நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 9.2.13 அன்று காலை 8 மணியளவில் திகார் சிறையில் ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். பரவலான ஊடக கவனத்தைப் பெற்ற இந்நிகழ்வு, அனைத்து நாளிதழ்களிலும் (10.2.13) முதன்மைச் செய்தியாக வெளிவந்தது.
அப்சல் குருவின் மரணத்தையொட்டி இருவேறு தளங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருபுறம் அருந்ததிராய், நந்திதா ஹக்சர் உள்ளிட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அப்சல் குருவிற்கு இழைக்கப்பட்ட சட்டப்பூர்வமான அநீதியைக் கண்டித்துக் குரலெழுப்பியதோடு, இறுதிவரை விசாரணைக்கு உட்படுத்தாமல் மூடிமறைக்கப்பட்ட பல்வேறு ஐயங்கள் பற்றியும் அவை அனைத்தும் அப்சல்குருவின் குற்றமற்ற தன்மைக்கு சாட்சியங்களாக இருந்தது பற்றியும் விரிவாகப் பேசினர். இன்னொருபுறம், பா.ஜ.க., இந்து முன்னணி, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவக் கட்சிகள் பட்டாசு வெடித்தும் லட்டுகளைச் சுவைத்தும் அப்சல் குருவின் படத்தைத் தீ வைத்து எரித்தும் மரணதண்டனையைக் கொண்டாடினர். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சி.பி.எம் (சீதாராம் யெச்சூரி) ஆகிய கட்சியினர் காங்கிரஸின் ரகசியத் திட்டத்தை ஆதரித்து இந்துத்துவவாதிகளோடு கைகோர்த்தனர்.
பொதுவெளியில் நிகழ்ந்த இந்த இருவேறு விவாதங்களைத் தனது அரசியல் சார்புகளைக் கடந்து நடுநிலையோடு முன்வைத்து, அனைத்து தரப்புக் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஊடகங்களின் இன்றியமையாத கடமை. ஆனால், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்துத் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் வெளியாகிய செய்திகள் பலவும் நடுநிலைத்தன்மைகளைக் கைவிட்டு முழுக்க முழுக்க அரசுத் தரப்பு மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் சார்பாக நின்று அப்சல் குருவின் மரணத்தைக் குதூகலித்துக் கொண்டாடின.
அப்சல் குருவின் குடும்பத்தினருக்குக் கூட அறிவிக்காமல் ரகசியமாகத் தூக்கிலேற்றியது, காஷ்மீரில் கைப்பேசி, இணையதள, செய்தித்தாள் சேவைகளை முடக்கியது, டில்லி பத்திரிக்கையாளர் இப்திகார் கிலானியை சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைத்தது உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களைக் குறைந்தபட்சம் ஓரிரு வரிகளில் கூடக் கண்டிக்காமல் அரசுத்தரப்பின் அறிக்கைகளை அப்படியே செய்திகளாக வெளியிட்டிருந்தன.
அப்சல் குருவிற்கு மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்தே, ‘அப்சலைத் தூக்கிலிடாதே’ என்னும் முழக்கம் மனித உரிமை ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டது மட்டுமின்றி, இந்த வழக்கில் அப்சல் மிகக்கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டார் என்பதையும் அவருக்கென நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அப்சலை ஒருமுறை கூட நேரில் சந்திக்காமல் நீதி முறைகளை குழிதோண்டிப்புதைத்தார் என்பதையும் அரசு, காவல்துறை, நீதிமன்றங்கள், இந்துத்துவப் பாசிசம் எல்லாமாகச் சேர்ந்து திட்டமிட்டு அப்சல் மீது இந்த அபாண்டப் பழியைச் சுமத்தின என்பதையும் தெளிவாக ஆதாரங்களோடு முன்வைத்தனர். ஆனால், இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாத ஊடகங்கள், தமது ஒரு தலைபட்சக் கருத்துக்களையே செய்திகளாக வெளியிட்டுள்ளன. அப்சல் பாகிஸ்தானிலிருந்து திரும்பிவந்து காஷ்மீர் சிறப்பு காவல் படையினரிடம் சரணடைந்து அதற்கான சான்றிதழையும் பெற்றிருந்தவர் என்பதை வாய்தவறிக் கூடச் சொல்லிவிடாமல், அப்சலைப் பாகிஸ்தான் தீவிரவாதி என்றே கட்டமைத்தன.
மிகவும் அரிதாக ஒரே ஒரு நாளிதழ் மட்டுமே இவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் பல்வேறு கோணங்களைக் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டதோடு தனக்குரிய ஊடகப் பொறுப்பின் அடிப்படையில் இந்த ரகசிய தூக்கு தண்டனை மற்றும் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து தலையங்களையும் எழுதியிருந்தது. 10.2.13., 11.2.13., 12.2.13 ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தின் முக்கிய நாளிதழ்களில் வெளியான அந்தச் செய்திகளின் தொகுப்பு இங்கே :
தினமணி
“அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்” என்று தலைப்புச் செய்தி வெளியிட்ட தினமணி, அப்சல் குருவை ‘ஜெய்ஷ்–இ முகமது பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியது. அவரின் வாழ்க்கைப் பாதையைக் குறித்து தினமணி விளக்கிய கதை, சிறப்பு அதிரடிப் படையினரின் அறிக்கைகளையும் மிஞ்சும் வகையில் இட்டுக்கட்டப்பட்டிருந்தது.
அதிக அளவு பணம் அளிப்பதாக பயங்கரவாதிகள் உறுதியளித்ததால், எல்லையைத் தாண்டி ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகளுடன் அப்சல் இணைந்ததாகவும் அங்கு துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள்வதற்கு அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் பின்னர் பயங்கரவாதிகளின் ஒரு குழுவிற்குத் தலைமையேற்று காஷ்மீருக்குத் திரும்பிய அப்சல், அங்கு பழங்களை வாங்கி விற்கும் கமிஷன் ஏஜெண்டாக தொழில் செய்து கொண்டே மறைமுகமாக பயங்கரவாதத்தின் ஏஜெண்டாக செயல்பட்டார் என்றும் இதற்காக தில்லிக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டார் என்றும் அந்தக் கதை தொடங்கியது.
மேலும், அப்சல் குருவின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளெல்லாம் பல்வேறு முறை அவரே ஒப்புக்கொண்ட உண்மைகள் தான், அப்சலின் குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட ஒன்று, இந்தக் கூட்டுச் சதியில் அவர் முக்கிய பங்காற்றினார் என்றெல்லாம் ஒரு அரசுத் தரப்பு வழக்கறிஞராகவே நின்று விளக்கமளித்தது. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால், டில்லி உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட (உச்சநீதிமன்றம் என தினமணி தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தது) பேராசிரியர் கிலானி அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர் விடுவிக்கப்பட்டதற்குக் காரணம், அவரது குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாதது தான் – அதாவது அவர் குற்றவாளி தான் என்னும் பொருளில் – கொஞ்சமும் நா கூசாமல் எழுதியது. குற்றம் சுமத்தப்பட்ட யாரை விடுதலை செய்யும்போதும் குற்றம் உறுதியாக நிறுவப்படவில்லை என்று சொல்லித்தான் விடுதலை செய்வார்கள். இதன் பொருள், அவர் மீது ஆதாரம் இல்லை என்பதன்று ; அவர் குற்றவாளியே இல்லை என்பதுதான். ஆனால், தினமணி குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சொல்லி அதன்மீது வேறொரு பொருளைத் திட்டமிட்டுக் கட்டமைத்தது.
11.2.13 அன்று, “இதில் என்ன சர்ச்சை” என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வெளியிட்டது. “பத்து ஆண்டுகள் தள்ளிப் போடப்பட்ட தண்டனையை திடீரென்று ஏன் நிறைவேற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்புவதும் தூக்கு தண்டனை மனிதாபிமானமற்ற செயல் என்று வாதம் செய்வதும் உடலை உறவினர்களிடம் தராமல் சிறை வளாகத்திலேலேயே அடக்கம் செய்திருக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பதும் தேவையற்றவை என்பது நமது கருத்து” என்று கூறிய அத்தலையங்கம், அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளின் குற்றத்திற்கு வலுவான ஆதாரம் கிடைப்பது அரிது, கிடைப்பதை வைத்துக்கொண்டு தான் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியதோடு இறுதியாக, “ரகசியமாக அப்சல் குருவைத் தூக்கில் போடுவானேன் என்பதை சர்ச்சையாக்கி ஒரு தீவிரவாதியைத் தியாகியாக்கிவிட வேண்டாம். அது தேசத் துரோகம் என்பதை அப்சல் குருவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உணர்ந்தால் நல்லது. தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் நிறுத்திக்கொள்வோம்” என்று சொல்லி, இது தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளையும் கருத்தொருமிப்புகளையும் மனிதாபிமான நோக்கில் நின்று விவாதிப்பதையே “தேசத்துரோகம்” என்று பீதியைக் கிளப்பி அடக்க முயற்சித்தது.
தீவிரவாதத்தை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாவிட்டாலும்,கிடைப்பவற்றை வைத்து அவர்களை ஒழித்துக்கட்டி தேசத்தைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று தனது “தேசபக்தியை” வெளிக்காட்டும் இதே தினமணி, கொஞ்ச நாட்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்து தீவிரவாதத்தைப் பரப்புகின்றன எனக் குற்றம் சாட்டியபோது, “நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்” என்று சொல்லி கொதித்தெழுந்தது நினைவிற்குரியது.
தினத்தந்தி
“பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்டார்” என்று தலைப்புச் செய்தியிலேயே அப்சலைத் தீவிரவாதியாய் அறிவித்த தினத்தந்தி, “யார் இந்த அப்சல் குரு” என்ற தலைப்பில் வெளியிட்ட முதல் பக்கக் கட்டச்செய்தியில் அப்சலின் வாழ்க்கைக் குறிப்பை இப்படிச் சித்தரித்தது : (புனிதப்போரில் பங்கெடுப்பதற்காகவும் பணத்திற்காகவும்) அப்சல் குரு, ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் சேர்ந்தார். எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்றார். ஜெய்ஷ்–இ முகமது, லஷ்கர்–இ தொய்பா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களும் இணைந்து நடத்திய பாராளுமன்ற தாக்குதல் சதித்திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். அதன் பலன் தான் மரணதண்டனை.”
12.2.13 அன்று, “நீதியின் நீண்ட பயணம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தலையங்கத்தில், 2001 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை நீதிக்கான ஒரு நெடும் பயணத்தை நடத்திய இந்த வழக்கில் தற்போது தண்டனை அளிக்கப்பட்டதன் மூலம் நீதி கிடைத்திருப்பதாகவும் இந்த தண்டனையை ஒட்டி நாடு முழுவதும் தூக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சை கிளம்பி இருப்பதாகவும் கூறிய தினத்தந்தி, “தூக்கு தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்பது பாராளுமன்றம் முடிவு செய்யவேண்டிய காரியமாகும். ஆகவே, இதற்கு உரிய விவாதத்தை பாராளுமன்றம் தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர காவல்துறையோ, நீதிமன்றமோ, ஏன் ஜனாதிபதியோ இதில் எதுவும் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது” என்று முடித்திருந்தது. ‘சனநாயகத்தின் நான்காவது தூண்’ என்று வர்ணிக்கப்படும் ஊடகங்கள், தமது அரசியல் சார்புகளுக்காக, ‘இதில் என்ன சர்ச்சை’ ‘இதன் மீது என்ன விவாதம்’ ‘பாராளுமன்றம் பார்த்துக் கொள்ளும்’ என்று சொல்லி மக்களின் வாயை அடைக்கும் அளவிற்கு அறமிழந்து போவதை என்னவென்று சொல்வது??
தினமலர்
“தூக்குல போட்டாச்சு” என்று தலைப்புச் செய்தியிலேயே நிம்மதிப் பெருமூச்சு விட்ட தினமலர், அரசுத் தரப்புச் செய்திகளை எந்த விமர்சனத்திற்கும் இடமில்லாமல் அச்சிட்டிருந்தது. இந்தத் தண்டனை இவ்வளவு தாமதமாய் நிறைவேற்றப்பட்டது என்பதற்கு அப்பால் தினமலர் இதழுக்கு இருந்த இன்னுமொரு பெரிய சோகம் அப்சலைக் கைது செய்த காவல் படை அதிகாரிகள் ராஜ்பீர் சிங்கும் மோகன்சந்த் சர்மாவும் இந்த மரண தண்டனையைப் பார்த்து புளகாங்கிதப்பட முடியவில்லை என்பதுதான். “2008 ஆம் ஆண்டு குர்காவ் நகரில் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டதில் ராஜ்பீர் சிங் இறந்தார். அதே ஆண்டு நடந்த டில்லி பத்லா ஹவுஸ் என்கவுண்டரில் இன்ஸ்பெக்டர் மோகன்சந்த் பலியானார்” என்பதைக் குறிப்பிட்டு, “அப்சலைக் கைது செய்த போலிஸ் அதிகாரிகள், தூக்கு பார்க்க முடியாத சோகம்” என்ற தலைப்பில் அரைப்பக்க அளவிற்கு வெளியிட்டது.அதில், 42 பேரை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளியுள்ள ராஜ்பீர் சிங்கிற்கு “என்கவுன்டர் கிங்” என்று பட்டமளித்தும் (10 ஆண்டுகளில்) 35 பேரை என்கவுன்டரில் போட்டுத்தள்ளிய மோகன்சந்த் சர்மாவை “புலனாய்வு நிபுணர்” என்று பெருமைப்படுத்தியும் அழகுபார்த்தது தினமலர். மேலும் இச்செய்திக்குறிப்பில் தாக்குதல் வழக்கு குறித்து விவரிக்கப்பட்ட ‘த்ரில்லிங்’ ஸ்டோரியானது, ‘தினமலர்னா சும்மாவா?’ என்கிற ரீதியில் தினமணி, தினத்தந்தியின் கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டது.
“தாக்குதல் நடத்துவதற்கு நோட்டம் பார்ப்பதற்காக ஒரு கறுப்பு பைக்கை 20 ஆயிரம் கொடுத்து அப்சல் வாங்கினான். அந்த பைக்கில் அப்சலும் சவுகத்தும் சென்று பார்லிமென்டை பலமுறை சுற்றி வந்து நோட்டம் விட்டனர். பின்னர் தீவிரவாதிகளுக்காக மொபைல் ஃபோன்கள், சிம்கார்டுகள், கார்கோ டிரவுசர்கள், டி – ஷர்ட்டுகள், ஷூக்கள்… வாங்கினர்.. 3 போலிஸ் சீருடைகளையும் வாங்கினர்.. வெள்ளை அம்பாசிடர் கார் வாங்கினர்.. 2001 டிசம்பர் 13 ஆம் தேதி காலை அப்சல், கிலானி, சவுகத், தீவிரவாதிகள் 5 பேர் ஆகிய 8 பேரும் சந்தித்துப் பேசினர். அப்போது அப்சலிடம் 10 இலட்சம் பணத்தையும் லேப்டாப்பையும் தீவிரவாதிகளின் தலைவன் முகமது கொடுத்தான். பணத்தை அப்சல் வைத்துக்கொள்ளலாம் என்றும் லேப்டாப்பைக் காசி பாபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முகமது கூறினான்…” என்று மனம் போன போக்கில் – முறையாக விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்படாத போலிஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை – உண்மைச் செய்திகள் என்ற போர்வையில் வெளியிட்டது. கிலானி நிரபராதி என்ற அடிப்படையில் தான் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவரும் தீவிரவாதிகளோடு சதித்திட்டத்தில் பங்கெடுத்தார் என்று செய்தி வெளியிடுகிறது தினமலர். இதன்மூலம், ஒரு குற்றவாளி தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார் என்கிற பிம்பத்தை பொதுமக்களிடம் மிகத் தெளிவாகக் கட்டமைக்கிறது. நந்திதா ஹக்சர் உள்ளிட்ட கிலானியின் வழக்கறிஞர்கள், பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அப்பால் உயிரைப் பணயம் வைத்து நிரூபித்த உண்மையை, மயிரளவும் பொருட்படுத்தாமல், கைக்கு வந்ததை எல்லாம் செய்தியாக்கி வெளியிடும் இந்த இதழியல் அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
போலிஸ் அதிகாரிகள் ராஜ்பீர் சிங்கும் மோகன் சந்த் சர்மாவும் அப்சலின் மரணத்தைப் பார்க்க உயிரோடு இல்லை என்பதை, மிகப்பெரிய அனுதாபத்தோடு வெளியிட்டிருக்கிற தினமலர் அவர்கள் இருவரையும் ஏதோ தேசத்தைக் காப்பாற்றிய தியாகிகளைப் போல முன்னிறுத்தியிருக்கிறது. ராஜ்பீர் சிங், மோகன்சந்த் சர்மா இருவரும் நாடாளுமன்ற வழக்கிற்காக காஷ்மீரில் வைத்து அப்சலைக் கைது செய்தவர்கள். ‘என்கவுன்டர் கிங்’காகிய ராஜ்பீர் சிங், பணத்திற்காக யாரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளுபவன். அதன்மூலம் வரும் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தான். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டதில் செத்துப்போனான்.
‘பத்லா ஹவுஸ்’ என்கவுன்டர் என்பது, கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லாத இரண்டு நிராயுதபாணியான இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர். இதில் மோகன்சந்த் சர்மா பலியானான் என்று சொல்வது அபத்தமானது. இன்னமும் விடையறியப்படாத அந்த வழக்கில், மோகன்சந்த் உள்முரண்பாடுகள் காரணமாக, சக காவல் துறையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் இருக்கிறது.
காவல்துறையின் இந்த மறுபக்கங்களை எல்லாம் மூடிமறைத்து, நீதி விசாரணைகளின் ஒருபக்கச் சார்புகள் மீது எந்தக் கேள்விகளையும் எழுப்பாமல், தமது இந்துத்துவ அரசியலை ஊடகங்கள் இப்படி வெளிப்படையாகக் கக்கும் போக்கு ஆபத்தானது.
THE NEW INDIAN EXPRESS
‘13/12 முதன்மைக் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான்’ என்று தலைப்புச் செய்தி வெளியிட்ட எக்ஸ்பிரஸ், அப்சலை ஜெய்ஷ் – இ – முகமது தீவிரவாதியாக முன்னிறுத்தியது. தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்காதபோதும் அப்சலுக்குத் மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கான நியாயமான காரணங்களாகப் போலிஸ் தரப்பு சொல்லிய செய்திகளை அப்படியே ஒப்பித்திருந்தது. அந்த நியாயமான காரணங்களுள் ஒன்று, தீவிரவாதிகளுடனும் மற்ற குற்றவாளிகளான கிலானி, சவுகத் ஹூசைன், அப்சான் குரு ஆகியோருடனும் அப்சல் மட்டுமே தொடர்பில் இருந்தார் என்பது. கிலானியை மீண்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் விஷமத்தனத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைவது கவனிக்கத்தக்கது.
11 ஆம் தேதி எழுதப்பட்ட, “தீவிரவாதம் எந்த நிறத்தில் இருந்தாலும் சமரசம் வேண்டாம்” (No Compromise on terror of any colour) என்ற தலையங்கத்தில், தேவையற்ற நீண்டகாலத் தாமதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனையை, இந்த தேசமும் அரசியல் ரீதியாக வேறுபட்டிருப்பவர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. மனித உரிமைகள் என்கிற பெயரில் முதலைக்கண்ணீர் வடிப்பவர்கள், தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட மற்றும் காயமடைந்த அப்பாவி குடிமக்களின் உரிமைகளைப் பற்றி வசதியாக மறந்துவிடுகிறார்கள் என்று அங்கலாய்த்தது.
இறுதியாக, தீவிரவாதத்திற்கு இன்னும் வலிமையான செய்தியை அரசு சொல்ல விரும்பினால், தற்போது தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கும் மற்ற தீவிரவாதிகள் மீது எந்தவித பரிவோ, அச்சமோ இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் – அதாவது தாமதப்படுத்தாமல் தூக்கிலிடவேண்டும் என்று அடுத்து முழக்கங்களுக்குத் தூபம் போட்டது.
தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லா எழுதிய “Noose You Can Use : Shinde Takes On Opposition, One Hanging at a Time” என்னும் கட்டுரை, ஷிண்டேவின் பராக்கிரமங்களை எல்லாம் விதந்துரைத்து, அவரைப் புகழ்ந்து தள்ளியது. ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் பா.ஜ.க.வை நிராயுதபாணியாக்கிவிட்டார் என்றும் ஜெய்ப்பூர் மாநாட்டில் வாய்தவறி உளறிவிட்ட போதிலும் அப்சலைத் தூக்கிற்கு அனுப்பியதன் மூலம் ஒரு நடுநிலைத்தன்மையை நிலைநாட்டிவிட்டார் என்றெல்லாம் மெச்சிக்கொண்டது.
அப்சலின் வழக்கு பற்றி பேச வரும்போது, அவருடைய வழக்கு மட்டும் தான் ஆறு வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு வந்தது என்று பச்சைப் பொய்யை பிரபு சாவ்லா உதிர்த்திருக்கிறார். சென்ற ஆண்டு குடியரசுத்தலைவராய் இருந்த பிரதிபா பாட்டில் 35 மரண தண்டனைக் கைதிகளுக்கு கருணை அளித்தார். அதில் 23 பேர் கருணை கோரிய ஆண்டு 1981. அப்சலுக்கு முன்னதாக – ராஜீவ்காந்தி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் உட்பட – பலரது மனுக்கள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் போது, ஏதோ அப்சல் குருவின் வழக்கு மட்டும் தான் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பதாக ஒரு முன்னணிப் பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் ஒருவரே எழுதுவது, பத்திரிகை அறம் எத்தனை கேலிக்கூத்தாக இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
இதற்கும் மேலாக அக்கட்டுரையின் இறுதியில் இப்படிச் சொன்னார் : “கிடைத்திருக்கும் தகவல்களின்படி, ஷிண்டேவின் அடுத்த இலக்கு பல்வந்த் சிங் ரஜோனா, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீண்ட் சிங்கைக் கொலை செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர். அதேபோல, ராஜீவ்காந்தி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்குவதற்கான அரசியல் கருத்தொருமிப்பையும் அவர் உருவாக்கிவிட்டார். இவற்றில் அவர் வெற்றியை அடைந்தால், ஒரு உள்துறை அமைச்சராக மதம், சாதி, மாநிலம் என்கிற அடையாளங்களுக்கு அப்பால் பயங்கரவாதத்திற்கு எதிராக இயங்கியர் என்ற நம்பகத்தன்மையை நிறுவுவார்.”
அப்சலின் மரணத்தைக் கொண்டாடிய இதழ்களெல்லாம் குறைந்தபட்சம் வரவேற்பதோடு நிறுத்திக்கொண்டன. ஆனால் இதோடு திருப்தியுராத எக்ஸ்பிரஸ், அடுத்தகட்ட மரணச் சுவைக்காக நாவூறக் காத்திருப்பதும் அதை சாதி, மதம் கடந்த ‘நடுநிலைத்தன்மை’ எனப் பூரிப்பதும் அதன் வன்மத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது.
TIMES OF INDIA
“தீவிரவாதி அப்சல் குருவின் தூக்கு ஒரு அத்தியாயத்தை முடித்தது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட டைம்ஸ் இதழ், பிற நாளிதழ்களைப் போலவே காவல்துறைத் தரப்புச் செய்திகளையே கொட்டியிருந்தது. அப்சலின் புகைப்படத்தின் கீழ் “தீவிரவாதத்தின் முகம்” (Face of terror) என்றும் அவரது வழக்கு விவரத்தின் தொகுப்பிற்கு “தீவிரவாதக் காலக்கோடு” (terror timeline) என்றும் தலைப்பிட்டு தனது பங்கைத் தீர்த்துக்கொண்டது.
11 ஆம் தேதி எழுதப்பட்ட, “தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்” (No Politics Please) என்ற தலையங்கத்தில், அப்சல் குருவின் வழக்கு “அரிதினும் அரிதான” வகையைச் சார்ந்தது என்றும் இறுதிவரை முறையான நீதிவிசாரணை நடத்தப்பட்டது என்றும் சொல்லியதோடு, குடியரசுத்தலைவர் நிராகரித்த பின்பு, மரணதண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர அரசாங்கத்திடம் வேறெந்த வாய்ப்பும் இல்லை என்றும் பவ்யம் காட்டியது.
DECCAN CHRONICLE
“அப்சல் தூக்கிலிடப்பட்டான், உடல் திகார் சிறையில் புதைக்கப்பட்டது” என்ற தலைப்பில் முதன்மைச் செய்தி வெளியிட்ட டெக்கன் இதழ், “Afsal’s Hanging brings closure” என்று தலையங்கம் தீட்டியிருந்தது. அதில், இப்படியான குற்றத்திற்கு இந்த உச்சபட்ச தண்டனை தான் அளிக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இதைஒட்டி காஷ்மீரிலோ அல்லது நாட்டின் வேறுபகுதிகளிலோ வன்முறைகள் நடைபெறலாம் ஆனால், அதை அரசாங்கம் பொருட்படுத்த வேண்டிதில்லை. இந்தியாவின் சனநாயகக் குறியீடான நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு இந்த தண்டனையை வழங்குவதைத் தவிர இந்தியாவிடம் வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்று சொல்லி இந்தத் தூக்கை நியாயப்படுத்தியது.
மொத்தத்தில் இதுவரை பார்த்த செய்திகளில் இருந்து, அப்சல் குரு போன்ற ஒரு காஷ்மீரியின் வாழ்க்கைப் பயணம் எத்தனை துயரம் நிறைந்தது என்பதையும் இந்திய சனநாயகம் அவருக்கு இழைத்த துரோகத்தையும் பின்னுக்குத் தள்ளி அவர் மீது ஒரு முழுமையான தீவிரவாத பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதே இந்த இதழ்களின் நோக்கமாக இருப்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது. இதழ்களின் தலையங்கம் என்பது அவைகளின் அரசியலைச் சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், செய்திக் குறிப்புகள் அப்படியானவை அல்ல. அவை நடந்த நிகழ்வுகளின் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. நடுநிலையோடு வெளிப்படவேண்டியவை. ஆனால், மேலே கண்டவற்றில் தலையங்கத்திற்கும் செய்திக் குறிப்புகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லாமல், இரண்டுமே அந்தந்த இதழ்களின் அரசியல் சார்பைப் பொறுத்தே அமைந்துள்ளன. அப்சல் தரப்பு நியாயங்களாக மனித உரிமை அமைப்பினர் சொல்வதை அப்படியே ஊடகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லவில்லை. ஆனால் மாற்றுக் கருத்துக்களை முற்றிலுமாக மறைத்துவிட்டு புலனாய்வுத் துறையினரின் கருத்துக்களை மட்டுமே ‘நடந்த உண்மைகளாக’ எழுதுவதைத்தான் ஊடக அறமில்லை என்கிறோம்.
மேலும் தலையங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளும் இடம்பெற்றுள்ளன. மரணதண்டனையை வரவேற்பதாகவே இருந்தாலும், குறைந்தபட்ச மனித அறம் அல்லது பத்திரிக்கை அறத்தோடு, அப்சலின் குடும்பத்தினருக்குக் கூட ஏன் தகவல் அளிக்கவில்லை? இறுதியாகச் சந்திக்கக் கூட ஏன் வாய்ப்பளிக்கவில்லை? என்பன போன்ற கேள்விகளைக் கூட இந்த இதழ்கள் எழுப்பவில்லை. ஆனால் இப்படியான சூழலில், இந்த ஆபத்தான போக்கிற்கு நடுவே, “தி இந்து” நாளிதழ் மட்டுமே நடுநிலையோடும், ஊடக அறம் மற்றும் பொறுப்புணர்ச்சியோடும் செய்திகளை வெளியிட்டிருந்தது. (இதைத் தனியே சற்று விரிவாகப் பார்ப்போம்)
அந்நாளிதழைத் தவிர்த்து, மற்ற செய்தி இதழ்கள் இந்துத்துவப் பார்வையில், நடுநிலை தவறி வெளியிட்ட காழ்ப்புகளை ‘கவனிக்கிறோம்’ சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடக நடுநிலைமை குறித்த அறிதலையும் விழிப்புணர்வையும் மேற்கூறிய தமிழக நாளிதழ்கள் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
மேலும் பார்க்க
இதில் என்ன சர்ச்சை?
No compromise on terror of any colour
No politics please: Afzal Guru’s execution must be seen through a legal prism alone