தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் என்றைக்குமே தங்களது முதலாளிகளின் விருப்பத்தின்பேரில்தான் செயல்படுகின்றன. அவை ஒரு நாளும் நடுநிலைமையோடு செயல்பட்டதில்லை. இதுநாள்வரை நாம் கூறியபோதெல்லாம் ஏற்காதவர்களுக்கு இந்த உண்மையை ஆம் ஆத்மி கட்சியினர் தமது பிரச்சாரத்தின் மூலம் விளக்கி வருகின்றனர்.
சி.என்.என்.– ஐ.பி.என். ஆங்கிலத் தொலைக்காட்சியில் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில், கோதாவரி எண்ணெய் வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவின் விலையை அம்பானிக்கு உயர்த்திக் கொடுத்திருக்கும் காங்கிரசு அரசின் முடிவை நியாயப்படுத்திப் பேசினார் ஒரு வல்லுநர். அந்த விவாதத்தில் பங்கேற்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மேற்படி வல்லுநருக்குப் படியளப்பவர் முகேஷ் அம்பானி என்ற உண்மையை அம்பலப்படுத்தி னார். “உங்கள் தொலைக்காட்சியே அம்பானிக்குச் சோந்தமானதுதானே, பிறகு உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்” என்று பிரசாந்த் பூஷண் கூற, அதுவரை நடுநிலையாகப் பேசுவது போல பாவ்லா காட்டி வந்த பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பர், ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் பாணியில் கூச்சல் போட்டு பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல் தடுக்க வேண்டியதாயிற்று.
அதேபோல சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கும் பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேத்தான், “எனக்கு பத்திரிகைத் துறையைப் பற்றித் தெரியாதா? உங்கள் தொலைக்காட்சி நடுநிலையாக நடந்து கொள்ளும் என்று என்று என்னை எப்படி நம்பச் சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
“தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் தங்களை இருட்டடிப்பு செய்கின்றன, மோடியை பிரதமராக்கத் திட்டமிட்டு விளம்பரப்படுத்துகின்றன” என்று குற்றஞ் சாட்டித் தான் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போது ஊடகங்களைத் தோலுரித்து வருகின்றனர். தனியார்மயத்தின் ஆதரவாளரான கேஜ்ரிவால், தேர்தல் பிரச்சார உத்தியாகத்தான் இதனைச் செய்கிறார் என்ற போதிலும், ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஊடகங்களால் முடியவில்லை. “உங்களை இருட்டடிப்பு செய்வதாகக் கூறுகிறீர்களே, நாங்கள் உங்களைப் பிரபலப்படுத்தாவிட்டால், நீங்கள் இன்றைக்கு ஆளாகியிருக்க முடியுமா? உங்களைப் புகழ்ந்தால் இனிக்கிறது, விமர்சனம் செய்தால் வலிக்கிறதா” என்று எதிர்க்கேள்வி எழுப்புகின்றன ஊடகங்கள். ஊடகங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
அன்னா ஹசாரேயும், அர்விந்த் கேஜ்ரிவாலும் அவர்களது ஊழல் ஒழிப்பு இயக்கமும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களால்தான் திட்டமிட்டே ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டன. வேறு செய்தியே கிடையாது என்பது போலவும், இதைத்தவிர நாட்டில் வேறு மக்கள் போராட்டங்களே நடக்கவில்லை என்பது போலவும் அன்று ஊடகங்களால் நடத்தப்பட்ட இந்த ஆபாசக் கூத்துதான் இன்று அரவிந்த் கேஜ்ரிவால் பிரபலமாவதற்குக் காரணமாக அமைந்தது என்பது மறுக்கவியலாத உண்மை.
அரவிந்த் கேஜ்ரிவாலையும் அன்னா ஹசாரேவையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் அன்று விளம்பரப்படுத்தியதற்கு ஒரு நோக்கம் இருந்தது.
அன்று மத்திய இந்தியா முழுவதும் ஒரு அறிவிக்கப்படாத போரை இந்திய அரசு நடத்தி வந்த காலகட்டமாகும். கார்ப்பரேட் முதலாளிகளின் கனிமவளக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கத்தான் மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதலை அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது பரவலாக அம்பலமாகியிருந்தது.
அதேசமயம், காமன்வெல்த் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் எனத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஊழல்களும் அம்பலமானதுடன், இந்த ஊழல்களில் கார்ப்பரேட் முதலாளிகளின் பாத்திரத்தை நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் அம்பலமாக்கின.
இந்தச் சூழலில்தான் குறிப்பான எந்த ஊழலைப் பற்றியோ, அதில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் பற்றியோ பேசாமல், தனியார்மயக் கொள்கைக்கும் ஊழலுக்கும் இடையிலான நேரடி உறவு பற்றியும் பேசாமல் பொதுவாக ஊழல் எதிர்ப்பு பேசிய அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு நாடகம், மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக கார்ப்பரேட் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டது. அதிகார வர்க்க ஊழலால் அன்றாடம் பாதிக்கப்படும் ஆம் ஆத்மியையும் (எளிய மனிதனையும்) ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளி வர்க்கத்தையும் ஒரே தரப்பாக நிறுத்தி, இருவருமே ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கி, ஊழலை வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாக காட்டிய இந்தத் தந்திரம் கேஜ்ரிவாலின் சொந்த சரக்கு அல்ல; உலக வங்கி தந்த சரக்கு.
பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகளால் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவது, காடுகள், நிலங்கள் பறிக்கப்படுவது மற்றும் விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிக்கப்பட்டு விட்டால் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் மக்களுக்குச் சொர்க்கத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற பிரமையை சிவில் சொசைட்டி அமைப்புகள் என்றழைக்கப்படும் ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உலக வங்கி பரப்பி வந்தது. களத்தில் இறக்கப்பட்ட பல தன்னார்வக் குழுவினரில் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஒருவர். இதன் காரணமாகத்தான் அன்னாவின் ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பேராதரவு வழங்கி, தனது ஊடகங்கள் மூலம் அதனை ஊதி ஊதிப் பெரிதாக்கி காட்டியது. அன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கேஜ்ரிவாலை விளம்பரப்படுத்தியதற்கான காரணம் இதுதான்.
வெறும் ஊழல் ஒழிப்பு முழக்கம் ஓட்டுக்களைப் பெற்றுத்தராது என்று புரிந்திருந்த கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய பின், மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு டெல்லியின் மின் கட்டண உயர்வையும், தண்ணீர் கட்டணத்தையும் எதிர்த்த நடவடிக்கைகளில் இறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராகத் தெருவிலிறங்கினார். கேஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தேர்தல் அரசியலில் செல்வாக்கு பெறுவதுதான் என்ற போதிலும், இத்தகைய ‘வரம்பு மீறிய’ நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள ஆளும் வர்க்கங்கள் தயாராக இல்லை என்பதால் கேஜ்ரிவாலை அராஜகவாதி என்று சித்தரிக்கத் தொடங்கின ஊடகங்கள்.
ஊழல் ஒழிப்பு, சிறந்த அரசாளுமை என்பது உலக வங்கியின் முழக்கம்தான் என்ற போதிலும், ஊழல் ஒழிப்பு நாடகத்துக்கு கேஜ்ரிவாலைப் பயன்படுத்திக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், சிறந்த அரசாளுமைக்கு மோடியை ஒருமனதாகத் தெரிவு செய்து வைத்திருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஊடகங்கள் தங்களது முதலாளிகளின் விருப்பத்தை மென்மேலும் பிரதிபலிக்க ஆரம்பித்தன. மோடிக்கெதிரான செய்திகளை எழுதக் கூடாது என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பத்திரிகைகளும் தங்களது செய்தியாளர்களுக்கு வாய்மொழி உத்தரவே போட்டன. இதனை மீறிய மூத்த பத்திரிக்கையாளர்கள் பலர், தயவு தாட்சண்யமின்றித் துரத்தியடிக்கப்பட்டனர்.
‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார்த் வரதராஜன், அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஊர்ஊராகச் சென்று மோடி நடத்திரும் ‘ஆவி எழுப்புதல் கூட்டங்கள்’ குறித்த செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட மறுத்தது, சுப்பிரமணிய சாமியின் அறிக்கைகளைப் பிரசுரிக்க மறுத்தது, முகேஷ் அம்பானி குறித்த ஒரு அம்பலப்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டிருந்தது என்பன போன்ற காரணங்களுக்காக அவர் பதவி பறிக்கப்பட்டது. அதேபோல மோடியை அம்பலப்படுத்திச் செய்திகளை வெளியிட்ட’ ஓபன் மேகசின்’ பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியரான அர்தோஷ் சிங் பால், பத்திரிகையின் உரிமையாளர்களான கோயங்கா குழுமத்தினரால் நீக்கப்பட்டிருக்கிறார்.
மோடியை அம்பலப்படுத்திப் பேசுவதைக் கைவிடவேண்டும் என சி.என்.என். – ஐ.பி.என். தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சகாரிகா கோஷுக்கும், அதே நிறுவனத்தின் மராத்திய சேனலின் ஆசிரியரான நிகில் வாக்லேவுக்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அவ்வளவு தூரம் போவானேன், மோடியை எதிர்மறையாக சித்தரித்த காரணத்துக்காக, வீரபாண்டியன் நடத்திவந்த “நேருக்கு நேர்” நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது சன் தொலைகாட்சி.
மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தற்போது இந்திய ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் கருத்து. பொதுச்சொத்துகளையும் இயற்கை வளங்களையும் சூறையாடும் தங்களது வெறிக்கும் தாராளமயக் கொள்கைகளைத் திணிக்கும் அவசரத்துக்கும் பொருத்தமான ஒரு பாசிஸ்ட் என்ற முறையில் அவர்கள் மோடியை முன்தள்ளுகிறார்கள். ‘திறமைசாலி’ என்று சொல்லி பத்தாண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்கை மார்க்கெட்டிங் செய்த அதே உத்திதான்.
கார்ப்பரேட்டும் பாசிஸ்ட்டும் இணைந்த இந்தக் கூட்டணி நடுநிலை முகச்சாயங்களைக் களைந்து விட்டு, தங்கள் நோக்கத்துக்கு ஒத்து வராத பத்திரிகையாளரை உடனே வெளியேற்றி விடுகிறது. இந்திய ஊடகத்துறையைப் பொருத்தவரை, அதனைக் கட்டுப்படுத்தும் தரகு முதலாளிகளில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் 30-க்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சி.என்.என். – ஐ.பி.என்., சி.என்.பி.சி., டிவி18 மற்றும் ஐ.பி.என். 7 உள்ளிட்ட மிகப் பிரபலமான 17 செய்தி ஊடகங்களும் அடக்கம்.
2008-ம் ஆண்டில் ஒ.எஸ். ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தபோது தெலுங்கு தேச கட்சியின் தீவிர ஆதரவாளரான ராமோஜி ராவுக்குச் சொந்தமான ஈநாடு(ஈ.டி.வி.) தொலைக்காட்சியில் சுமார் 2600 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி முதலீடு செய்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநில மொழிகளில் ஒளிபரப்பாகும் 12 ஈ.டிவி அலைவரிசைகளை ரிலையன்ஸ் இந்தியா நிறுவனம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தத் துவங்கியது.
பின்னர் 2012-ம் ஆண்டில் ராகவ் பாலின் நெட்வொர்க் 18 நிறுவனத்தில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ததன் மூலம் இரண்டு டஜன் முன்னணி ஆங்கில, இந்தித் தொலைக்காட்சி நிலையங்களை, அம்பானி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முகேஷ் அம்பானி உதவுவதாக வாக்களித்திருந்த விசயம் நீரா ராடியாவின் தொலைபேசிப் பதிவுகளின் மூலம் அம்பலமானது.
நிதி நிறுவன வலைப்பின்னல்கள் மூலம் அடையாளம் தெரியாத முறையில் முதலீடு செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால், அம்பானி போன்ற தரகு முதலாளிகளோ, பன்னாட்டு நிறுவனங்களோ எந்தெந்த ஊடகங்களில் எத்தனை பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை யாருக்கும் தெரிவதில்லை. எடுத்துக்காட்டாக, தெகல்கா வார இதழின் முதலீட்டாளர்களில் இரண்டு நிறுவனங்களைத் தவிர, மீதமுள்ள 4 முதலீட்டாளர்கள் யார் என்றே தெரியவில்லை. 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளை 13,189 ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கின்றனர். முன்னர் குஜராத் இனப்படுகொலை குறித்த புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட தெகல்காவிடம், ஒரு பெண்ணை உளவு பார்ப்பதற்கு மோடி தனது உளவுத்துறை அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்த தொலைபேசிப் பதிவுகள் தரப்பட்ட பின்னரும், அது அவற்றை வெளியிடவில்லை. பின்னர் கோப்ரா போஸ்ட் என்ற இணையப் பத்திரிகை மூலம்தான் மோடியின் அந்த முறைகேடு அம்பலமானது.
மோடி எதிர்ப்பாளராக அறியப்பட்ட ஒரு பத்திரிகையிலேயே இத்தகைய திரைமறைவு வேலைகள் நடக்குமென்றால், மற்ற பத்திரிகைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மோடியின் உளவுத்துறை பெண்ணைத் துரத்திய இந்த விவகாரம் குறித்தோ, குஜராத் வளர்ச்சி என்ற பித்தலாட்டம் குறித்தோ, மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்தோ, ஊடகங்கள் எதுவும் ஒரு வார்த்தை பேசாமல் மவுனம் சாதிப்பதன் மூலம் மோடி அலையை திட்டமிட்டே உருவாக்குகின்றனர்.
சுரங்கம், மின் நிலையங்கள், ஐ.டி. துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த முதலாளிகள், பல்வேறு ஊடகங்களிலும் பங்குகளை வாங்கிப் போட்டு வைத்துக் கொள்வதன் மூலம், தங்கள் முறைகேடுகள் – கொள்ளைகள் குறித்த செய்திகளே வெளிவராமல் தடுத்து விடுகின்றனர். கெயில் குழாய் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு தொடங்கி தனியார் கல்விக் கொள்ளைக்கெதிரான போராட்டங்கள் வரையிலானவை இப்படித்தான் இருட்டடிப்பு செயப்படுகின்றன.
இது மட்டுமின்றி, கனிமவளக் கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்வேறு ஊடகங்களுக்கும் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வழங்கி ‘பிரைவேட் டிரீட்டி’ என்றழைக்கப்படும் தனிப்பட்ட ஒப்பந்தங்களைப் போட்டுக் கொள்கின்றனர். தங்களுக்கு எதிரான செய்திகள் வெளிவராமல் தடுப்பது மட்டுமின்றி, இந்த ஊடகப் பங்குதாரர்கள் மூலம் பொய் – புனைசுருட்டுகளைப் பரப்பி, பங்குச்சந்தையில் தமது பங்குகளின் மதிப்பை இவர்கள் உயர்த்திக் கொள்கின்றனர் என்பது செபி அமைப்பாலேயே நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு.
வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்களுக்கு மக்களிடம் மதிப்பிருக்காது என்பதால், ஊடகங்களுக்குப் பணத்தைக் கொடுத்து, வெளியிட வேண்டிய செய்தியையும் எழுதிக் கொடுத்து, அவற்றை செய்தி போல வெளியிட வைக்கும் ‘பெய்டு நியூஸ்’ என்ற மோசடியினை 2009-ல் சாநாத் அம்பலமாக்கினார். அதன் பின்னர் பிரஸ் கவுன்சில் நடத்திய விசாரணையில் பிரபல ஊடகங்கள் அனைத்தும் சிக்கின. ஆனால், குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட பிரஸ் கவுன்சில் இந்தக் கணம் வரை மறுத்து வருகிறது. இது மட்டுமல்ல, இனி காசு வாங்கிக் கொண்டு செய்தி போடமாட்டோம் என்று ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தருவதற்குக்கூட பெரும்பான்மையான பத்திரிகை முதலாளிகள் தயாராக இல்லை என்று சமீபத்தில் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் (சி.என்.என். – ஐ.பி.என்.) .
தூர்தர்சன் தொலைக்காட்சியை ஆளும் கட்சிகள் தமது பிரச்சார சாதனமாக மாற்றிக் கொள்ளும் நிலையைத் தாராளமயக் கொள்கை மாற்றிவிடும் என்றும், தனியார் தொலைக்காட்சிகளிடையேயான போட்டி கருத்துலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடும் என்று கூறினார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். பிறகு சன், ஜெயா போன்ற தொலைக்காட்சிகள் கட்சி சார்பானவை என்றும் மற்ற தொலைக்காட்சிகள்தான் நடுநிலையாளர்கள் என்றும் பசப்பினார்கள்.
கட்சித் தொலைக்காட்சிகளின் பக்கச்சார்பு மக்கள் அனைவருக்கும் தெரியும். நடுநிலையாளர்கள் என்று தமக்குத்தாமே பெயர் சூட்டிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகையினர்தான் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் ஆளும் வர்க்க கருத்துகளைப் பிரதிபலிப்பதில் கண்டிப்பான கற்பு நெறியாளர்களாக இருப்பதுடன், தங்கள் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லுக்கும், தங்கள் வர்க்கத்தினரிடமிருந்தே ரேட்டு பேசி காசு வசூலிக்கும் விலை மாந்தர்களாகவும் இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்காவது தூணின் யோக்கியதை இதுதான்.
– கதிர்
(நன்றி: வினவு)