Forrest Gump Vs Laal Singh Chaddha… ஆதிக்கத்தின் அப்பாவித்தனமும், ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் வேறானவை!

பிரபல ஹாலிவுட் கிளாசிக் திரைப்படமான ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ தன்னளவில் பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களைக் கொண்டது. பழமைவாத அமெரிக்கச் சிந்தனைகளை ஊக்குவிப்பதாக அதன்மீதான விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக போர் எதிர்ப்புத் திரைப்படமாக வரலாற்றில் இடம்பெற்றுக் கொண்டது ‘ஃபாரெஸ்ட் கம்ப்’. டாம் ஹேங்க்ஸ் நடிப்பு, திரைக்கதை வடிவம், அட்டகாசமான பின்னணி இசை, மென்சோகம் கொண்ட ட்ராமா காட்சிகள் என ஹாலிவுட்டின் நவீன காலத்து கிளாசிக் திரைப்படம் ஒன்றிற்கான அத்தனை மெனக்கெடல்களும் ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ திரைப்படத்தில் உண்டு. 1950களில் இருந்து 1980களின் தொடக்கம் வரையிலான அமெரிக்காவின் வரலாற்றை, சற்றே கற்றல் குறைபாடு கொண்ட ஃபாரெஸ்ட் கம்ப் என்ற மனிதனின் பார்வையில் பதிவுசெய்திருக்கும் இந்தத் திரைப்படம், பல்வேறு உண்மையான நிகழ்வுகளைக் கதையில் உள்ளடக்கியிருந்தது.

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ இந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுவதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டபோதே ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில், மற்ற அரசியல் விவகாரங்களைக் கூட விட்டுவிடலாம், போர் எதிர்ப்பை ஆமிர் கான் என்ற முஸ்லிம் எவ்வாறு பேசப் போகிறார் என்ற கேள்வி முதலில் எழுந்தது. அடுத்ததாக ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அடிப்படையில் அமெரிக்காவின் பழமைவாதச் சிந்தனைகளுக்கும், பழமைவாதிகளான குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நாஸ்டால்ஜிக் திரைப்படமாக இன்றும் கருதப்படுகிறது. படத்தின் மையக் கதாபாத்திரம் வெள்ளையின ஆதிக்கவாதிகளான Ku Klux Klan அமைப்பின் நிறுவனரின் கொள்ளுப் பேரன். கதை நடைபெறும் களம், வெள்ளையின ஆதிக்கம் நிறைந்த அலாபாமா பகுதி. ஃபாரெஸ்ட் கம்பின் நண்பர்களாக அவரைப் போலவே சற்றே கற்றல் குறைபாடு கொண்ட பப்பா என்ற கறுப்பின நண்பர் வருகிறார்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

இந்தப் பின்னணியில் அமைந்திருக்கும் இக்கதையில் அலபாமா பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக கறுப்பின மாணவர்கள் நுழைந்தது, அதிபர் கென்னடி படுகொலை, எல்விஸ் பிரெஸ்லீ அமெரிக்கக் கலாச்சார சின்னத்தின் முகமாக மாறியதன் பின்னணி, வியட்நாம் யுத்தம், யுத்த எதிர்ப்புப் போராட்டங்கள், பிளாக் பேந்தர் கட்சி, வாட்டர்கேட் விவகாரம் என அமெரிக்காவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ அமெரிக்காவின் கலாச்சார, வரலாற்றைப் பதிவு செய்த டாப் 100 திரைப்படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் ரீமேக்கான ‘லால் சிங் சத்தா’ எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வம் எழுவது இயல்பு. ‘லால் சிங் சத்தா’ சீக்கியக் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதாக அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டபோது, அந்த ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்காவின் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரின் கதை, இந்தியாவில் ரீமேக் செய்யப்படும்போது ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரின் கதையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆமிர் கானின் ‘பி.கே’ திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள், 2015ஆம் ஆண்டு அவர் அளித்த நேர்காணலில் சகிப்புத்தன்மை குறித்து அவர் பேசியது, ‘சத்யமேவ ஜெயதே’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்தாண்டுகளுக்கு முன்பு பேசியது என வெவ்வேறு காரணங்களைக் கூறி ஆமிர் கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தைப் புறக்கணிக்க சமூக வலைத்தளங்களில் சங் பரிவார் அமைப்பினர் பெரிய பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.

ஆமிர் கான்

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ திரைப்படத்தின் கதாநாயகன் வெள்ளையின ஆதிக்கவாதிகளின் Ku Klux Klan அமைப்பை நிறுவியவரின் கொள்ளுப் பேரன். எனினும், தன் தாத்தா ஏன் அவ்வாறு இருந்தார் என்பது அவனுக்குத் தெரியாது. தன் கல்விக்காக அவனின் தாய் பள்ளியின் தலைமையாசிரியருடன் பாலியல் உறவு கொண்டது, தன் பால்ய காலத் தோழி ஜென்னியின் தந்தை அவளை ‘மிகுந்த அன்பு’ கொண்டு தொடுவதாக பாலியல் சீண்டல்களைக் கருதுவது என ஃபாரெஸ்ட் கம்பின் வாழ்க்கை அதீத அப்பாவித்தனங்களால் நிரம்பியது.

‘லால் சிங் சத்தா’ இதே கதையம்சத்தை பஞ்சாபிற்குப் பொருத்தினாலும், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த கதாநாயகனின் வம்சமே ஏதேனும் மன்னரிடமோ, அரசிடமோ ராணுவ வீரர்களாகப் பணியாற்றி, போரில் பலியானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.‘ஃபாரெஸ்ட் கம்ப்’ படத்தைப் போல அல்லாமல், ‘லால் சிங் சத்தா’ இந்தியப் பெண்ணைத் தாயாகக் காட்டுவதால் கண்ணியத்தோடு அவரின் கற்பைப் பாதுகாத்திருக்கிறார்கள். மேலும், இதில் கிறித்துவப் பாதிரியார் ஒருவர் முதலில் மறுத்தாலும், லாலின் தாயின் வேண்டுகோளை ஏற்று அவனைப் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறார். ஜென்னிக்குப் பதில், இதில் ரூபா.

Forrest Gump (1994)

ஜென்னியும் ரூபாவும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ஐம்பதுகளின் இறுதியில் வாழும் குழந்தை ஜென்னியின் பிரார்த்தனை, தன்னை ஓர் பறவையாக மாற்றிவிட வேண்டும் என்பதாக இருக்க, எழுபதுகளின் இறுதியில் வாழும் குழந்தை ரூபாவின் பிரார்த்தனை தான் பணக்காரராக வேண்டும் என்பதாக இருக்கிறது.

அமெரிக்காவின் வெள்ளையினக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஃபாரெஸ்டிற்கு, இந்தியாவின் சீக்கியச் சிறுவன் லாலை விட பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. அவனது பால்யம் ஜென்னியுடனான விளையாட்டுகளால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதே வேளையில், சிறுவன் லால் தன் பால்யத்தில் அம்ரித்சரில் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நிகழ்வை எதிர்கொள்கிறான்; இந்திரா காந்தி படுகொலை, அதன் பின்னான சீக்கியர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வெறியாட்டம் முதலானவை நமக்குக் காட்டப்படுகின்றன. நீண்ட முடி வைத்திருக்கும் சிறுவன் லாலின் முடியை சாலையில் கிடக்கும் கண்ணாடித் துண்டைப் பயன்படுத்தி, கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு வெட்டிவிடுகிறார் லாலின் தாய். இவை பற்றிய எந்தப் புரிதலும் அப்பாவிச் சிறுவன் லாலுக்கு இருக்காது. ஒரு ஆதிக்கவாதியின் அப்பாவித்தனமும், ஒரு ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனமும் எப்படி வெவ்வேறானவை என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது.

அலபாமா பல்கலைக்கழகத்தில் கடந்த 1963ஆம் ஆண்டு கறுப்பின மாணவர்கள் இருவர் முதன்முதலாக அனுமதிக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து பல்கலைக்கழக வாசலில் வந்து தடுத்துநின்றார் அப்போதைய அலபாமா மாகாண ஆளுநர் ஜார்ஜ் வேலஸ். அந்தச் சம்பவத்தின் காட்சியில் அவருக்கு அருகில் நிற்கும் ஃபாரெஸ்ட், அடுத்த காட்சியில் முதன்முதலாக அலபாமா பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட கறுப்பின மாணவியை `மேம்’ என்று அழைப்பதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதன் வேறுபாடுகளை உணராத கதாபாத்திரமாக இருந்தபோதிலும், ஃபாரெஸ்ட் கம்ப் தான் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, கறுப்பின மாணவர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த சிந்தனையைப் பார்வையாளர்களிடம் எழுப்புவதில்லை. மாறாக, இந்த நிகழ்வு மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லப்பட்டிருக்கும்.

Laal Singh Chaddha (2022)

‘லால் சிங் சத்தா’ படத்தில் லாலும் ரூபாவும் அத்வானியின் ரத யாத்திரையைக் காண்பதும், தொடர்ந்து ரூபா லாலிடம், ‘உன் பெயரும் லால்.. அவர் பெயரும் லால்.. லால் கிஷன் அத்வானி’ என்று சொல்வதுமாக மென்மை நோக்கில் தொடப்பட்டிருக்கிறது. அதே போல, மண்டல் எதிர்ப்புப் போராட்டங்கள், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, தொடர்ந்து நாடு முழுவதும் நிகழ்ந்த கலவரங்கள், மும்பை குண்டுவெடிப்பு முதலான அனைத்து விவகாரங்களையும் ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ போல அல்லாமல், ‘லால் சிங் சத்தா’ படத்தில் கலவரத்திற்கு அச்சப்பட்டு `மலேரியா பரவுகிறது’ எனக் கூறி, விடுதி அறைக்குள் அடைந்துகொள்ளும் கதாபாத்திரமாக லால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு ஆதிக்கவாதியின் அப்பாவித்தனத்திற்கும், ஒரு ஒடுக்கப்படுபவனின் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான வேறுபாடாகவே அமைந்திருந்தது. எனினும், அனைத்து வன்முறைகளுமே ஒன்றுதான் என்ற பொருளை இரண்டு திரைப்படங்களுமே ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.

இந்தியாவின் தற்போதைய தேசியவாதச் சூழலில், அமெரிக்க வியட்நாம் போரின் விமர்சனங்களை இந்தியாவுக்குப் பொருத்த முடியாது. எனினும், ‘லால் சிங் சத்தா’ லாவகமாக கார்கில் போரைக் கையில் எடுத்துக் கொள்கிறது. ஃபாரெஸ்ட் அமெரிக்க ராணுவத்தில் இணைந்தபோது, அவனைப் போலவே இருக்கும் கறுப்பினத்தவரான ‘பப்பா’ என்ற நபரின் நட்பு கிடைக்கிறது. அதையே இங்கே தென்னிந்தியாவைச் சேர்ந்த ராணுவ வீரராக ‘பாலா’ என்ற கதாபாத்திரத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ போரின் வலிகளையோ, வியட்நாம் மக்களின் பாதிப்பையோ பேசவில்லை. எனினும், ஃபாரெஸ்டின் அப்பாவித்தனம் போரை இழிவான செயலாக நமக்கு உணர்த்தும். அதே போல, இங்கு கார்கில் போரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபரை அவர் எந்த பக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியாமல் மீட்கிறான் லால்.

சுதந்திரத்திற்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியா குறித்து ஒப்பற்ற படைப்புகளை எழுதிய மண்ட்டோவின் ‘தோபா தேக் சிங்’ கதாபாத்திரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் காட்சியாக இது இருந்தது. ஒரு பைத்தியக்காரன் தன் தேசம் எது என்பது குறித்து எழுப்பும் கேள்விகளாக அமைக்கப்பட்டிருக்கும் அந்தக் கதையின் அதே கண்ணோட்டத்தை ‘லால் சிங் சத்தா’ கதையில் பொருத்த முடியும்.

‘லால் சிங் சத்தா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் முஸ்லிம்கள் இருவர் மட்டுமே. ஒருவர் கார்கில் போரில் காப்பாற்றப்பட்ட பாகிஸ்தானி முஸ்லிம். இவர் மும்பை தாக்குதலுக்குப் பிறகு, தன் கிராமத்தைத் திருத்த பாகிஸ்தான் செல்வதாகக் காட்டப்படுகிறார். மற்றொருவர் ரூபாவின் கணவர். கொலைக் குற்றத்திற்காக அவர் மலேசியாவில் தலைமறைவாகியிருந்ததாகவும், கைது செய்யப்பட்டதாகவும் காட்டப்படுகிறார். பிற சமூக மக்களைப் போல அல்லாமல், முஸ்லிம் கதாபாத்திரங்களைக் ‘குற்றம்’ என்ற புள்ளியில் மட்டுமே பேசுகிறது ’லால் சிங் சத்தா’. எனினும், அதைக் கொஞ்சமாகத் தொட்டு மட்டுமே சென்றிருப்பதால், படத்தின் மையக் கருத்து பாதிப்பு ஏதும் இன்றி வெளிப்படுகிறது.

மண்ட்டோ

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ திரைப்படம் அடிப்படையில் காதலை மையப்புள்ளியாகக் கொண்டது. ஃபாரெஸ்ட் தன் பால்ய காலத் தோழியான ஜென்னியை தன் ஆயுளின் எல்லை வரை காதலிக்கிறான். ஃபாரெஸ்ட் அமெரிக்காவின் பழமைவாதச் சிந்தனையை தனக்குத் தெரியாமலேயே பின்பற்றுபவன். பழமைவாத வம்சப் பின்னணி, வியட்நாம் போரில் பங்கேற்றது, பிளாக் பேந்தர் கட்சியைச் சேர்ந்த தனது காதலனால் ஜென்னி தாக்கப்படும் போது அவளுடைய காதலனைத் தாக்குவது, முதலாளித்துவத்தின் மூலமாக தன் ‘திறமையை’ லாபமாக மாற்றியது, இறுதிவரை அமெரிக்காவில் எதிர்க் கலாச்சாரப் போராட்டங்கள் எதிலும் பங்கேற்காதது/புரிந்துகொள்ளாதது என முழுவதுமாக அமெரிக்கப் பழமைவாதத்தின் சின்னமாக ‘ஃபாரெஸ்ட் கம்ப்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

அதே வேளையில், ஜென்னியின் தந்தை உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்; தன் மகள்களிடம் பாலியல் சீண்டல் செய்து சிறை சென்றவர். ஜென்னி அமெரிக்காவின் எதிர்க்கலாச்சாரங்களான ஹிப்பி இயக்கத்தில் பங்குகொள்கிறாள்; போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறாள்; போர் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்கிறாள். பிளாக் பேந்தர் அமைப்பினருடன் இணைந்து பணியாற்றுகிறாள். இறுதியில் சிங்கிள் மதராகத் தன் மகனை வளர்க்கிறாள். மீண்டும் ஃபாரெஸ்டைச் சந்தித்த பிறகு, மகன் குறித்தும், தனக்கு வந்திருக்கும் நோய் குறித்தும் கூறுகிறாள்; மரணமடைகிறாள். இதன் மூலமாக, அமெரிக்காவின் பழமைவாதக் கலாச்சாரத்தைப் பின்பற்றிய ஃபாரெஸ்ட் – எதிர்க் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக ஜென்னி என இருவரும் சித்தரிக்கப்பட்டு, ஃபாரெஸ்ட் உயர்ந்த எண்ணம் கொண்டவனாகக் காட்டப்படுகிறான்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

‘லால் சிங் சத்தா’ சீக்கியப் போர் வீரர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவன். இதிலும், காதலை மையப்புள்ளியாகக் கொண்ட கதையில், லாலின் பால்ய காலத் தோழி ரூபா காதலியாகவும் இருக்கிறாள். சீக்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் மத அடையாளத்தைத் துறப்பது, கார்கில் போரில் தேசம், மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவது, மத அடிப்படையிலான மோதல்களை ‘மலேரியா’ எனவும், மதம் காரணமாகவே ‘மலேரியா’ பரவுவதாகவும் கூறுவது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை மாற்றத்திற்குப் பிறகு முதலாளித்துவத்தால் முன்னேறுவது என லால் இந்தியாவின் சீக்கியச் சமூகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முகமாகக் காட்டப்படுகிறான்.

அதே வேளையில், ரூபா இந்தியாவில் உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு எளிதில் பணம் சம்பாதிக்க மாடலிங் துறையில் களமிறங்குவது, நிர்வாணப் புகைப்படம் காரணமாக பெரும் சர்ச்சைகளில் சிக்குவது, பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை பணத்திற்காகத் திருமணம் செய்துகொள்வது, தாவூத் இப்ராஹிம் போன்ற டான்களைச் சந்திப்பது, கொலை வழக்கில் சிக்கிக்கொள்வது என இந்தியாவில் உலகமயமாக்கலின் காரணமாக ‘தடம்புரண்ட’ பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ரூபா கதாபாத்திரம்.

Forrest Gump (1994) & Laal Singh Chaddha (2022)

ஃபாரெஸ்ட் கம்ப் ஒடுக்குமுறையைத் தன்னைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளும் போதும், ‘காரணமே இல்லாமல் இவ்வாறு செய்கிறார்கள்’ என்று கூறும்போதும் வளைந்துகொள்ளும் வரலாறு, இந்தியாவின் சீக்கியனான லால் சிங் சத்தா சொல்லும்போது அவன் மத அடையாளத்தைக் காவு கேட்கிறது.

‘ஃபாரெஸ்ட் கம்ப் பார்த்த பிறகு, இந்த உலகை வேறு கண்களால் நீங்கள் பார்க்கலாம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஃபாரெஸ்ட் கம்ப் தன்னைச் சுற்றி நிகழும் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்படாத, ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் சமூகத்தின் பிரதிநிதி. அவனுக்குக் கண்ணை மூடிக்கொள்ளும் சலுகை உண்டு. லால் சிங் சத்தாக்களுக்கு அத்தகைய சலுகைகள் கிடையாது. இதனாலேயே ‘லால் சிங் சத்தா’ ஒப்பீட்டளவில் சிறப்பானதாக மாறுகிறது; ஆரத்தழுவிக் கொள்ளத் தோன்றுகிறது.

  • ர முகமது இல்யாஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.