றத்திலேயே போயஸ் தோட்டத்தின் ஆசீர்வாதத்தோடு பிறந்தது. முதல் இதழ் அன்றே இவர்கள் அம்மாவின் விஷன் 2020 கனவுத் திட்டத்தை இலவச இணைப்பாக பக்தியுடன் வெளியிட்டார்கள். அ.தி.மு.க அமைச்சர்களே வெட்கப்படும்படியான புள்ளிவிவர துதிகளை வாழ்த்தாக வண்ணங்களில் இறைத்திருந்தார்கள்.

அதன்படி குமாரசாமி தீர்ப்பு இவாளுக்கு ஏற்படுத்திய குதூகலத்தை எழுத்தில் கொண்டு வருவது சிரமம்.

“ஜெயலலிதா வழக்கில் இன்று தீர்ப்பு: பெங்களூருவில் போலீஸ் குவிப்பு; காலை 11 மணிக்கு மேல் வெளியாகும்” என்று மே 11 தலைப்புச் செய்தியில் தி இந்து ஆரம்பிக்கிறது. இதில் வழக்கின் வரலாற்றை தொகுத்துக் கூறுகிறார்களாம்.

நீதிபதி குமாரசாமி குறித்த செய்தியில், “அனைத்து ஆவணங்களையும் சாட்சியங்களையும் வாதங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு எழுதியுள்ளார்.” என்று கூறுகிறார்கள். அவரது ஆய்வு, எழுத்து, திறன் அனைத்தும் தீர்ப்பு வருவதற்கு முன்பே “தி இந்து”வுக்கு எப்படி தெரியும்?

இவ்வளவிற்கும் ஏற்கனவே தீர்ப்பு எழுதிய குன்ஹா பகுதி வரும்போது “இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்” என்றே குறிப்பிடுகிறார்கள். வெளி வந்த தீர்ப்பில் ஆய்வு, எழுத்தை எதையும் பார்க்காதவர்கள் வெளிவராத தீர்ப்பில் மட்டும் அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

“உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு- பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர்” என்ற தலைப்பில் 11-ம் தேதி ஒரு செய்தி. அதில் ஓசூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசு, 2 இலட்சம் மதிப்பில் அ.தி.மு.க செய்யும் இனிப்புகள், தலைவர்கள் போக வேண்டாம் என்று ஜெயா உத்திரவிட்டது எல்லாம் இருக்கிறது. தீர்ப்பு மாறி வந்தால் குன்ஹாவை அசிங்கப்படுத்தியது போல இப்போதும் செய்வார்களா என்று தி இந்து கேட்கவில்லை. முக்கியமாக இந்தத் தீர்ப்பிற்கு அ.தி.மு.க பட்டாசு வெடிக்கும் படத்தினை கோப்புக் காட்சி என்று போட்டு சேர்த்திருக்கிறார்கள். தீர்ப்பு வருமுன்னே கொண்டாட்டம் என்று எப்படி போட முடியும்? இதயத்தில் அம்மா விசுவாசம் இருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம் பேதமில்லை போலும்.

அதே நாளில் “ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 900 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு” என்று மற்றுமொரு செய்தி. எதற்கு? நீதிபதி குமாரசாமி ஆய்வு செய்துதான் எழுதினார் என்ற பில்டப்பை நம்ப வைப்பதற்காக இந்த 900 என்ற எண்ணை தலைப்பில் போட்டிருக்கிறார்கள். உள்ளே 11 மணிக்கு தீர்ப்பு, 144 தடை, 1000 போலீசு, மோப்ப நாய்கள் என்று நிறைய எண்கள் இருக்கின்றன.

மேலும், பொறுமை காக்குமாறு ஜெயலலிதா கூறிய அறிக்கை, கர்நாடக எல்லையில் சுமூக சூழல், ‘அதிமுக நகரமான’ ஐ.டி சிட்டி பெங்களூரு’ என்றெல்லாம் மாறாத விசுவாசத்துடன் சில பல செய்திகளை போட்டிருக்கிறார்கள். இது அன்றி, “ஊழல் குறித்த வழக்குகளில் முக்கிய பதவியில் இருப்போர் தவறிழைத்தால் சட்டம் தண்டிக்குமா” போன்ற மேலோட்டமான பேச்சுகள் கூட அன்றைய தி இந்துவின் பக்கங்கள் எதிலும் இல்லை.

தீர்ப்பு வரும் நேரத்தில் நிகழ் நேரப் பதிவாக நேரலையில் செய்திகளை தருகிறார்கள். தீர்ப்பு வந்த பிறகு ஜெயாவுக்கு ஆதரவாக பிற கட்சி தலைவர்களது அறிக்கைகள் அதிகம் காட்டப்படுகின்றது. அன்று மாலை தீர்ப்பு குறித்து இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு கேள்வியும் அதற்கான பதில்களையும் பாருங்கள்!

“சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது…

  • விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
  • பொய்வழக்குக்குக் கிடைத்த தோல்வி
  • தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை

ஒரு நடுநிலைமை பத்திரிகையின் அம்மா விசுவாசம் துளியூண்டு வெட்க மானமின்றி அம்மணமாக ஆடுவதற்கு இதை விட எடுப்பான சான்று ஏது?

“ஜெ. தண்டனை உறுதியானால் அடுத்தது என்ன?- டெல்லியில் தயார் நிலையில் வழக்கறிஞர்கள்” என்ற தீர்ப்புக்கு முந்தைய செய்தியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் ஆஜராகி பிணை வாங்குவதற்கு தயாராக இருந்த வழக்கறிஞர் படை பற்றிய அறிவிப்பு இருக்கிறது. ஆனால் இதே போன்று தீர்ப்பு ஜெயாவை விடுதலை செய்தால் கர்நாடக அரசு மற்றும் தி.மு.க தரப்பு என்ன செய்வார்கள் என்பது குறித்து எந்த செய்தியும் இல்லை.

“பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே: வழக்கறிஞர் ஆச்சார்யா”………. இந்த செய்தியில் ஆனானப்பட்ட ஆச்சார்யாவே தீர்ப்பை வரவேற்றது போன்ற தோற்றத்தை தருகிறார்கள். “தீர்ப்பை முழுமையாக படித்து விட்டு எனது கருத்துக்களை சொல்வேன்” என்கிறார் ஆச்சார்யா. செய்தியின் கடைசியில் ஆச்சார்யாவுடன் நேர்காணல் குறித்த தலைப்பு: “ஒரு தலைபட்சமான விசாரணை, தீர்ப்பு: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து” என்று இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆச்சாரியா சொல்லும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்து அறிவாளிகள் இந்த நாட்களில் எங்கேயும் எழுதவில்லை, விளக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தீர்ப்பு குறித்து “தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா” என்று செய்தி போடுபவர்கள், “ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து” என்று போடுகிறார்கள். அதாவது ஜெயலலிதா அறிக்கையில் தர்மம், நேர்மையைக் கொண்டு வந்தவர்கள், கருணாநிதியின் அறிக்கை தலைப்பில் எதையும் கொண்டு வரவில்லை. என்ன ஒரு நுட்பமான செய்தியாளர் வேலை! இத்தகைய தொழில் நேர்த்தியை மேல் மருவத்தூர் அருகே மனைகளை விற்கும் புரோக்கர்களிடமும் பார்க்கலாம் என்றாலும் மவுண்ட் ரோடு மஹா விஷ்ணுவின் டச் அற்பத்தனமானது.

“ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் ‘எண்கள்’”

இந்தத் தலைப்பில் ஏதோ கணித மேதை போல தீர்ப்பில் உள்ள ஏகப்பட்ட எண்களின் முக்கியத்துவத்தை அல்ஜிப்ரா ஆச்சரியத்தோடு விளக்குகிறார்கள். ஆனால் ஓரோன் ஒண்ணு எனும் சாதா வாய்ப்பாட்டையே கோட்டை விட்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்த பிறகே இந்த ராமானுஜ பில்டப்பின் சூட்சுமம் புரிகிறது.

“திருப்புமுனை தீர்ப்பின் முக்கிய விவரங்கள்” என்ற செய்தியில் நீதிபதி குன்ஹா செய்த “மாபெரும்” தவறுகளை நீதிபதி குமாரசாமி எப்படி ஷெர்லாக் ஹோம்ஸ் போல ஆய்வு செய்து கண்டுபிடித்தார் என்பதாக விவரங்களையும், எண்களையும் எடுத்து வைக்கிறார்கள். முக்கியமாக தீர்ப்பின் முக்கிய விவரங்கள் என்று போடுவதற்கு பதிலாக திருப்புமுனை தீர்ப்பு என்று போட்டிருப்பதன் பொருள் என்ன?

“சொத்து குவிப்பு வழக்கு: கடந்து வந்த பாதை” என்ற செய்தியில் 96-ம் ஆண்டில் சு.சாமி போட்ட வழக்கில் ஆரம்பத்தில் இருந்து, 2015- குமாரசாமி தீர்ப்பு வரைக்கும் ஆண்டு வாரியாக ‘முக்கிய’ நிகழ்வுகளை தொகுத்திருக்கிறார்கள். சரிங்க சார், அந்த முக்கிய நிகழ்வுகளில் வாய்தா ராணி வாய்தாவைப் பறித்த பல்வேறு போங்காட்டங்களில் ஒன்று கூடவா தெரியாது?

ஒருக்கால் நாளையே ஜெயா இல்லை மோடியோ தி இந்து அறிவாளிகளை இந்திய வரலாறோ இல்லை தமிழக வரலாறோ எழுத ஆணையிட்டால் எப்படி இருக்கும்? இட்டுக்கட்டி உருவாக்கும் வரலாற்று முயற்சிக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு தொழிற்முறை போட்டியாளரை சந்திப்பது உறுதி.

இது போக அ.தி.மு.கவினரின் ஆட்டம் பாட்டம், படங்கள், அம்மா மீண்டும் முதல்வராவதற்கு தடையேதும் இல்லை, எங்கே போட்டியிடுகிறார் இன்னபிற விட்டைகளுக்கு குறைவில்லை. எல்லாம் அதே ஜால்ரா விட்டைதான் என்பதால் கூறியன கூறி கூறி கூறி உங்களை வெறுப்பேற்ற விரும்பவில்லை.

“ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: இணையத்தில் எதிரொலித்த வாசகர் கருத்துகள்” இந்தச் செய்தியில் இணையவாசிகள் கருத்து என்று ஆறு பேர் எழுதியதை போட்டிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் நேரடியாகவும், இரண்டு பேர் மறைமுகமாகவும் தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். ஐந்து பேர் நேரடியாக கருணாநிதி, தி.மு.க ஊழலை குறிப்பிட்டு எதிர்த்துவிட்டு ஜெயா மீதான தீர்ப்பை ஆதரிக்கிறார்கள். தீர்ப்பு குறித்து இணையத்தின் கருத்து இதுவென்றால் குமராசாமியின் கணக்கில் மட்டும் என்ன தவறு காண முடியும்?

“ஜெ. வழக்கும்.. தீர்ப்பும்..: பொதுமக்கள் கருத்து” இதில் ஐந்து பேர் ஜெயலலிதாவை ஆதரித்தும், ஒரு திருநங்கை மட்டும் ஜெயாவை எதிர்த்தும் கூறுகிறார்கள். ஆக இணையம் மட்டுமல்ல, மெய்யுலகத்திலும் அதேதான் என்று ‘நிறுவுகிறார்களாம்’. இதை உண்மையிலேயே கேட்டுத்தான் எழுதினார்கள் என்பதற்கு அந்த ஆறு பேர் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். சரி,சரி, அமீர்கானின் சத்யமேவ ஜயதே நிகழ்ச்சியில் லைவாக வந்து அழுதுவிட்டு போகும் துணை நடிகர்களை நம்புவர்கள் தி இந்து சேகரித்துதான் மக்கள் கருத்து என்று நம்பமாட்டார்களா என்ன?

மே 12 வாக்கில் குமாரசாமியின் கூட்டல் சதி எல்லா வகைகளிலும் வெளியே வந்தாலும் தி இந்துவின் எந்த பொந்திலும் அது குறித்த நேரடி செய்தி இல்லை. ஆக்ஸ்போர்டிலும், ஹார்வர்டிலும் கல்வி பயின்ற கனவான்கள் அந்த தீர்ப்பின் கூட்டல் பக்கங்களை படித்து இதுதான் உண்மை என்று மூச்சு கூட விடவில்லை. மாறாக அதைச் சொன்ன எதிர்க்கட்சி தலைவர்களின் அறிக்கைகளை மட்டும் வேண்டா விருப்பாக அவ்வப்போது போட்டுக் கொண்டார்கள்.

கூடவே பா.ஜ.க மோடி, தமிழிசை பிற கட்சி தலைவர்கள், வேல் முருகன், சே.கு தமிரசன் போன்ற அடிமைகளின் வாழ்த்துக்களை முக்கிய செய்திகளாக வெளியிட்டார்கள்.

“மறுவருகை நல்லதாக அமையட்டும்!” என்று மே 13 தலையங்கம் தீட்டுகிறார்கள். அதில் எதிர்க்கட்சி தலைவர்களை வீழ்த்தி வென்ற ஜெயா வின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக எழுதுகிறார்கள்.

“அவர் பதவியில் இல்லாத காலகட்டத்தில் தமிழக நிர்வாகத்தில் பெரும் உறைநிலை ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் வளர்ச்சி ஓட்டத்தில் முன்வரிசையில் இருக்கும் தமிழகம், இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், சுணங்கியிருக்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து, அடித்து ஓட்டுவது எவருக்கும் சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் இப்போது மாநிலம் அதைத்தான் எதிர்பார்க்கிறது.”

ஆசிரியர் அசோகனின் அயோக்கியத்தனத்திற்கு சிறப்பான விளக்கம் ஏதும் தேவையா?

“ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல்முறையீட்டு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வெளியானது எப்படி என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் (82) கேள்வி எழுப்பியுள்ளார்.”

என்ற செய்தியை வெளியிட்ட தி இந்து அறிவாளிகளுக்கு மட்டும் அந்தக் கேள்வி ஏன் எழாது, நமக்குத் தெரியும். ஆனால் அதை மறைத்து விட்டு மாநிலமே மறு வருகைக்கு காத்திருக்கிறது என்று எழுதுவதற்கு உடல் முழுக்க கரைக்க முடியாத கொழுப்பு நிரம்பி வழிய வேண்டும்.

“இணையகளம்: ‘ஓபிஎஸ் அவர்கள் விடுதலை!’” மீண்டும் இணையத்தை வைத்து நகைச்சுவையாக காட்டுகிறார்களாம்.

இதில் ஓ.பி.எஸ்-ஐ கிண்டல் செய்யும் கருத்துக்கள் அல்லது அரசியலற்ற முறையில் இத்தீர்ப்பு குறித்து எழுதப்பட்ட கருத்துக்கள் அதில் அதிஷா, பாலபாரதி, மாலன், அராத்து என்று பலரையும் எடுத்துக் கொள்கிறார்கள். எதிர்த்து எழுதப்பட்ட ஓரிரண்டு கருத்துக்கள் கூட நேரடியாக புரியாத வண்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இணையம் என்றால் அம்மா ஜால்ராதான் என்று சொல்வது தி இந்துவுக்கு ஓகே. உண்மையான இணைய மக்களுக்கு எப்படி?

“ஜெயலலிதா விடுதலை எதிரொலி: மெட்ரோ ரயில் விரைவில் தொடக்கம்?- அதிகாரிகள் நம்பிக்கை” என்ற செய்தியைப் பாருங்கள்! ஒருவேளை ஜெயலலிதா குற்றவாளி என்று மீண்டும் தீர்க்களிக்கப்பட்டால் மெட்ரோ ரயில் வரவே வராதா? ஜெயா விடுதலை ஆனால்தான் தமிழகத்தில் மெட்ரோ ரெயில் ஓடுமென்றால் அது கடுமையான விமரிசனத்திற்குரியதே அன்றி தி இந்து பார்வையின் படி அம்மா விடுதலையாகும் போதே ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என்று பொய்யுரைப்பதல்ல.

“மீண்டும் முதல்வர் பதவி: ‘நிதானம்’ காட்டுகிறாரா ஜெயலலிதா?” மே 14-ம் தேதி இந்த செய்தியை வெளியிடும் போது கூட்டல் பிரச்சினையில் போயஸ் தோட்டமே சோகத்தில் இருந்தது. அந்த சோகத்தையே ஜெயாவின் மதி நுட்பமாக மாற்றி எழுதுகிறார்கள். எதிர்க்கட்சியினருக்கு போகும் முன்னரே ஜெயா இந்த பிரச்சினையை கண்டு பிடித்து விட்டாராம். அதனால்தான் அவர் பால்கனியில் நின்று டாடா காட்டவில்லையாம். கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யுமா என்ற முடிவுக்கேற்பவே அவரது ராஜந்திர அசைவுகள் இருக்குமாம். இந்த செய்தி அச்சு நாளிதழில் அல்ல, இணையத்தில் மட்டும். இங்கேதான் முதன்முறையாக அந்த கூட்டல் அபத்தத்தை வரை படமாக போட்டிருக்கிறார்கள். இருப்பினும் ஜெயா கும்பலின் கொண்டாட்டத்தை கேலி செய்ய வேண்டிய செய்தியில் குமாரசாமியின் அபத்தத்தை அம்மா கண்டுபிடித்தார் என்று தத்துவஞானி போல காட்டுவதற்கு இவர்கள் தினசரி என்ன லேகியம் சாப்பிடுகிறார்கள் தெரியவில்லை.

ஊழலை மறைப்பதுதான் அறம் – தி இந்துவின் இலவச இணைப்பு ஆசிரியர் அரவிந்தன்

“அறம் சார்ந்த கனவு பலிக்குமா?” இந்தக் கட்டுரையின் தலைப்பே மிரட்டலாக உள்ளதா? தி இந்துவின் இலவச இணைப்புகளின் இன்சார்ஜ் ஸ்ரீமான் அரவிந்தன் என்பவர் எழுதிய நடுப்பக்க கட்டுரை இது. ஆர்.எஸ்.எஸ்-ல் தேசபக்தியையும், காலச்சுவடில் இலக்கியத்தையும் கண்டு கொண்டவர் தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்?

முதலில் ஓ.பன்னீரின் பரிதாபத்தை படிமாக்குகிறார். அது எந்த அளவுக்கு போகிறது என்றால் ராமனின் பாதுகையை வைத்து ஆட்சி புரிந்த பரதன்தான் ஓ.பி என்கிறார். இதைக் கம்பன் கேட்டிருந்தால் கதறக் கதற தீக்குளித்து செத்திருப்பான். அடுத்து இந்த வழக்கோடு ஜெயாவை குளோஸ் செய்து தமிழக அரசியலை மையம் கொள்ளலாம் என்று மனப்பால் குடித்த தலைவர்கள் மண்ணைக் கவ்வியதாக, ஏதோ அமர்த்யா சென் போல ஆய்வு செய்கிறாராம். அம்மாவை புகழணும் என்று ஆரம்பித்தாலே அது ஒரு ரத்தத்தின் ரத்தத்திற்கே இப்படித்தான் ஆரம்பிக்கும் என்று இந்த அறிவாளிக்கு தெரியவில்லை.

பிறகு தீர்ப்பு குறித்த கேள்விகள், கூட்டல் பிரச்சினைகள், குன்ஹா-குமாராசமி முரண்பாடு என்று விருப்பு வெறுப்பு இல்லாதது போல கவனமாக வார்த்தைகளை போட்டு என்னமோ கேள்விகள், வினாக்கள், கேள்விக்குறிகள் என்று தீட்டுகிறார். அய்யா சாமி இந்த விவகாரத்தில் உமது அபிப்ராயம் அல்லது மதிப்பீடு என்ன என்று விளக்கெண்ணெயில் மூழ்கி பார்த்தாலும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாது.

கடைசியாக சட்டத்தின் விநோதமான சாத்தியக் கூறுகள் சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க வேண்டும் என்று கூறி இந்திய வெளியில் அறம், அறம் சார்ந்த கனவு, அதை இழக்க முடியாது, அறம்தான் நமது மீட்சிக்கு வழி என்று ஒருவாக்கியத்தில் ஏகப்பட்ட அறங்களை போட்டு ஜெயமோகனது கின்னஸ் சாதனையை (அதிகம் அறம் போட்டு எழுதுவதில்) முறியடிக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஜெயாவின் ஊழல் சொத்து, அவரை விடுதலை செய்த குமாரசாமி, உதவிய உச்சநீதிமன்றம் என்ற எளிய விசயத்தில் கம்பெனியின் எடிட்டோரியில் பாலிசியை அதாவது சொம்பு தூக்குவதை கலந்து எழுதுவதை இப்படி கண்றாவியாகவா செய்ய வேண்டும்?

அரவிந்தனே இப்படி படாதபாடுபடும் போது அவரைக் காப்பாற்ற தி இந்துவின் நடுபக்க மேனேஜர் சம்ஸ் அடுத்து ஆஜராகிறார்.

“இந்திய நீதித் துறையின் மிகப் பெரிய சாபக்கேடு அதன் தாமதம் என்றால், இந்திய நீதித் துறை மிகக் கடுமை காட்ட வேண்டியவர்கள் அல்லவா வாய்தாவாலாக்கள்? நீதித் துறைக்குச் சவால் விடும் வகையில், வாய்தாக்களால் வழக்கை இழுத்தடிப்பவர்களில் ஆகப் பெரும் பான்மையினர் செல்வாக்குள்ளவர்கள். ஆனால், அப்படி இழுத்தடிப்பவர்களின் வழக்குகளே தண்டனைத் தீர்ப்புக்குப் பின் சீக்கிரமாக மேல்முறையீட்டுக்கு எடுக்கப்படுகின்றன; தீர்க்கப்படுகின்றன. இங்கே நீதித் துறை சமூகத்துக்குக் கொடுக்கும் சமிக்ஞை என்ன?”

என்ன சமஸ் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று அதிர்ச்சியாக இருக்கிறாதா? அவசரப்படாதீர்கள். பசி வந்து விட்டது என்பதற்காக ஆடுகள் வேட்டைக்கு கிளம்புவதில்லை. இந்த வார்த்தைகள் ஜெயாவின் வழக்கு குறித்து அல்ல. சல்மான்கான் வழக்கிற்காக திருவாளர் சம்ஸ் பொங்கியது.

சட்டமும், நீதியும் மேட்டுக் குடியினருக்குத்தான், சாமானியருக்கு அல்ல என்று சல்மான்கானையும், பேரறிவாளனையும் ஒப்பிட்டு பாதுகாப்பாக எழுதிய அண்ணன் சமஸ் ஜெயா வழக்கு குறித்து என்ன எழுதினார்?

பேனை பெருமாளாக்கும் நாங்கள் ஊழல் குற்றத்தை மக்கள் செல்வாக்காக மாற்ற மாட்டோமா? ஆசிரியர் அசோகனுடன் சமஸ்

“இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16-ல் அவர் எழுதியிருப்பது சாராம்சத்தில் அரவிந்தன் எழுதியவையே! எடிட்டோரியல் பாலிஸி எனும் போது அதில் வடக்கு தெற்கு பேதம் மட்டுமல்ல, சுவாரசியமும் இல்லை என்பது சம்ஸ் எழுத்தில் சலங்கை கட்டி ஆடுகிறது.

என்றாலும் காவடி தூக்குவதில் ஒரிஜினல் பார்ப்பனர்களை விட புதுப்பார்ப்பனர்கள் தலை சிறந்தவர்கள் என்பதால் இங்கே சமஸ் நேரடியாகவே அம்மான்னா சும்மாவா என்று எகிறுகிறார்.

இதைப்பற்றி தனியாக எழுதவேண்டும் என்றாலும் சிற்சில. பாராளுமன்றத்தின் பணித்திறனில் மாற்றம் வந்திருக்கிறது என்று பூரிக்கும் சமஸ் (நில அபகரிப்பு சட்டத்தின் அமலாக்கம் போன்ற பணித்திறன்) மோடிக்கு ஜே போட்டு விட்டு தமிழகத்திற்கு திரும்புகிறார். இங்கே எதிர்க்கட்சிகள் எவையும் ஒரு தெருமுனைக்கூட்டம் கூட நடத்த வக்கற்று இருப்பதாக கேலி செய்கிறார்.

நீதிமன்றத்தில் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் ஜெயாவை வீழ்த்த முடியாது என்று ஒரு தேர்ந்த பூசாரி போல குறி சொல்கிறார். ஸ்ரீரங்கத்தில் ஒரு வாக்கிற்கு 5 அல்லது 10 ஆயிரங்கள் அள்ளிக் கொடுத்து பறித்த வெற்றி போல அடுத்த பொதுத்தேர்தலில் அம்மா பெறப்போகும் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஈட்ட முடியுமா என்று சவால் விடுகிறார்?

இதன் படி அம்மா மாதிரி அனைவரும் சுருட்டினால்தான் செலவழிக்க முடியும் என்பதை மறைப்பதற்கு கொள்கை, செல்வாக்கு, திறமை, நேர்மை என்று எழுதுவதை நிச்சயமாக உப்பு போட்டு தின்னும் ஒரு மனிதனால் முடியவே முடியாது. சமஸிற்கு முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் சாதனை என்ன? ஜெயா சசி கும்பல் இறக்கிய பல கோடி பணம், பல முன்னணி வழக்கறிஞர்கள், பா.ஜ.க மற்றும் நீதித்துறை கவனிப்புகள் என்று பச்சையான அயோக்கியத்தனத்தின் மூலமே பல்வேறு வாய்தாக்கள், வாதங்கள் என்று இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வில்லத்தனத்தையே “சொத்துக்குவிப்பு வழக்கில் தடம் பதித்தவர்கள்: ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று எழுதுவற்கு எவ்வளவு கற்பனை வளம் வேண்டும்?

இதை தொடராக இரா.வினோத் எனும் அடிப்பொடி அய்யாதான் எழுதுகிறார். இவர்தான் இந்த ஊழல் வழக்கின் இறுதி நாட்களை சுடச்சுட அனுப்பியவர். சூடு இருப்பதால் அது ஊசிப்போன கெட்டுப்போன உணவு எனும் உண்மையை மாற்ற முடியாது.

தினமணி வைத்தியுடன் தி இந்துவின் சமஸ் – ஜெயாவின் ஊடக பூசாரிகள்!

இந்த தொடரில் அ.தி.மு.க வக்கீல்கள் அங்கே எப்படி ஆண்டுக் கணக்கில் ஓட்டலில் தங்கி, வீட்டை பிரிந்து, எடுப்பு சாப்பாடு சாப்பிட்டு பயங்கரமாக வேலை செய்து இந்த வழக்கில் வெற்றி பெற்றார்கள் என்று கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாமல் எழுதுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் சீ…………. என்று சொல்லிவிட்டு மேலே போகலாம்.

இன்னொரு கட்டுரையில் குமாரசாமியின் கூட்டல் தவறு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் மற்ற வாதங்கள், விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ஜெயாவை விடுதலை செய்தது செல்லுமாம். இதை அறிந்த உடன்தான் எதிர்க்கட்சிகள் அடக்கி வாசிக்கின்றன என்று நம்பியாரே யோசித்திராத கோணத்தில் அடித்து விடுகிறார்கள்.

ஜெயா சசி கும்பல் தமிழகத்தை ஆண்டு ஊழல் செய்து சம்பாதித்து அதை சட்டப்பூர்வமாகவும் தவறு இல்லை என்று நிலை நாட்டியிருக்கிறார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட சாதனை அல்ல.

நாட்டின் அனைத்துத் துறைகளும் இவர்களுக்கு சேவை செய்திருக்கின்றன. குமாரசாமி தீர்ப்பால் நீதித்துறை மட்டுமல்ல, தி இந்துவின் செய்திகளை தொகுத்து பார்க்கும் போது ஊடகத்துறையும் ஊழல் மயமாகிவிட்டதை எவரும் அறிய முடியும்.

(நன்றி: வினவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.