அசாம் மாநிலத் தலைநகரம் கவுஹாத்தியில் ஒரு இளம்பெண்ணின் மீதுநடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் ஊடகங்களின்மூலம் பரவலாக அறியப்பட்டுள்ளது. கவுஹாத்தியில்உள்ள குடிசாலை (Bar) ஒன்றிலிருந்து இரவுநேரத்தில் வெளியே வந்த ஒருஇளம்பெண் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்களால் சுற்றிவளைக்கப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
அசாமைச் சேர்ந்த தனியார் செய்தித்தொலைக்காட்சியின் நிருபர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டஇந்தக் காட்சி, உடனடியாக அவரதுதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பல்வேறு தரப்பினரையும் கொதிப்படையச்செய்த அந்த நிகழ்வு பெரும்விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அசாம் முதல்வரின் எச்சரிக்கைக்குப்பிறகு காவல்துறை விழிப்படைந்தது. முக்கிய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு 45 நிமிடம் தாமதமாகச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்தசப் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகு, இச்சம்பவத்தில் சில அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பெண்ணின் உடலில் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருப்பது அறியப்பட்டிருக்கிறது. தான் தாக்கப்பட்ட போது படம் பிடித்துக் கொண்டிருந்த உள்ளூர் சேனலின் கேமரா குழுவினரிடம் எவ்வளவோ கெஞ்சியும் தம்மைக் காப்பாற்ற அவர்கள் முயற்சிக்கவில்லை என்று அப்பெண் கூறியதாகத் தேசியப் பெண்கள் ஆணைய உறுப்பினர் அல்கா லம்பா கூறியுள்ளார்.
அசாம் மாநில சமூக ஆர்வலரும் அண்ணா அசாரே குழுவைச் சார்ந்தவருமான அகில் கோகோயும் அந்நிருபரின் மீது ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.சம்பவம் நடந்தபோது அந்தக் குடிசாலையில் தான் தொலைக்காட்சி நிருபர் கவுரவ் நியோக் இருந்துள்ளார்.
டி.வி கேமராவை வரவழைத்த பிறகு, “டி.வி கேமரா வந்துவிட்டது நல்ல வெளிச்சமான இடத்துக்கு அந்தப் பெண்ணைக் கொண்டு வாங்க” என்று நியோக் பேசியது அக்காட்சியில் பதிவாகி உள்ளது என்று அகில் கோகோய் குற்றம்சாட்டி உள்ளார்.இந்த வீடியோ பதிவைத் தேசிய மகளிர் ஆணையத்தில் ஒப்படைக்கப்ப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள நியோக் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.அந்தப் பெண்ணைக் காப்பாற்றவே முயற்சி செய்ததாகவும் இந்த வழக்கைத் தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சொல்லியுள்ளார். எனினும், இந்தச் சம்பவம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நியோக்கால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நியோக் கைது செய்யப்பட்டுள்ளார் ; விசாரணை நடைபெற்றுவருகிறது.
இப்படியாக இச்சம்பவத்தின் மீது எழுப்பப்படும் ஐயங்கள், குற்றச்சாட்டுகள், உண்மைகள் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, ‘ஊடக அறம்’ தொடர்பான சில முக்கிய கேள்விகளை இந்நிகழ்வு எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது. அவை:
1. இதுபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளிப்படையாக அடையாளம்காட்டி அப்பெண்ணுக்கு நிரந்தரமான அவமானத்தை ஏற்படுத்துவது எந்த அளவிற்குச் சரி?
2. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு ஊடகவியலாளர், அறம்சார்ந்த மனிதர் என்கிறவகையில் தனது கேமராவை தூக்கி எறிந்துவிட்டு அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பதா? அல்லது ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியை மறந்துவிட்டு நிகழ்வைப்பதிவு செய்து உலகிற்கு அறிவிப்பதற்கு முன்னுரிமை தருவதா?
இதுகுறித்துப் பார்ப்பதற்கு முன் இன்னொரு அம்சத்தையும் சொல்லவேண்டும். பொதுவாகப் பெண்கள் மீது இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடத்தப்படும்போது முன்வைக்கப்படும் பொதுப்புத்தி மனநிலையின் கூறுதான் அது. பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணிற்கு இச்சமூகம் அளிக்கும் நீதி என்பது குற்றங்களின் கொடூரத்தன்மைகளையும் உண்மைத்தன்மைகளையும் பொறுத்தது அன்று. மாறாக அப்பெண்ணின் “கற்பையும்” “ஒழுக்கவாதத்தையும்” பொறுத்ததாகவே முன்வைக்கப்படுகிறது. அதாவது, கலாச்சார ஆணாதிக்கச் சமூகத்தின் தன்னிலையாக அவள் எந்த அளவிற்குத் தன்னை நிறுவிக்கொண்டாள் என்பதைப் பொறுத்தது அது. ஒருவேளை அப்பெண் சுயத்தன்னிலை கொண்டவளாக –கலாச்சாரத்தை அத்துமீறியவளாக இருந்தால் அவள் நீதியைக் கோரும் தகுதியற்றவள்; “இந்தமாதிரி ஒழுக்கங்கெட்டவளுக்கெல்லாம் இப்படித்தான் நடக்கும்” என்ற சமூகநியதிக்கு எடுத்துக்காட்டானவள்; குற்றம் இழைக்கத்தூண்டியவள், ஆக அவள்தான் குற்றவாளி.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்தினவேல் பாண்டியன், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட ஒரு பெண்ணின் வழக்கில் அவளது முந்தைய கால வாழ்க்கை ஒழுக்கம் சார்ந்ததாக இல்லை எனச் சொல்லி அந்த அடிப்படையில் அந்தக் குற்றத்தின் தன்மையை அவர் குறைத்துக்காட்டித் தீர்ப்பெழுதியதும், அது பெரிய சர்ச்சைக்குள்ளானதும் நினைவிற்குரியது. இப்போதும், இந்தப் பிரச்சினையிலும் அந்தப்பெண் குடிசாலைக்கு சென்று வந்தது என்பதையும் “கண்ணியமான ஆடை” உடுத்தியிருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டு, ‘இப்படியான பெண்களுக்கெல்லாம் வேறெப்படி நடக்கும்’ என்றுசொல்லி இந்த வன்முறை நியாயப்படுத்தப்படுவதைக் கவனிக்கவேண்டும்.
இதில் மத்திய பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா முதல் நம்மூர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வரை அடக்கம். மத்தியபிரதேச அமைச்சர் “இந்தியக் கலாசாரத்தின்படி பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. நெறிதவறிய நடத்தை, அருவருப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், நாகரீகமற்ற வாழ்க்கை முறை, பழக்கங்கள் ஆகியன சமுதாயத்தில் குழப்பங்களை அதிகரித்து விடும்” என்ற அளவில் அறிவுறுத்தினாரென்றால் நமது தினமணி ஆசிரியர் அதற்கும் மேலே சென்று மீசையை முறுக்கியபடியே ஒரு நீண்ட தலையங்கத்தைத் தீட்டியிருக்கிறார். “எது நாகரிகம்?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட அத்தலையங்கம், “இந்தக் காட்சியை உலகம் முழுவதும் இணையதளத்தில் மேலூட்டம் தந்து அனைவரையும் பார்க்கச் செய்தது சரியா? இதைச் செய்த நபரை “சைபர் கிரைம்’ குற்றத்தில் கைது செய்ய வேண்டாமா? இந்த வன்செயலை மீண்டும் மீண்டும் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது சரியா?” என்றெல்லாம் பேசி ஊடக அத்துமீறலைக்கண்டு கொந்தளிப்பதாகக் காட்டிக்கொண்டாலும் இறுதியில் தனது சொந்தமுகத்தை வெட்கமேயில்லாமல் வெளிக்காட்டியிருக்கிறது.
“ஆண்கள் மட்டும்தான் மது அருந்த வேண்டுமா? ஏன் பெண்கள் குடிக்கக்கூடாதா? ஆண்கள் மட்டும்தான் எப்படி வேண்டுமானாலும், எங்கேயும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கட்டுப்பாடு இல்லாமல் திரிய முடியுமா? பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா? என்று பெண்ணியவாதிகள் கேட்கிறார்கள். மதுக்கூடங்களுக்குச் செல்லும் சமஉரிமை பெண்களுக்கும் நிச்சயமாக உண்டு. ஆனால், சமஉரிமை கோருபவர்கள், ஆணுக்குச் சரிநிகராகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் அங்கே தங்களுக்குப் பாதுகாப்பாக சமூகம் வந்து நிற்க வேண்டும் என்று விரும்பினால் எப்படி?” என்று உளங்கொதிக்கிறது.
மேலும், “கற்பைவிட இன்பம்தான் பெரிது என்று மகளிரும், ஒழுக்கத்தைவிடப் பணம்தான் பெரிது என்று ஆடவரும் நினைக்கத் தொடங்கினால், சமுதாயம் இதுபோன்ற பல சீர்கேடுகளைச் சந்தித்தே தீரவேண்டும். கட்டுப்பாடே இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு நாம் காடுகளில் திரிந்திருக்கலாமே, சில ஆயிரம் ஆண்டுகளை வீணாக்கி நாகரிக வாழ்க்கை முறையை உருவாக்கி இருக்கவே தேவையில்லையே… எதற்கும் துணிந்தவர்கள் எது வந்தாலும் எதிர்கொள்ளவும் துணிய வேண்டும் என்பதுதான் குவாஹாட்டி வழங்கும் பாடம்!” என்று கவுஹாத்திச் சம்பவத்தைக் கண்டு, அந்த ஆணாதிக்கக் கலாச்சார மனம் உள்ளூர குதூகலிக்கிறது.
ஒரு பெண் ஒழுக்கக்கேடானவளாக, விபச்சாரியாக, எப்படியானவளாக இருந்தாலும் அவளை வன்முறையாகப் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்துவதென்பது சட்டரீதியிலும் சரி, அறவியல் ரீதியிலும் சரி ஏற்க இயலாதது. கணவனே ஆனாலும் கூட விருப்பமின்றிப் புணர்வது ஒரு குற்றச்செயல்தான். “கண்ணியமான” உடையின் வரையறை என்பது காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் வேறுபடுவது. பெண்ணின் தனிப்பட்ட வசதிகளைப் பொறுத்தது. நமது அரசுப்பள்ளிகள் ஆசிரியைகளைச் சுடிதார் உடுத்திவர அனுமதிப்பதில்லை. அவர்கள் வரையறையில் சுடிதார் என்பதே “கண்ணியமற்ற” உடை. ஆனால் பலமைல் தூரங்களைக் கடந்து, அல்லது இருசக்கர வாகனங்களில் பயணித்துச் செல்லும் (ஒருசில) ஆசிரியைகளுக்குப் புடவையை விடச் சுடிதாரே கண்ணியமான உடை. ஆக, உடை போன்றவற்றைக் காரணம்காட்டி இத்தகையப் பாலியல் வன்முறைகளை நியாயப்படுத்துவது ஏற்கஇயலாதது ; அநீதியானது. ஊடக அதிகாரமுள்ள நாளிதழான தினமணி, செய்திகளின் உண்மைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கைவிட்டு தனது கருத்தியலைப் பரப்புவதற்கான வாய்ப்பாக நிகழ்வுகளைப் பயன்படுத்திக்கொள்வது கண்டிக்கத்தக்கது.
இனி, ‘ஊடக அறம்’ குறித்து எழும்பியுள்ள முதற்குறிப்பிட்ட இரண்டு கேள்விகள் பற்றிச் சிறிது காண்போம். முதற்கேள்வி, ஒரு பெண்ணை இப்படி முழுமையாக அடையாளம் காட்டி அவளை அவமானப்படுத்துவது சரியா? என்றவாதத்தை ஒட்டியது. பொதுவாக ஊடகங்கள் இப்படியான சம்பவங்களில் , அதிலும் பதின்வயதினருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ரொம்பவும் கரிசனத்தோடு நடந்துகொள்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
உதாரணமாக, பிரச்சினைக்கு ஆளானவர்களின் இயற்பெயரை மறைத்து, ஒரு மாற்றுப்பெயரால் அவர்களை விளிப்பதும், வீடியோ பதிவுகளில் முகங்களை அடையாளம் காணமுடியாதபடி மறைத்து ஒளிபரப்புவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஊடக அறத்தைக் கைவிட்டு, 17 வயதான ஒரு இளம்பெண்ணை – பதினொன்றாம் வகுப்பு மாணவியை, உலகமே அறியும்படி துல்லியமாகப் படம்பிடித்துக்காட்டியதும் அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதும் கண்டனத்திற்குரியது. மேலும் இப்படியான தொடர் ஒளிபரப்புகள், பார்வையாளர்களிடையே “பாலியல் கிளர்ச்சிக்கான” அம்சமாக மாறும் அவலமும் நேர்ந்துவிடுகிறது. எனவே இத்தகைய பிரச்சினைகளில் ஊடகங்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது கேள்வி, இப்படியான சம்பவத்தில் ஒரு பத்திரிக்கையாளரின் கடமை என்ன? காப்பாற்றுவதா? அல்லது படம்பிடிப்பதா? இதுகுறித்து, இந்து நாளிதழில், பாரிஸில் உள்ள ஒரு பன்னாட்டு சட்டநிறுவனத்தில் சட்டவியல் அறிஞராக உள்ள கரண்சிங் தியாகி ஒரு முக்கிய கட்டுரையை எழுதியிருக்கிறார்.
“மற்றவர்களிடம் எத்தகைய அறவியல் பண்புகள் இருக்கவேண்டும் என பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்களோ அந்த அறவியல் பண்புகளை அவர்கள் எப்போதும் கடைபிடிப்பதில்லை என்பதைக் கவுகாத்தி சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது” என்று சொல்லித் தனது கட்டுரையைத் துவங்கும் கரண்சிங், தனது நினைவுகளை அசைபோட்டபடி கருத்துக்களை முன்வைக்கிறார். இனி அவரது கூற்று:
“2010 ஆம் ஆண்டு எனது சட்டப்பள்ளியால் ஒருங்கிணைக்கப்பட்ட திரைவிழாவில் The Death of Kevin Carter : Casualty of the Bang Bang Club என்ற ஆவணப்படத்தைப் பார்த்தது எனக்கு நினைவிற்கு வருகிறது. அந்த அமெரிக்க ஆவணப்படம் வடஆப்ரிக்கப் புகைப்பட நிருபர் கெலின் கார்ட்டரின் தற்கொலையைப் பற்றியது.
1993 ஆம் ஆண்டில் கார்ட்டர், சூடான் நாட்டிற்கு ஒரு சிறுபயணம் மேற்கொண்டார். அங்கே பட்டினியாலும் வயிற்றுப்போக்காலும் சுருண்டுகிடந்த ஒரு சின்னப்பெண்ணைக் கொத்தித் தின்பதற்கு ஒரு கழுகு குறிவைத்துக் காத்திருந்ததைப் பார்த்தார்.அந்தக் கழுகை எந்தவகையிலும் தொந்தரவு செய்யாமல், அந்தச் சின்னப் பெண்ணை அது நெருங்கும் தருணத்திற்காக 20 நிமிடம் காத்திருந்து, அது நெருங்கியதும், துல்லியமாகப் படமெடுக்க புகைப்படக்கருவியைத் அதன் சட்டகத்தில் சரியாகப் பொருத்தி, அந்தக் காட்சியைப் பதிவாக்கினார்.
அந்தப் புகைப்படம் 1994 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றது. ஒரு கருத்தரங்கில், அந்தச் சின்னப்பெண்ணிற்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி அவரை நோக்கி எழுப்பப்பட்டது. அவரிடம் அக்கேள்விக்கு விடையில்லை. உயிருக்குப் போராடிய அந்தப் பெண்ணிற்கு இவர் எந்த உதவியும் செய்யவில்லையா? இல்லை. வெறும் புகைப்படத்தை மட்டும் எடுத்துவிட்டு அந்தப் பெண்ணிற்கு எந்த உதவியும் செய்யாததற்காகக் கார்ட்டர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அத்தகைய விமர்சனங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார்.
அந்த ஆவணப்படம் பதில் தெரியாத சில கேள்விகளை நம்முன் எழுப்புகிறது. நான் என்னை நோக்கியே கேட்டுக்கொண்டேன். எத்தனை பத்திரிக்கையாளர்கள் கழுகை விரட்டிவிட்டு அந்தப் பெண்ணுக்கு உதவியிருப்பார்கள்? எத்தனை பேர் புகைப்படம் எடுத்திருப்பார்கள்? கவுகாத்திப் பாலியல் தாக்குதலை ஒளிப்பதிவாக்கிய அந்தப் பத்திரிக்கையாளர் மீது பலரது கோபக்கனல் கொந்தளித்தபோது, என் மனம் கெவின் கார்ட்டரை நோக்கித் திரும்பியது. பத்திரிக்கையாளர்கள் ஒளிப்பதிவுக் கருவியைக் கீழேபோட்டுவிட்டு உதவி செய்யவேண்டுமா அல்லது வெறும் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டுமா?”
ஊடகஅறம் குறித்த இந்த முக்கியமான கேள்வியை எழுப்பிய கரண்சிங், அதற்கு மிக முக்கியமான பதிலொன்றையும் அவரது நினைவுகளிலிருந்து அளிக்கிறார்.
“பல ஆண்டுகளுக்கு முன், மார்ட்டின் லூதர் கிங், இதுபோன்ற அறிவுரையை புகழ்பெற்ற ‘life’ பத்திரிக்கையின் புகைப்படக்காரருக்கு அளித்த ஒரு சுவையான நிகழ்வு நினைவிற்கு வருகிறது. கருப்பினக் குழந்தைகள் சிலர் வெள்ளைப் போலிஸ்காரர்களால் முரட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ளப்பட்ட ஒரு நிகழ்வின்போது, அந்தப் புகைப்படக்கலைஞர் தனது கேமராவைக் கீழே போட்டுவிட்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிவந்தார். இதழியலும் அறவியலும் குறித்த ரான். எஃப். ஸ்மித் அவர்களின் நூல், மார்ட்டின் லூதர் கிங் அந்த புகைப்பட நிருபருக்குச் சொல்லிய அறிவுரையைப் பதிவு செய்துள்ளது : “இப்படிச் செய்வதன் மூலம் இந்தச் சம்பவத்தை உலகம் அறிந்துகொள்ள இயலாமல் போகிறது. ஏனெனில் நீங்கள் அதைப் படமெடுக்கவில்லை. நான் இரக்கமில்லாமல் பேசுவதாக நினைக்கவேண்டாம். எங்களது போராட்டத்தில் மற்றுமொரு நபராக நீங்கள் இணைந்து கொள்வதைவிட நாங்கள் அடித்து ஒடுக்கப்படுவதைப் புகைப்படமாக்கி உலகிற்குத் தெரிவிப்பதுதான் ரொம்பவும் முக்கியமானது”
கருப்பினத்தலைவர்,சமூகப்போராளி மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் இவ்வறிவுரையைச் சுட்டிக்காட்டியதன் மூலம், ஒரு அறம் சார்ந்த மனிதருக்கும் பத்திரிக்கையாளருக்குமான வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக்காட்டுகிறார் கரண்சிங். ஆனால் கிங்கின் கருத்தை அவர் முழுமையாக ஏற்கவில்லை. “புகைப்படமாக்கி உலகிற்கு அறிவிப்பதை” ஒரு அறச்செயல்பாடாக மேற்கொள்ளவேண்டியது உண்மைதான். ஒரு இதழாளரின் நோக்கம் என்பது செய்தியை அதன் ஆழமான தளங்களுக்குள் புகுந்து வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதில் அய்யமில்லை. நிகழ்விற்கான காரணிகளின் மீது கவனம் குவிக்கச்செய்வதாக இருக்கவேண்டுந்தான் . ஆனால் நிகழ்வில் தொடர்புடைய பெண்ணின் சம்மதமோ, அவர்மீதான் அனுதாபமோ இல்லாமல் அந்த வீடியோ காட்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய செயல், நிகழ்வின் மீது கவனம் ஈர்ப்பதை விட்டுவிட்டு, அக்காட்சியைக் கண்டு ரசிக்கும் மனங்களுக்கு விருந்தாக அமைகிறது என்பதைக் கரண்சிங் சுட்டிக்காட்டுகிறார். மேலும் :
இதழாளர்களும் செய்தி ஊடகங்களும் மற்றவர்களிடம் எத்தகைய நடைமுறைகளை எதிர்பார்க்கிறார்களோ அதை அவர்களும் குறிப்பிட்ட அளவிற்கு மதிக்கவேண்டியவர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் கரன்சிங் வலியுறுத்துகிறார். கவுஹாத்தி பிரச்சினையைப் பொறுத்தமட்டில் ஒரு இதழாளரின் பொருத்தமான செயல்பாடு எப்படி இருக்கவேண்டுமெனில், அந்த வீடியோ படக்காட்சியில், அக்கொடுமைகளை இழைத்தவர்களின் முகங்களைப் பதிவுசெய்வது என்கிற அடிப்படையிலேயே இருந்திருக்கவேண்டும். ஏதோ ஒருவகையில் அந்தப் பெண்ணைத் தன்னிச்சையாகச் சென்று காப்பாற்றுவதாகவோ அல்லது உடனடியாகக் காவல்துறைக்குச் சொல்வதாகவோ அது அமைந்திருக்கவேண்டும்.
ஒரு இதழாளரின் கடமை என்பது என்ன நடக்கிறதோ அதைப் படம்பிடித்துக்காட்டி உண்மைகளைச் சொல்வதுதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்கள் அதைச் செய்யும்போது, இன்னும் பெரிதாக நம்முன் உருவாகும் அறவியல் கேள்வியைத் தவிர்த்துவிடக்கூடாது. ஒரு மனித உயிரி என்கிற வகையில் இந்தச் செயல் மூலம் அவர்கள் என்ன பங்களிக்கிறார்கள் என்பதுதான் அது . இதழாளர்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக்காட்டிலும் அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வரையறுக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள் . இந்த அறவியல் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல்தான் கெல்வின் கார்ட்டர் தற்கொலை செய்துகொண்டார்.