செய்தி ஊடகம் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறதாம்!

இன்று இந்துக்கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம், புனிதநூல்களைத் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் கிண்டல் பண்ணுகிறார்கள். கிறித்தவ பாதிரிகள், முசுலீம் மௌல்விகள் என்றால் பெரிய மகாத்மா போலவும், கோயில் பூசாரிகள் – இந்துத் துறவிகள் கயவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் எந்தக்கருத்தும் வராமல் தடை செய்ய வேண்டும். அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

– ‘இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?’, இந்து முன்னணி வெளியீடு.

இந்து தர்மம், பண்பாட்டை யாரும் வெளியிலிருந்து மெனக்கெட்டு கிண்டல் பண்ணத் தேவையில்லை; வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், ஸ்தோத்திரங்கள் இவற்றையெல்லாம் இந்து முன்னணியே மலிவு விலையில் அச்சடித்து வெளியிட்டாலே போதும். கடவுளர்கள் உருவான கதை, ஊடல் –கூடல்–ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா–ஊர்வசி–மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன்–விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள். அப்படித் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்து மதவெறியர்களும் உபந்நியாசம் செய்பவர்களும் இந்து தர்மம –பண்பாடு பற்றி பூடகமாகவும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் புதுக்கவிதை பாணியில் புரியாமலும் பேசி வருகிறார்கள்.

“நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ” என்று சித்தர்கள் அன்று கேட்டார்கள். புத்தர், மகாவீரர், சார்வாகர், நியாயவாதிகள், மீமாம்சவாதிகள், பூதவாதிகள் என்று பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய அனைவரும் ‘இந்து தர்மத்தை’ புரியும்படி மக்களிடம் விளக்கியதற்காகவே ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய இலக்கியங்களும் பெருமளவு அழிக்கப்பட்டன.

தற்காலத்தில் அம்பேத்கரும், பெரியாரும் இதைச் செய்ததற்காகவே இந்து மதவெறியர்களால் கேவலமாக ஏசப்படுகிறார்கள். ”எல்லாம் இறைவன் செயல் என்றால் கொலை கொள்ளை எவன் செயல்?” என்ற திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு, ‘எல்லாம் மனிதச் செயல் என்றால் ஈ.வெ.ராவிற்கும் மணியம்மைக்கும் குழந்தையில்லையே ஏன்?’ என்று இந்து முன்னணி தனது வெளியீடு ஒன்றில் பதிலளித்திருக்கிறது. இதுபோக ‘பெரியாரைக் கொளுத்துவோம்’ என இராம.கோபாலன் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது என்றால் அதன்பின்னே வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் டன் கணக்கில் உள்ளது.

ஆகவே, ‘இந்து தர்மத்தை’ அம்பலப்படுத்தும் அதாவது இழிவுபடுத்தும் அனைவரும் இன்றுவரை ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை. ‘இந்து தர்மத்தை’ விமரிசிப்பதற்கெதிரான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஏதோ புதிதாக விதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோருவதன் பொருள் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

அடுத்து வானொலி –வானொளியில் இந்து மதம் இழிவுபடுத்துப்படுகிறது என்பது உண்மையா? நிச்சயம் கிடையாது.

திப்புசுல்தான் வாள்இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இராமானந்த சாகரின் இராமாயணம், சோப்ராவின் மகாபாரதம், சாணக்கியன், ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமான், சிவமகாபுராணம் முதலான ஏராளமான புராணக் கதைகள் தூர்தர்சனிலும், தனியார் அலைவரிசைகளிலும், இந்தி மற்றும் தேசிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.

மேலும் விநாயகர் ஊர்வலம் பம்பாயிலிருந்தும், கிருஷ்ண ஜெயந்தி மதுராவிலிருந்தும், தியாகய்யர் உற்சவம் திருவையாற்றிலிருந்தும், அமர்நாத் யாத்திரை ஜம்முவிலிருந்தும், ஜெகந்நாதரின் தேரோட்டம் பூரியிலிருந்தும், தசரா ஊர்வலம் மைசூரிலிருந்தும், காளி பூஜை கல்கத்தாவிலிருந்தும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலிருந்தும், ஓணம் ஊர்வலம் திருவனந்தபுரத்திலிருந்தும், மகர விளக்கு ஐயப்பன் கோவிலிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகள் வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. இவைகளுக்காகப் பலகோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஒலி –ஒளிபரப்பு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய சலுகை ஏனைய மதங்களுக்குக் கிடையாது. மேலும் ராமனைக் கசிந்துருகும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளானாலும் சரி, மாணவர்களின் தமிழ்ப்பாட நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெறும் திருவாசகமானாலும் சரி பார்ப்பனியத்திற்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் நூற்றிலொரு பங்கு கூட முசுலீம் –கிறித்தவ மதங்களுக்குக் கிடையாது.

காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த இந்திய அரசர்களில் முதன்மையானவன் திப்பு. அவன் பிறப்பினால் ஒரு முசுலீம் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் திப்புவைக் கட்டோடு வெறுக்கிறது. ‘திப்பு சுல்தான்’ தொடரை ஒளிபரப்பியதற்காக பல தூர்தர்சன் நிலையங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. அதன்பிறகு தொடருக்கு முன்னால் ”இது உண்மைக் கதையல்ல, கற்பனைச் சம்பவங்கள் நிறைந்தவை” என்ற அறிவிப்போடு பல சமரசங்களுடன்தான் திப்புவின் தொடர் ஒளிபரப்பானது. “திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.

‘47 பிரிவினையின் போது நடந்த இந்து –முசுலீம் கலவரப் பின்னணியை வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘தமஸ்’ தொடரையும் இந்துமத வெறியர்கள் எதிர்த்தனர். பார்ப்பன இந்து மதம் விதவைகளை எப்படிக் கேடாக நடத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்ட தீபாமேத்தாவின் ‘வாட்டர்’ படப்பிடிப்பையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடை செய்திருக்கிறது. சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான்.

இந்தியாவின் திரையுலகமும் கூட பார்ப்பனியத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்ட ஊதுகுழலாகத்தான் இருக்கின்றது.

இந்தித் திரையுலகைக் கட்டுப்படுத்துவது பால்தாக்கரேவின் சிவசேனா கும்பல்தான். ‘ரோஜா’ படத்தில் காசுமீர் முசுலீம் மக்களைக் கேவலப்படுத்திய மணிரத்தினம், ‘பம்பாய்’ படத்திலும் முசுலீம்களைக் கலவரக்காரர்களாக உண்மைக்கும் புறம்பாகச் சித்தரித்ததனாலேயே தாக்கரேயின் பாராட்டையும், அனுமதியையும் பெற்றார். மணிரத்தினத்தின் இத்தகைய படங்கள் தூர்தர்சனின் ஏதோ ஒரு அலைவரிசையால் மாதந்தோறும் இப்போதும் திரையிடப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பை வைத்து முசுலீம்களை பயங்கரவாதிகளாக –வில்லன்களாகக் காட்டும் படங்கள் தற்போது ஏராளம் வருகின்றன. முசுலீம்களையும், கம்யூனிஸ்டுகளையும் கேவலப்படுத்தி ஹாலிவுட்டில் 80-களில் வந்த படங்களின் போக்கிற்கு இணையானது இது.

விஜயகாந்த், அர்ஜுன் போன்றோரது ‘தேசபக்தி’ப் படங்களிலும், தெலுங்கின் மசாலாப் படங்களிலும், அவ்வளவு ஏன் கடவுளைக் கேலி செய்து வெளிவந்த வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படத்திலும் ‘பின்லேடன்’தான் வில்லன். தாடியும், குர்தாவும், கண்களில் தெறிக்கும் வெறியும் கொண்ட முசுலீம் பயங்கரவாதிகளாய் இவர்கள் காட்டப்படுகிறார்கள். மேலும் முசுலீம் கிறித்தவப் பெயர் கொண்டவர்களே கடத்தல்காரர்களாகவும், சட்ட விரோதத் தொழில் செய்பவர்களாகவும் திரைப்படத்தில் தோன்றுவது இந்தியத் திரை மரபாகவே நிலைபெற்று விட்டது. பார்ப்பனியத்தின் பண்பாட்டை ஆதரிப்பவரே நல்ல முசுலீம் –கிறித்தவராகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

திராவிட இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும், சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். தி.மு.க.வின் முன்னாள் கொ.ப.செ.யான ராஜேந்தர் தீவிரமான ஆஞ்சநேய பக்தர், பக்திப் படங்களை மாதம் ஒன்று என எடுத்துத் தள்ளும் இராம நாராயணன் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

தன் மகனுக்கு ‘பிரபாகரன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தவரும், தனது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பாராட்டியதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவருமான நடிகர் விஜயகாந்த், ஒரு மாதிரி தேசியம் கலந்த தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக் கொள்பவர். ‘கள்ளழகர்’ தொடங்கி பின்னர் வெளிவந்த ‘நரசிம்மா’ வரை இராம.கோபாலனுக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த். ‘நரசிம்மா’ படத்தில் ”இந்தியாவில் ஒரு முசுலீம், ஜனாதிபதியாக, கிரிக்கெட் காப்டனாக மாறமுடியும், உங்க பாகிஸ்தானில் ஒரு இந்து வரமுடியுமா? இங்கே ஏராளம் மசூதிகள் கட்ட முடியும், உங்க பாகிஸ்தானில், இந்துக் கோவில்கள் கட்ட முடியுமா?” என்று ஒரு காசுமீர் முசுலீம் ‘தீவிரவாதியிடம்’ விஜயகாந்த் வாதிடுகிறார்.

எனவே, தமிழ்த் திரையுலகின் மணிரத்தினம், விசு, பாலசந்தர், ஜீ.வி., சங்கர், கமலஹாசன், பாலகுமாரன், சுஜாதா, வாலி போன்ற பார்ப்பனர்களானாலும், விஜய்காந்த், பாரதிராஜா, எஸ்.தாணு, இளையராஜா, வைரமுத்து போன்ற சூத்திர – பஞ்சமர்களானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து தேசபக்த –பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்டவர்கள்தான். பிரபல பின்னணிப் பாடகியான சித்ரா சென்னை ஆர்.எஸ்.எஸ். குரு பூஜையில் வருடந்தோறும் பாட்டுப் பாடுகிறார். கௌதமி, எஸ்.வி.சேகர், விசு, விஜயசாந்தி, சத்ருகன்சின்ஹா, விக்டர் பானர்ஜி என இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பா.ஜ.க.வில் குவிந்து கிடக்கின்றனர். இராமாயணத் தொடரில் இராமன், சீதையாக நடித்த நடிகர்கள் கூட பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

அரசியல் மற்றும் மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்யும் ‘டாக்குமென்டரி’ பட உலகிலும் இந்து மதவெறியர்களை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது.

அத்வானியின் ரத யாத்திரையை வைத்து இந்து மதவெறியர்கள் நடத்திய ‘ராமஜென்ம பூமி’க் கலவரங்களைப் பதிவு செய்து ‘கடவுளின் பெயரால்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன. அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என்ற அரசு உத்தரவை முறியடிக்க அவர் 8 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. அதேபோல ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணை உடன்கட்டையேற்றிக் கொன்ற பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தைப் பதிவு செய்து ஒரு குறும்படமாக்கிய 5 பெண் பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைமைதான். போலீசு நடத்திய வெறியாட்டத்திற்குப் பிறகு, கொடியங்குளத்தின் அவலத்தை வீடியோவில் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் திரையிட்டது ‘புதிய தமிழகம்’ கட்சி. அதைக்கூட தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டவர் இந்து முன்னணி இராம.கோபாலன்.

இப்படி காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல, செய்தி ஊடகத்திலும் பார்ப்பனியமே தலைதூக்கித் துரத்துகிறது. இந்தியாவின் அநேக மாத, வார, நாளிதழ்கள் பார்ப்பன – மேல்சாதியினரிடமே இருப்பதால் இந்து மீட்புவாதத்திற்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் கோட்டையாக அவை விளங்குகின்றன. ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம், வார – மாத ராசி பலன்கள், சாமியார்களின் அருளுரைகள், கோவில் யாத்திரைகள் எல்லாம் இந்தப் பத்திரிகைகளில் நிரம்பி வழியும். எல்லா மதத்தினரும் வாங்கிப் படிக்கும் குமுதம், விகடன் வகையறாக்கள் தீபாவளிக்கு மூன்று புத்தகங்கள் வெளியிடும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்காக மூன்று பக்கங்களைக் கூட அதிகரிக்காது.

உள்நாட்டு – வெளிநாட்டு சினிமா கிசுகிசுக்கள் நிரம்பி வழியும் தினமலரின் வாரமலர் பக்கங்களில் கீழே ராமகிருஷ்ண பரமஹம்சரது பொன்மொழிகள் தவறாமல் இடம் பெறும். ‘பொய்யே உன் பெயர்தான் தினமலரா’ என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஜெலட்டின் குச்சிகளும், ஐ.எஸ்.ஐ. உளவாளிகளும் நிரம்பி வழிவதாக இப்போதும் கூசாமல் எழுதுகிறது தினமலர். பா.ஜ.க.வின் அரசியலை ஆதரிப்பதற்குத் தனது தலையங்கப் பக்கத்தையே ஒதுக்கியுள்ளது தினமணி. தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, இந்தியாடுடே போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.

இந்து மதவெறியர்களுக்கு நேரடிப் புரவலராக இருக்கும் தினமலர், பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிகையான காலச்சுவட்டிற்கும் புரவலராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது அலுவலகத்திலேயே பெருமையுடன் விற்பனை செய்யும் ஜெயமோகனின் ‘விஷ்ணு புரம்’ நாவலுக்கு பணஉதவி செய்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். கோக் – பெப்சி முகவராக இருக்கும் மகாலிங்கத்தின் கல்லூரிகளில்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் பயிற்சி முகாம்கள் இன்றும் நடக்கின்றன. ”எங்கே பிராமணன், மகாபாரதம், இராமாயணம்” இவற்றை வைத்தே ‘அரசியல்’ பத்திரிகை நடத்தும் ‘சோ’ தனது பா.ஜ.க. விசுவாசத்திற்குப் பரிசாக ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றார். இவரைப்போலவே இந்து மதவெறியரின் பத்திரிகையாளராக இருந்த அருண் சோரி இன்று அமைச்சர் பதவியையே பரிசாகப் பெற்றிருக்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில – இந்தி நாளேடுகள் பல பாபர் மசூதி இடிப்பிலும், மண்டல் கமிசன் பிரச்சினையிலும், பா.ஜ.க.வின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டன. முலாயம்சிங் முதலமைச்சராக இருந்தபோது 90-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அயோத்தி கரசேவை கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தி வெளியிட்ட ஆஜ், தைனிக் ஜாக்ரண், சுதந்திர சேத்னா, சுதந்திர பாரத் எனும் 4 இந்தி இதழ்கள் ‘இந்திய பிரஸ் கவுன்சிலினால்’ கடும் கண்டனம் செய்யப்பட்டன. இக்கண்டனத்தைக் கூட ஏனைய தேசியப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து விட்டன.

சட்டரீதியில் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டாலும் செய்தி ஊடக நிறுவனங்களில் இயல்பாக உள்ள ‘இந்து’ ஆதிக்கம் சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்துகிறது. போட்டி மதவாதம் எழுவதற்கு இத்தகைய இந்து செய்தி நிறுவனங்களும் ஒரு காரணமாகின்றது.

மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி–செய்தி–பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?

(நன்றி: வினவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.