விடை தெரியாத கேள்விகள் அழகானவை, உரையாடலுக்கு வழிவகுப்பவை

இந்தக் கட்டுரை ‘விஸ்வரூபம்’ பிரச்னை உச்சத்தில் இருந்தபோது ஒரு வாரத்திற்கு முன் தோழர் கவின்மலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதினேன். இப்போது ‘இந்தியா டுடே’யில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் நான் சொல்லியுள்ளது போலவும் எதிர்பார்த்தது போலவும் பிரச்னை முடிந்து நாளை படம் திரையிடப்பட இருப்பதாக அறிகிறோம். மகிழ்ச்சி.

கமல்ஹாசன் ஒரு படம் எடுத்தார். தொடர்ச்சியாக இதுபோன்ற படங்களால் துயர்தரும் வாழ்வனுபவங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மைச் சமூகம் இப்படமும் தங்களுக்கு எதிரானதாக இருப்பதைக் கண்டு அச்சம் தெரிவித்தது. அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தைகள் நடந்தன. எல்லோருக்கும் தெரியும். படம் எப்படியும் வெளிவரும் என. அரசுக்கும் தெரியும். கமல்ஹாசனுக்கும் தெரியும். ஏன் முஸ்லிம்களுக்கும் தெரியும்.
இடையே மிக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதம் நிச்சயமாக சமூகத்தின் இது குறித்த கருத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இருதரப்பு விட்டுக் கொடுத்தல்களுக்குப் பின் படம் இப்போது திரையிடப்பட்டுள்ளது. இதுதான் ஜனநாயகம். எதுவுமே இல்லாமல் இப்படியான படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு, எவ்விதப் பிரச்னையுமின்றி திரையிடப்படுமானால் அது எப்படிச் சரியாக இருக்கும்? மத்திய சென்சார் போர்ட் அனுமதித்துவிட்டால் அப்புறம் யாரும் வாய்திறக்கக்கூடாது என ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து முஸ்லிம்களை நோக்கிக் கறார் பேசுபவர்களை என்னென்பது?

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இன்னொருவரை அடையாளம் காண உதவியது இந்த விவாதத்தின் இன்னொரு பலன். கமல்ஹாசன் ஆதரவாளர்கள் எல்லோரும் சொன்ன ஒரு கருத்து, “இந்த எதிர்ப்பின் மூலம் முஸ்லிம்கள் குறித்த முரட்டுத்தனமானவர்கள் என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்பது. அப்படியான கருத்தைச் சொல்கிறவர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினை தொடங்குவதற்கு முதல் நாள் வரை இப்படி இன்று சொல்பவர்கள் எல்லோரும் ஏதோ முஸ்லிம்கள் என்றால் அமைதியானவர்கள் எனக் கருதிக்கொண்டிருந்தது போலவும், இந்த எதிர்ப்பிற்குப் பின்பே முஸ்லிம்கள் பற்றி இப்படி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டதாகவும் சொல்வது எத்தனை அபத்தம்.

முஸ்லிம்களின் பிரச்னைகள் குறித்த எந்தப் பிரக்ஞையும் அற்று அவர்கள் குறித்த எதிர்மறைக் கருத்தை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சுமந்திருந்தவர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டிக்கொள்ள இந்த வாய்ப்பை இன்னும் ஒரு முறை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

‘இந்தியா டுடே’யில் வெளியாகியுள்ள கட்டுரை கீழே:

‘விஸ்வரூபம்’ திரைப்படம் தமிழகத்தில் எதிர்கொள்ளபட்ட விதம் இன்று கருத்துரிமை குறித்த விவாதத்தை மீண்டும் மேலெழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான மோதலாகவும் இது மாறியுள்ளது. தான் தணிக்கை செய்து அனுமதித்துவிட்டால் பின் மாநில அரசு என்ன பிரச்னை வந்தாலும் அந்தப் படத்தைத் திரையிட்டே ஆகவேண்டும் என்கிற அளவில் இருக்கும் சட்டத்தை மத்திய அரசு திருத்தத் துணிந்துள்ளது.

இன்னொருபக்கம் அறிவுஜீவிகள் முழுமையான கருத்துச் சுதந்திரம், அதிலும் கலைப் படைப்புகளுக்குத் தடையற்ற கருத்துச் சுதந்திரம் கோருகின்றனர்.

கலைஞர்களுக்கு மட்டுமல்ல, சாதாரணக் குடிமக்களுக்கும் கூடத் தடையற்ற கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள யார்தான் மறுக்க முடியும்? அதே நேரத்தில் ஒருவருடைய கருத்துச் சுதந்திரம் தனது வாழ்வுரிமையைப் பறிக்கிறது என இன்னொருவர் குரல் எழுப்பும்போதுதான் பிரச்னை எழுகிறது. அரசுகள் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைகின்றன.

இப்படியான நிலை வரும்போது தடையற்ற கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எதுவென்ற இதுவரைக்கும் விடை கண்டுபிடிக்க இயலாத கேள்வி மீண்டும் மேலெழுகிறது. பல்வேறு கருத்துகளும் நம்பிக்கைகளும் அடையாளங்களும் பண்பாடுகளும் சஞ்சரிக்கும் களமாகச் சமூகம் விளங்குகையில் இதுபோன்ற விடை தெரியாத கேள்விகளும் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் முதலில் ஏற்கவேண்டும். இறுதி விடை என ‘இது’ அல்லது ‘அதை’ முன்வைக்காத வரைதான் அங்கு ஜனநாயகம் நிலவ முடியும். ஏதொன்றையும் இறுதித் தீர்வாக முன்வைக்கும்போது அது ஏதோ ஒருவரின் உரிமையை ஒடுக்குவதாகவே அமையும்.

தமிழக அரசு விஸ்வரூபத்திற்கு விதித்துள்ள தடை கலைப் படைப்பின் முழுமையான கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறது என்கிற குரலை இன்று வலிமையாய் ஒலிப்பவர்கள் அனைவரும் ஓரம்சத்தில் இறுக்கமான மௌனம் கடைப்பிடிப்பதை கவனிக்கலாம். முஸ்லிம்கள் இதுபோன்ற சூழல்களில் வெளிப்படுத்தும் அச்சத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதுதான் அது. கூர்ந்து கவனித்தால் அது நியாயம் இல்லை, அப்படியான ஒரு பிரச்னையே அவர்களுக்கு இல்லை, அவர்கள் முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் எதிர்ப்புக் காட்டுகின்றனர் என்பதே அவர்களின் கருத்தாக இருப்பதைக் காணலாம்.

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என பக்கத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் ஐயத்துடன் நோக்கக்கூடிய நிலை தொண்ணூறுகளுக்குப் பின் இங்கு உருவாகியுள்ளதை யார் மறுக்க இயலும்? அப்படியானதற்கு பால்தாக்கரேக்களும் பிரவீன் தொகாடியாக்களும் உமிழ்ந்த வெறுப்புப் பேச்சுகள் மட்டுமா காரணம்? சொல்லப்போனால் அவர்களின் பேச்சுகள் அவர்களது இயக்கத்தைத் தாண்டிப் பெரிய அளவில் பொதுப்புத்தியில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. பொதுப்புத்தியில் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறைப் பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதில் ஊடகங்களுக்குத்தான் பெரிய பங்குள்ளது. குறிப்பாகத் தொண்ணூறுகளுக்குப் பின் வெளிவந்து கொண்டுள்ள திரைப்படங்களுக்கு மிக முக்கியமான பங்குள்ளது.

அற்புதமான ஆக்கங்கள் உள்ளிட்ட எந்தக் கலைப்படைப்பிற்கும் ஒரு பிரச்சார மதிப்பும் உண்டு என்பதை நாம் மறந்துவிடலாகாது. மனிதருள் பொதிந்துள்ள மேன்மையான பண்புகளைத் தட்டி எழுப்புபவைதான் உன்னதக் கலைப்படைப்புகள். அற்ப உணர்வுகளை உசுப்பிவிட்டுக் காசு பார்க்கும் வணிகத் திரைப்படங்கள் இன்னும் ஆபத்தானவை என்பதை மறந்து விடக்கூடாது. ‘ரோஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் திரையரங்கு வாசலில் பாகிஸ்தான் தேசியக் கொடியை எரித்துச் செய்த வன்முறையும் இன்று விஸ்வரூபம் திரைப்படத்தில் திருக்குர்ஆனை ஓதித் தொழுதுவிட்டுச் சென்று பயங்கரவாதச் செயல்களைச் செய்பவர்களைக் கமல்ஹாசன் துவம்சம் செய்யும்போது திரையரங்கினுள் எழும் ஆர்ப்பாட்டங்களும் எதைக் காட்டுகின்றன? இப்படியாகக் கட்டமைக்கப்படும் வெறுப்பு யார்மீது கவியப் போகிறது?

முஸ்லிம்களின் அச்சம் நூறு சதம் நியாயமானது என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை முறை அவர்கள் பொறுத்துப் பொறுத்துப் போயுள்ளனர். ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் பெயரால் எழுப்பப்படும் கருத்தியல் வன்முறையை கருத்தியலாலேயே எதிர்கொள்ளுங்கள் என ஒரு சிறுபான்மைச் சமூகத்திற்கு அறிவுரை சொல்பவர்களுக்கு நெஞ்சில் ஈரமுண்டு என நாம் நம்ப இயலுமா? வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மத வன்முறைத் தடுப்புச்சட்டம் முதலான சிறப்புச் சட்டங்கள் பெரும்பான்மையினரின் சில அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன என அவற்றை ஒழிக்க வேண்டும் எனச் சொல்ல முடியுமா?

சொல்லுவார்கள். ராமதாஸ்கள் சொல்லத்தானே செய்கிறார்கள்.

இன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு முரண் எழும்போது அதில் தலையிட வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு உருவாவதை எப்படி மறுக்க இயலும். அந்தத் தலையீடு என்பது தன்னிச்சையான நிரந்தரத் தடை என்பதாகவன்றி இன்னும் ஒரு விரிந்த சிந்தனையாளர்கள், நடுநிலையாளர்கள், வல்லுநர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனையைக் கேட்டல் என்பதுபோல சில திருத்தங்களை வேண்டுமானால் முன்மொழியலாம். எப்படியானபோதிலும் அரசுத் தலையீடு என்பதில் அதிகாரத்தின் நலனே முன்நிற்கும் என்பது உண்மைதான். ஜனநாயகம் என்பது என்றைக்குமே மக்களுக்கு முழுமையாகக் கையளிக்கப்பட்டுவிடுகிற ஒன்றல்ல. ஜனநாயகம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டம்தானே.

ஏதோ சில பேச்சுவார்த்தைகள், விட்டுக்கொடுத்தல்கள் ஆகியவற்றின் விளைவாக சற்றுக் காலதாமதமாகியேனும் விஸ்வரூபம் திரைக்கு வரும் என்றுதான் நம்புகிறேன். ஆனால் இந்த எழுச்சி எதிர்காலத்தில் கமல்ஹாசன்களுக்கும் மணிரத்தினங்களுக்கும் ஒரு பாடமாக அமையும், அமையவேண்டும்.

நன்றி: இந்தியா டுடே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.