கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்

மோடியின் நவதாராளவாத இந்துத்துவ அரசு நாட்டையே வாரிச் சுருட்டி பெருநிறுவன முதலாளிகளிடமும் பன்னாட்டு மூலதனத்திடமும் அடகு வைக்கும் வேலையை போர்க்கால அவசரத்தில் செய்து கொண்டிருக்கிறது. மக்கள் நிதானித்து எழுவதற்கு சிறு வாய்ப்பும் அளிக்காமல் சரமாரியாக அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்து நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

கருப்புப் பண ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் போன்ற மோசடியான முழக்கங்களின் கீழ் சாமான்ய மக்களின் எளிய சேமிப்புகளைக் கூட விடாமல் உறிஞ்சி, அம்பானி-அதானி-டாடா-பிர்லா-ஜிந்தால் போன்ற பகாசுரக் கொள்ளைக் கும்பலின் பாதங்களில் சமர்ப்பிக்கும் வெட்கங்கெட்ட தரகு வேலையை மிகுந்த திமிர்த்தனத்துடன் செய்து வருகிறது இவ்வரசு. மோடியின் கார்பரேட் நேச, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டு மக்கள் கிளர்ந்து எழுவதற்கான எல்லா நியாயங்களும் கூடிவந்துள்ள நிலையில், மோடியை பின்னாலிருந்து இயக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது வழமையான வெறுப்பு அரசியலையும் வேகம் தணியாமல் முன்னெடுத்துச் செல்கின்றது. மக்களின் கோபத்தை மடைமாற்றுவதற்காகவும், அவர்கள் தமக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகும்படி செய்வதற்காகவும்.

மக்களைச் சுரண்டிக் கொழுப்பது + அதை ஊழ்வினைப் பயன் என்று ஏற்கப் பழக்குவது + கற்பனை எதிரியை உருவகித்துக் காட்டி சொந்த கிரிமினல் முகத்தை மறைப்பது.

ஆரம்பம் முதலே அவர்களுக்குத் தவறாமல் பலன் ஈட்டிக் கொடுக்கும் வெற்றி ஃபார்முலா இதுதான்.

அக்ஷய முகுலும் அவரின் நூலும்

சரி, அவர்கள்தான் பொய்யையும் புரட்டையும் பரப்பி மக்களை பிரித்தாள முயல்கிறார்கள்; உண்மையான பிரச்சினைகளை விட்டு கவனத்தை திசைதிருப்புகிறார்கள் என்றால், மக்கள் ஏன் அதற்கு காது கொடுக்க வேண்டும்? புழுகு மூட்டைகளுடன் வரும் அவர்களின் முகத்திரையைக் கிழித்து, பிடரியில் அடித்து விரட்டாமல், அவர்களின் பிரச்சார பித்தலாட்டங்களுக்கு பலியாகும் நிலைக்கு பெருந்திரள் மக்கள் எப்படி வந்து சேர்கிறார்கள்?

இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி, நாம் அறிமுகம் செய்யவரும் நூலில் இருக்கிறது. ‘கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்’ என்ற முக்கியமான நூலை எழுதியுள்ள அக்ஷய முகுல் ஒரு பத்திரிக்கையாளர். பத்திரிக்கைத் துறையில் சிறப்பான பங்களிப்புகளுக்கென ஆண்டுதோறும் வழங்கப்படும் புகழ்பெற்ற ‘ராம்நாத் கோயங்கா விருது’க்கு இவ்வாண்டு அக்ஷய முகிலின் நூலும் தெரிவாகியிருந்தது. இம்மாதம் இரண்டாம் தேதி (2016-11-02) வழங்கப்படவிருந்த அந்த விருதினை மோடியின் கரங்களிலிருந்து தம்மால் பெறமுடியாது என்று மறுத்துவிட்டார் முகுல். “மோடியுடன் ஒரே ஃபிரேமில் நிற்பது பற்றிய நினைவுடன் என்னால் வாழ முடியாது” என்று கூறி மோடியின் முகத்தில் அடர்த்தியான கரியைப் பூசியிருக்கிறார்.

அக்ஷய முகுல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘கீதா பிரஸ்’ பதிப்பகத்தின் வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஆர்.எஸ்.எஸ்ஸின் வயது. உத்தர பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் எனும் ஊரில் 1923-ம் ஆண்டு கீதா பிரஸ் துவங்கப்பட்டது. இதற்குப் பின்னாலிருந்த இரு மூளைகளும் – ஜெயதயால் கோயந்த்கா, ஹனுமன் பிரசாத் போதார் எனும்- இரு மார்வாடி வணிகர்களுடையது. மேற்கத்திய நாகரித்தின் தாக்கத்தால் மார்வாடி-அகர்வால் சமுதாயம் ‘சீரழிந்து’ கொண்டிருப்பதை தடுக்கும் நோக்கத்திலும், சனாதன தர்மத்தையும் அதன் அறவிழுமியங்களையும் மீண்டும் வலுப்பெறச் செய்யும் நோக்கத்திலும் பார்ப்பன இந்து மத புனிதப் பிரதிகளை பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டுப் பரப்புவதற்கான ஒரு மதப் பிரசுர நிறுவனமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1926-ல் ‘கல்யாண்’ என்ற பெயரில் ஒரு மாத இதழைத் துவங்கியது முதலாகவே அந்நிறுவனம் வலதுசாரி இந்துத்துவ அரசியல் நியாயங்களை பரந்துபட்ட ‘இந்துக்களிடம்’ எடுத்துச் செல்லும் வாகனம் என்றவொரு கூடுதல் பரிமாணத்தையும் தனக்கு வரித்துக் கொண்டது. இப்பணியை அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் மிக வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறது.

கீதா பிரஸ் இது வரை பிரசுரம் செய்து விற்றுள்ள சனாதன இந்துமத நூற்பிரதிகளின் எண்ணிக்கை அபாரமானது. அது தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ கணக்கின்படி பார்த்தால்,

பகவத் கீதை: 11.4 கோடி பிரதிகள்

ராம் சரித் மனாஸ், துளசி தாசரின் ஆக்கங்கள்: 9.2 கோடி பிரதிகள்

புராணங்கள், உபநிடதங்கள், ஏனைய பண்டைய புனிதப் பிரதிகள்: 2.2 கோடி பிரதிகள்

பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான குறுநூல்கள்: 10.5 கோடி பிரதிகள்

பக்தி கதைகள், பஜனைப் பாடல்கள்: 12.4 கோடி பிரதிகள்

ஏனையவை: 12.3 கோடி பிரதிகள்

என இதுவரை அது மொத்தம் 58 கோடி 25 இலட்சம் பிரதிகளை பிரசுரித்து ‘இந்து’ மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. அதன் பிரதான இயங்குபுலம் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்கள்தான். இந்தியிலும் சமஸ்கிருதத்திலும்தான் அது தனது பெரும்பாலான பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அதே சமயம் குஜராத்தி, தெலுங்கு, ஒரியா, ஆங்கிலம், வங்காளம், மராத்தி, தமிழ், கன்னடம், அஸ்ஸாமி, மலையாளம், நேப்பாளி, உருது, பஞ்சாபி போன்ற ஏனைய மொழிகளிலும் அது கணிசமான வெளியீடுகளை பதிப்பித்து மலிவு விலைகளில் விற்றிருக்கிறது. அது மட்டுமின்றி, இந்தி மொழியில் அது வெளியிடும் ‘கல்யாண்‘ இதழின் சந்தாதாரர்களது எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2 இலட்சம்; ‘கல்யாண-கல்பதரு‘ என்ற ஆங்கில இதழின் சந்தாதாரர்கள் 1 இலட்சம். இவை மட்டுமின்றி, இன்றுவரை பலமுறை மறுபிரசுரம் செய்யப்படும் சிறப்பிதழ்களையும் துவக்கம் முதலே ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ளது.

இவ்வளவையும் பிரசுரம் செய்பவர்கள் நான்கு வேதங்களை மட்டும் பிரசுரம் செய்வதில்லை; ஏன், தமது எழுத்துக்களில் நேரடியாக மேற்கோள் கூட காட்டுவதில்லை. காரணம் கேட்டால் நழுவுகிறார்கள். கீழ்நிலைச் சாதியினர் வேத சுலோகங்களை கேட்கத் துணிந்தால், அவர்களின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை ஊற்றுவதுதான் அதற்குரிய தண்டனை என்று இவர்களின் வர்ணாஸ்ரம ‘தர்மம்’ போதிக்கிறது. பிறகு எப்படி அதனைச் செய்வார்கள்?!

சரி, கீதா பிரஸ்ஸின் வெற்றிச் சரிதையையிட்டு நாம் துணுக்குற வேண்டுமா? அவர்கள் தங்கள் மதத்துக்குச் செய்யும் ‘ஆன்மீக’ சேவையை பார்த்து வயிற்றெரிச்சல் படுவதாகுமா இது? நிச்சயம் இல்லை. நாட்டை ‘இந்து இந்தியாவாக’ ஆக்கி, தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வரும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின் அச்சு அவதாரக் கதைதான் கீதா பிரஸ்ஸுடைய கதை. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்து மஹா சபை, விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், பா.ஜ.க., எனப் பலவண்ண முகமூடிகள் அணிந்து அணிவகுத்து வந்து இந்துத்துவ சக்திகள் செய்துவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள் அனைத்தையும் படித்த நடுத்தர ‘இந்து’ மக்களின் வீடுகள் வரை கொண்டு சேர்த்து, நாடு முழுக்க ஒரு ‘இந்து மனசாட்சியை’ வெற்றிகரமாக கட்டியெழுப்பியது பற்றிய கதை இந்நூலில் விரிகிறது.

‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை’ திருப்திபடுத்துவதற்கென்று அப்பாவிகளை தூக்கில் போட வேண்டுமென நீதிமன்றத் தீர்ப்புகள் எழுதப்படும் சூழலில், அந்த ‘மனசாட்சி’ கட்டமைக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்வது நமக்குத் தொடர்பில்லாத விவகாரத்தில் மூக்கை நுழைப்பதாகி விடுமா?

அக்ஷய முகுல் தனது ஐந்தாண்டு உழைப்பு மற்றும் சளைக்காத ஆய்வின் தொடர்ச்சியாக எழுதியுள்ள இந்நூலில் கீதா பிரஸ்ஸின் கதையை விரிவாகவும், சுவாரஸ்யமாகவும் பதிவு செய்திருக்கிறார். எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையான பார்ப்பன-பனியாக் கூட்டம் பெருந்திரளான சூத்திர, அவர்ண மக்களை நயவஞ்சகமாக ‘இந்து’ எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடைத்து, போலியான பெரும்பான்மையை உருவாக்கி, முஸ்லிம்களை எதிரிகளாகக் காட்டி, ‘இந்து மனசாட்சி’ என்ற ஒன்றை செயற்கையாகக் கட்டியமைத்து, நாட்டின் மீதான தனது மேலாதிக்கத்தை எவ்வாறு சரிந்துவிடாமல் பாதுகாத்தும் வளர்த்தும் வந்திருக்கிறது எனும் வரலாற்றை, கீதா பிரஸ் எனும் சாளரத்தின் வழியாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் அக்ஷய முகுல். இதற்காக அவரைப் பாராட்டியாக வேண்டும்.

பக்தி இலக்கியங்களை அச்சிட்டுப் பரப்புவதற்கும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதற்கும் ஏன் வலிந்து முடிச்சுப் போடுகிறீர்கள் என்று கேட்பீர்கள் என்றால், நீங்கள் கண்டிப்பாக முகுலின் நூலை வாசிக்க வேண்டும்.

பிரிட்டிஷ் காலனியத்தின் கீழ் மார்வாடி பனியா சமுதாயம் வணிகத்தில் வெற்றிகரமாகத் திகழ்ந்தாலும் கூட சாதி அடுக்குமுறையிலும், சமூக அந்தஸ்திலும் போதிய அங்கீகாரம் பெற முடியாததையிட்டு வருந்தி வந்தது. பிறகு படிப்படியாக மேலேறி, ‘பார்ப்பனர்-ஷத்திரியர்’ என்றிருந்த உயர் அடுக்கினை ‘பார்ப்பனர்-வைசியர்’ என எப்படி மாற்றியமைத்தது என்பதை முகுல் நூலின் முன்னுரையில் தொட்டுக் காட்டுகிறார். சனாதன இந்து தர்மத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு மிகத் தாராளமாக செலவளிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தாம் விரும்பிய சமூக அந்தஸ்தை அது சம்பாதித்துக் கொண்டது பற்றிய சித்திரம் இதிலிருந்து தெளிவாகின்றது. இப்பின்னணியில் வைத்தே கீதா பிரஸ்ஸின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் நாம் பார்க்க வேண்டும். இன்று நாட்டை சூறையாடி வரும் ‘பார்ப்பன-கார்பரேட்’ நச்சுக் கூட்டணியின் வேர் எங்கிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான சூட்சுமம் இதிலிருக்கிறது.

ஜெயதயால் கோயந்த்கா

கீதா பிரஸ்ஸை நிறுவியது ஜெயதால் கோயந்த்கா என்ற மார்வாடி வணிகர். சிலகாலம் கழித்து ஹனுமன் பிரசாத் போதார் என்ற மற்றொரு மார்வாடி வணிகர் அவருடன் வந்து இணைகிறார். அவர் பிரம்மாண்டமானதொரு இந்துத்துவ வலையமைப்பையும், அச்சு சாம்ராஜ்யத்தையும் எப்படி உருவாக்கினார்? இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் அனைவரையும் மிகவும் நைச்சியமாக தனது சட்டகத்திற்குள் பொருத்தி, இந்து தேசியத்தின் நோக்கங்களை எவ்வாறு சாதித்துக் கொண்டார்? என்பதன் மீதே முகுலின் நூல் பெருமளவு கவனத்தை குவித்திருக்கிறது. கீதா பிரஸ்ஸின் செல்வாக்குப் புலத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஹனுமன் பிரசாத் போதாரை, அக்ஷய முகுல் ‘இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இந்து மிஷனரி’ என்று அடைமொழியிட்டு அழைப்பது ஏன் என்பது நூலை வாசித்து முடிக்கையில் துலக்கமாகி விடுகிறது.

பார்ப்பன பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டு, இன்று நாட்டில் கொழுந்து விட்டெரியும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ், ஹனுமன் போதார் ஆகியோரின் சுவடு வலுவாகப் பதிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்தி-இந்து-இந்துஸ்தான், வர்ணாஸ்ரம அமைப்பு, பசுப் பாதுகாப்பு, ராம ஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி, இந்தியாவில் முஸ்லிம்களின் அந்தஸ்து, கர் வாப்ஸி (தாய் மதம் திரும்பல்) என நாட்டின் பாதுகாப்பையும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் அச்சுறுத்தி வரும் எல்லாப் பிரச்சினைகளிலும் கீதா பிரஸ் ‘சங்கப் பரிவாரத்தின் காலாட்படை’யாகவே செயல்பட்டு வந்திருப்பதை, இதே பெயரில் அமைந்த ஒரு அத்தியாத்தில் நூலாசிரியர் மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

ஹனுமன் பிரசாத் போதார்

அயோத்தியிலுள்ள பாபரி பள்ளிவாசலினுள் 1949 டிசம்பர் மாதம் 22-ம் தேதி இரவில் திடுமென முளைத்த ராமர் சிலை விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி பத்திரிக்கையாளரும் ஆர்.எஸ்.எஸ்.காரருமான ராம் பகதூர் ராய், ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக் தன்னிடம் கூறியதாக ‘அதிர்ச்சியூட்டும்’ உண்மை ஒன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, அந்தச் சிலையை கள்ளத்தனமாக சுவரேறிக் குதித்து பள்ளிவாசலுக்குள் கொண்டு போய் வைப்பதற்கு முன்பாக சரயூ நதியில் அதனை புனித நீராட்டியிருக்கிறது நம்முடைய இந்து மஹா சபை கும்பல். அந்த புண்ணிய காரியத்துக்கு தலைமையேற்று நடத்திக் கொடுத்தது வேறு யாருமல்ல – கீதா பிரஸ்ஸின் உயர்திரு ஹனுமான் பிரசாத் போதார் அவர்கள்தான்.

சனாதன தர்மம் பேசும் இந்துத்துவ கும்பல் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் இக்கயமைத்தனத்தை அரங்கேற்றிவிட்டு, பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டுவது ‘ஒட்டுமொத்த இந்துக்களின் விருப்பம்’ என்று சகிக்க முடியாத சுரத்தில் பல்லவி பாடுகின்றது. அந்த இரவில் நடந்தது என்ன, அதன் பின்னணி என்ன என்பது பற்றி கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா எழுதியுள்ளவோர் நூல் இவர்களின் அழுகுணி ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. (‘அயோத்தி: இருண்ட இரவு, பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய வரலாறு’ (ஆங்.); தமிழில் இதனை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது). பாபரி பள்ளிவாசல் பிரச்சினை பற்றி கரிசனை கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.

திருட்டுத்தனத்தை செய்துவிட்டு அப்பாவி போல், ‘சுயம்புவாகத் தோன்றிய ராமர் சிலையை அகற்ற முனையக் கூடாது’ என்பதை வலியுறுத்தி நாட்டின் ‘பிரபலங்களுக்கு’ கடிதம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டார் நம் சனாதன ஒழுக்க சீலர், போதார். ‘அவ்வாறு அகற்றிவிடும் பட்சத்தில், முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ள கோயில்களை மீட்பது சாத்தியமில்லாமல் போய்விடும்’ என்ற பதைபதைப்பு வேறு அவருக்கு. இக்கயவர்கள் அன்று கொளுத்திப்போட்ட நெருப்பு, இன்றும் நாட்டை எரித்துப் பொசுக்கிக் கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியுமா? இந்த அழகில் ‘இந்துக்களுக்கு’ ஒழுக்கப் பாடம் எடுப்பதற்காக இவர்கள் பதிப்பகம் நடத்துகிறார்களாம்.

இவர்களின் லட்சணத்தை நாட்டு மக்களிடம் வீச்சான பிரச்சாரங்களின் மூலம் எடுத்துச் சென்று, இந்துத்துவ கிரிமினல்களின் முகத்திரையை கிழித்தெறியத் துணிவில்லாமல், ‘விட்டுக் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமே’ என்று புழுவென நெளிகிறார்கள் சில ‘அறிவுஜீவிகள்’. நியாயத்துக்காகப் போராடும்படி மத-மொழி-இன வேறுபாடின்றி பரந்துபட்ட அளவில் வெகுமக்களை அணிதிரட்டுவதில்தான் உண்மையான சமூக நல்லிணக்கம் பிறக்க முடியுமேயோழிய, சமூக விரோதிகளின் கால்களில் விழுந்து, விட்டுவிடச் சொல்லி கெஞ்சுவதால் அல்ல.

கீதா பிரஸ்ஸின் பின்னணி, தொடர்புகள், கூட்டாளிகள், ஆசிரியக் குழு நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் ஊடாக அக்ஷய முகுல் இந்த வரலாற்று ஆய்வு நூலை, இந்துத்துவ அரசியலில் பங்காற்றும் சமூக, கலாச்சார, பொருளாதார, தனிமனித சக்திகள் பற்றிய நுட்பமான ஆய்வு நூலாக உருவாக்கியிருக்கிறார். பனியா மூலதனத்தால் முட்டுக் கொடுக்கப்படும் பார்ப்பன மேலாதிக்க செயற்திட்டத்துக்கு துலக்கமானவொரு எடுத்துக்காட்டுதான் கீதா பிரஸ்ஸின் பிறப்பும் வளர்ச்சியும். இச்செயற்திட்டத்தில் டால்மியாக்கள், திவேதிகள், கோயங்காக்கள், குப்தாக்கள், பிர்லாக்கள், ஜெயின்கள், சதுர்வேதிகள், முகர்ஜிக்கள் என ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை எப்படி கனகச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள் என்பது படம்பிடித்துக் காட்டப்படுகிறது.

கல்யாண் மற்றும் கல்யாண-கல்பதரு இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதாத அன்றைய முக்கிய ஆளுமைகள் எவருமில்லை என்று சொல்லுமளவு மிகப் பிரம்மாண்டமானதொரு வலையமைப்பை போதார் கட்டியெழுப்பினார். காந்தி, மதன் மோகன் மாளவியா, எஸ். சத்தியமூர்த்தி, இராஜாஜி, எஸ். இராதாகிருஷ்ணன், பட்டாபி சீத்தாராமையா, சம்பூராணந்த், கைலாஷ்நாத் கட்ஜூ, புருஷோத்தம்தாஸ் தாக்கூர்தாஸ், ரபீந்திரநாத் தாகூர், எம்.எஸ். கோல்வால்கர், வீர் சாவர்க்கர், லால்பஹதூர் சாஸ்திரி, டாக்டர் ராஜேந்திரபிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, ஸ்வாமி கர்பத்ரி மஹராஜ், பிரபுதத் பட்டாச்சார்ஜி, அன்னிபெசன்ட், வினோபா பாவே, காகா கலேல்கர், ஷிதிமோகன் சென் என்று முடிவில்லாமல் நீளும் ஒரு பட்டியலையும் அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்புகள் பற்றிய அறிமுகத்தையும் தருவதற்காக ஐம்பதுக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட தனியொரு அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார் முகுல். காந்திக்கும் கீதா பிரஸ்ஸுக்கும் நடுவே நிலவிய நிலையான -அதேவேளை சிக்கலான- உறவு பற்றி நூல் தரும் தரவுகள், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் காந்திக்கும் நடுவில் நிலவிய முரணை விளங்கிக் கொள்வதை எளிதாக்குகின்றன.

கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக கட்டுரைகள் எழுதிய அனைவரும் அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுடன் கருத்துடன்பாடு கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எனினும், கீதா பிரஸ்ஸின் திசைவழி சனாதன தர்மத்தை நிலைநிறுத்துகின்ற, பார்ப்பன மேலாதிக்கத்தையும் அதன் குறியீடுகளையும் வலுப்படுத்துகின்ற தடத்திலேயே திடமாக நடைபோட்டு வந்துள்ளது என்பதே இங்கு கவனிக்க வேண்டியது. போதார் இதனை மிகவும் சாணக்கியத்துடனும், விடாப்பிடியான உழைப்பின் மூலமும் சாதித்த நிகழ்ச்சித் தொடரை இந்நூல் வழியாக அறிந்துகொள்ள முடிகிற அதே வேளை, பார்ப்பன இந்து ராஷ்டிரத்துக்கான விதைகள் தூவப்பட்ட விதத்தையும் நம்மால் விரிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

வர்ணாஸ்ரம அமைப்பை எதிர்த்து ஓயாது கலகக்குரல் எழுப்பிய அம்பேத்கர், ‘இந்து சட்ட மசோதாவை’ நிறைவேற்றிய நேரு ஆகிய இருவர் மட்டும்தான் கீதா பிரஸ்ஸின் இதழ்களுக்காக ஒருபோதும் கட்டுரைகள் எழுதியதில்லை என்ற விடயம் நமக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. இவர்கள் இருவரையும் கீதா பிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்த்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவதூறையும் நஞ்சையும் கக்கியது.

கீதா பிரஸ் வெளியிட்ட நூல்கள், இதழ்களை மட்டுமின்றி அது ஆண்டுதோறும் வெளியிட்டு வந்துள்ள சிறப்பிதழ்களையும் முகுல் விரிவாக பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்றைய இந்துத்துவ செயற்திட்டத்தை அவை எப்படி காலந்தோறும் வலுப்படுத்தி வந்துள்ளன என்பதை சிறப்பாக படம்பிடித்துக் காட்டுகிறார். மனாஸ் ஆங்க் (சிந்தனை), கௌ ஆங்க் (பசு), நாரி ஆங்க் (பெண்கள்), இந்து சன்ஸ்கிரிதி ஆங்க் (இந்துக் கலாச்சாரம்), பாலக் ஆங்க் (சிறுவர்), சிக்ஷா ஆங்க் (கல்வி), பக்தி ஆங்க் (பக்தி), உபாசனா ஆங்க் (வழிபாடு), தர்மா ஆங்க் (மதம்), பர்லோக் ஆவ்ர் புனர்ஜன்மா ஆங்க் (பரலோகமும் புனர்ஜென்மமும்), சதச்சார் ஆங்க் (நல்லொழுக்கம்), மாளவியா ஆங்க் (மதன் மோகன் மாளவியா) என அவற்றின் பட்டியல் நீளுகின்றது. சனாதன பக்தியோடு கலந்து பார்ப்பன மேலாதிக்க அரசியலை மக்களின் மனங்களில் திணிப்பதில் இவை ஆற்றிய பங்கு குறைவானதல்ல என்பது பற்றிய நிறைவானதொரு சித்திரம் முகுலின் பகுப்பாய்வை வாசிக்கையில் நம் மனங்களில் விரிகின்றது.

இந்துத்துவ முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் கீதா பிரஸ், ‘இந்துக்கள்’ அனைவரையும் ஓர் குடையின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டுமென்று தொடர்ந்து முழங்கி வருகின்றது. ஆனால், அது அனைவருக்கும் சுயமரியாதையுடன் கூடிய சம இடத்தை உறுதிசெய்யும் அமைப்பிலானவோர் ஒருங்கிணைவு அல்ல. மாறாக, வர்ணாஸ்ரம சாதிப் படிநிலையமைப்பில் பார்ப்பன-பனியா கூட்டணி ஒதுக்கித் தரும் இடத்தை, அது போட்டுத் தரும் நிபந்தனைகளின் பேரில், மற்றெல்லோரும் தாழ்பணிந்து ஏற்றுக்கொள்வதையே அது வலியுறுத்துகிறது.

சுதந்திர இந்தியாவுக்கென போதார் முன்வைத்த திட்டவரைவில் இடம்பெற்ற சில ‘சமூக நல்லிணக்க கருத்துக்கள்’ பின்வருமாறு:

“இராணுவத்தில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்”, “உயர் பதவிகள் எதிலும் முஸ்லிம்கள் நியமிக்கப்படக் கூடாது”, “அரசுக் கொள்கை என்ற அளவிலேயே பசுக் கொலை முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்”, “காவிக் கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட வேண்டும்”, “தேவனகிரி வரிவடிவம் கொண்ட கலப்பற்ற இந்தி மொழியே தேசிய மொழியாக ஆக்கப்பட வேண்டும்”, “இந்துக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் கலப்பற்ற இந்து தேசமாகவே இந்தியா இருக்க வேண்டும்”,…

கீதா பிரஸ் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்து ராஷ்டிரத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலட்சிய வாழ்வு பற்றி அது கூறுவதைக் கேட்கும் எவருக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருவதை தவிர்க்க முடியாது. கீதா பிரஸ் இந்துப் பெண்களுக்காக பரிந்துரைக்கும் ‘உன்னத ஒழுக்க விழுமியங்கள்’ பற்றி என்னுடன் வேலை செய்யும் வட இந்தியப் பெண்ணிடம் சொன்ன போது, “அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்; தேடிப் போய் செருப்பாலடித்து விட்டு வருகிறேன்” என்று கொதித்தார்.

உதாரணத்திற்கு, மரணமடைந்து விட்ட கணவனோடு சேர்த்து மனைவியைக் கொளுத்தும் ‘சதி’ (உடன்கட்டை ஏறுதல்) எனும் சனாதன தர்ம ‘பண்பாட்டை’ கூட அது வெட்கமின்றி இன்றுவரை உயர்த்திப் பிடிக்கிறது. கல்யாண் இதழின் தற்போதைய ஆசிரியர் ராதேஷ்யாம் கேம்கா, சதி எனும் சம்பிரதாயத்தின் சிறப்புகளை விரிவாகப் பட்டியலிடுவது மட்டுமின்றி, பண்டைய காலங்களில் கணவனை இழந்த மிக இளம் பெண்கள் கூட மனமுவந்து தம்மை எரியூட்டிக் கொண்டார்கள் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார். 2011-ம் ஆண்டு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் சொல்வதைக் கேளுங்கள்:

“இந்தக் காலத்தில் அது (உடன்கட்டை ஏறுதல்) சாத்தியமில்லை. எனவே, விதவையானவர் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க ஒரு சந்நியாசியைப் போல் தனது எஞ்சிய வாழ்வை கழிக்க வேண்டும். விதவை மறுமணம் என்பது சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்றல்ல. காரணம் என்னவென்றால், ஒரு பெண் தனது பூர்வ ஜென்ம பாவங்களின் காரணமாகவே விதவையாகிறார். பாவங்களே துன்பம், துயரம், கஷ்டத்திற்குக் காரணம். அவற்றை மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே ஒருவரால் தனது பூர்வ ஜென்ம பாவங்களிலிருந்து விமோச்சனம் பெற முடியும். சாஸ்திரங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக ஒரு விதவை மறுமணம் செய்து கொள்வாரெனில், ஏற்கனவே செய்த பாவங்கள் கழிவதற்கு முன்பே புதிய பாவமொன்று அவளுடைய கணக்கில் சேர்ந்து கொள்கிறது. எதிர்காலத்தில் அவள் அதற்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டிவரும்.”

கீதா பிரஸ் வெளியீடான “இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டும்?” என்ற நூலில் ஸ்வாமி ராம்ஷுக்தாஸ் கூறுவதைக் கேளுங்கள்:

“கணவனின் பிணத்தோடு சேர்த்து மனைவியை எரியூட்டுவது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல. அவள் மனதிற்குள் உண்மையும் உணர்ச்சிப் பெருக்கும் நுழையும் போது அவள் நெருப்பின்றியே எரிகிறாள். அவ்வாறு எரியும்போது வலியால் அவள் துன்புறுவதில்லை. அவள் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது வெறுமனேயொரு சம்பிரதாயம் அல்ல; அது அவளின் உண்மை நிலை, கற்பொழுக்கம், வேதப் பண்பாட்டின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் பாற்பட்டது… அது அவளுடைய மதப்பற்றினால் விளைவது. இது சம்பந்தமாக பிரபுதத்தா பிரம்மச்சாரிஜி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு, “கணவனின் பிணத்துடன் சேர்த்து மனைவியை எரியூட்டுவது இந்து மதத்தின் முதுகெலும்பு” என்பதாகும். அதனை கட்டாயம் படிக்க வேண்டும்.”

உடன்கட்டை ஏறுவதை ஆதரிப்பது மட்டுமல்ல; “வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டால் வெளியில் சொல்லக்கூடாது”, “கணவன் அடித்துத் துன்புறுத்துவதற்குக் காரணம் மனைவியின் பூர்வ ஜென்ம பாவங்கள்தான்” என்பது போன்ற சனாதன நல்லுரைகள் கீதா பிரஸ்ஸின் வெளியீடுகள் அனைத்திலும் குமட்டுமளவு நிரம்பி வழிகின்றன.

இவை எதுவும் பெரும்பான்மை ‘இந்து’ மக்களின் மத நம்பிக்கை சார்ந்தவை அல்ல; பார்ப்பன சனாதன மதத்தின் கருத்துக்கள் மட்டுமே. இவற்றைக் கட்டிக்கொண்டு அழுவதற்கு சனாதனவாதிகளுக்கிருக்கும் உரிமையை நாம் மதிக்கிறோம். ஆனால், இந்து என்று சொல்லி இவற்றை எல்லோர் தலையிலும் கட்டப் பார்க்கிறார்கள் இந்த ஃபாசிஸ்டுகள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட அம்பேத்கர், பெரியார் போன்றோர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை சமரசமின்றி எதிர்த்தார்கள். பார்ப்பனப் புரட்டை சரியாகப் புரிந்து கொள்ளாதோர் மட்டுமே, “இது இந்து மதத்தின் உள்விவகாரமாயிற்றே; நாம் எப்படி அதில் தலையிடுவது?!” என்று தடுமாறுகிறார்கள். இதில் நாம் எந்த வகை?

பார்ப்பன பயங்கரவாதம் பற்றி, சனாதன அதர்மம் பற்றி, வர்ணாஸ்ரம இழிவு பற்றி பேசினால் ‘இந்துக்கள்’ மனம் புண்படும் என்று ஒதுங்கிக் கொள்வது பச்சை சந்தர்ப்பவாதமின்றி வேறு என்ன? அப்படியே இந்துத்துவ வாதிகளை எதிர்க்கக் கிளம்பினாலும், அவர்கள் ‘முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்’ என்பதை தாண்டி அந்த எதிர்ப்பின் பரப்பு நீளுவதில்லை. இவ்வாறு செய்வதால், அவர்கள் நாடுகின்ற ‘இந்துக்கள் vs. முஸ்லிம்கள்’ என்று எளிமைப்படுத்தப்பட்ட இருமை நிலைதான் வலுவடைகின்றது. மாற்றமாக, ‘இந்துக்கள்’ என்று சொல்லி பெருந்திரள் மக்களின் பின்னால் ஒளிந்துகொள்ளும் பார்ப்பனிய அறிவுக் கூலிப்படையை கரத்தை பிடித்திழுத்து எதிரில் நிறுத்தி முறியடிக்க வேண்டும். ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து அதைச் செய்யும்போது, பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அதே போல், பார்ப்பனியத்துக்கு முதலாளித்துவத்துடனும் நவ தாரளாவாதத்துடனும் இருக்கும் கள்ள உறவை அம்பலப்படுத்தாமல் நம்முடைய எதிர்ப்பு முழுமை பெறாது என்பதையும் நாம் மனதிலிருத்த வேண்டும்.

எனவே முஸ்லிம்கள், தலித்துகள், மதச்சார்பின்மை வாதிகள், ஜனநாயகவாதிகள் என அனைவரும் -பார்ப்பனியத்தால் ஒடுக்கப்படும் சாதி, இன, மத, மொழி மக்கள் அனைவரும்- தமது ‘சமுதாயம்’, ‘இயக்கம்’ போன்ற வேறுபாடுகளைக் கடந்து, அநீதியின் ஊற்றுக் கண்ணான பார்ப்பனிய பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி, அதன் அடித்தளத்தை தகர்த்தெறிவதில் கவனத்தைக் குவிப்பது அவசியம்.

அநியாயம் இழைப்பவர் – இழைக்கப்படுபவர் இருவருக்குமே உதவ வேண்டும் என்றார்கள் நபிகள் நாயகம். அநியாயம் இழைக்கப்படுபவருக்கு உதவ வேண்டுமென்பது புரிகிறது; அநியாயம் இழைப்பவருக்கு எப்படி உதவ முடியும்? அநியாயம் செய்பவரின் கரத்தைப் பிடித்து, அநீதி செய்யவிடாமல் தடுத்து, சுயஅழிவுப் பாதையிலிருந்து அவரைக் காப்பாற்றுவதே நாம் அவருக்கு செய்யத்தக்க உதவி.

இந்த வகையில், பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு நம் உதவி தேவையாயிருக்கிறது! செய்வோமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.