அப்சல்குரு தூக்குத் தண்டனை குறித்த வார இதழ்களின் பதிவு

தமிழின் முக்கிய வார இதழ்களான ஜூனியர் விகடன், புதிய தலைமுறை, நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியவற்றில் அப்சல் குருவின் மரணதண்டனை குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன. வார இதழ்களில் இந்த நிகழ்வு பெரிய முக்கியத்துவத்தைப் பெறவில்லையென்றாலும் ஓரிரு கட்டுரைகளை வெளியிட்டு செய்தி அளித்திருந்தன.

17.2.13 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த, “நேற்று அஜ்மல் கசாப் இன்று அப்சல் குரு” என்னும் கட்டுரை, ஏதோ அப்சலின் ரகசியத் தூக்கிற்குக் கண்டனம் தெரிவிக்கும் தோரணையில் ஆரம்பித்தாலும், இறுதியாக அப்சலை ‘நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் மூளை’ என்பதாகவே அடையாளம் காட்டியது.

21.2.13 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த பாலபாரதியின், “தூக்கு தண்டனைக்கு தூக்கா? துணையா?” என்னும் கட்டுரை, மரணதண்டனை என்னும் மனித உரிமை மீறல் எப்படி அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை சுருங்கச்சொல்லி சிறப்பாக விளக்கியது. மரணதண்டனை குற்றங்களைத் தடுக்கும் என்றால், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், 2004 ஆம் ஆண்டு தனஞ்செய் சாட்டர்ஜி தூக்கிலேற்றப்பட்ட பின்பும் அந்தக் குற்றம் நாட்டில் இன்னும் குறையவில்லையே என்ற கேள்வியை முன்னிறுத்தியதோடு, போபால் விஷவாயுக் கசிவில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் வருங்காலத் தலைமுறையையே சிதைப்பதற்கும் காரணமாக இருந்த, அந்நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனுக்கு இந்திய அரசு தூக்கு தண்டனை விதித்ததா? அமெரிக்காவுக்குத் தப்பி ஓட உதவி செய்ததே! என்பதையும் நினைவுபடுத்தி, மரணதண்டனை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என்றும் சொல்லியது.

நக்கீரன் இதழில், மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ அப்சல் குரு : கூட்டு மனசாட்சிக்கு இன்னொரு குருதிப்பலி” என்னும் கட்டுரை அப்சல் குரு விஷயத்தில் பெரும்பாலான ஊடகங்களால் மூடிமறைக்கப்படும் பல முக்கிய அம்சங்களையும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துக்களையும் தொகுத்தளித்தது. போலிஸ் தரப்பில் அப்சலுக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதை, நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அவர் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டது ஆகிய தகவல்களையும் கொடுத்து, அப்சல் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டதை விரிவாக விளக்கியது.

புதிய தலைமுறை வார இதழில் (21.2.13), “எல்லாவற்றிலும் அரசியலா?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கம், இந்த தண்டனையை விமர்சிப்பவர்களுக்கு இப்படிப் பதிலளித்தது: “இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜிலானி, சவ்கத் ஹூசைன் குரு, அப்சல்(ன்) குரு ஆகிய மூவரையும் போதிய சாட்சியங்கள் இல்லை என உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதையும் கவனிக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்துவிட்டு அப்சல் குருவை மாத்திரம் தண்டிக்க, உச்சநீதிமன்றத்திற்கு அவர் மீது தனிப்பட்ட காழ்ப்பு ஏதும் இல்லை.”

புதியதலைமுறை அளிக்கும் இந்தச் செய்தி தவறானது. குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கும்போது அவர் யாராக இருந்தாலும் போதிய ஆதாரங்களோடு குற்றம் நிறுவப்படவில்லை என்கிற அடிப்படையிலேயே விடுவிக்கப்படுகின்றனர். கிலானிக்கும் அப்படித்தான் நடந்தது. சவுகத் குரு தகவலை மறைத்தார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அதை அனுபவித்துவிட்டு 2010 டிசம்பர் மாதம் தான் விடுதலையாகி வெளியே வந்தார். சவுகத்தின் மனைவியும் ஓராண்டிற்குப் பிறகே விடுதலை செய்யப்பட்டார். இதற்கு முரணாக மூவரையும் உச்சநீதிமன்றம் ஒன்றாக விடுவித்துவிட்டதைப் போல புதியதலைமுறை எழுதியிருக்கிறது. மாலன், செய்தித்தாள்களை எல்லாம் புரட்டுவதில்லையா? அல்லது தனது வாசகர்கள் ‘புதிய தலைமுறையைத்’ தாண்டி வேறெதையும் படிப்பதில்லை என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா?

மேலும், “இன்று அப்சல் குருவின் தண்டனையைக் கண்டிப்பவர்கள் அந்த அப்பாவிக் காவலர்களையும் அந்தத் தோட்டக்காரர் குடும்பத்தினரையும் சற்றேனும் எண்ணிப்பார்க்கவில்லை” என்று வருத்தப்பட்டதோடு, “கொலையிற் கொடியாரை” என்னும் திருக்குறளை எடுத்துக்காட்டி, “கொலை செய்யும் பாதகர்களை அரசன் அகற்றி விடுவது, பயிர்களைக் காக்க களையெடுப்பதப் போன்றது. களை செழிக்க வேண்டும் என்பவர்கள் எதை வேண்டுமானாலும் பேசட்டும், நாம் பயிர் செழிக்கப் பாடுபடுவோம்” என்று தன்னை நியாயப்படுத்தியது.

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் யாருமே, உயிர்ப்பலி வாங்கும் இப்படியான தீவிரவாதத் தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அப்சல் குரு போன்ற அப்பாவிகளைக் காவு கொடுப்பதைப் பற்றித்தான் இங்கு முதன்மையாக விமர்சிக்கிறார்கள். இந்த அம்சத்தைத் திட்டமிட்டு மறைக்கும் ‘புதிய தலைமுறை’ மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் ஏதோ தீவிரவாதத்தைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது. புதிய தலைமுறையின் இன்றைய ஆசிரியர் மாலன் குமுதத்தில் ஆசிரியராக இருந்தபோது ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டதைக் கேட்டுக் குதூகலித்து ‘தூக்கு மரத்தின் லீவர் இழுபடும் கிளிக் சத்தம் விரைவில் கேட்கும்’ என்கிற ரீதியில் எழுதிய கட்டுரை கடுமையான விமர்சனத்திற்குள்ளானது எண்ணத்தக்கது.

ஜூனியர் விகடன் இதழில் (17.2.13) வெளிவந்த, “தொழுகை, டீ, சிரிப்பு” என்ற கட்டுரை, அப்சல் குருவைத் தீவிரவாதியாக முன்னிறுத்தி, “பழ வியாபாரி வேடத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தங்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் காஷ்மீரில் இருந்து கொண்டுவந்து அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்” என்று காவல்துறைச் செய்திகளை மட்டுமே சொல்லி இந்த தூக்கு தண்டனையை ஆதரித்தது.

ஆக, அப்சல் குறித்த முழு உண்மைகளை அறிய விரும்பாமல் அல்லது அறிவிக்க விரும்பாமல், நடுநிலையில் இருந்து நழுவியே பெரும்பாலான வாரப் பத்திரிக்கைகளும் இயங்குகின்றன என்பதை மேற்கூறியவற்றிலிருந்து அறியமுடிகிறது. இந்த ஆபத்தான ஊடகப்போக்கு வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.