ஊடகத் துறையில் தடம் பதித்த பெண் ஆளுமைகள் (2) – ராணா அய்யூப்

மும்பையில் ஓர் இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்து புலனாய்வு ஊடகவியலில் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமையாக மிளிர்வது மட்டுமின்றி, மத வன்முறைகளுக்கு எதிராகவும் படுகொலைகள், கலவரங்கள் பற்றியும் துணிச்சலாக எழுதி வருபவர் ராணா அய்யூப். இவர் தெஹல்கா (Tehelka) என்ற புலனாய்வுப் பத்திரிக்கையில் பணிபுரிவதற்கு முன்பு பல செய்தி ஊடகங்களில் எழுதி வந்தார்.

தெஹல்காவில் இவர் பணியாற்றியதுதான் இவரது எழுத்துப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்நிறுவனம் 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் பின்னணியைக் கண்டரியும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தது. சுமார் 10 மாதங்கள் கள ஆய்வு செய்து அது தொடர்பான செய்திகளைச் சேகரித்தார். உயிரைப் பணயம் வைத்து இவர் வெளிக்கொணர்ந்த திடுக்கிடும் உண்மைகளையெல்லாம் தெஹல்கா வெளியிட மறுக்கவே, அவற்றை “Gujarat Files: Anatomy of a cover up” என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார் ராணா. 2002ம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் எவ்வாறு மூடி மறைத்தனர் என்பதை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்தியது.

உண்மையில், செய்தி சேகரிப்பிற்காக ராணா மேற்கொண்ட புலனாய்வு உத்திகள் வியக்கத்தக்கவை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டியூட்டின் மாணவியாக மைதிலி தியாகி (Mythili Tyagi) என்ற பெயரில் கிட்டத்தட்ட 10 மாத காலம் அகமதாபாத்தில் தங்கியிருந்து ரகசியமாக தகவல்களைத் திரட்டினார் ராணா. பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பலதரப்பட்ட மக்கள் என அனைவரையும் சந்தித்து கருத்துகளைப் பெற்று ரகசியமாக ஒலிப்பதிவு செய்தார். அவற்றையெல்லாம் அவரது புத்தகம் உள்ளடக்கியிருப்பதால்தான் குஜராத் அரசியல்வாதிகளிடையே பெரும் பதற்றத்தை அது ஏற்படுத்தியது. அப்புத்தகத்தை கௌரி லங்கேஷ் கன்னடத்தில் மொழிப்பெயர்த்து லங்கேஷ் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். அது வெளியான ஒரு மாதம் கழித்து கௌரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராணா அய்யூபை உலக அளவில் அதிக அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் முதல் 10 எழுத்தாளர்களுள் ஒருவர் என Time Magazine மற்றும் One Press Coalition ஆகியவை இணைந்து வெளியிட்டன. இணையதளம் வழியாக ஆபாசமான படங்கள் இவருக்கு அனுப்பியும், ஆபாச வீடியோக்களில் இவருடைய முகத்தை மார்ஃப் செய்து சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றம் செய்தும் தொடர்ச்சியாக இவர் அச்சுறுத்தப்படுகிறார். பல கொலை மிரட்டல்கள், பாலியல் ரிதியிலான மிரட்டல்களை தினமும் சந்தித்து வருகிறார். ஒருகட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையம்கூட ராணாவைப் பாதுகாக்கக் கோரி இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.

பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 2011ல் குடியரசுத் தலைவர் கையால் சான்ஸ்கிருதி (sanskriti) விருது பெற்றார் ராணா அய்யூப். Global Shining Light Award, துணிச்சலான எழுத்திற்காக McGill Medal, 2018ல் Most Resilient Global Journalist Award என உலக அளவில் பலமுறை கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தெஹல்காவில் இவரது சக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு வருவதாகக் கூறி, அதற்குத் தன் எதிர்ப்பைக் காட்டினார். அதைத் தொடர்ந்து தன் வேலையையும் ராஜினாமா செய்தார். தற்போது வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், கார்டியன் & ஃபாரின் பாலிசி போன்றவற்றில் உலகளவில் நிகழும் பல அநீதிகளை எதிர்த்து எழுதிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.