ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் கொடுப்பது எப்படி?

  சமூக வலைதளங்களில் பிற மதத்தை அல்லது சாதியைப் பற்றி இழிவாகப் பேசுவதன் வழியாக மக்களிடையே குழப்பத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனும் குரூர நோக்கத்துடன் சில சமூக விரோதிச் சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

  ஒரு ஆன்ட்ராய்ட் மொபைலும், இன்டெர்நெட் வசதியும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் நான் பேசுவேன்; அதை யாரும் கேள்விக்கேட்க முடியாது என்பது போலவே பலரின் பதிவுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்கும்போது நமக்கு கோபம் வரலாம். அது இயல்பு. ஆனால் அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஆபாச வார்த்தையைக் கொண்டு திட்டுவது, அவர்களுக்கு கொலை மிரட்டல் கொடுப்பது என சிலர் பின்னூட்டமிடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுவொரு மிகத் தவறான, கண்டிக்கத்தக்க வழிமுறை. எனவே ஒருவர் சமூக ஊடகங்களில் மோசமாகக் கருத்துரைக்கும்போது அந்தத் தளத்திலேயே அது குறித்து ரிப்போர்ட் செய்வதும், பிறகு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பதுமே சரியான வழிமுறை.

  ஆன்லைன் வசதி இருப்பதால் காவல்துறையில் உடனடியாக புகார் அளிப்பது முன்பைக் காட்டிலும் இப்போது எளிதாகிவிட்டது. சரி, எப்படி ஆன்லைன் மூலமே புகார் கொடுப்பது என்று கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கான வழிமுறையை இங்கு பார்ப்போம்.

  eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0 எனும் இந்த லிங்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவலை ஒன்றன் பின் ஒன்றாகப் பதிவு செய்ய வேண்டும். மாவட்டம், இடம், ஆகியவை தாங்கள் எங்கு வசிக்கிறீர்களோ அந்த விலாசத்தை மையமாகக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

  பூர்த்தி செய்யவேண்டிய படிவம்.

  உங்கள் விலாசம் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை சரியாகப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில் அந்த எண்ணுக்குத்தான் பதிவு செய்யப்பட்ட புகார் சம்பந்தமான குறுந்தகவல் கிடைக்கும். மேலும் அதன் மூலமே உங்களைத் தொடர்புகொள்ளவும் முடியும்.

  Subject என்று உள்ள இடத்தில் Cyber Offences இணையதளக் குற்றங்கள் என்பதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். Description-ல் உங்களுடைய புகாரை சுருக்கமாகவும் தெளிவாகவும் புரியும்படி பதிவு செய்யுங்கள். பேஸ்புக் பதிவாக இருந்தால் அந்தப் பதிவின் லிங்கை காபி செய்து அங்கு பேஸ்ட் செய்து விடுங்கள்.

  அதன் கீழே உள்ள அட்டாச்மன்ட்டில் அந்த சமூக வலைதள பதிவின் ScreenShot புகைப்படம் மற்றும் அந்தக் குற்றம் சாட்டப்படக்கூடிய நபரின் தகவல்களைப் பதிவேற்றம் செய்துக்கொள்ளுங்கள்.

  அதன் பிறகு உங்கள் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் கிடைக்கும்.
  அந்தப் புகார் எண்ணை வைத்து உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அதில் உள்ள லிங்கை சொடுக்கி அறிந்துகொள்ளலாம்.

  சாதாரண ஒரு சமூக வலைதளப் பதிவு என்று எண்ணாமல் நாம் முயற்சிக்கும் இதுபோன்ற புகார் நடவடிக்கைகளில் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்தால், அந்த நபருக்கு IPC இ.பி.கோ. பிரிவு 153(A) அடிப்படையில் இரு பிரிவினருக்கு மத்தியில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தமைக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது, பிரிவு 295(A), 298 அடிப்படையில் மத நம்பிக்கையை இழிவுபடுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, பிரிவு 499 அவதூறு தெரிவித்தல், Information Technology Act Section 66(A) அடிப்படையில் 3 ஆண்டுகளை வரை சிறை தண்டனை போன்ற நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்படலாம்.

  கெடு நோக்குடன் செயல்படுவோரை சட்டரீதியாக தண்டிப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பல புகார்கள் குவிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது இதுபோன்ற தவறான சமூக வலைதளப் பதிவுகள் நிச்சயம் குறையும்.

  குறிப்பு:
  இந்த இணையதளப் புகார் எனும் வசதியை நேரில் சென்று கொடுக்க இயலாத நிலையில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், நம்முடைய புகாரை வாங்க காவல்நிலையத்தில் மறுக்கிறார்கள் எனும் பட்சத்தில் இந்தப் புகார் எண்ணை நீங்கள் கூடுதல் நடவடிக்கை எடுக்க ஆதாரமாகவும் பயன்படுத்தலாம். ஆனாலும் அவசரமான சூழ்நிலைகள், குற்றவாளியை உடனே பிடிக்க வேண்டிய தருணங்கள், பெரிய குற்றங்கள் சம்பந்தப்பட்ட உடனடி நடவடிக்கை தேவைப்படும் இடங்களில் புகார்களை காவல்நிலையத்திற்கே சென்று கொடுப்பது சிறந்தது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.