ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (1) – கெளரி லங்கேஷ்

இந்துத்துவக் கொள்கைகளுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும், சாதியத்தை எதிர்த்தும் மிகத் துணிச்சலாக தன் எழுத்துகளின் மூலம் குரல் உயர்த்திய பெண் போராளி கௌரி லங்கேஷ். பல பத்திரிகையாளர்கள் அதிகார வர்க்கத்தின் நிழலில் அதற்குப் பணிவிடை செய்து வரும் சூழலில், அதிகாரத்திற்கு எதிராய் சமரசமில்லாமல் சமர் செய்த ஆளுமை அவர்.

‘சண்டே மிட்டே’ என்கிற வாரப் பத்திரிகையில் தொடங்கியது இவருடைய எழுத்துப் பயணம். மிகக் குறுகிய காலத்திலேயே பெங்களூருவில் உள்ள ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’-வில் அவருக்கு பத்திரிகையாளர் பணி கிடைத்தது. பிறகு ‘ஈநாடு’ என்கிற தொலைக்காட்சியில் பணிப்புரிந்தார். 2000ல் இவரின் தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவர் எடிட்டராக இருந்து ‘லங்கேஷ் பத்ரிக்கே’ எனும் இதழை நடத்தி வந்தார். இவருக்கும் இவரின் சகோதரருக்கும் இடையே பத்திரிகையில் வெளியான கருத்துகளால் மோதல் ஏற்பட்டது. லங்கேஷ் எழுத்துகள் நக்சல்களுக்கு ஆதரவாக இருப்பதாக கௌரியின் சகோதரர் குற்றம் சாட்டினார். கௌரி அதற்கு மறுப்பு தெரிவித்து, லங்கேஷ் பத்திரிக்கையிலிருந்து விலகி ‘கௌரி லங்கேஷ் பத்ரிக்கே’ என்று தனியே ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். 50 நபர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் தன் உயிர் பிரியும் வரை எடிட்டராகப் பணிபுரிந்தார்.

நக்சலைட்டுகளை வன்முறையை விடுத்து அரசிடம் சரணடையக் கோரி கர்நாடக அரசு நடத்திய பேச்சு வார்த்தையின்போது அரசு தரப்பில் இவரொரு உறுப்பினராக இருந்தார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக தொடங்கப்பட்ட ‘கோமு சௌகார்டா வேதிக்கே’ (KomuSouharda Vedike) என்கிற மன்றத்தின் தலைமைப் பொறுப்பிலும் அவர் இருந்துள்ளார்.

செப்டம்பர் 2017ல் பல அரசியல் காரணங்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை எதிர்த்து நாடு முழுவதும் பல பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #IAmGauri என்கிற வாசகம் போராட்டக் களமெங்கும் ஒலித்தது.

கௌரியின் மறைவுக்குப் பின் அவரைக் கௌரவிக்கும் வகையில் ‘Anna Politkovskaya Award’ வழங்கப்பட்டது. அந்த விருது ரஷ்யாவில் 2006ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ‘Anna Politkovskaya’ என்ற பத்திரிகையாளரின் நினைவில் வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில் தாலிபானுக்கு எதிராகப் போராடிய குலாலாய் இஸ்மாயில் (Gulalai Ismail) என்பவருடன் சேர்த்து ‘Reach all women in war’ என்கிற இன்னொரு விருதும் கெளரிக்கு வழங்கப்பட்டது.

சித்தானந் ராஜ்கத்தா என்கிற பத்திரிகையாளரை 1980ல் திருமணம் செய்தவர் கெளரி லங்கேஷ். திருமணம் ஆன ஐந்து ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது என்றாலும் இருவரிடையே தொடர்ந்து நட்புறவு இருந்து வந்தது. கெளரியின் மறைவின்போது சித்தானந் ராஜ்கத்தா, “இடதுசாரி, மதச்சார்பற்றவர், இந்துத்துவ எதிர்ப்பாளர் என்பனவெல்லாம் இருக்கட்டும். என்னைப் பொறுத்தவரையில் அவள் என் தோழி, என் காதலி. அதையும் தாண்டி அழகின் சிகரம் அவள்” என்று கெளரி மீதான தன் அன்பை வெளிப்படுத்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.