கடந்த இரண்டு நாட்களாகத் (7.10.12) (8.10.12) தமிழக நாளேடுகளால் பரபரப்பாக்கப்பட்ட செய்தி “சென்னையில் 13 நக்சலைட்டுகள் கைது” என்பதுதான். தமிழ், ஆங்கில நாளேடுகள் பலவும் இந்தச் செய்தியை இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தன. இவற்றையெல்லாம் விஞ்சிய தினகரன் (8.10.12), முதற்பக்கத்திலேயே “நள்ளிரவில் போலிஸ் சுற்றிவளைப்பு – சென்னையில் மூன்று நக்சலைட்டுகள் கைது” என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டு பீதி கிளப்பியது.
இச்செய்திகள் முன்னிறுத்தும் நிகழ்வைக் குறித்து நாம் இப்படியாகத்தான் அறிகிறோம் :
“மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி” என்கிற -சனநாயக, பாராளுமன்றப் பாதையைத் தேர்ந்தெடுத்த- மா-லெ குழுவின் முக்கிய பொறுப்பாளர்களும் உறுப்பினர்களுமான 13 பேர் ஒன்றுகூடி தமது கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து, சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் விவாதித்துள்ளனர். கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களுள் ஒருவரான பழனி, தனது குழந்தைகள் படிக்கும் பள்ளி என்ற வகையில் பள்ளித் தலைமை ஆசிரியர் வெற்றிச்செழியனைச் சந்தித்து அனுமதி பெற்றுள்ளார். சென்னை குன்றத்தூரில் உள்ள “பாவேந்தர் மழலையர் தொடக்கப்பள்ளி” ஒரு தமிழ் வழிக் கல்விச்சாலை என்பதும் தனித்தமிழ் ஆர்வலரான வெற்றிச்செழியன், கடும் நிதிநெருக்கடியில் கூட தனிவகுப்புகளை (Tuition) மாணவர்களுக்கு இலவசமாக நடத்திக் கல்விச்சேவை புரிந்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை காலையில் துவங்கிய குடியரசுக்கட்சியின் கூட்டம் மாலை 5 மணியளவில் – முடிவடையும் தருவாயில் கியூ பிரிவு போலிசார் அறைக்குள் நுழைந்துள்ளனர். 13 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட பின் அனைவரையும் குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கே போலிசாரால் இப்படியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது : “கைது செய்யப்பட்ட அனைவரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மாலை 7 மணியளவில் பள்ளியின் அறையைப் பூட்டிக்கொண்டு இருட்டில் ரகசியக்கூட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”. பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் ஶ்ரீபெரும்புதூர் நீதிபதியின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ரிமான்ட் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கியூ பிரிவு மற்றும் போலிசாரின் முக்கிய குற்றச்சாட்டுகள் இவைதான் :
1. இவர்களில் மூன்றுபேர் (துரைசிங்க வேலு, பழனி, பாஸ்கர்) 2002 ஆம் ஆண்டு ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் (bail) வெளிவந்தவர்கள். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் நக்சலைட் ஆதரவாளர்கள்.
2. கைது செய்யப்பட்ட 13 பேரும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள்.
3. அனைவரும் ஒன்றுகூடி சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கியூ பிரிவு போலீஸ் ஏகப்பட்ட முரண்களுடன் முன்வைத்த இந்தச் செய்திகளைத்தான் எந்தக் கேள்விகளும் இன்றி தமிழக அச்சு ஊடகங்கள் பலவும் திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட சில உண்மைகள் :
1. ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைதுச்செய்யப்பட்ட துரைசிங்க வேலு, பழனி, பாஸ்கர் ஆகிய மூவரும் மாவோயிஸ்ட் கட்சியோடு தொடர்புடைய நக்சலைட்டுகள் அல்லர். உண்மையில் மாவோயிஸ்ட் கட்சியின் கொள்கைகளோடு முரண்பட்டு அதிலிருந்து வெளியேறியவர்கள். பின்பு, ‘புதிய போராளி’ எனும் அமைப்பை நிறுவிச் செயல்பட்டு வந்தனர். தற்போது ”மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி” எனும் அமைப்பத் தொடங்கி இயங்கி வருகிறார்கள். கட்சியில் இருந்து வெளியேறிய வகையில் மாவோயிஸ்ட் அமைப்பினரால் இவர்கள் புறக்கணிக்கப்படுவதும் தாங்கள் பங்கேற்கும் கூட்டமைப்புகளில் இவர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆட்சேபிப்பதும் பலரும் அறிந்த செய்தி. இப்படி இருக்கையில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் விவேக் கடந்த மேமாதம் கியூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டதையும் அவர் மனைவி பத்மா தலைமறைவாக இருப்பதையும் இந்த 13 பேரின் கைது நடவடிக்கையோடு இணைத்து முடிச்சுப்போடும் செயலைக் கியூ பிரிவு திட்டமிட்டுச் செய்கிறது. இது குறித்தெல்லாம் கவலைப்படாத ‘தினமணி’ ‘Times of India’ நாளிதழ்கள் மாவோயிஸ்டின் கைதையும் அவர்களிலிருந்து பிரிந்தவர்களின் கைதுகளையும் இணைத்து முடிச்சுப்போட்டு செய்தி வெளியிடுகின்றன. தினமணி நாளிதழ் பத்மாவும் கைது செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறது. அவர் கைது செய்யப்படவில்லை. தலைமறைவாகத் தான் இருக்கிறார். ‘தினகரன்’ இதனைக் கட்டச் செய்தியாக முக்கியப்படுத்தி, “அப்போது அவர், இப்போது இவர்கள்” என்கிற ரீதியில் குதூகலிக்கிறது.
2. கைது செய்யப்பட்ட 13 பேரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பின் உறுப்பினர்களும் அல்லர். இவர்கள் அனைவரும் ‘மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இது தடை செய்யப்பட்ட அமைப்பு அன்று. சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் ‘மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி’ என்ற பெயரில் ஒரு பக்கம் துவக்கப்பட்டிருப்பதும் அவர்களது கட்சி நடவடிக்கைகள் அவ்வப்போது அதில் வெளியிட்டு வருவதும் இரகசியமன்று.
3. பதின்மூன்று பேரும் கூடினார்கள் ,சதித்திட்டம் தீட்டினார்கள், நக்சலைட் பயிற்சி கொடுத்தார்கள் என்றெல்லாம் மிகைப்படுத்தப்படும் செய்திகள் அடிப்படை ஆதாரம் அற்றவை. தங்களது கட்சியின் கொள்கைகள் குறித்து உரையாடுவதற்காகத்தான் அவர்கள் கூடியிருக்கிறார்கள். (டெக்கான் கிரானிகல் இதழ் மட்டும் இதைக் குறிப்பிட்டிருந்தது. அதைப் பின்னர் பார்க்கலாம்.) பொடா வழக்கில் கைதானவர்கள் தவிர வேறு யார்மீதும் குற்றவழக்குகள் நிலுவையில் இல்லை.பொடாவில் கைதாகி பிணையில் விடுதலையாகிய (2006) மூவரும் கூட இன்றுவரை சட்டபூர்வமாக தமது வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
4. துரைசிங்க வேலு, பழனி, பாஸ்கர், செந்தில், புவியரசன், முகிலன் உள்ளிட்ட பலரும் பொது வெளிகளில் வெளிப்படையாக இயங்கிவந்தவர்கள். சமூக மற்றும் இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருபவர்கள். தலைமறைவாகவோ, இரகசியமாகவோ இருந்தவர்கள் அல்லர்.
5. போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு “கையும் களவுமாகப்” பிடிக்கப்பட்ட போதும் கைதானவர்களிடமிருந்து எந்த ஆயுதமோ, சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரமோ கிடைத்ததாக எந்தத் தகவலும் இல்லை. அப்படியிருக்க, குடியிருப்புகள் சூழ்ந்த ஒரு பொது இடமான பள்ளிக்கட்டிடத்தில் கூடியவர்களை ஏதோ எவரெஸ்டின் உச்சிக்கே போய் ரகசிய திட்டம் தீட்டியதைப் போல் கியூ பிரிவு முன்வைக்கும் செய்திகள் மீது ஒரு சிறிய ஐயத்தை கூட எழுப்பாத ஊடகங்கள், கியூ பிரிவின் வார்த்தைகளை அப்படியே வழித்தெடுத்துச் செய்திகளாக வார்த்துள்ளன. கியூ பிரிவு சொன்னவற்றைக் காட்டிலும் ஊடகங்கள் அதை ஊதிப் பெருக்கியதுதான் அச்சமூட்டுபவையாக உள்ளது. அவற்றில் சில:
தினகரன்
“நள்ளிரவில் ரகசியக்கூட்டம் நடத்திகொண்டிருந்த 3 நக்சலைட்டுகள் உட்பட 13 பேரை போலிஸ் அதிரடியாக சுற்றிவளைத்தது” என்று தினகரன் செய்தி வெளியிட்டு உள்ளது (08.10.12). போலிசார் மாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். நீண்ட விசாரணைக்குப் பின் குன்றத்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு இரவு அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். உண்மை இப்படி இருக்க, ‘நள்ளிரவில் கைது’ என்று பச்சைப் பொய்யை கூசாமல் உதிர்க்கிறது தினகரன்.
‘கும்பலின் தலைவன் யார் ?’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பெட்டிச் செய்தியில் கைதுசெய்யப்பட்ட துரைசிங்க வேலு கூட்டத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் 12 வயதில் அவர் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் என்றும் எழுதியுள்ளது.’கும்பல்’, ‘மூளை’, ‘ஓட்டம்பிடித்தல்’ போன்ற சொல்லாடல்கள் மூலம் கட்சியினர் மீது எதிர்மறை பிம்பத்தை உற்பவிப்பதும், கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லும்போது முழக்கமிடுபவர்களை ஏதோ அடிதடிக்குக் களமிறங்குபவர்களைப்போல் படமாக்கி வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் பயங்கரவாதம், நக்சலைட் தீவிரவாதம் எல்லாம் கட்டவிழ்ந்து கிடப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க வேண்டிய கடமை தினகரனுக்கு ஏற்பட்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.
தினமலர்
‘நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு -ரகசிய கூட்டத்தின் பகிர் பின்னணி’ என்ற தலைப்பில் பதற்றத்தை கிளப்பிய தினமலர், ”தமிழகத்தில் நக்சல் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்க்காக அவ்வப்போது இவர்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாகவும் தெரியவந்தது” (08.10.2012) என்று கூறியது. ஆனால் இந்த “பகீர் பின்னணி” என்பது வழக்கம்போல கியூ பிரிவு போலிஸ் கூறிய செய்தியாகத்தான் இருந்தது.
காலைக்கதிர்
கியூ பிரிவு போலிசார் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தி :”கைதான 13 பேரும் 2002 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட மலைப்பகுதிகளில், பல இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தனர். அப்போது கியூ பிரிவு போலிசார், ஊத்தங்கரை மலைப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைசிங்கவேல் ,பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.” 13 பேரும் ஆயுதப்பயிற்சி அளித்தனர் என்று கியூ பிரிவு கூறிய செய்தியை ‘காலைக்கதிர்’ சொல்லியபடியே பதிவாக்கியிருக்கிறது. தினமலரிலும் கூட கியூபிரிவு கூறியதாக இதே செய்தி வெளியாகியிருந்தது. உண்மையில் இந்தப் 13 பேரில் ஊத்தங்கரையில் கைதானவர்கள் மூவர் மட்டுமே.
தினத்தந்தி
கியூ பிரிவு போலிசாரின் செய்தியையே தினத்தந்தியும் வெளியிட்டிருந்தபோதும், மற்ற நாளிதழ்களால் பொருட்படுத்தாது விடப்பட்ட கைது செய்யப்பட்டவர்களின் குரலை அது வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது. “நாங்கள் மக்கள் விரோத, அரசுக்கு எதிரான செயல் எதிலும் ஈடுபடவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தோம். எங்கள் மீது ஏற்கனவே போடப்பட்ட வழக்கைக் கோர்ட்டில் சட்டரீதியாகச் சந்திக்கிறோம். நாங்கள் நக்சலைட்டுகள் அல்ல” என்று துரைசிங்கவேலு வாக்குமூலம் அளித்ததாகப் போலிசார் கூறிய செய்தியை தினத்தந்தி மட்டுமே வெளியிட்டிருந்தது.
மாலைமலர்
“சென்னையில் நக்சலைட் இயக்கத்தினர் ஆதரவாளர்களை திரட்டி கூட்டம் நடத்தி இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி என்ற பெயரில் இயங்கி வரும் இவர்கள் சென்னையில் வலுவாக காலூன்ற திட்டமிட்டது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் நக்சலைட் ஆதரவாளர்கள் காய் நகர்த்தி வந்துள்ளனர். இவர்களது கட்சியின் சார்பில் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட கிளை இயக்கங்களை தொடங்கவும் முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது சென்னை மற்றும் புறநகரில் நக்சலைட் இயக்கத்தினர், இளைஞர் களை மூளைச்சலவை செய்து ரகசியமாக ஆட்களை திரட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குன்றத்தூரில் நடந்த கூட்டத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நக்சலைட் ஆதரவாளர்களும் பங்கேற்றதால், இந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு நக்சலைட் ஆதரவாளர்களை பிடிக்க விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்துக்கிடமாக சிக்கியவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” (8.10.12)
என மாலைமலர் செய்தி வெளியிட்டது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, தொழிற்சங்கக் கிளைகளை அமைப்பது முதலிய செயற்பாடுகள் ஏன் “போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது?” என மாலைமலர் கேட்கவில்லை. நக்சலைட் அமைப்புக்கள் ஆயுதப் பாதையை கைவிட்டு பாராளுமன்றப் பாதைக்குத் திரும்பவேண்டும் என்பதுதானே அரசு மற்றும் காவல்துறையின் நோக்கம்? அது நிறைவேறும் தருவாயில் ஏன் கைது நடவடிக்கை என்றுச் பொறுப்புமிக்க ஊடகம் கேள்வி எழுப்பிடிருக்க வேண்டும் அல்லவா?
Times of India
13 பேரிடமும் நடத்திய விசாரணையில் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்பினருக்கு மாவோயிஸ்டுகள் பயிற்சி அளிப்பதும் நகர்ப்பகுதியில் தமக்கான தளத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்ததாக TOI கூறியது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் போலீஸ் இதைச் சொல்கிறது, கைதானவர்கள் எல்லோரும் பிறருக்குப் பயிற்சி அளிக்கும் அளவிற்கு Hard Core Naxalite களா? என்கிற கேள்வியை TOI எழுப்பத் தயாராக இல்லை.
New Indian Express
நக்சலைட்டுகளின் இந்த ரகசியக் கூட்டத்தில் 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதாகப் போலிஸ் தரப்பு கூறிய செய்தியை வெளியிட்டிருந்தது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என எக்ஸ்பிரசும் போலிசிடம் கேட்கவில்லை.
The Hindu
சாந்தி என்கிற தமது கட்சி உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்காக இந்தக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறிய செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டிருந்தது. இந்தச் சாந்தி குறித்து அதற்குப் பின் வேறெந்தச் செய்தியும் இல்லை. தடை செய்யப்படாத ஒரு இயக்கம் அதன் உறுப்பினர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகக் கூடக் கூட்டம் போடக்கூடாதா எனக் கேட்கத்தான் நமது ஊடகத்தினருக்கு மனமில்லை.
Deccan Chronicle
ஆயுதப் பயிற்சி, ஆள் சேர்ப்பு, நக்சலைட் பரவல் என்றெல்லாம் ஊடகங்கள் பூதாகரப்படுத்திய சூழலில், அந்தப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து வேறெந்த நாளேடும் வெளியிடாத ஒரு செய்தியை D.C வெளியிட்டிருந்தது. சென்னைப் பள்ளியில் ஆயுதப்பயிற்சி எதுவும் நடைபெறவில்லை என்றும் போலிசார் உள்ளே நுழைந்தபோது அங்கு கொள்கை விளக்க வகுப்பு (idealogical orientation class) மட்டுமே நடந்துகொண்டு இருந்ததாகவும் அங்கிருந்த 8 ஆண்கள் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறிய செய்தியை அது பதிவாக்கியிருந்தது.
முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்கள்
நாளேடுகளில் வெளியான செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பது மட்டுமின்றி தனக்குள்ளேயே முரண்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சியினரின் சந்திப்பு குறித்து போலிசார் தகவல் அறிந்ததையும் அவர்கள் கைது செய்த சூழலையும் குறித்து ஒவ்வொன்றும் ஒரு ஒரு கதையைச் சொல்லியுள்ளன.
தினமணி
7.10.12 அன்று வெளியான செய்தியில், தமிழகக் கியூ பிரிவு போலிஸ் எஸ்.பி.சம்பத்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பள்ளியை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும் அவர் தலைமையிலான போலிசார் அதிரடியாக நுழைந்து அங்கு பயிற்சி பெற்ற 13 பேரையும் பிடித்து விசாரித்ததாகவும் கூறப்பட்டது.
8.10.12 அன்று வெளியான செய்தியில், மக்கள் ஜனநாயக குடியுரிமை கட்சி என்ற பெயரில் இயக்கம் நடத்தும் நிர்வாகிகள் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக குன்றத்தூர் போலிஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்ததாகவும் அதையடுத்து ரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு இரவு விசாரிக்கப்பட்டனர் என்றும் சொல்லப்பட்டது.
தினமலர்
7.10.12 இல் வெளியான செய்தியில், கியூ பிரிவு எஸ்.பி.சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அந்தப் பள்ளி ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டதாகவும் சனிக்கிழமை மாலை எஸ்.பி.சம்பத் தலைமையிலான போலிசார் அதிரடியாக நுழைந்து அங்கு “பதுங்கியிருந்த” பொடா சுரேஷ் (?) உட்பட 13 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததாகவும் பின்னர் குன்றத்தூர் போலிசில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
8.10.12 அன்று வெளியான செய்தியில், தனது 3 நண்பர்களுடன் முக்கிய விஷயம் குறித்துத் தனியாகப் பேசவேண்டும் என தலைமை ஆசிரியரிடம் துரைசிங்கவேலு அனுமதி கேட்டதாகவும் 3 நண்பர்கள் பேசுவதாகக் கூறிவிட்டு 13 பேர் வந்ததோடு ஒரு பெண்ணும் வந்ததால் சந்தேகம் அடைந்த தலைமை ஆசிரியர் குன்றத்தூர் போலிசுக்குத் தகவல் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 13 பேரையும் விசாரித்த சட்டம் ஒழுங்கு போலிசார் பின்னர் இவர்களை கியூ பிராஞ்ச் போலிசிடம் ஒப்படைத்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே செய்தியை பதிவாக்கியுள்ள தினகரன், குன்றத்தூர் போலிசாரின் விசாரணையில் 13 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்ததால் அவர்களைப் போலிசார் கைது செய்ததாகவும் இதற்கிடையே கியூ பிரிவு போலிசாரும் தகவல் அறிந்து அங்குவந்து விசாரணையில் இறங்கியதாகவும் சொல்கிறது.
தினத்தந்தி
7.10.12 அன்று வெளியான செய்தியில், பள்ளிக்கூடத்தின் மொட்டைமாடியில் சிலர் திடீரென ரகசியக்கூட்டம் நடத்திக்கொண்டிருந்ததைப் பற்றி அருகில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் போலிசுக்குத் தகவல் கொடுத்ததாகவும் அதன்பேரில் கியூ பிரிவு போலிஸ் இரவில் அங்கு சென்று ரகசியக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த 9 பேரையும் குன்றத்தூர் போலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தியதாகவும் கூறுகிறது.
8.10.12 அன்று வெளியான செய்திக்குறிப்பில், கியூ பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததன் அடிப்படையில், கியூ பிரிவு போலிசார், உள்ளூர் போலிசார் உதவியுடன் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டதாகவும் இந்த முற்றுகை வேட்டையில் ஒரு அறையில் ஆலோசனை நடத்திய 13 பேர் சிக்கியதாகவும் கூறப்பட்டது.
4. கியூ பிரிவு போலிசுக்கு ரகசியத்தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர்கள் சென்றதாக காலைக்கதிர், The Hindu இதழ்கள் தெரிவிக்கின்றன. 10 ஆண்டுகளாகத் தேடப்படும் பெண் நக்சலைட் பாரதி, அந்தப் பள்ளிக்கு வரவிருப்பதாகக் கியூ பிரிவு போலிசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு போலிசார் விரைந்து சென்றதாகவும் அவரைப் பிடிக்கச் சென்றபோது தான் இந்தப் 13 பேரும் சிக்கினார்கள் என்றும் மாலைமலர் (8.10.12) Deccan Chronicle, Indian Express ஆகிய நாளிதழ்கள் கூறுகின்றன. 7.10.12 அன்று வெளியான மாலைமலர் செய்தியில்,சந்தேகத்திற்கிடமாக சிலர் ரகசியக் கூட்டம் நடத்துவது பற்றி கியூ பிரிவு போலிசாருக்குத் தகவல் கிடைத்ததாகவும் போலிசார் விரைந்து சென்று 13 பேரையும் பிடித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
தொகுத்துப் பார்க்கையில்,
(i) கூடிப் பேசியது குறித்த இரகசியத் தகவல்கள் கிடைத்துக் கண்காணித்துக் கைது செய்தோம்.
(ii) இரகசியக் கூட்டம் நடப்பது குறித்து அருகிலுள்ள ஒரு வீட்டுக்காரர் சொன்ன தகவலின் அடிப்படையில் வந்து கைது செய்தோம்.
iii) மூன்று பேருக்கு அனுமதி கேட்டுப் பதின்மூன்று பேர் வந்ததால் கலக்கமுற்று பள்ளித் தலைமை ஆசிரியரே புகாரளித்ததால் வந்து கைது செய்தோம்.
(iv) பல ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ள பாரதி என்பவரைத் தேடி வந்து இவர்களைக் கைது செய்தோம் என முன்னுக்குப் பின் முரணான செய்திகளைக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இது குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பாமல் ஊடகங்கள் முரண்களை அப்படியே வெளிப்படுத்தியுள்ளன. ஒரே இதழ் முதல் நாள் ஒரு மாதிரியாகவும் மறுநாள் வேறு மாதிரியாகவும் செய்தி வெளியிடுவதற்கும் தயங்கவில்லை. தலைமை ஆசிரியர் தான் அனுமதி அளித்தே கூட்டம் நடந்ததாகவும், தான் புகார் ஏதும் செய்யவில்லை எனவும் சொன்னதாக ஒரு தகவல் முகநூலில் பதிவாகியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஊடகங்களின் ஒருசார்புத் தன்மை
கியூ பிரிவு போலிஸாரின் செய்திகளை ஐயத்திற்கிடமின்றி வெளியிடும் ஊடகங்கள் கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர்வதில் ஒருசிறிதும் அக்கறை செலுத்தவில்லை. தேர்ந்து, தெளிந்து ஆராய்ந்த உண்மைகளை மட்டுமே ஊடகங்கள் செய்திகளாக வெளியிடவேண்டும் என்று நாம் வலியுறுத்தவில்லை. அது உடனடிச் சாத்தியம் இல்லை என்பதையும் நாம் உணர்கிறோம். ஆனால் ஒரு நிகழ்வைக் குறித்த இருவேறு தரப்பினரின் கருத்துகளையும் நடுநிலை நின்று நேர்மையோடு வெளிப்படுத்த வேண்டியது ஊடகங்களின் இன்றியமையாத கடமை. அதேபோல ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை போலீசார் கூறும்போது அதைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டு வெளியிடுவதும் ஊடகங்களின் கடமை. இந்தக் கடமையிலிருந்து தவறும் போது ஊடக அறம் என்பது கேலிக்கூத்தாகிறது.
“நக்சலைட் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு” “நக்சலைடுகள் பள்ளிக்கூடத்தில் பயிற்சி” “நகர்ப்புறங்களில் தளம் அமைக்க நக்சலைட்டுகள் திட்டம்” என்றெல்லாம் காவல்துறைச் செய்திகளை அப்படியே வெளியிட்ட ஊடகங்கள் அதேவேளையில், கியூ பிரிவு மற்றும் போலிசாரின் கூற்றுகளில் உள்ள முரண்களைச் சுட்டிக்காட்டி, கைது செய்யப்பட்டவர் தரப்பு உண்மைகளை எடுத்துரைத்து, உடனடியாக அவர்களை விடுதலை செய்யக்கோரி, மனித உரிமை அமைப்பு சார்பில் அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், எஸ்.வி.ராஜதுரை. பிரபா.கல்விமணி ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையை முற்றாக ஒதுக்கித்தள்ளின. ‘தினமணி’, ‘Deccan Chronicle’ நாளிதழ்கள் மட்டுமே இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தன. தினமணி அறிக்கையை முழுமையாக வெளியிட்டிருந்த போதும் அமைப்புக்களின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி இருந்தது.
மொத்தத்தில், இந்த ஊடகச் செய்திகளை ஒப்பிட்டு நோக்கும் போது பெரும்பாலான ஊடகங்கள், உண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதைவிடவும் போலிஸ்தரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் அளித்துவருவதை அறியமுடிகிறது. ஊடகங்கள் தமது அறங்களை கைவிடும் இந்தப்போக்கு ஆபத்தானது. ஊடகவியலாளர்கள் சிந்திக்கவேண்டும்.