தமிழ் சினிமாவின் நூறாண்டு தாண்டிய வரலாற்றில், புர்கா அணிந்த மனைவியை அழைத்துக் கொண்டு, பூ மார்க்கெட்டில் இரண்டு முழம் பூ வாங்கித் தரும் முஸ்லிம் ஆண் குறித்த காட்சி அமைப்பு இதுவரை வந்திருக்கிறதா? தமிழ்நாட்டில் வாழும் சுமார் 6 சதவிகித முஸ்லிம் மக்களின் தனி வாழ்க்கை குறித்த படைப்புகள் தமிழ் சினிமாவை இன்னும் பெரிதாக எட்டவே இல்லை. அதே வேளையில், முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் நிறைந்த திரைப்படங்களுக்கு இங்கு பஞ்சம் இல்லை.
கோவையைச் சேர்ந்த இயக்குநர் அருண் கார்த்திக் ‘நசீர்’ படத்தை இயக்கியிருக்கிறார். கோவையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஒன்றில் இரண்டு ஆண்டுகள் தங்கி, இந்தப் படத்தைத் தந்திருக்கிறார். மதக்கலவரங்களாலும், குண்டுவெடிப்பாலும் பிளவுண்ட கோவை நகரத்தின் முஸ்லிம் ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையைப் பேசுகிறது இந்தப் படம். நசீர் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன். துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாகப் பணிபுரிபவன். தன்னைச் சுற்றி நிகழும் வகுப்புவாத உரையாடல்களுக்கும், அறிவிப்புகளுக்கும் செவிசாய்க்காதவன். இந்தக் காலத்திலும் மனைவிக்குக் காதல் கடிதம் எழுதும் அளவுக்குத் தன் மனைவியை நேசிப்பவன். தனிமை குறித்து கவிதை எழுதும் கவிஞன். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு இந்தச் சமூகம் தரும் பரிசு என்ன என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் பதிவு செய்திருக்கிறது ‘நசீர்’.
படம் பார்க்க விரும்புபவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு, இதற்குக் கீழே இருப்பவற்றைத் தேவை இருப்பின் படிக்கவும்… (SPOILERS AHEAD)
’நசீர்’ படம் முழுவதும் வன்முறையையோ வெறுப்பையோ நாம் முழுவதுமாக பார்ப்பதில்லை. ஆனால், நசீருடன் பலவற்றைக் கேட்கிறோம். படம் முழுவதும் ‘ஒலி’ என்ற அம்சத்தின் அடிப்படையில் நசீரின் சூழலைப் புரிந்துகொள்ளச் செய்வதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் காட்சியில், அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கு சொல்லப்படும் வேளையில், உறங்கிக் கொண்டிருக்கும் நசீரின் அறிமுகம் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது. மற்றொரு காட்சியில், நசீரும் அவரது மனைவி தாஜும் முஸ்லிம்கள் வாழும் தெருக்கள் வழியாகவும், அதன்பின்பு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பூ மார்க்கெட்டிற்கும் செல்கின்றனர்.
முஸ்லிம் தெருக்கள் வழியாகச் செல்லும்போது, முஸ்லிம்கள் ஒன்றிணைதல், ‘தொப்பி போடலாமா, வேண்டாமா?’ போன்ற விவாதங்களில் முஸ்லிம்கள் ஈடுபடாமல் இருத்தல், இஸ்லாமிய அரசு இருந்த காலகட்டத்தின் பெருமை முதலானவை குறித்து ஒலிபெருக்கி வழியாகக் கேட்க நேர்கிறது. அந்தப் பகுதியைக் கடந்த பிறகு, ’இந்து தர்மத்திற்கு எழுச்சி தேவைப்படுகிறது; பாரதம் இந்து நாடு. அதற்குத் தற்போது வெளியில் இருந்து வந்தவர்களால் ஆபத்து வந்திருக்கிறது. இந்து தர்மத்தின் அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டும்’ என்ற ரீதியிலான அறிவிப்பைக் கேட்க முடிகிறது. இதன் மூலம் முஸ்லிம்களை ஒன்றிணையக் கோரி ஒரு பக்கமும், இந்துக்களை ஒன்றிணையக் கோரி மற்றொரு பக்கமும் நிகழ்த்தப்படும் பிரசாரங்கள் நசீரைச் சீண்டவில்லை என்றும், நசீர் வாழும் இடத்தின் அரசியல் குறித்த சித்திரமும் பார்வையாளர்களிடம் வரையப்படுகிறது.
மத ரீதியான திரட்சிக்கான அழைப்பு என்றபோதும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் இந்துத்துவ அமைப்புகள் இந்துக்களை ஒன்றிணைவதற்காக அழைப்பதற்கும், முஸ்லிம்கள் அழைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஓநாய் கூட்டமாக வாழ்வதற்கும், ஆடுகள் கூட்டமாக வாழ்வதற்குமான வித்தியாசம் அது. தமிழ் சினிமாவில் மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த ‘சமன்படுத்தும்’ அரசியல் நசீரில் இடம்பெற்றிருப்பது வருத்தத்திற்குரியது.
நசீர் படத்தின் இறுதிக் காட்சியை ஒட்டியே மொத்த கதையும் நகர்கிறது. இந்துத்துவ கும்பலால் வீழ்த்தப்பட்டு சாலையில் உயிரற்றுக் கிடக்கும் நசீரைப் புரிந்துகொள்வதற்காகவே முந்தைய அனைத்துக் காட்சிகளும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ‘நல்ல முஸ்லிம்’ என்ற பொதுச் சமூகத்தின் வரையறைக்குட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக தன் மனைவியை அடிமைப்படுத்தும் முஸ்லிம் ஆண் வேடமாக இல்லாமல், மனைவி மீது அதீத நேசம் கொண்ட கணவனாக நசீர் இருக்கிறான். அதிகாலை பாங்குச் சத்தம் கேட்டும், தொழுகைக்குச் செல்லாதவன். தான் பணியாற்றும் கடையில் கிருஷ்ணர் சிலையைத் தூய்மைப்படுத்தி, அங்கிருக்கும் இந்துக் கடவுள் படங்களுக்கு மாலையிடுபவன். சைவப் பிள்ளையின் வீட்டு வேலைக்கு ஒத்தாசை செய்பவன். தன்னுடன் பணியாற்றுபவன் முஸ்லிம்களைப் பற்றி அவதூறாகப் பேசும்போதும் அதனைக் கண்டும் காணாதிருப்பவன். தனது பெயரையோ, தான் வாழும் பகுதியையோ தவிர நசீர் எந்தவித இஸ்லாமிய அடையாளங்களையும் தாங்கியிருப்பவன் அல்ல.
இப்படிப்பட்ட ஒரு ‘நல்ல முஸ்லிம்’ கொல்லப்படும்போது, ‘அட, இவனப் போய் கொன்னுட்டீங்களே!’ என்ற ரீதியில் பார்வையாளர்களிடம் பரிவை உருவாக்குவதாக அமைந்திருக்கிறது நசீர். நசீரை மேலும் ‘ஐயோ, பாவம்!’ என்று கருதுவதற்கு, அவனுக்கு மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் ஒருவனும், புற்றுநோயால் அவதிப்படும் அம்மாவும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ளும் நசீருக்குப் பொருளாதார நெருக்கடியும் இருக்கிறது. இந்தப் படத்தை அர்ஜுன் சம்பத் பார்த்தால் கூட, ‘ச்சே, இப்படி ஒரு நல்லவனை இப்படி பண்ணிட்டாங்களே!’ என்று பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்குப் பார்வையாளர்களிடம் பரிவைக் கோருகிறது ‘நசீர்’.
மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தைக் கொண்டாடுபவரும், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளை மனிதர்களாக கமல் சித்தரித்துவிட்டார் என்று விமர்சனம் எழுதியவருமான பிரபல தமிழ் சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ‘நசீர்’ படத்தைக் கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் மூர்க்கமாகவும் மென்மையாகவும் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்துபவர்களாலும் ‘நசீர்’ கொண்டாடப்படுகிறது. இவற்றை மேற்கூறிய விமர்சனத்தில் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த அரசியல் புரிதல் குறித்த பிரச்னைகளைத் தாண்டி, ‘நசீர்’ ஓர் அபூர்வமான படைப்பாக உருவாகியிருக்கிறது. இயக்குநரின் Hindu gaze இந்த அரசியல் பிரச்னைகளுக்கு ஓர் காரணமாக இருந்திருக்கலாம். படத்தில் பணியாற்றியவர்களிலும் பெரியளவில் முஸ்லிம்கள் யாரும் இல்லை. இதற்கு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் மத ரீதியான சினிமா புறக்கணிப்பு முக்கியக் காரணம். அதை மாற்றுவதற்குரிய பணிகளை முஸ்லிம்கள் செய்வதற்கான காலம் இது.
’நசீர்’ முஸ்லிம் படைப்பாளிகளிடம் இருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். எனினும் அருண் கார்த்திக் அதனைத் திறம்படச் செய்திருக்கிறார். ’பிரபஞ்சத்திற்கு நான் ஒரு நொடி… எனக்கு இந்தப் பிரபஞ்சம்?’ என்று நசீரின் தனிமையில் இருந்து பிறக்கும் கவிதையை யாராலும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
‘நசீர்’ நேர்மையான அரசியல் படைப்பு.