தமிழ் ஊடகச் சூழலில் சினிமா மீதான திறந்த உரையாடல்கள் அரிது. அது, சிறுபத்திரிக்கை அளவில் மட்டுமே சுருங்கியிருப்பது துரதிஷ்டமானது. அரசியல்வாதிகளை விட ஊடகங்களில் அதிகம் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள் திரைப் பிரபலங்கள். ஓர் மையநிலை ஊடகம் அரசியல் அதிகாரம் கொண்டவர்களைக் கூட பெயரளவில் பகைத்துக்கொள்ளுமே ஒழிய, சினிமாக்காரர்களைச் சீண்டாது. இதன் பிறழ்ந்த நிலையிலேயே, புகழ்பாடும் கதாகாலட்சேபங்களை நேர்காணல் என்ற பெயரில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா ஊடகவியலின் போதாமையே பரத்வாஜ் ரங்கனை முன்னணி சினிமா ஊடகராக நிறுத்துகிறது. அவரது சாதி மற்றும் வர்க்க நிலை அவருக்குத் தேவையான அனைத்தையும் சாத்தியமாக்குகிறது. ரங்கனை எந்த அடையாளமுமற்ற பொதுவானவராகவோ, அல்லது வெறும் மேட்டிமை மனம் கொண்டவராக மட்டுமோ நினைக்க முடியாது. ஒருசில இடைநிலை சாதி பிற்போக்கு சினிமாக்களை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். ஆனால், அரசதிகாரம், பார்ப்பனிய மேலாதிக்கம் போன்றவற்றை எதிர்க்கும் சினிமாக்களை அழகியலை முன்வைத்து எதிர்ப்பார். ஜெய்பீமை ‘அழுகாட்சி சினிமா’, காலாவில் ‘சினிமாட்டிக்கை இழந்து ஐடியாலஜியை மட்டும் முன்னிறுத்தும் ரஞ்சித்’ போன்ற விமர்சனங்கள் அவரின் அரசியலைச் சொல்லும்.
இந்திய சினிமாவில் யாரையும் சுலபமாக நேர்காணல் எடுக்கும் பரத்வாஜ் ரங்கனின் நிகழ்ச்சிகள்கூட எவ்வித சுவாரஸ்யமும் அற்று பிரபலங்களின் உரையை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு தேர்ந்த விமர்சகனுக்குரிய உடன்பாடின்மையையோ எதிர்வாதங்களையோ அவரிடம் காண முடியாது. அந்தவகையிலேயே இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் எடுத்த சமீபத்திய நேர்காணல் அமைகிறது. ஒரு திரை பிரபலத்தின் போதனையினை சார்ந்து போவதைக் கடந்து, யாரும் கண்டிராத ஆச்சரியமாகக் குமாரராஜாவை அப்பாவியாக அணுகுகிறார் ரங்கன். ஒருகட்டத்தில், ஹிட்டன் டீடெய்லஸ், கலர் பேலட் போடும் யூடுயூப் சேனல்களுக்கு இணையாக நிகழ்ச்சி செல்கிறது.
கடந்த தசாப்தத்தில் எழுந்த புதுயுக சினிமா இயக்குநர்களில் ஒருவராகத் தியாகராஜன் குமாரராஜா அறிமுகமாகிறார். ‘ஆரண்ய காண்டம்’ படம் திரைக்கதையிலும் தொழிற்நுட்பத்திலும் தேர்ந்த படைப்பாக வெளிவந்தது. வன்முறைகள் கொண்ட நிழலுகம், வழமையாக அறிந்திராத நகரம், மைய பாத்திரத்தை உடைத்து அனைத்து மாந்தர்களுக்குமான கதை நகர்வு, விளிம்புநிலை பாத்திரங்களுக்கான உணர்வுரீதியான வசனங்கள் போன்றவை அப்படத்திற்கென தனி அந்தஸ்தை வழங்கின. கொஞ்சம் தாமதமாகவேயாயினும் தியாகராஜன் குமாரராஜா பற்றிய தேடல்கள் சினிமா ஆர்வளர்களிடையே தொடங்கியது. யார் இந்த குமாரராஜா என்ற பெரும் ஆவலுடன் அவரது இரண்டாம் படம் எதிர்பார்க்கப்பட்டது. இரண்டே படங்களில் யாருக்கும் கிடைக்காத புகழ் அவருக்குக் கிடைத்தது. இரண்டாம் படமான சூப்பர் டீலக்ஸில் முழுமையற்றது என்றாலும் தன்னைப் பற்றிய ஓர் சித்திரத்தை வழங்கினார்.
குமாரராஜாவிடம் பூடகமான கற்றல் திறன் இருந்தாலும், அதில் தனது வெளிப்பாடு என்ன என்பதைக் கூட கூற மறுக்கிறார். தாம் ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், யாவற்றுக்கும் அப்பாற்பட்டவன், வரையறை, கருத்தியல், நிலைப்பாடு போன்றவையெல்லாம் தேவையற்றது என்கிறார். பரத்வாஜ் ரங்கனுடைய நேர்காணல் குமாரராஜா குறித்த பார்வையை நமக்கு வழங்குகிறது. அதில் தனது இரண்டாவது படம் போன்ற ஜொலிப்பான கலவைத் தன்மையை வழங்க முயன்று தோற்றிருக்கிறார்.
ஒரு திரைப்பட இயக்குநராக எத்தகைய சினிமா மரபையும் பேசிட குமாரராஜா விரும்பவில்லை. தனது படங்கள் (அவை இரண்டு மட்டும் என்றபோதும்) பற்றிக்கூடத் தான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார். உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவல் என்றால், அதை நீங்களே தேடிக்கொள்ளுங்கள், முடியாத பட்சத்தில் அதைக் கைவிட்டுவிடுங்கள் என்று போகிற போக்கில் (just like that) முடித்துவிடுகிறார். சினிமாவை இதற்கு மேல் அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
ரங்கனின் நேர்காணலில் குமாரராஜா மூன்று விஷயங்களை கவனப்படுத்துகிறார். ஒரு படம் முழுக்க தன்னிலை (subjectivity) சார்ந்தது. அடிப்படையில் ஒரு படம் சரக்கு (Product). அத்தகைய படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்களின் பங்கு தொடர்பற்றது (unrelated).
குமாரராஜாவின் தேர்ந்த செய் நேர்த்தியை அவரது இரு படங்களும் வெளிப்படுத்தின. ஆனால், அதற்கு மூலாதாரமான உள்ளடக்கம் மற்றும் அதன் புறக்காரணிகள் பற்றி தட்டையாகவே அவர் அணுகுகிறார். ‘நான் ஒரு விஷயத்தை எவ்வாறு பார்க்கிறேன், அது என்னவாக இருக்கும் என நினைக்கிறேன் என்பதே கலையை நான் அணுகும் விதம். நான் பார்க்கும் கோணம் தவறாக இருக்கலாம், அல்லது உண்மைக்குப் புறம்பாகக் கூட இருக்கலாம். என்னுடைய உள்ளுணர்வு தீர்மானிக்கும் (அதற்கு வரையறையில்லை) முடிவே என் கலை’ என்பது குமாரராஜாவின் வாதம். அவர் தீர்மானிக்கும் எண்ணம் நமக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம். ஒருவேளை, சமூக விரோத சினிமா எனும்பட்சத்தில் நாம் எதிர்க்கலாம். அதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்கிறார்.
தமிழ் இலக்கிய சூழலில் எழுந்த பின்நவீன கதையாடலை ஒத்திருக்கிறது குமாரராஜாவின் வாதம். அவரும் ஒருவிதத்தில் தமிழ் இலக்கியவாதியைப் போல்தான் பேசுகிறார். படைப்பு பேசும் பொருள், அதன் யதார்த்தம் மற்றும் நடைமுறைகள் பற்றிய போதாமை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. ‘பிரதிக்கு வெளியே ஏதுமில்லை, உங்கள் பார்வை உங்களுடையது’ என்று முடித்துவிடுவார்கள். இலக்கியவாதிகள் மக்களிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள தங்கள் எழுத்தின் ‘உள்ளார்ந்த தரிசனத்தை’ துணைக்கு அழைப்பது போல், குமாரராஜாவும் உள்ளடக்கமற்ற தன்னிலையை (subjectivity) பேசுகிறார். இந்த நேர்காணலில் அவர் அதிகம் குறிப்பிடும் வார்த்தை இதுதான். அப்பட்டிருக்கையில், அந்த தன்னிலை என்ற பண்போடே பின் முழுக்க முரண்படும் அளவிற்குப் பலவீனமாக விவாதிக்கிறார்.
தனது தேர்வு தனக்கான கலை நோக்கை அடைகிறது எனும் குமாரராஜா, கலையை உன்மத்த நிலையாகச் சுருக்கிவிடுவதில்லை. அது ஒரு வணிகம் சார்ந்த சரக்கு (product) என்ற பின்நவீனர்களுக்கே உரியத் தெளிவு கொண்டுள்ளார். இதனையும், ஒரு வணிக பொருளை நீங்கள் விமர்சன தராசில் கூர்மையாக அளவிட முடியாது என்ற கோணத்திலேயே வைக்கிறார். ஒரு படைப்பாளனுக்குரிய பொறுப்பை தட்டிக்கழிக்கத் தேவையான மற்றொரு காரணியாகவே இதைப் பார்க்க முடியும். பல கோடிகளில் உருவாகும் சினிமாக்கான வணிகத் தேவையை மறுக்க முடியாது. ஆனால், அதில் படைப்பாளனுக்குரிய பொறுப்புணர்வு (Creator’s Responsibility) என்பதற்குச் சமகாலத்திலேயே ஓர் உதாரணமாக ஹெச்.வினோத்தைக் குறிப்பிடலாம்.
‘என் படங்கள் ஒரு வணிகப் பொருள், நான் அதன் விற்பனையாளன் மட்டுமே, எங்கு வணிகம் மேலோங்கி இருக்கிறதோ அங்கு அறத்தை எதிர்பார்க்க முடியாது’ என்று வெளிப்படையாக அறிவித்து படம் இயக்குபவர் ஹெச்.வினோத். ஆனால், அந்தப் பொருளை உருவாக்குபவன் என்ற வகையில் அதற்கு உட்பட்ட எல்லையில் எதைப் பேச வேண்டும், எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதில் பொறுப்புணர்வு கொண்டுள்ளார். குமாரராஜா பிற்போக்காக இயங்கவில்லை என்று கூறினால்கூட பிற்காலங்களில் அவற்றை நியாயப்படுத்த இதுபோன்ற வாதங்கள் உதவும்.
‘ஒரு படத்தை விமர்சிக்க யாவருக்கும் உரிமையுண்டு என்ற போதிலும், அதைப் பற்றித் தெரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும். இசையை விமர்சிப்பவருக்கு இசை தெரிந்திருக்க வேண்டும் என்பதுபோல. என் படத்தை மக்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை’ என்கிறார். ஒருவிதத்தில், சுஹாசினி மணிரத்னம் போன்ற மேட்டிமை மனநிலை கொண்டவர்களின் பார்வையை நம் மாற்று இயக்குநரும் பிரதிபலிக்கிறார். இறுதியாக, ஒரு படைப்பை முழுமைப்படுத்தும் மக்களையும் உதாசீனப்படுத்துகிறார்.
தன்னிலை, மக்கள் தொடர்பின்மை போன்றவற்றை விடாமல் பேசுபவர் முடிவில் படம் வெளியான பிறகு தனக்கும் தன் படைப்பிற்குமான உறவு அற்றுப் போகிறது என்று படத்தோடு சேர்த்து முன்பு கூறிய அத்தனை கருத்துகளையும் அந்தரத்தில் விடுகிறார். விடாமல் தன்னிலை வாதம் பேசும் ஒருவரால் எப்படி இவ்வாறு பேச முடிகிறது எனும்போதுதான், குமாரராஜாவின் நிலைப்பாடற்ற போதாமை வெளிப்படுகிறது. தன் படைப்பின் மீதான புகழை ஏற்றுக்கொண்டவர் (அவர் பெயருக்கு மறுக்கலாம்) அதன் எதிர்வினைகளைத் தட்டிக்கழிக்கவே இவ்வாறு சொல்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது.
ஒருவிதத்தில் குமாரராஜா போன்று பின்நவீன பாவனை செய்வது பாதுகாப்பான விஷயம். சூப்பர் டீலக்ஸில் அனைவரையும் உள்ளடக்கிய மொழி, இனத்தோடு வெறுப்பிற்குரிய சாதியை ஒப்பிட்டு ஏன் வசனம் வைத்தீர்கள் என்று கேட்டால், ‘அந்தக் கதாபாத்திரடத்திடம் கேள்’ என்பார். ‘மாடர்ன் லவ் சென்னை’ என்று பெயர் வைத்துவிட்டு உங்கள் கதையில் சென்னையையே காணோமே என்று கேட்டால், ‘அதில் சென்னை தெரியாதது உங்கள் குறை. நான் பொறுப்பல்ல’ என்று சுலபமாக பதிலளித்துவிடுவார். மற்றபடி, முற்போக்கு நிலைப்பாட்டிற்குக் கடவுளையும், மரபான பிற்போக்கையும் சுலபமாகத் தாக்கும் பாவனைவாதிகளால் சம காலத்திலிருந்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாது.
சமூகக் கதைகளை பின்நவீன அழகியலில் எடுக்கும் இயக்குநர் அலிஜாண்ட்ரோ இனாரிட்டோ குறிப்பிடுகையில், ‘எனது படத்திற்கான இறுதி முடிவை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றதால், அதன் குறைகளுக்கான முழுப் பொறுப்பும் என்னையே சாரும்’ என்றார். ஆனால், படைப்பிற்கான அனைத்து பண்புகளையும் அந்நியப்படுத்தும் குமாரராஜாவின் உரையாடலில் பொருளடக்கமற்ற வெறுமையே எஞ்சுகிறது.
இதில் எச்சரிக்கை என்னவென்றால், ‘இதுவே நான்’ என்றோ, அல்லது ‘அந்த நான் நீங்களாக முடியாது’ என்றோ புதுவித போதனையை அடுத்த நேர்காணலில் வைத்துவிடுவார் என்பதுதான்.