`வரனே ஆவஷ்யமுண்டு’ – மலையாள சினிமாவின் பொறுப்பின்மையும் தமிழ் ட்ரோல்களின் எதிர்வினையும்!

கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது ‘வரனே ஆவஷ்யமுண்டு’. துல்கர் சல்மான் தயாரிப்பில், ஷோபனா, சுரேஷ் கோபி, துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி முதலானோர் நடிப்பில், அனூப் சத்யன் என்ற அறிமுக இயக்குநரின் படைப்பாக வெளிவந்திருந்தது. பிப்ரவரி மாதம் வெளியானபோதும், ஏப்ரல் இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானபோதும் சர்ச்சைக்குள்ளாகாத இந்தத் திரைப்படம், துல்கர் சல்மானின் ஒரு ட்வீட்டால் பெரும் சர்ச்சையை எதிர்கொண்டது. படத்தின் ஒரு காட்சியில், சுரேஷ் கோபி வளர்க்கும் செல்ல நாயின் பெயர் ‘பிரபாகரன்’ என்று சூட்டப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் ப்ரோமோவுக்காக துல்கர் சல்மான் வெளியிட்டதும் சர்ச்சை தொடங்கியது.

இணையத்தில் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து இயங்கும் நபர்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். நாய்க்கு மம்மூட்டியின் பெயரைச் சூட்டுமாறு ட்ரெண்டிங் செய்யப்பட்டது. தொடர்ந்து துல்கர் சல்மான் குறிவைத்துத் தாக்கப்பட்டார். இறுதியாக, துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்டு, அந்த ட்வீட்டை அழித்தபோதும், அவர் மீதான தாக்குதல் தொடர்ந்தபடியே இருந்தது. ‘வரனே ஆவஷ்யமுண்டு’ சர்ச்சைக்குரிய திரைப்படமாக அந்தப் புள்ளியில் மாறியது.

திருமண வயதில் மகளைக் கொண்டிருக்கும் ஷோபனாவுக்கும், திருமணம் ஆகாத ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் கோபிக்கும் இடையிலான காதல் கதை. வயது முதிர்ந்தவர்களிடையிலான காதல் குறித்து கடந்த ஆண்டுகளில், ’சில்லுக் கருப்பட்டி’, ‘பவர் பாண்டி’ முதலானவை மேலோட்டமாகத் தொட்டுச் சென்றிருந்தன. ‘வரனே ஆவஷ்யமுண்டு’ அப்படியாக வெளியாகியிருந்தது. இதே கதைக்கருவை கொண்ட மற்ற படங்களைப் போலவே, இதுவும் எலைட் மனிதர்கள் குறித்த திரைப்படமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் வாழும் மலையாளிகளின் கதையாக எழுதப்பட்டிருந்தது.

வரனே ஆவஷ்யமுண்டு

’நாட்டில் எவிடேயா?’ – சென்னையில் மலையாளிகளுடன் வாழ்ந்தால், இந்தக் கேள்வியை அடிக்கடி உங்களால் எதிர்கொள்ள முடியும். சென்னை முழுவதும் வாழும் மலையாளிகளின் மக்கள்தொகை மிகப்பெரிது. தமிழ் மக்களின் எண்ணிக்கைக்கு ஈடில்லை என்றபோதும், மலையாளம் பேசும் கணிசமான மக்கள் சென்னை மாநகரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். பெசண்ட் நகர் பீச்சுக்கும், காஃபி ஷாப்புக்கும் செல்லும் மலையாளக் குடும்பம், பார்ப்பனர்களால் வாடகைக்கு விடப்படும் அபார்ட்மெண்ட் என்ற எலைட் அம்சங்களுக்கிடையில், சென்னையில் மருத்துவர், போக்குவரத்து ஆய்வாளர் முதலான கதாபாத்திரங்களும் மலையாளிகளாகவே சித்தரிக்கப்பட்டிருந்தனர். சேரியில் தங்கும் வேலைக்காரப் பெண்மணி கூட மலையாளம் பேசுகிறார். மேஜர் சுரேஷ் கோபி சண்டையிட்டு, தனது வீரத்தை வெளிப்படுத்துவதற்கும், அடி வாங்குவதற்கும், சென்னை பறக்கும் ரயில் பாலங்களின் ஓரத்தில் வாழும் சேரி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், தன்னால் முடியும் போதெல்லாம் தன்னைப் பெருமையாகப் ‘பட்டாளக்காரன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறது. ‘மனிதர்களைக் கொல்லும் அதிகாரம் கடவுளிடம் மட்டுமே இருக்கிறது; அதனால் ஒரு ராணுவ வீரன் என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன்’ என்று சொல்கிறார் சுரேஷ் கோபி. முதல் காட்சியில், ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி வைக்கப்படும் அந்தக் கதாபாத்திரம், இறுதிக் காட்சியில் ராணுவத்தில் பெற்ற பதக்கங்களுடன் அடுத்த தலைமுறைக்கு அட்வைஸ் தருகிறது. தன்னை இந்திய ராணுவத்தின் பெருமைமிகு வீரனாக அடையாளப்படுத்தும் சுரேஷ் கோபி கதாபாத்திரம், தனது செல்ல நாய்க்கு வைக்கும் பெயர் – ’பிரபாகரன்’.

சென்னையைக் கதைக்களமாகவும், தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளையும் பேசும் கதாபாத்திரங்களாகவும் கொண்டுள்ள இந்தப் படத்தில் இப்படியான பெயர்சூட்டல் நிச்சயமாக வன்மமாகவே பார்க்கப்படும். மேலும், சுரேஷ் கோபி இதற்கு முன், விடுதலைப் புலிகள் குறித்த கதைகளில் நடித்தவர். இதில் இருந்துதான் இதனை அணுக முடியும்.

துல்கர் சல்மான் வெளியிட்ட ட்வீட்

துல்கர் சல்மான் மன்னிப்பு கோரியபோது, ‘பிரபாகரா’ என்பது ‘பட்டணப் பிரவேஷம்’ என்ற 1988ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனம் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், 1988ஆம் ஆண்டு, இந்தியாவின் அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். ‘பட்டணப் பிரவேஷம்’ படத்தின் வில்லனின் பெயர், ‘பிரபாகரன் தம்பி’. இந்தப் பெயரில் இருக்கும் தம்பி என்பது, கேரளாவில் நாயர்களில் ஒரு சாதிப் பிரிவினரைக் குறிக்கிறது.

துல்கர் சல்மான் மன்னிப்புக் கேட்டபோதும், இது ‘வரனே ஆவஷ்யமுண்டு’ படக்குழுவினரின் பொறுப்பின்மையாகவே பார்க்கப்பட வேண்டும். ஒரு காட்சியில் ‘LDF வெல்லும்’ (சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி) என்றும், மற்றொரு காட்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்றும் அரசியலைத் தொட்டுச் செல்லும் பாத்திரங்களை உருவாக்கியவர்கள், தமிழ் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

சமீப காலங்களில் திரைப்படங்களில் இடதுசாரி அரசியல் என்பது மக்களை அரசியல்படுத்தும் நோக்கில் இல்லாமல், கைத்தட்டல் பெறுவதற்கான அரசியல் நீக்கப்பட்ட பண்டமாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. துல்கர் சல்மான் நடித்த ‘காம்ரேட் இன் அமெரிக்கா’, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’, தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான ‘ஜிப்ஸி’ முதலானவை இப்படியான திரைப்படங்கள். இதில், துல்கர் சல்மான் நடித்த ’காம்ரேட் இன் அமெரிக்கா’ படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பிரபாகரன் படம் வைக்கப்பட்டிருக்கும். தற்போது அவர் நடித்த மற்றொரு படத்தில், பிரபாகரனின் பெயர் இந்திய ராணுவ அதிகாரியின் நாய்க்குச் சூட்டப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவின் பழைய திரைப்படங்களின் பல்வேறு கதாபாத்திரங்கள் இன்றும் மக்களிடம் மதிப்பைப் பெற்றவை. உதாரணமாக, ‘பட்டணப் பிரவேசம்’ வெளியான அதே காலத்தில் வெளியான ‘நாயகன்’ படத்தின் வேலு நாயக்கர். கமல்ஹாசனின் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா..’ வசனத்தைக் கைத்தட்டலுக்காகத் தற்போதைய திரைப்படங்கள் பயன்படுத்துவதைப் போல, ‘பிரபாகரா’ என்று நாய்க்குப் பெயர்சூட்டியிருக்கிறது இந்தப் படம். மலையாள இணைய உலகின் பிரபலமான மீம் வசனம் அது என்றும் கூறியிருக்கிறார் துல்கர் சல்மான். தமிழ்நாட்டில் நடைபெறும் கதை என்பதால், பொறுப்புணர்வு அதிகம் இருந்திருக்க வேண்டும்.

வரனே ஆவஷ்யமுண்டு

அதே வேளையில், துல்கர் சல்மான் மீது பொழியப்பட்ட வசவுகள் பி.ஜே.பியின் மாநிலங்களவை எம்.பியான சுரேஷ் கோபியின் பக்கம் திரும்பவில்லை. மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியில் கேரளாவுக்குட்பட்ட வனப்பகுதிகளில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த என்கவுண்டர் இருதரப்பு மோதலாக கேரள அரசால் அறிவிக்கப்பட்டபோதும், அது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதாக கேரளாவின் ஆளும் கூட்டணியில் அங்கம்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே குற்றம் சாட்டியது. சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரும் தமிழர்கள். கொல்லப்பட்டவர்களுள் ஒருவரான தோழர் மணிவாசகத்திற்கு இறுதி அஞ்சலி நிகழ்வை முன்னின்று நடத்தியதற்காகத் தமிழகக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறது மணிவாசகத்தின் தங்கையின் குடும்பம்.

மனித உரிமைகள் மறுக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும், கைதுசெய்யப்பட்ட தமிழர்களுக்காகவும் குரல்கொடுக்க முன்வராத தமிழ் ட்ரோல்களால் துல்கர் சல்மான் மீது எதிர்வினையாற்ற முடிந்தது. அவரை அடிபணிய வைக்க முடிந்தது.

திரைப் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புணர்வோடு அமையப் பெற வேண்டும்; அதே வேளையில், இணைய ட்ரோல்களின் செலக்டிவ் எதிர்வினையையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.