அமீர் கான் நடிப்பில் வெளிவந்துள்ள லால் சிங் சத்தா திரைப்படத்தைப் பார்ப்பதற்காக ஒரு பத்திரிகையாள நண்பருடன் திரையரங்கு சென்றேன். டிக்கெட்டை வாங்கப்போகும்போதுதான் தெரிந்தது அந்தப் படம் இந்தியில் திரையிடப்படுகிறது என்பது. நாங்கள் சென்றது மாலைக் காட்சி. காலையில்தான் அது தமிழில் ஓடுவதாகச் சொன்னார்கள். புரியாத மொழியில் எப்படி படத்தைப் பார்ப்பது?! தமிழில் வேறென்ன படம் இருக்கிறது என்றோம். சீதா ராமம் படத்தைப் பரிந்துரைத்தார்கள். சரி என்று அதற்கான டிக்கெட்டைப் பெற்றோம்.
திரைப்படம் தொடங்கிய முதல் நொடியிலிருந்து பயங்கரவாதம், பாகிஸ்தான், கஷ்மீர், அல்லாஹு அக்பர், அஸ்ஸலாமு அலைக்கும் என்றே கதை நகர்ந்தது. கஷ்மீர் ஃபைல்ஸ் படம் கண்முன் வந்துபோனது. காட்சிகள்தோறும் இஸ்லாமிய வெறுப்பு விஷம் தோய்ந்திருந்தது. படம் என்ன இப்படியிருக்கிறது என்ற தொனியில் நானும் நண்பரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.
இந்தியாவையும் இந்துக்களையும் வெறுக்கும் கதாபாத்திரமான அஃப்ரீன் (ராஷ்மிகா) முன்னாள் ராணுவ வீரரான தன் தாத்தாவைக் காண லண்டனில் இருந்து பாகிஸ்தான் வருகிறார். அப்போது அவர் இறந்துபோய்விட்டதாகவும், அஃப்ரீனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து சீதா மஹாலஷ்மியிடம் இதைச் சேர்த்துவிடும்படி தாத்தா சொல்லிச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. சீதாவைத் தேடி இந்தியாவுக்கு வரும் அவருக்கு சீதா ராமைக் காதலித்தது தெரிய வரவே அவரைத் தேடிச் செல்கிறார். அதைத் தொடர்ந்து, ராம் யார், சீதா யார், இந்தக் கடிதத்துக்கும் தனக்கும் என்ன தொடர்பு போன்ற மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வதே இந்தப் படத்தின் கதையாக விரிகிறது.
கதாநாயகனான ராம் (துல்கர் சல்மான்) ஒரு ராணுவ வீரன். தொடக்க காட்சிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகளும், அந்நாட்டு ராணுவமும் இணைந்து கஷ்மீரில் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிட சதி செய்கிறார்கள். கஷ்மீரைத் தன்வயப்படுத்துவது அவர்களின் நோக்கம். சில சிறுவர்களைத் தயார்செய்து கஷ்மீருக்கு அனுப்பி, மக்களோடு மக்களாகக் கலந்திருக்கும்படி சொல்கிறார்கள். பிறகு அதுகுறித்த தகவலை இந்திய ராணுவத்துக்குக் கசியவிட்டு அந்தச் சிறுவர்களைக் கொல்ல வைக்கிறார்கள்.
அப்பாவிச் சிறுவர்களை இந்திய ராணுவம் கொன்றுவிட்டதாக செய்திப் பத்திரிகைகளில் பரவியதைத் தொடர்ந்து, கஷ்மீர் இந்துக்களை முஸ்லிம்கள் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். இந்த பாகிஸ்தான் சதியைப் புரிந்துகொண்ட கதாநாயகன் ஒருவழியாக அதை முறியடிக்கிறார்.
அதுகுறித்துப் பேட்டி காண வந்த பத்திரிகையாளரிடம் (ரோஹினி) தன்னை அநாதை என்று ராம் கூறுகிறார். மறுநாள் அந்தப் பத்திரிகையாளர் வானொலியில் ராமைப் பற்றி சொல்லி, அவர் அநாதையல்ல அவருக்கு அம்மா நான் இருக்கிறேன் என்கிறார். இதேபோல அவருக்குக் கடிதம் வழியாகத் தன் அன்பை வெளிப்படுத்தும்படியும் கோருகிறார். பிறகு நாடெங்கிலும் இருந்து ராமுக்குக் கடிதங்கள் மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறவுமுறையைச் சொல்லி எழுதுகிறார்கள். ராம் உற்சாகமாக எல்லோரது கடிதங்களையும் படித்து, அனைத்துக்கும் பதில் எழுதுகிறார்.
“இதுவெல்லாம் உங்களுக்கே ஓவராக இல்லையா?!” என்று கேட்கத் தோன்றியது.
தன்னை மனைவி என்று அறிமுகப்படுத்தி சீதா மஹாலஷ்மி ராமுக்குத் தொடர்ச்சியாக மொட்டைக் கடுதாசிகள் எழுதுகிறார். அவர் மீது நாயகனுக்குள் தீவிரமான காதல் மலர்கிறது. இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் இன்னும் முற்றுகிறது. ஒருகட்டத்தில் சீதா ஒரு இளவரசி என்பதும், அவரின் உண்மையான பெயர் நூர் ஜஹான் என்பதும் பார்வையாளர்களான நமக்குத் தெரிய வரும். இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதெல்லாம் படத்தின் மீதிக் கதையில்.
சீதா ராமம் போலவே பல திரைப்படங்களில் இந்துக் கதாநாயகன், முஸ்லிம் கதாநாயகி இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதை அப்படியே தலைகீழாக, முஸ்லிம் நாயகன், இந்து நாயகி என வைத்து ஏன் படம் எடுப்பதில்லை? அதிலுள்ள அரசியல்தான் என்ன?
ஒருவேளை அப்படி யாராவது எடுத்தால் லவ் ஜிஹாது படம் என்று சொல்லி அரசாங்கம் அதைத் தடை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
சீதா ராமம் திரைப்படத்தில் பல காட்சிகளில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாக இடம்பெறுகிறது. அதை நைச்சியமாக முன்வைப்பதற்கெல்லாம் படக்குழுவினர் மெனக்கெடவே இல்லை. மிக வெளிப்படையாகவே முஸ்லிம் எதிரியைக் கட்டமைத்திருக்கிறார்கள். அதுபோல, தெலுங்குப் படத்துக்கே உரிய க்ரிஞ்சு அம்சங்கள் திரைப்படம் நெடுக இடம்பெறுகின்றன. ஆனால் யூடியூபில் பட விமர்சனம் தரும் பிரஷாந்த், ப்ளூ சட்டை போன்ற பலர் இதை ஆஹா, ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். காதல் காவியம், திரை ஓவியம் என்ற ரேஞ்சுக்கு இதைப் பாராட்டியிருக்கிறார்கள்.
ஆரம்பக் காட்சி ஒன்றில் பாகிஸ்தானியரான அஃப்ரீன் இந்தியக் கொடி இருக்கும் நான்கு சக்கர வாகனத்தை எரிக்கிறார். அவர் இந்தியா மீதும், இந்துக்கள் மீதும் கொண்டுள்ள கண்மூடித்தனமான துவேஷம் அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்படுகின்றன. அந்த அஃப்ரீன் குழந்தையாக இருந்தபோது அவர் உயிரைக் காப்பாற்றிய மீட்பர் ராம் என்பது கடைசியில் தெரியவருகிறது.
எரியும் வீட்டில் சிக்கிக்கொண்ட அஃப்ரீனை நாயகன் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் அந்த சாகசக் காட்சி கடும் அயற்சியைத் தருவதாக இருந்தது. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் இப்படி எம்ஜிஆர் காலத்துத் திரைப்படங்கள் போலத்தான் இருக்கின்றன.
மற்றொரு காட்சியில், தீவிரவாதிகள் என்று நினைத்து சில கஷ்மீரிகளை இந்திய ராணுவம் கொல்ல முனையும்போது கதாநாயகன் ராம் அவர்களைக் காப்பாற்றுகிறார். அதற்காக அவர்கள் ராமுக்கு உணவெல்லாம் அளித்து அன்பைப் பரிமாறுகிறார்கள். ஆனால் ராம் காப்பாற்றிய அதே கஷ்மீரிகள்தாம் இந்துக்களுக்கு எதிரான கலவரத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். முஸ்லிம் அச்சத்தை அனைவரிடமும் விதைக்கும் வகையில் இந்தக் காட்சி இருந்தது.
ஓரிடத்தில் இந்தியத் தூதரக அதிகாரி இன்ஷா அல்லாஹ் சொல்ல, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஜெய் ஸ்ரீராம் என்கிறார். இருவரும் ஆரத்தழுவிக் கொள்கிறார்கள். ஆஹா என்னவொரு மத நல்லிணக்கம் என்று இதைச் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்த்திருப்பார் போலும். இப்படித்தான் இரண்டே முக்கால் மணி நேரம் வளவளவென்று ஓடியது படம்.
1960கள், 1980கள் என மாறிமாறி திரைக்கதை நகர்கிறது. அதற்குத் தேவையான கலை வேலைப்பாடுகள், கேமரா போன்றவற்றில் படக்குழுவினர் அசத்தியிருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தங்கக் கோப்பையில் விஷத்தைக் கொடுத்தால் குடிக்க முடியுமா என்ன! இந்து தேசியவாதத்துக்கும் ராமர் அரசியலுக்கும் வலுச்சேர்க்கும் திரைப்படம் சீதா ராமம்.