குமுதம் ரிப்போர்ட்டரின் பழிதீர்க்கும் படலம்

‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 21.2.13 நாளிட்ட வார இதழில், “இன்னொரு மணியம்மை” என்ற தலைப்பில் ஒரு அவதூறுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. திமுக தலைவர் கருணாநிதியையும் அக்கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்புவையும் பாலியல் ரீதியாக இணைத்துக் கொச்சைப்படுத்தப்பட்ட அக்கட்டுரையில், ‘பெரியார்’ திரைப்படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்புவின் புகைப்படமும் கறுப்புச்சட்டை அணிந்துகொண்டிருக்கும் கருணாநிதியின் புகைப்படமும் கிராஃபிக்ஸில் இணைத்து அருகருகில் இருக்கும்படி வெளியிடப்பட்டிருந்தது. இந்த கிராஃபிக்ஸ் படமும் கட்டுரைத் தலைப்பும் அன்றைய இதழின் முன் அட்டையிலேயே அச்சிடப்பட்டு முக்கியத்துவமளிக்கப்பட்டது.

கட்டுரை இப்படித் தொடங்குகிறது : “திமுக-வில் நடக்கும் வாரிசுப் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ‘குஷ்பு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரையில் அறிவாலயம் வரமாட்டேன்’ என்று கருணாநிதி பிடிவாதம் காட்ட, ‘இன்னொரு மணியம்மை’யாக குஷ்பு உருவாகிவிடுவாரோ என்ற அச்சம் கருணாநிதி குடும்பத்தினருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரின் குடும்ப உறவுகள் கொந்தளித்துப் போயுள்ளனர்.”

இந்த ஆறேழு வரிகளைப் பிரச்சாரப்படுத்த, மூன்று பக்கங்களுக்கு நீட்டி முழக்கப்பட்டிருந்த அக்கட்டுரை, இரண்டு தனிநபர்களின் சொந்த விஷயத்தை இரண்டு தனிப்பட்ட குடும்பங்களின் விஷயத்தை முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையிலும் புறம் பேசியவர்களின் கூற்றின் அடிப்படையிலும் மட்டுமே கட்டியமைத்திருந்தது.

இந்த இதழிற்கு முந்தைய இதழிலேயே (17.2.2013) இதற்கான தூபம் போடப்பட்டிருந்தது. “குடும்பத்தைப் பிரிக்கும் சூனியக்காரி” என்று அட்டைப்படத் தலைப்பாகவே வெளியிடப்பட்ட அந்தச் செய்தியில், குஷ்புவிற்கு முக்கியத்துவம் அளிக்காத தனது குடும்பப் பெண்களை, “குடும்பத்தைப் பிரிக்க வந்த சூனியக்காரி, கோயில், பூஜைன்னு அலையுறா, மந்திரவாதிகளோடு பேசிக்கிட்டு இருக்கிறா?” என்று ஏக வசனத்தில் கருணாநிதி பேசியதாகவும் இதை பெரிதுபடுத்தினால், “குஷ்பு தான் எனது அரசியல் வாரிசு” என அறிவித்துவிடப் போகிறார் என்று குடும்பப் பெண்கள் வருத்தப்படுவதாகவும் செய்தி வெளியிட்டு, “குஷ்பு மீது அவ்வளவு பாசமோ” என்று நக்கலடித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே ‘இன்னொரு மணியம்மை’ கட்டுரை வெளிவந்துள்ளது. இது கருணாநிதியையும் குஷ்புவையும் மட்டுமன்றி, சந்தடி சாக்கில் பெரியார் – மணியம்மை உறவைக் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. கருணாநிதியின் திமுக அரசியலையும் குஷ்புவின் அரசியல் செயல்பாடுகளையும் நேரடியாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் இவர்களின் தனிப்பட்ட வாழ்வை, அவர்களின் குடும்பப் பிரச்னைகளை ஏதோ தமிழகத்தின் அதிமுக்கிய பிரச்சினையைப் போல உளவுப் பிரிவை அமைத்துக் கண்டுபிடித்து வெளியிட்டிருப்பதன் நோக்கம் திமுக தலைவரை இழிவுபடுத்த வேண்டும் என்பது மட்டும்தான். ஜெயலலிதா அரசின் மக்கள் விரோதப் போக்குகள் குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ‘ரிப்போர்ட்டர்’ இதழ், திமுக-வையும் கலைஞரையும் தொடர்ந்து அவதூறு செய்வதும் கடுமையாக விமர்சிப்பதும் ஏன் என்ற பின்புலம் குறித்து யோசித்துப் பார்த்தால் இது ரிப்போர்ட்டரின் பழி தீர்க்கும் படலம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

குமுதம் இதழின் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ஜவஹர் பழனியப்பனுக்கும் குமுதத்தில் முக்கிய பொறுப்பு வகித்திருந்த பி.வி.பார்த்தசாரதி மகன் பா.வரதராஜனுக்கும் இடையே ஏற்பட்ட குமுதம் இதழ் மீதான உரிமைப் போட்டி, அரசாங்கம் தலையிடும் அளவிற்குப் பெரிதானது. தனது நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் வரை வரதராஜன் மோசடி செய்துவிட்டதாக ஜவஹர் பழனியப்பன் காவல்துறையில் புகார் கொடுத்தார். இந்த விஷயத்தில் தலையிட்ட அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, ஜவஹர் பழனியப்பனுக்குச் சாதகமாய் இருந்து, வரதராஜனை கைது செய்ய உத்தரவிட்டார். கைது நடவடிக்கையின் போது, இந்து ராம், விகடன் சீனிவாசன் எனப் பல ஊடகத்துறையினரும் கமிஷனர் அலுவலகத்திற்கே வந்து வரதராஜனை மீட்டுச் சென்றனர்.

அதன் பின்னர், ஊடகத்துறையில் வெளிநாடுவாழ் நபர்கள் 41 சதவிதத்திற்கு மேல் பங்கு வைத்திருக்கக் கூடாது என்ற அரசியல் விதிகளை எல்லாம் பயன்படுத்தி குமுதத்தைத் தனக்கே உரித்தாக்கினார் வரதராஜன். அவர் நிர்வாகப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தனது பழைய பகைக்கு வஞ்சம் தீர்க்கும் வகையில், ‘ரிப்போர்ட்டர்’ திமுக-வை படுமோசமாக விமர்சித்து வருகிறது. அதன் உச்சமாக, ‘இன்னொரு மணியம்மை’ கட்டுரையை வெளியிட்டு தனது ஊடக பலத்தை எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நிறுவியிருக்கிறது.

மக்களுக்கு உண்மைச் செய்திகளை நடுநிலையோடு அளிக்க வேண்டிய ஊடகம் இப்படி நான்கு சுவர்களை எட்டிப்பார்த்து செய்தி வெளியிடுவதும் தனது பகையைத் தீர்த்துக் கொள்ள தனது ஊடக பலத்தைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இனிவரும் காலங்களிலாவது திருந்தவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.