லிபியாவிலிருந்த தங்களின் தூதரகம் தாக்கப்பட்டு, தூதர் உட்பட நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ஹிலாரி கிளின்டன், “அய்யோ, இதென்ன? அவர்களின் விடுதலைக்கே நாம்தானே காரணமாக இருந்தோம். பெங்காஸியை அழிவிலிருந்து காப்பாற்றியவர்கள் நாம்தானே. அங்கா இப்படி நடந்துள்ளது?” என அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருங்கே காட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில் பார்த்தேன். அமெரிக்கர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நம்ப வேண்டியதில்லை என்பதையும், அதிலும் குறிப்பாக பிற நாடுகள் குறித்து சராசரி அமெரிக்கர்கள் அறிந்துள்ளது ரொம்பச் சொற்பம் என்பதையும் ஓரளவு அறிந்திருந்த போதிலும் கிளின்டனின் கூற்று எனக்குச் சற்று வியப்பை அளித்தது. கிளின்டன் சராசரி அமெரிக்கர் அல்ல. உலக நாடுகளையே தன் அதிகாரத்தால் ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர். அவர்களைப் போன்றோராலும் கூட இன்று அரபுலகிலும், உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள இந்த அமெரிக்க வெறுப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லையா? இல்லை புரியாதது போல நடிக்கிறார்களா?
அமெரிக்க அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களை நாம் அவ்வளவு விவரம் தெரியாதவர்களாகக் கணிக்க வேண்டாம். புரிந்து வைத்துக் கொண்டு புரியாதது போல நடிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்று அமெரிக்காவும் மேற்குலகும் மிகப் பெரிய பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இது சகல மட்டங்களிலும் பல்வேறு விதமான பிரச்னைகளைத் தோற்றுவித்துள்ளது. 1930களில் சமாளித்ததுபோல இன்று இந்தப் பிரச்னையைச் சமாளிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எனவே முஸ்லிம் பயங்கரவாதம் பற்றிக் கதையாடுவதும், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் முதலான உயர் மதிப்பீடுகளில் தோற்றுப்போன ஒருவகைக் “காட்டுமிராண்டிச் சமூகத்தை” அருகே நிறுத்தித் தங்களின் ‘மேன்மை’ குறித்த ஒரு புனைவை உருவாக்குவதும் அமெரிக்கர்களுக்கு அவசியமாகியுள்ளது. அந்த வகையில் உலக நாகரிக வரலாற்றில் ஆற்றவேண்டிய கடமை ஒன்று தங்களுக்கு இன்னும் இருக்கிருக்கிறது என்பதை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
ஆக மீண்டும் ஒருமுறை முஸ்லிம்கள் சகிப்புத் தன்மை அற்றவர்கள், மத வெறியர்கள், ஜிஹாதிகள் என நிறுவுவதற்கு இன்று இந்த ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ (Innocence of Muslims) படத்திற்கெதிரான போராட்டம் மேற்குலகிற்குப் பயன்படுகிறது. மேற்குலகிற்கு மட்டுமல்ல உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் வெறுப்பாளர்களுக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பாகிவிட்டது. தினமணி இதழ் முஸ்லிம்களின் இப்போராட்டத்தை, “தவறு.. தவறு.. தவறு” என மும்முறை கூவி தலையங்கம் எழுதுகிறது. அமெரிக்கர்களைப் பொருத்தமட்டில் இது தேர்தல் நேரம். லிபியாவில் அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்குவது குறித்து யார் அதிகக் காட்டமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாகக் கொஞ்சம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒபாமா நிர்வாகம் இரு போர்க் கப்பல்களை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்திய செய்தி அடுத்தடுத்த நாள்களில் பத்திரிக்கைகளில் வந்தது. “உடனடியாக அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறக்கூடாது…இன்னும் ஆழமாக நமது படைகள் மத்திய கிழக்கிலும் வடஆப்பிரிக்காவிலும் ஊடுருவ வேண்டும்” என ‘தி எகானாமிஸ்ட்’ இதழ் எழுதுகிறது.
ஒரு திரைப்படத்திற்கு முஸ்லிம்கள் இத்தனை ஆர்பாட்டம் செய்ய வேண்டுமா என்கிற கேள்வி யாருக்கும் எழுவது இயல்புதான். ஆனால் இந்தச் சம்பவத்தை நாம் தனித்துப் பார்க்க இயலாது. சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ தொடங்கி, டேனிஷ் கார்டூன்கள், ஃப்ரான்ஸ் அரசு ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை, சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் வைத்துப் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை, மேலைச் சமூகங்களில் வளர்ந்து வருகிற இஸ்லாம்-வெறுப்பின் ஒரு சிறு அடையாளமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நார்வேயில் ஆந்த்ரே ப்ரெவிக் என்கிற கிறிஸ்தவ அடிப்படைவாதி சுமார் 70க்கும் மேற்பட்டோரைச் சுட்டுத் தள்ளிய காட்சி எல்லாம் சமீபத்திய நிகழ்வுகள். கடந்த பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம்களின் இறைத்தூதரை ஒரு எதிர்க் கிறிஸ்துவாகக் கட்டமைத்து இழிவு செய்து வந்துள்ளது குறித்து நான் மிக விரிவாக வேறு இடங்களில் எழுதியுள்ளேன். (பார்க்க: நான் புரிந்து கொண்ட நபிகள்).
எட்வர்ட் செய்த் சொன்னதுபோல மேலைச் சமூகத்தின் முன் அரபுலகில் தோன்றிய இஸ்லாம் முன்வைத்த சவாலை அது எதிர் கொண்ட விதம் இஸ்லாமைப் புரிந்து கொள்வது என்பதிலிருந்து தொடங்கவில்லை. மாறாக இஸ்லாமை இழிவு செய்வது, கொடூரத் தன்மையதாகக் காட்டுவது (demonise) என்பதாகவே இருந்தது.
பிற கிழக்கத்திய நாகரிகங்களை, குறிப்பாக இந்தியாவையும் சீனாவையும் தோற்கடிக்கப்பட்டவையாகவும், தொலைதூரத்தில் உள்ளவையாகவும் அது கருதியது. எனவே அவற்றை மேலைச் சமூகம் ஒரு நிரந்தர, முக்கியப் பிரச்னையாகக் கருதவில்லை. இஸ்லாமை மட்டுமே அது என்றைக்கும் தனக்கு முழுமையாகப் பணிய வைக்க இயலாததாகக் கருதியது.
(Covering Islam)
அந்த வகையில் அது தொடர்ந்து இஸ்லாமை இழிவு செய்து வந்தது. அதன் ஓரங்கமாகவே இன்றைய இந்தத் திரைப்படத்தையும் நாம் காண வேண்டியுள்ளது.
கருத்துச் சுதந்திரம் என்பதை நாம் ரொம்பவும் abstract ஆகப் பார்த்துவிட இயலாது. கிறிஸ்தவ மதத்திற்குள் மத மரபுகளைக் கேலி செய்யும் ஒரு பாரம்பரியம் உண்டு. புனிதமான இறைத் துதிகளைக் கேலி செய்தல், Paschal Laughter, Christian Laughter, Easter Laughter, Monkish Prank என்கிற வடிவங்களில் மத நிறுவனங்களை மட்டுமின்றி ஆக உயர்ந்த மதத் தலைவரான போப்பாண்டவரையும் திருவிழாக் காலங்களில் (carnivals) கிண்டலடித்தல் என்கிற நிலை அங்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் நான் நெதர்லாந்த் சென்றிருந்தபோது, கத்தோலிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரும், அதற்குச் சில ஆண்டுகள் முன் மரித்தவருமான போப் இரண்டாம் பால் சுய இன்பம் செய்து கொண்டிருப்பதுபோல ஒரு ‘morphing’ செய்யப்பட்ட புகைப்படம் எல்லாக் கடைகளிலும் தொங்கிக் கொண்டிருந்தது.
ஆனால் பிற சமூகங்களில், குறிப்பாக இஸ்லாத்தில் இறைவனையோ இல்லை அவனது தூதரையோ சற்றும் கேலி செய்வதற்கு இடமில்லை. கேலி மட்டுமல்ல. அவர்களின் திரு உருவை வரைந்தோ, வடித்தோ காட்சிப்படுத்துவதற்கும் அங்கு இடமில்லை. ஆனால் பவுத்தத்திலோ புத்தனை ஆகப் பெரிதாக வடித்துக் காட்டுவது ஒரு போற்றற்குரிய மரபு. பாமியன் புத்தர் சிலைகளை நாம் அறிவோம். ஆக, நம்பிக்கைகளும் மரபுகளும் சமூகங்களுக்கிடையே பெரிதும் வேறுபடுகின்றன. நபிகள் நாயகம் என அழைக்கப்படும் முஸ்லிம்களின் இறைத்தூதர் முஹம்மது பின் அப்துல்லாஹ் ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, முதுமை அடைந்து நோயுற்று மடிந்தவர். புத்தனுக்குப் போதி மரத்தடியில் விழிப்புணர்வு அருளப் பெற்றது என பவுத்தர்கள் நம்புவது போல, முகம்மதுக்கு திருக்குர்ஆன் இறையருளால் அருளப்பெற்றது என முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதொன்றைத் தவிர சாதாரண மனிதராகவே தோன்றி, வாழ்ந்து, மடிந்தவர் நபிகள் நாயகம். எனினும் உலகெங்கிலுமுள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களும் அவரைத் தமக்கு ஒரு இலட்சிய முன்மாதிரியாகக் (ideal exemplar) கொள்கின்றனர். அவர் மீதான எந்த ஒரு தாக்குதலையும் அவர்கள் தங்களது ஒட்டுமொத்தமான சமூக அடையாளத்தின் மீதான (collective identity) தாக்குதலாகவே கருதுகின்றனர்.
கலாச்சார விஷயங்களில் பொது அளவுகோல்கள் கிடையாது. கிறிஸ்தவ மரபிலுள்ள ஒன்றை அளவுகோலாக்கி, அதனடிப்படையில் முஸ்லிம் மத நம்பிக்கை அல்லாது மரபை நாம் அளந்துவிட இயலாது. உம்பர்டோ ஈகோ ஒரு முறை சொன்னதுபோல நரமாமிசம் சாப்பிடக் கூடிய கலாச்சாரத்தை உடைய ஒரு சமூகத்திடம் போய் இது இழிவு, நர மாமிசம் சாப்பிடாத எங்கள் பண்புதான் உயந்தது என நான் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். ஆக அதிகபட்சமாக நான் அங்கே சொல்லக் கூடியது என்னவெனில், “ஐயா, நான் புள்ளை குட்டிக்காரன். என்னைச் சாப்பிட்டு விடதீர்கள்” என்று வேண்டிக் கொள்வது மட்டுமே. ஆக, கலாச்சார விஷயங்களில் கருத்துச் சுதந்திரம், நல்ல பண்பாடு, கண்டிக்கப்பட வேண்டிய பண்பாடு என்பதற்கெல்லாம் ஒரே ஒரு அளவுகோல்தான் உண்டு. அது, ஒருவரது பண்பாடு மற்றவர்களுக்கு இடையூராக இருக்கக் கூடாது, மற்றவர்களோடு சேர்ந்து வாழ்தலுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே. பலரும் சேர்ந்து வாழ்கிற ஒரு சமூகத்தில் ஒருவர் பசு மாமிசத்தையும், மற்றவர் பன்றிக் கறியையும் சாப்பிட மாட்டோம், அது எங்களுக்க்குத் தடை செய்யப்பட்டது என்றால் அது அவர்கள் உரிமை. அதை அனைவரும் மதிக்க வேண்டும். ஆனால் இவர்கள் மற்றவர்களை நோக்கி நீ பசு மாமிசத்தைச் சாப்பிடக் கூடாது என்றோ, பன்றிக் கறியைத் தடை செய்ய வேண்டுமென்றோ சொல்ல முடியாது.
மேலைச் சமூகத்திலும் எல்லை இல்லாத கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்ல இயலாது. சமீபத்தில் பிரிட்டிஷ் இளவரசனின் மனைவி கேட் மிட்டில்டன் (Dutchess of Cambridge) தன் கணவருடன் மார்பில் ஆடையின்றி உல்லாசமாக இருந்த படம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டபோது அரச குடும்பம் கொதித்தெழுந்து கண்டித்ததை நாம் அறிவோம். கடற்கரையில் மார்பில் துணியின்றி இருந்த ஒரு பெண்ணின் படத்தை அவரது அனுமதியின்றிப் போட்டதைச் சரி என நான் சொல்லவில்லை. ஆனால் அது அச்சமூகத்தில் சகஜம் என்பதும், கண்டிக்கப்பட்டது மார்பில் துணி இல்லாத பெண் ஒருவரின் படத்தைப் போட்டதற்காக அல்ல, அது பிரிட்டிஷ் இளவரசியாக இருந்தது என்பதற்காக மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல சில நாட்களுக்கு முன் யார்க்ஷையரைச் சேர்ந்த அசார் அகமது என்கிற 19 வயதுப் பையன் ஒருவன் ஆஃப்கானிஸ்தானிலுள்ள பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி எழுதியமைக்காகத் தண்டிக்கப்பட்டதும் நினைவிற்குரியது.
கலாச்சார விஷயத்தில் நாம் இன்னொன்றையும் கவனத்தில் நிறுத்த வேண்டும். ஒரே நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட ஒரு சமூகமாயினும் அதற்குள்ளும் ஒளிரும் பன்மைத் தன்மைதான் அது. உலகெங்கிலுமுள்ள 1.6 பில்லியன் முஸ்லிம்களும் இன்று பல்வேறு இன, மொழி, புவியியல், பண்பாட்டு வேறுபாடுகள் மிக்க நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் ஒரு படித்தான கலாச்சாரங்களையும் மரபுகளையும் கொண்டவர்களாகக் கருதுவது அபத்தம். ஆனால், உலக ஊடகங்கள் அனைத்தும் முஸ்லிம்களை அப்படித்தான் சித்திரிக்கின்றன. சில முஸ்லிம் நாடுகளில் இன்றும் சில பகுதிகளில் கோலோச்சும் நிலப்பிரபுத்துவத் தண்டனைக் கலாச்சாரத்தை எல்லாம் முஸ்லிம்களின் பொதுப் பண்பாகப் படம் பிடித்துக் காட்டுவது நமது மேலை, கீழை முஸ்லிம் வெறுப்பு ஊடகங்களுக்கு மிகப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. ஈரானில் ஒரு கணவன் தன் மனைவியின் மூக்கை அறுத்துத் தண்டித்தாலோ, ஆப்கானிஸ்தானத்தில் நடத்தை ‘தவறியவள்’ என ஒரு பெண் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாலோ, வட இந்திய நகரொன்றில் மாமனாரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகம் முறிந்ததாக ஃபத்வா விதிக்கப்பட்டாலோ அடுத்த சில மணி நேரங்களில் அது உலக அளவிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் பண்பாடாகச் சித்திரிக்கப்பட்டுப் பரப்பப் படுவதையும், அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கப் படுவதையும் நாம் அறிவோம்.
இன்று முஸ்லிம் நாடுகள் பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகின்றன. காலத்திற்கு ஒவ்வாத ஷரிஅத் சட்டங்கள் பல நாடுகளில் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. பெண்கள் பொதுப் பணிகளில் ஈடுபடுவது, அமைச்சர் பதவிகள் வகிப்பது எல்லாம் பரவலாகியுள்ளன. பொது இடத்தில் தலையை வெட்டி மரண தண்டனை நிகழ்த்துவதை வழமையாகக் கொண்டிருந்த சவூதியில் கூடக் கடந்த சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடாகிய மலேசியாவில் ஊரெங்கும் அமைந்துள்ள சீனக் கடைகளில் எந்நேரமும் மதுவும் பன்றிக்கறியும் கிடைக்கின்றன. சென்ற ஆண்டு நிகழ்ந்த அரபு வசந்தத்தின்போது பொதுச் சதுக்கங்களில் பல மில்லியன் பேர்கள் கூடியதில் மட்டுமல்ல, கூட்டியதிலும் முஸ்லிம் இளம் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு. பாரம்பரியமான மத அடிப்படையிலான கட்சிகளும் இடதுசாரிச் சாய்வுடைய கட்சிகளும் அவர்களுக்குப் பின்னால் அணி திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடன்றி, இவ்விரு சாராரும் தத்தம் உச்சபட்ச நிலைபாடுகளிலிருந்து (maximalist positions) சற்றே இறங்கி வர வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இன்று அங்கே உருவாகியிருக்கக் கூடிய அரசுகள், தூக்கி எறியப்பட்ட முந்தைய சர்வாதிகாரிகளின் அளவிற்கு அமெரிக்க அடிவருடிகளாக இல்லாமலும், சவூதி அளவிற்கு மத இறுக்கமும் அடிப்படைவாதத் தன்மை அற்றவைகளாகவும் உள்ளது கண்கூடு. இவையெல்லாம் முஸ்லிம் சமூகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள். இந்த மாற்றங்களின் ஊடாக சலஃபிகள் போன்ற மத அடிப்படைவாதிகள் ஓரங்கட்டப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் காணத் தவறக் கூடாது.
எப்படி வடநாட்டில் எங்கோ ஒரு இந்து உயர்சாதியில் எப்போதோ ஒரு உடன்கட்டை (சதி) நிறைவேற்றப்படுவதை வைத்து இந்தியாவிலுள்ள நூறு கோடி இந்துக்கள் மத்தியிலும் இன்றும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உள்ளது எனச் சொல்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம்தான் ஒட்டுமொத்தமான முஸ்லிம் சமூகத்தையும் ஒருபடித்தான பழக்கமுடையவர்களாகப் பார்ப்பதும். இப்படிச் சொல்வதால் மதங்களுக்குள் பொதுமைப் பண்புகளே இல்லை என்றாகிவிடாது, சிலை வணக்கத்தை ஏற்பது இந்து, பவுத்த, கத்தோலிக்க மதங்களின் பொது நம்பிக்கை என்றால் சிலை வணக்கத்தை ஏற்காதது முஸ்லிம் மதத்தின் பொதுப் பண்பு. ஆனால் இந்த அடிப்படையில் உலகளாவிய ஒரு மதத்தை எல்லா அம்சங்களிலும் ஒருபடித்தானதாகப் (homogeneous) பார்த்துவிடக் கூடாது என்பதே.
அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான இன்றைய எழுச்சியயைக் கண்டிப்பவர்களில் முஸ்லிம் மேல்தட்டினருக்கும் ஒரு பங்குண்டு. இந்திய, தமிழ்ச் சூழல்களிலும் இதைக் காண முடியும். சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் பாரம்பரியமாகவோ, இல்லை சொந்த முயற்சியில் முன்னேறியோ இருப்பவர்கள் இத்தகைய கருத்துடையவர்களாக உள்ளதைக் காண இயலும். முஸ்லிம்கள் இதுபோன்ற பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் படிப்பு, தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்தி முன்னேறுதல் வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இந்தப் படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டிருந்தால் எந்தத் தகுதியும் இல்லாத இப்படம் தானாகவே யார் கண்ணிலும் படாது மறைந்து போயிருக்கும் என்பதும் இதுபோன்ற கிளர்ச்சிகளில் ஈடுபடுவது முஸ்லிம்கள் எல்லோரும் வன்முறையாளர்கள் என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் என்பதும் இவர்களின் கருத்து. சமீபத்தில் சென்னையில் நான் கலந்து கொண்ட, பெரும்பான்மையும் மேல்தட்டு முஸ்லிம்களே பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் இப்படியான பேச்சுக்கள் இடம் பெற்றன.
இந்தக் கருத்தில் உண்மைகள் இல்லாமலில்லை. ஆனால் இதிலுள்ள பிரச்னை என்னவெனில் இந்த எதிர்ப்பை, ஏதோ இந்தப் படத்திற்கு மட்டுமே வந்த எதிர்ப்பாக இவர்கள் முன்வைப்பதுதான். மேற்சொன்ன கூட்டம் நடந்து ஒரு வாரத்தில் திருச்சியில் வேறொரு பிரச்னைக்காக நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேட்டார்: “இன்று முஸ்லிம்கள் இந்தத் திரைப்படத்தை எதிர்த்துப் போராடுகிறார்களே, இவர்களில் யாருக்காவது இந்தப் படத்தின் பெயர் தெரியுமா?” இதுவும் உண்மைதான். நிறையப் பேருக்குத் தெரியாதுதான். ஆனாலும் ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்? சற்று முன் சொன்ன மேல்தட்டு முஸ்லிம்களின் கருத்துக்கும், மூத்த பத்திரிக்கையாளரின் கேள்விக்கும் ஒரே பதில்தான். பிரச்சினை வெறும் படத்தைப் பற்றியது மட்டுமல்ல என்பதுதான் அது.
சென்னையில் அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கல் வீசப்பட்டு தூதரகக் கண்காணிப்புக் கேமராக்கள், விளக்குகள், கண்ணாடிகள் சில உடைந்தன. இதை ஒட்டி சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். செய்தியைப் படித்த நான் அந்த ஆர்பாட்டத்திற்குத் தலைமை ஏற்ற தலைவரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். “உங்கள் அமைப்பினர்தான் ரொம்பக் கட்டுப்பாடாக இருப்பார்களே, எப்படி நடந்தது இது?” என்றேன். “ஏழாயிரம் பேர் வருவோம் என நாங்கள் தெரிவித்திருந்தும் உரிய போலீஸ் பாதகாப்பு இல்லை. வெறும் பத்து போலீஸ்கள் தான் அங்கு இருந்தனர்” என்றார் அவர். அது உண்மைதான். இந்தக் காரணத்திற்காகவே அடுத்த இரண்டு நாட்களில் சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார். தலைவர் மீண்டும் சொன்னார்: “இளைஞர்கள் கோபப்படுறாங்க. நாங்க என்ன அமெரிக்கத் தூதரகத்தின் கண்ணாடிகளைத்தானே உடைத்தோம். இந்த அமெரிக்காக்காரன் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களைக் கோடிக் கணக்கில் கொல்லுகிறானே? ஆனால் அவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லை. எங்களைக் கைது செய்றாங்களேன்னு கேட்கிறாங்க சார்”.
இப்படிக் கேட்கிற இளைஞர்கள் தீவிரவாதிகளல்லர். சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டியிருப்பதுபோல படிப்பிலும், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் உரிய பங்கு பெறத் துடிப்பவர்கள். ஆனால் இந்தத் திசையில் அவர்களின் பாதை அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. முஸ்லிம்கள் என்கிற அடையாளத்தினாலேயே வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இளமையைத் தொலைப்பவர்கள், சட்டவிரோதக் காவலில் சித்திரவதை செய்யப்படுபவர்கள்தான் ஏராளம். இது குறித்துப் புள்ளி விவரங்களை அடுக்குவதற்கு இங்கு நேரமில்லை.
உலக அளவிலும் முஸ்லிம்களின் நிலைமை இப்படியாக இருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அரசுகளாலும், ஊடகங்களாலும், உளவு மற்றும் காவல் துறைகளாலும், நீதிமன்றங்களாலும் அவர்கள் சந்தேகத்திற்குரிய சமூகமாகக் கட்டமைக்கப்படுவதைக் கண்டு நொந்து போகிறார்கள். உலகளாவிய இந்தச் செயல்பாடுகளில் அமெரிக்கா மற்றும் மேலை ஏகாதிபத்தியங்களின் பங்கை அவர்கள் தினந்தோறும் தம் இரு கண்களாலும் பார்த்துக் கொண்டுள்ளனர். நேரடியான ஆக்கிரமிப்புகள், பதிலி யுத்தங்கள் (proxy wars), ஆளில்லா விமானத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் (sanctions) ஆகியவற்றின் ஊடாக ஈராக், ஆஃப்கானிஸ்தான், சோமாலியா, சூடான், பலூசிஸ்தான், லிபியா, ஈரான் முதலான நாடுகள் மீது அமெரிக்கா மற்றும் நேடோ நாடுகளில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடுத்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஈராக்கில் மட்டும் 10 லட்சம் பேர்களல்லவா? குவண்டனமோ பே போன்ற உங்களின் சட்டவிரோதச் சித்திரவதைச் சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களல்லவா? சதாமும், கடாஃபியும் எத்தனை கொடிய சர்வாதிகாரிகளாக இருந்தபோதும், அவர்களை நீங்கள் பதவி இறக்கம் செய்து கொன்று தீர்த்த முறை மறக்கக்கூடிய ஒன்றா?
ஹிலாரி கிளின்டன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் உதவியுடனேயே கடாஃபியை இறக்கியவர்கள் கூட அங்கு உங்களின் தொடர்ந்த இருப்பை ஏற்கத் தயாராக இல்லை என்பதுதான் அது. அரபு வசந்தத்தின் ஊடாக இன்று மாறியுள்ள முஸ்லிம் சமூகங்களையும் அரசுகளையும் முன்னைப்போல அவ்வளவு எளிதாக உங்களின் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதுதான் அது. ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்கிற இந்தத் திரைப்படத்திற்கெதிரான இந்த எதிர்ப்பைச் சரியாகப் புரிந்துகொள்வதில்தான் உங்களின் எதிர்காலம் இருக்கிறது. இன்று உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் உங்கள் மீது கொண்டுள்ள ஆத்திரம் உங்கள் கலாச்சாரத்தில் காணப்படும் கருத்துச் சுதந்திரம் என்கிற அம்சத்தின் மீது கொண்ட காழ்ப்பால் உருவானதல்ல. மாறாக அது உங்கள் அரசியலின் மீது கொண்ட காழ்ப்பின் விளைவு. ஏகாதிபத்தியச் செயல்பாடுகளை தேச அரசுகள் என்கிற வரையறையைத் தாண்டி மத அடையாளத்துடன் நீங்கள் இணைத்தீர்கள். ‘கம்யூனிச ஆபத்து’ என்கிற உங்களின் எழுபதாண்டு காலப் பூச்சாண்டி காணாமல் போனபின் அந்த இடத்தில் ‘இஸ்லாமியப் பயங்கரவாதத்தை’க் கட்டமைத்தீர்கள். இதன் விளைவு இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும்கூட மதப் பிரச்னைகளின் ஊடாக வெளிப்பட வேண்டியதாக ஆகிவிட்டது.
இந்தப் படத்தைத் தயாரித்தவர்களின் காப்டிக் கிறிஸ்தவ மற்றும் இஸ்ரேலிய அமெரிக்க யூதப் பின்னணிகள், பெருகி வரும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் நிறையச் செய்திகள் வந்தாயிற்று. உலகெங்கிலும் இந்தப் படத்தை எதிர்த்து ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு இந்தப் பின்னணியெல்லாம் எந்த அளவிற்குத் தெரியுமோ தெரியாதோ, எல்லாவற்றிற்கும் பிண்ணணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது.