Home Blog

தாய் கிழவி: சாமி, சடங்கு, சாதிகளின் சமகால முறையிடல்! – மு. அப்துல்லா

‘தாய் கிழவி’ படம் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்திய விதம் உண்மையில் சுவாரஸ்யமானது. கொண்டாட்டமான திரை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது; பெண்ணியம் போற்றும் படைப்பாக பாராட்டப்படுகிறது; நீண்டநாள் கழித்து மதுரை கிராமத்து சினிமாக்களை நினைவுபடுத்தியதாக ரசிக்கப்பட்டது; ராதிகா தொடங்கி துணை நடிகர்கள் வரை படத்தில் நடித்த அனைவருக்கும் அங்கீகாரத்தை அளித்திருக்கிறது; பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற நல்ல கருத்துகளைச் சொல்லியிருப்பதாகப் பேசிக்கொள்ளப்படுகிறது; இறுதியாகச் சிலருக்கு, ‘பெண்கள் என்றால் நகை மட்டும்தானா?’, கந்துவட்டியைப் புனிதப்படுத்துவதா?’, ‘சாதிய நெடி ஏறுகிறது’ போன்ற மனக்குறைகளையும் தந்திருக்கிறது.

மதுரையை மையப்படுத்திய சினிமாக்களின் தொடர்ச்சியாக இந்தப் படம் பார்க்கப்படுகிறது. இதிலும், ’தாய் கிழவி’யின் தனித்துவமாக இருப்பது அதன் வசனங்கள். மதுரை சினிமாக்களுக்கு உரிய வீர வசனங்கள், வட்டார பெருமிதம், பரம்பரை துதிபாடல் போன்றவை இதில் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. மாறாக, சாதாரணமாகப் புழங்கும் உரையாடல்களில் உள்ளூர் வழக்கும், வசீகரமும் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளது. டப்பிங் பணியின்போது செறிவான வசனங்கள் நடிகர்களுக்குச் சவாலாக இருந்திருக்கும்.

ஒரு மூதாட்டியைச் சாவின் விளிம்பில் படுக்கையில் வைத்துக்கொண்டு நிகழும் கதைக் களத்தைக் கொண்டாட்டமாக நகர்த்தியிருக்கிறார்கள். அந்தக் கேளிக்கை வேடிக்கையாக மாறிடாதவாறு இறுதியில் உணர்வுப்பூர்வமாக கையாளப்பட்டுள்ளது. இது இயக்குநர் சிவகுமார் முருகேசனின் திறனைக் காட்டுகிறது. ’தாய் கிழவி’ அடிப்படையில் ஒரு பொழுதுபோக்கு படம் என்றாலும், போகிற போக்கில் எடுக்கப்படவில்லை.

முதல் காட்சியில் பெண்கள் ஊரின் அனைத்து வீடுகளுக்கும் திருமண பத்திரிக்கை வைக்கும்போது பேசிக்கொள்வதும், இடையே ஒவ்வொரு வீட்டின் பெயர் காட்டப்படுவதும், உதய சூரியனும் ‘குக்கருமாய்’ கட்சி சின்னங்கள் வீட்டுச் சுவரில் வரையப்பட்டிருப்பதும், பச்சை – மஞ்சள் வண்ண பெயிண்ட் அடிக்கப்பட்ட ‘பவுனுத்தாய் இல்லம்’ காட்டுவதுமாகத் தேவையான முன் தகவல்களோடு (Disclaimer) படம் ஆரம்பிக்கிறது.

’தாய் கிழவி’யை ஒரே நேரத்தில் ஒரு இனவியல் படைப்பாகவும், அனைவருக்குமான படமாகவும் மாற்றிய இயக்குநரின் சாமர்த்தியம் குறிப்பிட வேண்டியது. நேரடியாகச் சாதிய அடையாளத்தைக் காட்டினாலும், அது சாதிப்படமாக மாறிடக்கூடாது. அதைவிட முக்கியமான விஷயம் படத்தில் வெளிப்படும் சாதி, படம் பார்க்கும் அந்த சாதிக்காரர்களைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்று இயக்குநர் எச்சரிக்கையாக அணுகியது தெரிகிறது. உண்மையில், இதனைச் சாதித்ததில் திரைமொழி முக்கிய பங்காற்றுகிறது.

அரங்கேற்றம்: வீழும் சினிமா, மீண்டெழும் நாடகம்!

மேடை நாடகங்களில் கலைஞர்களிடமிருந்து வெளிப்படும் அதீத உணர்ச்சி ஒரு முக்கியமான பண்பு. ஏனெனில், நேரடியாகப் பார்வையாளர்களிடம் கலைஞர்கள் உரையாடுகிறார்கள். பார்வையாளருக்குச் சொல்ல வேண்டிய விஷயத்தை நேருக்கு நேராகப் கடத்த வேண்டும். எனவே, பொதுவாக நாடகங்களில் பங்கேற்கும் பார்வையாளர்களும், அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளும் நாடகத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

நிகழ்த்துக் கலையில் (performing art) இடம்பெறும் நாடகத்தில் அரங்கேற்றம் நடத்தப்படுகிறது. அரங்கில் தோன்றும் கலைஞன் தனது உடலை ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாற்றுகிறான். அரங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு அந்த உடலின் இயல்பும் தெரியும், அந்த இயல்பு மேடையில் உருத்திரண்டு தம்மை வசியப்படுத்தப் போராடுகிறது என்றும் தெரியும். அரங்கேற்றம் ஒவ்வொன்றிலும் நிஜம் தன்னை நிழலாக நிரூபிக்க மெனக்கெடுகிறது. இது பார்வையாளர்கள் முகத்துக்கு நேராக நிகழ் காலத்தில் நடைபெறுவதால், அதீத உணர்ச்சி தேவையாக இருக்கிறது. நிகழ்காலம் உயிருடன் இருக்கும் காலம் எனப்படுகிறது. எனவே, அந்த நேரத்துக்கான காரண, காரியங்கள் அவசியப்படும் காலமாக இருக்கிறது.

நாடகத்திற்குப் பிறகு உருவான சினிமா அனைத்து மக்களையும் கவர்ந்துள்ள வெகுஜனக் கலை. முந்தைய கலை வடிவங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிவிட்டது சினிமா. அது, பார்வையாளர்களை ரகசியமாக வைத்திருக்காமல் விசாலமாக மாற்றியது. சினிமா அரங்கேற்றப்படவில்லை; மாறாகத் திரையிடப்படுகிறது. திரையில் கடந்தகாலம் – அதாவது செத்த காலத்தின் காட்சிகள் நிகழ்கால பார்வையாளர்கள் முன் தோன்றுகிறது. எனவே, அது பார்வையாளர்களிடம் தனது தர்க்கங்களை நிரூபிக்கப் போராடவில்லை. ஆதலால், இங்கு நாடகத்துக்கு தேவைப்பட்ட காரண, காரியங்கள் முற்றிலுமாக விடுபட்டுப் போகிறது.

சினிமா கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை யதார்த்த வடிவமாக இவ்வாறே உருமாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. சினிமாவின் இறந்த காட்சிகளின் வடிவமைப்பையும், அது தனக்குள் செய்துகொண்ட ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் கண்டு பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள். நாடகத்தின் அவசியமாக இருந்த அதீத உணர்ச்சி, சினிமாவில் தேவையற்ற மிகை உணர்ச்சியாக (overacting) மாறுகிறது. கடந்த காலத்தில் நடந்துமுடிந்த விசயங்கள் என்பதால் அது உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. பார்வையாளர்கள் அதன் ரசனைகளை அளவிடும் ரசிகர்களாக உருவானார்கள். இதன் போக்கு சினிமாவில் யதார்த்தத்தை மீறிய கற்பனை உலகத்தையும் திறந்துவிட்டது. உதாரணத்திற்கு, சாதாரணமாகச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும் நாயகனும் நாயகியும், திடீரென வெளிநாட்டில் டூயட் பாடுவது பற்றியெல்லாம் படம் எடுப்பவர்களும் சரி, பார்வையாளர்களும் சரி ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் 2010-க்கு உருவான படங்கள், தமிழ் சினிமாவை அதிகம் தன்னுணர்வுக்கு உட்படுத்தின. சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் சினிமா கலைஞர்களிடம் நேரடியாக விவாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், பெருந்தொற்று காலத்தில் உருவான “டிக்டாக்” சினிமா கலைஞர்களுக்கு சவால் விட்டது.

மொபைலை தனக்கான மேடையாக மாற்றிய ரசிகர்கள் சினிமா காட்சிகளை தங்கள் நடிப்பில் மீட்டுருவாக்கினர். இதன்மூலம், சினிமாவை வைத்து வெவ்வேறு வித்தியாசமான சோதனை முயற்சிகளைச் செய்தார்கள். ட்ரெண்டிங் வைரல் தொற்றியது. இதனால், சினிமா வடிவங்கள், ரீல்ஸ் போன்ற டிஜிட்டல் வெளிக்குள் தன்னை பொருத்திக்கொள்வதை முக்கிய வேலையாகச் செய்ய ஆரம்பித்தன. சமீபத்திய தமிழ்ப் படங்கள் அனைத்திலும் இந்த செயல் வெளிப்படையாகத் தெரிகிறது.

’தாய் கிழவி’ படம் ஓடிடி-யில் வெளியானவுடன் தொடர்புடைய ஓடிடி நிறுவனங்களின் பக்கங்களே படத்தின் காட்சிகளை ரீல்ஸாக வெளியிட்டன. ’தாய் கிழவி’ போன்ற ஒரு செறிவான பொருளில் அமைந்த படத்திற்கும் அது அவசியமாகிறது. ஒருவிதத்தில், ‘டிஜிட்டல் சூழல், டிஜிட்டலில் இது எவ்வாறு வெளிப்பட வேண்டும்’ போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டே இப்போது படங்களில் காட்சிகள் அரங்கேற்றப்படுகிறது. அரங்கேற்றம் என்று வந்துவிட்டவுடன் அது காரண காரியங்களைத் தேடி அலைகிறது.

’தாய் கிழவி’ படத்தின் முக்கிய காட்சிகளில் கமல் பட பாடல்கள் வர வேண்டும். அந்தப் பாடல்கள் கமல் ரசிகர் உப்பிலி வண்டியை ‘ஸ்டார்ட்’ செய்ததால்தான் வருகிறது என நாம் நம்ப வேண்டும். உட்சபட்ச காட்சியான இடைவேளைக்கு பிறகும் மூன்று இடங்களில் பாடல் வருவதற்கு மீண்டும் மீண்டும் அதே காரணம் திணிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, இன்றைய படங்களில் பழைய பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது, இன்ஸ்டா போஸ்ட்டுக்கு பாடல் தேர்ந்தெடுப்பதன் தொடர்ச்சிதான் என்று சொல்லலாம்.

ஒரு படம் தன்னுடைய உள்ளடத்தில் கவனம் செலுத்துவதைவிட, பார்வையாளர்களிடம் சமகாலத்தில் உரையாட நினைக்கிறது. டிஜிட்டல் ட்ரெண்டிங்கு ஏற்ப சினிமா வடிவத்தை மாற்ற சினிமா வணிகம் மிரட்டுகிறது. அதற்காக, துண்டு துண்டாக சினிமாவில் காரண காரியங்கள் நிகழ்த்தப்படுகிறது. ’தாய் கிழவி’ இதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். விஜய் அரசியல் சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருக்கும் காலத்தில் இப்படத்தில் நடிகர் விஜய்யும் வருகிறார், தவெக தலைவர் விஜய்யும் வருகிறார்.

கடவுள் விளையாட்டு

’தாய் கிழவி’யின் உடல் பவுனுத்தாய் என்றால், உயிர் அதன் தெய்வங்கள். டைட்டில் வடிவம் (Font) தொடங்கி கடைசி காட்சி வரை கடவுளில் ஆரம்பித்து கடவுளில் நிறைவடைகிறது. பவுனுத்தாய், அவரை ஏற்காத மகன்கள், வெறுக்கும் ஊர்ப் பெண்கள், வில்லங்கம் செய்த மருமகன் என அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுத் தன்மை அவர்களின் இறை வழிபாடு. (சாதிக்குப் பின்னால் வருவோம்)

‘அம்மா சாக வேண்டும்’ என்று எண்ணெய் வைத்து தீபம் ஏற்றும் மகன், பிறகு ‘அந்த தீபத்தில்தான் தாயின் உயிர் இருக்கிறது’ என்று உறுதியாக நம்புகிறான். அந்த தீபம் அணையக்கூடாது என்று கூலிக்கு வேலை பார்க்கும் நபரும், வெறுமனே பணத்திற்காக என்றில்லாமல் கொட்டும் மழையிலும் தீபத்தை அணையவிடாமல் போராடுகிறான். பவுனுத்தாயின் மகள் தாய்க்காக ஏற்றிய சூடத்தை, பவுனுத்தாய் சாகவேண்டும் என்று நினைக்கும் ஊர்க்கார பெண்கள் அணைக்கிறார்கள். நகைக்காக அலையும் மருமகன் பணத்தைக் கொடுத்ததோடு நிற்காமல், முருகனுக்கு காவடி தூக்குகிறான். மருமகள்கள் தங்களின் உடைமை அனைத்தையும் கொடுத்துவிட்டு நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.

இவ்வாறு, இப்படத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய முதன்மை பொருளாக அதன் இறையியல் தன்மை இருக்கும். இறையியலை ஏனோ மாயமந்திரங்கள் போல் இருட்டுக்குள் தள்ளிய படங்களே தமிழில் பிரதானம். அதை எதிர்க்கிறேன் என்ற பெயரில் விவேக் போன்றவர்கள் செய்த செயல் மோசமான இழிவுபடுத்துதலாக இருந்தது. விவேக் படங்களின் மொழியானது, எம்.ஆர். ராதா, கலைவானர் போன்றோரின் மொழியைப் பிரதியெடுப்பதாகப் பாவனை செய்தது. ஆனால், மேற்கூறியவர்கள் அன்றைய சூழலில் அதிகாரமாகக் கருதிய பார்ப்பனிய தன்மையைக் கேள்வி கேட்டார்கள். ஆனால், விவேக் போன்றவர்கள் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டு, சாதாரண தெய்வங்களை எள்ளி நகையாடினார்கள்.

திராவிட கலாசார சூழலில் தெய்வங்கள் பற்றிய கதையாடல்கள் கருப்பு வெள்ளைக்குள் வைக்கப்பட்டது. நவீன பகுத்தறிவு சிந்தனைக்கு எதிரானது இறையியல் தேர்வு என்ற போக்கு இயல்பாகவே திராவிட அரசியலிலிருந்து உருவானவர்களை ஆட்கொண்டது. திராவிட ஆட்சியில் சினிமா வெறும் கதம்பமாகவும், மண்ணுக்கும் மக்களுக்கும் ஒட்டாத பிளாஸ்டிக்காகவும் மாறியது. திராவிட ஆட்சியில் வாழும் மக்களின் வாழ்க்கையை நேர்மறையாக அளவிட்டு, அதுசார்ந்த உரையாடல்களை மேற்கொள்வது கூட நடைபெறவில்லை.

மாறாக, சமீப காலத்தில் தலித் அலையில் உருவான மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இறையியலின் பலபரிமாணங்களை மீட்டெடுத்தனர். மக்கள் வாழ்வோடு ஒட்டிய சினிமா எனும்போது அங்கு மக்களோடு தொடர்புடைய அனைத்தும் வந்துவிடுகிறது. மாரி செல்வராஜ் படங்களில் பண்பாட்டு ஆதிக்கத்தைத் தலைகீழாக்கும் இறையியல் வெளிப்படும். ஆனால், தாய் கிழவியில் பண்பாட்டு வெளியில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் இடமுண்டு. இதில்தான், ‘யதார்த்தத்தில் சாதாரண மக்களின் இறையியல் வாழ்வு எப்படியிருக்கிறது?’ என்ற கடவுள் விளையாட்டை ஆடியிருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.

‘முதலில் பெண் தெய்வங்கள், பிறகு ஆண் தெய்வங்கள், இடையே மருத மீனாட்சி’ எனத் தெய்வங்களைப் பட்டியலிட்டவாறு அறிமுகமாகிறார் பவுனுத்தாய். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த அவர், கருமாத்தூர் கள்ளர்களிடையே பிரசிக்தி பெற்ற விருமாண்டி, பேச்சியம்மன், மாயன் ஆகிய மூன்று தெய்வங்களை அதில் தவிர்க்கிறார். இந்த மூன்று சாமியையும் வழிபடும் கருமாத்தூர் கள்ளர்கள் முருகனை மறுக்கிறார்கள். ஆனால், காடுபட்டி பவுனுத்தாயின் அடையாளமாக முருகன் இருக்கிறார். முருகன் குல தெய்வம் இல்லையென்றாலும், விருப்பின் அடிப்படையில் முதன்மையில் இருக்கிறார். அதேவழியிலேயே விநாயகர், சரஸ்வதி, லட்சுமி போன்ற பெருந்தெய்வங்கள் எளிய மக்களின் இறையியலில் இடத்தை பிடிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பவுனுத்தாயின் பூசையறையில் கர முருகன் இருக்கிறார். படம் முழுக்க கருப்பன் இருக்கிறார். ஆனால், இதையெல்லாம் தாண்டிய பொது ஈடுபாடே (Popular appeal) படத்தின் அடையாளமாக மாறுகிறது.

உள்ளூர் அளவில் தெய்வங்களுக்கு இடையே மக்கள் கொண்டுள்ள முரண்பாடுகள், தெய்வங்களின் படிநிலை ஆகியவை முக்கியமானது. அவற்றைக் கடந்து அனைத்து தெய்வங்களையும் உள்ளிழுக்கும் ஈடுபாடு மக்களின் அடிப்படை மனதிலிருந்தே வருகிறது. வெவ்வேறு தெய்வங்களை வழிபாடு செய்வது, ஒன்று மற்றொன்றை விலக்குவதாக அர்த்தம் இல்லை. மாறாக, ஒவ்வொரு தேவைக்கும் அந்தந்த தெய்வத்திற்கு உரிய இடத்தை மக்கள் கொடுக்கிறார்கள். இதனாலேயே, பெருந்தெய்வங்கள் மக்கள் வாழ்வில் முக்கிய இடத்தை பிடிப்பதை அப்படியே எதிர்மறையாக எடுத்துக்கொள்ள முடியாது. இதனை தனக்குப் பயன்படுத்திக்கொண்ட இயக்குநர், படத்தில் உள்ளூர் முரண்களை வெளிப்படுத்தியவாறு பொது மனநிலையையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் கருப்பன் ஒரு பாத்திரமாக இருக்கிறான். கருப்பனுக்கும் – அவனுக்கு முறைவாசல் செய்துகொண்டு, அங்கு வந்துசெல்லும் மக்களிடம் காசு வாங்கிக்கொண்டு குடிகாரனாய் திரியும் ‘வெச குட்டா’வுக்கும் இடையேயான தொடர்பு குறிப்பிட வேண்டியது.

‘வெக்கமா இல்ல’ என்று கேட்டபடிதான் கருப்பனிடம் பேச ஆரம்பிக்கிறான் வெச குட்டா. ‘உன்ன அப்படியே பீடத்தோட பேத்து எடுத்துட்டுப் போய் மதுரை ஜெயில்ல போற்றுவாங்க’ என்று அவன் சொல்லும்போது படம் பார்க்கும் யாரையும் உறுத்தவில்லை. அதையெல்லாம்விட முக்கியமான விஷயம், ‘ஒழுக்கமா இங்கன இருந்தா இரு, இல்லனா உன் ஊரு கேரளாவுக்குதான ஓடிபோயிரு’ என்று கடவுளின் பிறப்பிடத்தை (Native) அவன் குத்திக்காட்டுகிறான்.

தென் தமிழகத்தில் பலருக்கும் குல தெய்வமாக இருக்கும் கருப்பன் கேரளாவிருந்து மதுரைக்கு வந்ததாக வழிபடும் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அது அவ்வப்போது அந்த மக்களாலும் நினைவுகூரப்படுகிறது. இன்றும் மக்கள் நினைவுகளில் கடவுளுக்கும், கடவுள் தோன்றிய இடத்திற்கும் வேறுபாடு பார்க்கும் எண்ணமெல்லாம் இல்லை. கேரளாவிலிருந்து வந்த கருப்பனைத் தனது கடவுளாக ஏற்றுக்கொள்வதில் மக்களுக்குப் பிரச்சனையாக இல்லை. காலப்போக்கில் கண்கண்ட தெய்வங்களை ஏற்பதும், தன்வயவைப்படுத்துவதும் மக்களின் அடிப்படை குணமாக இருந்திருக்கிறது. ஆனால், நவீன இந்துத்துவ அரசியல் உருவெடுத்த பிறகு கடவுள் நிலையை உள்ளூர் தன்மையோடு வைத்துப் பார்க்கும் பார்வை தோன்றியது.

அரசியல் சொல்லாடல்களில் உள்ளூர் தன்மை (Nativism) என்பது பேசுபொருளின் மையமாக மாறியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கூட நல்லிணக்கம் விரும்புபவர்கள் தர்காவையும் முஸ்லிம்களையும் தங்கள் கருணைக்கு உட்பட்டவர்களாகப் பார்க்கிறார்கள். இதற்குக் காரணம், ‘பெரும்பான்மை இந்துக்கள் உள்ளூர் தன்மை கொண்டவர்கள், முஸ்லிம்களின் வழிபாடு அதில் இடையில் வந்தது, இருந்தும் அதனை நாங்கள் தாராள மனதுடன் ஏற்கிறோம்’ என்று நினைக்கும் நேட்டிவிஸ மனநிலையே ஆகும். இதற்கு மாறாக, முஸ்லிம்கள் அவர்களுக்குரிய வழிபாட்டுப் பங்கை அவர்கள் விருப்பப்படி செய்து வருகிறார்கள் என்ற கட்டத்திற்கு நம் நல்லிணக்க பார்வை நகர வேண்டும். இந்துமதம் என்ற பெருந்தொகுதியில் இப்படித்தான் அவரவர் பங்கை வைத்திருக்கிறார்கள். ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தாத நிலையில், உள்ளூர் கடவுள், இடையே வந்த கடவுள் என்ற சிந்தனைக்கு இறையியலில் இடமில்லை.

இதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காரணம், எப்படி கடவுளின் உள்ளூர் தன்மைக்கும், அவரிடம் மக்கள் கொண்ட ஈடுபாட்டுக்கும் இடையே பிளவு இல்லையோ, அதேபோல் கடவுளின்பாலான மக்களின் உறவுக்கும் நடைமுறை வாழ்வுக்கும் தொடர்பு இல்லாமலேயே இருக்கிறது.

கொஞ்சம் அருகே இருந்து பார்த்தால் இறையியல் மக்கள் அப்படிதான் வாழ்ந்து வருகிறார்கள். கருப்பனுடைய தீபத்திற்கு எண்ணெய் ஊற்றினாலோ, நேர்த்திக்கடன் செய்தாலோ மட்டும் போதும், தாய் பிழைத்துவிடுவார் என்று எவரும் நின்றுவிடவில்லை. அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நடைமுறையை அங்கு அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். இத்தகைய, இறையியலாளர்களின் பக்திக்கும் நடைமுறைக்கும் உள்ள உறவை நவீன நாத்திகம் புரிந்துகொள்ளத் திணறுகிறது. கடவுள் விளையாட்டு என்பது கடவுளை வைத்து இறையியலாளர்கள் ஆடும் விளையாட்டாகவே இருக்கிறது. அதை நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இப்படம் வழங்கியிருக்கிறது.

மற்றமையை மறைத்தலும் தப்பித்தலும்

“மதுரை ஃபார்முலா – தமிழ் சினிமாவில் சாதிப் பெருமை மற்றும் அரசியல்” என்ற ஆய்வுத் தாளில் மற்றமை ( Others) பற்றி ஆய்வாளர்கள் கார்த்திகேயன் தாமோதரன் மற்றும் ஹியூகோ கொரிஞ்ச் கவனப்படுத்திய விஷயங்களை இங்கே குறிப்பிட வேண்டும். 90-களில் உருவான தமிழ்ப் படங்கள் யதார்த்தம் மற்றும் மரபு என்ற பெயரில் “ஒரு புதிய கனவு உலகை” கட்டமைத்தன. இடைநிலை சாதிகள் அரசியலில் இட ஒதுக்கீடு அதிகாரத்தை வென்ற அந்தக்காலத்தில், சினிமாவில் ஒருவித நிலவுடைமை பண்பைப் பெறுகிறார்கள். அங்கே அவர்களின் பெருந்தன்மைக்கும் சாதிய பெருமிதத்திற்கும் பாத்திரமாக, அவர்கள் கருணைக்குப் பாத்தியப்பட்ட மற்றமைகள் கட்டமைக்கப்படுகின்றன.

இந்த மற்றமைகளே ’சின்ன கவுண்டரை’யும், ’தேவர் மகனை’யும், ’எஜமானை’யும் புனித நாயகர்களாக மாற்றுகின்றன. புனித நாயகர்களின் இன்றைய பரிணாமம் மீட்பர் நாயகர்கள் (Saviour Heroes) என்று சொல்லலாம்.

’தாய் கிழவி’யில் வெளிப்படையாகச் சாதியை அறிவித்துவிட்டார்கள். சாதியை அறிவித்த பிறகு, சம்பந்தப்பட்ட சாதியினை எச்சரிக்கையாக அணுக வேண்டும் என்ற முன்முடிவு இயக்குநருக்கு இயல்பாக வந்துவிடுகிறது. இங்கு, சாதியை விமர்சிக்க வேண்டிய அளவு இதுதான் என்று ஒரு எல்லைக் கோட்டை வரைய வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான், சம்பந்தப்பட்ட சாதி ஏஜன்சியைப் பிரச்சனை இல்லாமல் தக்க வைக்க முடியும். இயக்குநரும் அதே சாதியாக இருக்கும்பட்சத்தில், வர்த்தக ரீதியாகவும் கரியர் ரீதியாகவும் இது அவருக்கு அவசியமாகிறது.

’தாய் கிழவி’யை சாதி என்ற ரீதியில் மட்டுமல்லாமல், திரை அழகியலிலும் ’தேவர் மகனோ’டு ஒப்பிடலாம். இரண்டு படங்களும் சொந்த சமூகத்தின் சிக்கல்களை சுய விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றன. ’தேவர் மகனி’ல் ஆண்கள் அனைவரும் “காட்டுமிராண்டிகளாக” வடிவமைக்கப்பட்டார்கள். ’தாய் கிழவி’யில் அனைத்து ஆண்களும் ஆண்மை அடையாளம் நீக்கப்பட்டுள்ளார்கள். முன்னதில், ‘போற்றி பாடடி பெண்ணே’ தொடங்கி பஞ்சாயத்து அவமானம், குடும்ப அதிகாரத்தை நாயகன் மீட்டெடுப்பது என மீண்டும் மீண்டும் சாதிய உணர்வு மேலெழுகிறது. இங்கும் பென்னி குயிக், முத்துராமலிங்க தேவர் கலைக்கூடம், சீயான் நேதாஜி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கடைசி விவசாயி என மீண்டும் மீண்டும் ஒற்றைக் காரணி நினைவுபடுத்தப்படுகிறது.

எல்லாம் இருந்தும் ’தேவர் மகனி’ன் பெருமிதத்தை உயர்த்தும் முக்கிய காரணி அவனுக்காகக் கையை இழக்கும் இசக்கி. இசக்கி என்ற மற்றமையே ’தேவர் மகனி’ன் அருமை பெருமைகளை உணர்வுப்பூர்வமாக நமக்குக் கடத்துகிறது. இசக்கியை நாம் அப்படியே தலித்தாக கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை. பதிலாக, நாயகனைத் தூக்கிச் சுமக்கும் இசக்கிகள் எந்த வடிவிலும் இருக்கலாம். அவர்களே, நாயகனையும் அவனுடைய சாதிய அதிகாரத்தையும் காக்கிறார்கள். அவர்கள் கதைகள் எங்கும் பேசப்படுவதில்லை. அப்படிப் பேசப்படும்பட்சத்தில் நாயகனின் கொடை உள்ளத்தை சாத்தியப்படும் சாதி அதிகாரம் அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கும். ’மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில், “இசக்கிதான் மாமன்னன்” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் சொன்னது நினைவிருக்கலாம்.

’தாய் கிழவி’ படத்தில் ஆண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் ஆரோக்கியமானது. உண்மையில், கள்ளர் சமூகத்தின் ஆண்களை அந்தந்த இயக்குநர்கள் பெருமைப்படுத்துகிறேன் என்ற பெயரில், முரடர்களாகவும் வினோத பண்புடையவர்களாகவும் மட்டும் அந்நியப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், ’தாய் கிழவி’யில் சமூகத்தில் அவர்கள் படும் பாடுகள், கஷ்டங்கள், துயரங்கள் என அனைத்தும் நமக்குச் சொல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் வெகுளித்தனமும், கல்வி நிலையின் போதாமையும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. ஒருவகையில், சமூகத்தில் இவ்வாறு இருக்கும் ஆண்களை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளையில், பொதுச் சமூகத்துடன் தங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுமாறு முறையிடுகிறார்கள்.

இவை முழுமை பெறாததற்குக் காரணம், ’தாய் கிழவி’ மற்றமையை தவிர்த்தது. சவஹர்லால் நேரு பாத்திரம் சாதியவாதியாகவே தோன்றுகிறார். மதுபான கடையில் சீயான் நேதாஜி என்கிறார், குடும்பப் பெருமை பேசுகிறார், அவர் மொபைலில் “தாண்டியரே” ரிங் டோன் இரண்டுமுறை ஒலிக்கிறது. இப்படி ஒருபக்கம் தொடர்ந்து சாதி குறியீடு தோன்றும் வேளையில், அது மற்றமையோடு வினை புரிவது தடுக்கப்படுகிறது. ஆனால், மீண்டும் மீண்டும் சாதிய குறியீடு பார்வையாளர்களுக்குப் பதிவைக்கப்படுகிறது.

மற்றமையை தவிர்ப்பது பொது மனநிலையை மீண்டும் தக்கவைப்பதாகும். முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கையை இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போமோ? அது தோன்றாத வரை முஸ்லிம்கள் பற்றிய பொது மனநிலை தமிழ் மக்களுக்கு மாறாது. இங்கு, சாதியவாதி சவஹர்லால் நேருவின் குணம் வெளிப்பட போதுமான வெளி இல்லாதபோது, அவன் தொல்லைக்குரிய நபராக மட்டும் சுருங்கிவிடுகிறான். கிட்டதட்ட, சாதிய ஏஜென்சியை பயன்படுத்திக்கொள்ளும் மொத்த படமும் இவ்வாறு தப்பித்துக்கொள்கிறது.

கடைசி கிழவியும் தாய் கிழவனும்

‘தாய் கிழவி’ பார்த்தவுடன் தோன்றிய முதல் விஷயம் – இது ’கடைசி விவசாயி’ படத்தின் பெண் வெர்ஷனாக இருக்கிறது. பவுனுத்தாய் ’கடைசி விவசாயி’ மாயாண்டியைத் தனது அண்ணன் என்கிறார். அவரின் ரத்த உறவாக இருந்துகொண்டு அவருடைய பண்புகளைக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல், ஒரு பெண் பிரதியாக அடுத்தகட்ட நிலைக்கும் செல்கிறார்.

“விவசாயம் தரக்கூடிய அலாதியான தன்னிறைவிலிருந்து இச்சுயமரியாதைக்காரர்கள் உருவாகுகிறார்கள். நானே என் உணவையும் பிறர் உணவையும் உற்பத்தி செய்கிறேன் என்ற செய்தி தரும் தன்னிறைவு” என்று பேராசிரியர் தருமராஜ் அவரது ’கடைசி விவசாயி’ பட விமர்சனத்தில் குறிப்பிட்டிருப்பார். சுயமரியாதைக்கான முதன்மை தேவை தன்னிறைவு. மற்றதெல்லாம் பிறகுதான். மாயாண்டி கிழவன் ஒவ்வொரு இரவும் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கொண்டு வானம் போர்த்தப்பட்ட வெட்ட வெளியிலிருந்து காற்றை நுகரும் ஒவ்வொரு முறையும் அவரின் தன்னிறைவை உணர்கிறார். “இந்த இயற்கைக்காக நான் இருக்கிறேன், எனக்காக இந்த இயற்கை இருக்கிறது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தனது சுயமரியாதையை மீட்டெடுக்கிறார்.

“பொழக்கிற பொழப்புக்குதாண்டி முதல்ல ஒரு பொம்பளைக்கு சுதந்திரம் வேணும். அப்படி அது மட்டும் இருந்துட்டா மத்த சுதந்திரம் எல்லாம் அடுத்தவன் என்ன உனக்கு தர்றது..” என்று பவுனுத்தாயும் சுயமரியாதைக்குத் தன்னிறைவையே வலியுறுத்துகிறார். இது மிகவும் முக்கியமான பெண்ணிய தேர்வு. இந்த தன்னிறைவை உணர்ந்தால் தங்க நகை என்பது இதில் ஒரு உருவகமாகத்தான் வருகிறது என்று உணரலாம். எனவே, தங்க நகையைத் தீவிரமாக விவாத பொருளாக்கி, இப்படத்திலிருந்து வரும் குரலைப் பெண்ணிய மொழிக்கு எதிரானது என்று மட்டுப்படுத்த முடியாது.

கிராமம் என்பது கூட்டுணர்வின் குழுமமாக இருக்கிறது. மரபின் அடையாளமாக இருக்கும் கிராமத்தில் தனிநபர் விருப்பங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், விதிகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் நவீனத்தின் விதிகளுக்கும் கிராமங்கள் இலக்காகின்றன. மாயாண்டி, “தன் நிலத்தை விற்க முடியாது” என்று நவீனத்தோடு மல்லுக்கட்டுவதன் மூலம் தன் சுயமரியாதையைத் தக்க வைக்கிறார்.

பவுனுத்தாயிக்கு வார இறுதி நாட்களின் ஆசுவாசமாக நகரங்களின் நவீனம் இருக்கிறது. மாயாண்டியைப் போல் இருக்கும் இடத்திலேயே சுயமரியாதையைத் தக்க வைக்கப் பெண் பிரதிக்குச் சாத்தியமில்லை. ஏனெனில், அவர் தன்னிறைவை மரபு புரிந்துகொள்ளத் தவறுகிறது. அதற்கு பல்வேறு குறியீடுகள் கற்பிக்கிறது. நகரத்தின் குறியீடற்ற, ஒழுங்குமுறையற்ற வெளி பெண் பிரதிக்குத் தேவையாக இருக்கிறது.

’கடைசி விவசாயி’ நவீனத்தின் உறுதியான விமர்சனப் படமாக இருந்தது. ’தாய் கிழவி’ நவீனத்திடம் இளைப்பாற நினைக்கிறது. இவ்வாறு, பெண் பிரதியின் பண்பு அடுத்தக் கட்டத்திற்கு முன் செல்வது தவிர்க்க முடியாததாகவே தெரிகிறது.

சாதி கிழவியா? பெரியார் கிழவியா?

’தாய் கிழவி’ பற்றிய கடுமையான விமர்சனமாக ’தலித் முரசு’ தளத்தில் வெளியான – அதி அசுரன் எழுதிய “தாய் கிழவி அல்ல: ஜாதிக் கிழவி!” என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம். “கந்துவட்டியைப் புனிதப்படுத்துகிறது, சடங்குகளில் பிற்போக்குத்தனமாகப் பணம் செலவிடப்படுகிறது, குலதெய்வ வழிபாட்டைப் பெருமைப்படுத்தி இந்துமயத்தை இதுபோன்ற படங்கள் ஊக்கப்படுத்துகின்றன” போன்ற விமர்சனங்கள் அதில் இடம்பெற்றன.

பவுனுத்தாய் தன் வாழ்க்கையில் எவ்வளவு போராடி அந்த இடத்திற்கு வந்தார் என்று படத்திலும், படத்தில் வராமல் யூடியூபில் வெளியான துண்டு காட்சியிலும் புரிய வைக்கிறார்கள். ஆனால், ஊரில் உள்ள ஆண் – பெண் வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் பவுனுத்தாயை பார்த்துப் பயப்படுவதற்கும், அவர் சாக வேண்டும் என்று கரித்துக் கொட்டுவதற்கும் இப்படம் எடுத்துக்கொண்ட பொழுதுபோக்கு களத்திற்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்காக வட்டிக் காரணத்தை எடுத்துக்கொண்டாலும், அது வெறுமனே தற்செயலாக அமைக்கவில்லை.

ஏனெனில், வட்டித் தொழில் என்று எடுத்துவிட்டு, அதைப் பின்னாளில் துளியும் கேள்வி கேட்கவில்லை. இது, பொழுதுபோக்குக்கான இடத்திலும் சாதிய ஏஜென்சியை இயக்குநர் விமர்சிக்க விரும்பாததையே காட்டுகிறது. கள்ளர் படங்கள் அனைத்திலும் உள்ள ஒரு பொதுத் தன்மையாக வட்டித் தொழில் இருக்கிறது. ’கடைசி விவசாயி’ படத்திலும் நில புரோக்கர் வட்டிக்கு விடுபவனாகவும் இருக்கிறான். கிட்டவிட்ட அந்த சாதியின் அடையாளமாக மாறிய அப்பேர்பட்ட ஒரு விஷயத்தை இப்படம் முழுக்க நேர்மறையாகக் கடந்து போனது சறுக்கல்.

பவுனுத்தாயின் மிரட்டல்களை ஊர் மக்கள் இலகுவாக எடுத்துக்கொள்வதற்கு, அவர்கள் அவளிடம் பணம் வாங்கியது மட்டும் காரணம் இல்லை. அதையும் தாண்டி ஆயிரம்தான் இருந்தாலும் அவர் சாதிய உறவின்முறைக்குள் வருவார் என்ற கலாசார உடன்பாடு உள்ளது. இந்நிலையில்தான், இந்த வட்டித் தொழில் வெவ்வேறு சாதிகளுக்கு இடையே இருக்கும்போது, கொடுமையான சித்திரமாக மாறுகிறது.

இரண்டாவது, திருமணம், காது குத்து, பூப்பெய்தல் விழா மற்றும் பிற விசேஷங்களில் புழங்கும் மொய் போன்ற விஷயங்கள் கட்டாய நிர்ப்பந்தங்களாக மாறிவிட்டன. மொய் சார்ந்து உறவை அளவிடுவதும், அதில் காட்டும் கறார் தன்மையும், அதனால் உருவாகும் சண்டைகளும் என கிட்டதட்ட விசேஷ இல்லங்கள் கடும் நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன. இப்படத்தில், இதனைக் கோடிட்டுக் காட்டும் வேளையில், அதை விமர்சிப்பது தனது வேலை அல்ல என்று இயக்குநர் ஒதுங்கிக்கொள்கிறார்.

மூன்றாவது, சாதி குலதெய்வ வழிபாட்டைப் பெருமைப்படுத்துவது, சாதியத்தைக் கொண்டாடுவதாகவும், இந்துவயத்திற்கு செல்வது எனவும் குறைபட்டுக்கொள்கிறார் அதி அசுரன். தமிழ்நாட்டில் முருகனை மையப்படுத்திய அரசியல் திட்டங்களை இந்துத்துவ அரசியல் வடிவமைத்தபிறகு, தமிழ் சினிமாவின் மைய அடையாளமாக முருகன் மாறிவருது நீண்டகால நோக்கில் எதைச் சொல்லக் காத்திருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம்.

அதேநேரத்தில், அதி அசுரன் வாதத்தில் உள்ள முரண், அவர் ஒட்டுமொத்தமாகக் குல தெய்வம், இறையியல் போன்ற சூழலையே சாதி மற்றும் நவீனத்தின் பெயரில் புறக்கணிக்கிறார். திராவிடர் கழகத்தின் லட்சிய நோக்கை சமூகத்தில் காண விரும்புகிறார். இயல்பில், சமூகம் அப்படி இல்லாதபோது – சமூக வெளியை எந்தளவிற்கு இலகுவாக்க வேண்டும், அதிகாரமற்றதாக்க வேண்டும், ஜனநாயக வெளியைக் கண்டடைய வேண்டும் – என்பது நம் முன் உள்ள பணியாக இருக்கும். இறையியலை மக்கள் வாழ்விலிருந்து வெளிநிறுத்தி பேசும் அரசியல், சமகால இடைநிலை சாதி ஆதிக்க விஷயங்களில் திராவிடர் கழகம் எடுக்கும் நிலைப்பாடுகளைப் போல் அர்த்தமில்லாத ஒன்றாகவே இருக்கும்.

அதி அசுரன் குறிப்பிடுகையில், “முக்குலத்து ஜாதி இயக்குநர்கள் மட்டுமல்ல, வன்னியர், கவுண்டர், நாடார் போன்ற ஜாதிகளைச் சேர்ந்த இயக்குநர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவும் ஜாதித் தெய்வ வழிபாட்டுப் பண்பாட்டு மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறது. ஜாதியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமுள்ள இயக்குநர்கள், குலதெய்வப் பெருமிதம் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களும் தெய்வங்களை ஜாதித் பெருமைப்படுத்திக் கொள்வதை ஏற்க முடியவில்லை” என்ற பொருள் குறிப்பிட வேண்டியது.

அதி அசுரன் இயல்பில் குல தெய்வம் சாதியைக் காப்பது என்ற நிலைப்பாடுடையவர். இதனால், சிறுதெய்வங்களுக்கு ஆதரவாகப் பேசிவந்த தொ. பரமசிவன் போன்ற ஆய்வாளர்களை விமர்சித்து வந்தார். சாதி ஒழிப்பு உரையாடல் அனைத்தும் இட ஒதுக்கீடு, கல்வி, நகரமயமாதல் போன்ற நவீனத்துவ உரையாடல் மட்டுமே என்பது அவரது நிலைப்பாடு. இது இன்று, திராவிடர் கழகம் போன்ற நிறுவன இயக்கங்கள் போட்டுக்கொண்ட வரையறையாகவும் உள்ளது.

பண்பாட்டு உரையாடல் நிலவும் சமூகத்தின் பண்பிலிருந்தே ஏற்படுகிறது. அதற்குள் இருக்கும் ஆதிக்கம், அரசியலைப் பேசுவதை கறாராக சாதி அரசியல் கணக்கில் எழுத முடியாது. பார்ப்பனிய மேலாதிக்கம் என்று சொல்லும் இவர்கள், இடைநிலை சாதி பண்பாட்டுக்குள் இருக்கும் சிக்கலை பண்பாட்டால் ஒடுக்கப்பட்ட, பண்பாட்டில் உரிமை கோரும் மக்கள்வழி உரையாட விரும்புவதில்லை. அதனாலேயே, தலித் இயக்குநர்களின் கலாசார முறையிடலைக் கூட சாதிக் கணக்காகச் சித்தரிக்கிறார் அதி அசுரன். கேரளாவிலிருந்து வந்த கருப்பனுக்கு முதலில் பீடம் அமைத்து பூசை செய்தவர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த வரலாறும் முரணும் பண்பாட்டுப் புதிருக்குள்தான் சிக்கித் தவிக்கிறது.

’தாய் கிழவி’ போன்ற படங்கள் நவீனத்தை சேராத மரபை வியந்தோதுகின்றன என்று கருப்பு வெள்ளையாக அணுக முடியாது. குறிப்பாக, நவீனத்தின் விளைவுகள் எந்தளவிற்கு இடைநிலை சாதிகளை மாற்றியிருக்கிறது, அவர்கள் பண்பாட்டுச் சூழலை நகர்த்தியிருக்கிறது என்ற ரீதியில் இப்படங்களை பார்க்கவேண்டும். பவுனுத்தாய் நவீன திராவிட சினிமாவின் வழி தனது சிந்தனையை வளர்த்துக்கொள்கிறார். எம். ஆர். ராதா படத்தைக் கையில் பச்சை குத்தியிருக்கிறார். சீட்டு ஆடுபவர்களை விரட்டிவிடும்போது, “பெரிய ஜேம்ஸ் பாண்டோ” என்று சொல்வதால் உலக சினிமாவையும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறார். “ஊரில் உள்ள மற்ற பெண்களைப் போல் இல்லாமல், தான் சற்று சூதானமாகப் பிழைத்துவிட்டேன்” என்று அவர் சொல்வதற்கு அவரது நகரப் பயணமும் சினிமா ஈடுபாடுமே காரணம் எனலாம்.

அவர் மட்டுமல்லாமல் அந்த ஊரே சினிமா பித்தில்தான் இருக்கிறது. “சோவா (ஷோபா), சில்க்கல்லாம் கொஞ்ச வயசுலேயே கூப்ட்டுகிட்டீக” என்று கருப்பனிடம் சொல்கிறான் வெச குட்டா, “விசயகாந்த் படத்துக்கு போறதை தடுத்துவிட்டார்” என்று மாமியார் பற்றிய ஆதங்கத்தைப் பகிரும்போது முதன்மையாக குறிப்பிடுகிறார் பவுனுத்தாய் மூத்த மருமகள், ஊரில் நயன்தாரா போட்டோ வைத்த நக்மா ஸ்டோர், ஊர்க்கார ஜெர்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்க ஶ்ரீதிவ்யா என அனைவரும் நவீன சினிமாவுக்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள். திராவிட அரசியல் உரையாடலில் திராவிட சினிமாவுக்குப் பங்கிருக்கிறது. ஆனால், திராவிட ஆட்சியில் சினிமாக்களைப் பார்த்து உருவாகும் மக்கள் அதன் சீர்திருத்தக் கருத்துக்களைத் தழுவும் அதேவேளையில், எவ்வாறு சாதிய அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்கிறார்கள் என்பது மரபின் பிரச்சனை அல்ல, நவீனத்தின் பிரச்சனை.

‘இன்று இடைநிலை சாதிகள் எவ்வாறு வாழ்கிறார்கள்’ என்று அப்பட்டமாகத் திரையில் வருவதைப் பலர் விரும்பவில்லை. ஒன்று இடைநிலை சாதிகள் சமூகத்தில் அனைத்தும் களைந்த புரட்சிக்காரர்களாக இருக்க வேண்டும், அல்லது சமூகத்திலிருந்து முற்றும் ஒதுக்கப்பட வேண்டிய சாதி வெறியர்களாக இருக்க வேண்டும். இதைத்தவிர்த்து, இடைநிலை சாதி வாழ்வுக்குள் ஏற்பு மறுப்போடு இருக்கும் சிக்கல்களைப் பேசுவது, திராவிட அரசியலின் சிக்கல்களைப் பேசுவதாகப் பதற்றம் உண்டாகிறது. ‘இட ஒதுக்கீடு, முன்னேற்றம்’ ஒருபக்கம் ‘சாதி வெறியர்கள், மூடநம்பிக்கை பிற்போக்குவாதிகள்’ மறுபக்கம் என்ற பைனரியில் மட்டும் இடைநிலை சாதிகள் சிந்திக்கப்பட வேண்டும், சித்தரிக்கப்பட வேண்டும் என்பது அதன் வெளிப்பாடே ஆகும்.

’கொட்டுக்காளி’ படம் இணைய வெளியில் பெண்ணிய படமாகச் சுருக்கப்பட்டு, இடைநிலை சாதி பற்றிய அதன் பரந்த பார்வை பொதுவெளிக்கு வராததற்கும் அதுவே காரணம். தலித் இயக்குநர்களைப் பார்த்துச் சாதி எதிர்ப்பு படங்கள் எடுக்கும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த இயக்குநர்களும், “இடைநிலை சாதி Vs தலித்” என்ற முரணை மட்டும் மையப்படுத்துவது ஒருவிதத்தில் பாதுகாப்பான நிலைப்பாடு. அவரவர் சார்ந்த சமூகம் எந்தளவிற்குச் சாதிய சிக்கல்களில் சுழன்று, அதற்குள் போராடி வருகிறது என்று தேடுவதே உண்மையான சாதி ஒழிப்பு அக்கறையாக இருக்கும்.

’தாய் கிழவி’ படம் முதன்மையாக இங்குள்ள வணிக சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தில் பெண்ணியம் பற்றி மோசமான வசனங்கள் எழுதிய சிவகுமார் முருகேசன், இப்படத்தில் பென்னி குயிக் திருமண ஏக்கதை சொல்லும்போது கூட பார்த்துப் பார்த்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதுபோல்தான், சாதியை இப்படத்தில் அவர் பயன்படுத்திய விதம் இருக்கிறது.

மூத்த பெரியாரிய சிந்தனையாளர் சுப. வீரபாண்டியன் ’தாய் கிழவி’ படத்தை “பெரியார் கிழவி” என்கிறார். திராவிட இயக்க சிந்தனையாளர் அதி அசுரன் “ஜாதிக் கிழவி” என்கிறார். பெரியார் மண்ணில் இவை இரண்டும் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதே நாம் பெற்றுக்கொள்ளும் படிப்பினையாகவும் கள யதார்த்தமாகவும் உள்ளது.

  • மு. அப்துல்லா

தனியுரிமை மீறலும், பொதுநலனுக்காக வாதாடுதலும்! – விஜய்-சங்கீதா மணமுறிவு மீதான சமஸ் கட்டுரையை முன்வைத்து… – ர. முகமது இல்யாஸ்

பத்திரிகையாளர் சமஸ் ‘சிந்தை’ தளத்தில் “விஜய் விவாகரத்து விவகாரம் ஏன் தனிநபர் பிரச்சினை அல்ல?” என்னும் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதன் வழியாக, அவர் சார்ந்திருக்கும் ஊடகங்கள் தனிநபர்களின் நீதிமன்ற மனுக்களைப் பயன்படுத்தி நிகழ்த்தி வரும் ஊடக குறுக்கு விசாரணை (Media trial) முறையை நியாயப்படுத்தியிருக்கிறார். அவர் எழுப்பும் தனிநபர் – பொது வாழ்க்கை குறித்த கேள்விகளை ஆராய்வது எனது நோக்கம் அல்ல. ஆனால் சமஸ் தான் சார்ந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகமும், இன்ன பிற ஊடகங்களும் விஜய் – சங்கீதா மணமுறிவு விவகாரத்தில் நிகழ்த்தி வரும் ஊடக குறுக்கு விசாரணை முறைகளை விமர்சிப்பது ஒரு ஊடகவியல் ஆய்வாளனாக எனது கடமை எனக் கருதுகிறேன்.

என்ன நடந்தது?

சங்கீதா விஜய்யுடனான மணமுறிவுக்காக நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம் என்பது சட்டவிதிமுறைகளும், பாதுகாப்பும் அளிக்கும் ஒரு நவீன வெளி. நீதிமன்றத்தில் நாம் ஒரு மனுவைத் தாக்கல் செய்யும் போது, அதுவும் குறிப்பாக மணமுறிவு சார்ந்த வழக்குகளில் நமது அந்தரங்கத் தகவல்களை நீதிமன்றத்தின் பாதுகாப்பை நம்பி அளிக்க நேர்கிறது. சங்கீதா தாக்கல் செய்திருக்கும் மனுவில் பொதுவில் எந்த மனிதரும் பேசத் தயங்குகிற இல்லற வாழ்க்கை, திருமண உறவு, பொருளாதாரச் சூழல் முதலானவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். நீதிமன்றம் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தனது மனுவில் இத்தகைய தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தகைய ஆவணத்தை யாரோ ரகசியமாக திருடியிருக்கிறார்கள். மிகச் சரியான திட்டமிடலுடன் ஒவ்வொரு வார இறுதியிலும் ஊடகங்களில் வெளியிட்டு, பொது விவாதங்களைக் கட்டமைக்கிறார்கள். இதுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.

விஜயின் தனிப்பட்ட குணம், அவரது அரசியல் தகுதி, அவரது தனிப்பட்ட உறவுகள், ஒரு கணவராக அவரின் நடத்தை முதலான எதையும் பேசுவதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் நாம் எதைப் பேசுபொருளாக்கி இருக்க வேண்டும்? ஒரு பெண் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையை நீதிமன்றத்தில் முறையிடுகிறார்; மூடிய அறை விசாரணை (In-camera proceedings) கேட்டிருக்கிறார்; ஊடகங்கள் தமது தனிப்பட்ட விவகாரத்தை விவாதிக்க தடை கோரியிருக்கிறார். அப்படியும் அவரது அந்த தனிப்பட்ட சட்ட ஆவணம் கசியவிடப்படுகிறது. ஊடகங்களும் அதனைப் பேசுபொருளாக்கியிருக்கின்றன. ஏதோவொரு செய்தியாக அல்லாமல், அது எத்தகைய செய்திகளாக/Contentகளாக மாறியது என்பது அனைவருக்கும் தெரிந்தது.

சரி, இங்கு சமஸ் என்ன சொல்கிறார்?

சமஸ் தனது கட்டுரையில் சங்கீதா தனது தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரியதைக் குறிப்பிடுகிறார். ஊடக விசாரணை செய்யக் கூடாது என்ற அவரது கோரிக்கையையும் ஆமோதிக்கிறார். ஆனால் தொடர்ந்து, இந்த விவகாரம் தனியுரிமையின் எல்லையைக் கடந்துவிட்டதாகக் கூறி, அதனை நியாயப்படுத்த விஜய் அரசியல் தலைவர் என்ற வாதத்தையும் முன்வைத்திருக்கீறார். அதே போல, விஜய் கட்சியைச் சேர்ந்தவர் இணையத் தாக்குதலில் இறங்கியதையும் குறிப்பிடுகிறார். அவற்றை விமர்சிப்பதில் நிச்சயம் ஆதரவு உண்டு. ஆனால் இவற்றின் வழியாக அவர் கட்டமைக்கும் கருத்து அத்தகைய நியாயமானது அல்ல.

கசியவிடப்பட்ட ஆவணம் ஒன்றின் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, அவை பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் பேசுவது அடிப்படையில் எல்லா வித ஊடக அறங்களுக்கும் எதிரானது. அந்த ஆவணம் யாரால் கசியவிடப்பட்டது? ஏன் கசிந்தது? அதனைப் பயன்படுத்த ஊடக நிறுவனங்களுக்கு தார்மிக உரிமை இருக்கிறதா? ஒரு நாகரிகமான உரையாடல் இவற்றில் அடிப்படையில் தானே கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்?

அடுத்ததாக, கேரி ஹார்ட், பில் கிளிண்டன் ஒப்பீடு. இந்த ஒப்பீடே அடிப்படையில் தவறானது. 1987ல் அமெரிக்காவில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் இருந்தவர் கேரி ஹார்ட். அவரது திருமணம் கடந்த உறவின் காரணமாக, அரசியல் வாழ்க்கையை இழந்தவர். இதன்வழியாக, மேற்கத்திய சமூகங்கள் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அணுகுகின்றன என்பது அவரின் வாதம்.

ஆனால் உண்மையில் ஹார்ட் வழக்கில் என்ன நடந்தது?

வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பு, ஊடகவியலாளர்களிடம் அண்ணாமலை தனமாக சவால் விட்டுக் கொண்டிருந்தவர் கேரி ஹார்ட். ‘நான் ஏதேனும் தவறு செய்கிறேன் என நீங்கள் நினைத்தால், என்னைப் பின் தொடரலாம்’ என பகிரங்கமாக அறிவித்தார். தி மியாமி ஹெரால்ட் இதழ் அவரைப் பின் தொடர்ந்தது. விளைவு, டான்னா ரீஸ் என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இடையிலான உறவு அம்பலப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாங்களே இதனைக் கண்ணால் கண்டதால், ஹார்ட் அதனை நிராகரிக்கவில்லை.

இது ஊடகவியலின் அறத்திற்கு உட்பட்டது. பத்திரிகையாளர்கள் வெளியில் சென்றார்கள்; விசாரணை நடத்தினார்கள்; கவனித்தார்கள்; கண்டுபிடித்ததை மக்களிடம் சொன்னார்கள். நீதிமன்ற ஆவணம் எதையும் கைப்பற்றியோ, பிறரிடம் பெற்றோ அவர்கள் செய்தி வெளியிடவில்லை. தங்கள் உழைப்பால் தாங்கள் கண்டுபிடித்ததை அம்பலப்படுத்தினார்கள்.

கிளிண்டனின் விவகாரம் இன்னும் தெளிவானது. மோனிகா லெவின்ஸ்கி என்ற வெள்ளை மாளிகை பணிப்பெண்ணுடன் உறவில் இருந்தார் அதிபர் பில் கிளிண்டன். நீதித்துறை சார்பில் கென்னெத் ஸ்டார் என்பவரின் தலைமையில் அமெரிக்க அரசு அமைத்த குழு இந்த விவகாரத்தை விசாரணை செய்தது. மோனிகா லெவின்ஸ்கி வாக்குமூலம் அளித்தார். Starr Report சட்டப்பூர்வமாக வெளியிடப்பட்டது; இன்றும் அது பொதுவெளியில் இருக்கிறது. அதனை யாரும் பார்வையிட முடியும்.

இந்த இரண்டு விவகாரங்களிலும் சட்டப்பூர்வ, ஊடக அறங்களுக்கு உட்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களே செய்தியை விசாரித்து வெளியிட்டது முதலாவது செய்தி என்றால், சட்ட வழிமுறைகளின் வழியாக இரண்டாவது செய்தி வெளியானது. இரண்டிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட நீதிமன்ற ஆவணம் ரகசியமாக கசியவிடப்படவில்லை. இந்த வேறுபாடு மிக முக்கியமானது.

இந்த உதாரணங்களின் வழியாக, பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் தனிப்பட்ட ஒழுக்கத் தகுதி விமர்சிக்கப்பட வேண்டும் என சமஸ் வாதிடுகிறார். அதன் சரி, தவறு என வரையறுப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக, இந்த உதாரணங்கள், அவர் செய்து கொண்டிருப்பவற்றிற்கு நேரெதிரானவற்றை நமக்கு வெளிக்காட்டுகின்றன. ஊடக அறம் பிறழ்ந்து இருப்பதை வாக்குமூலமாக சுட்டிக்காட்டியிருக்கின்றன.

இது ஏன் பேசப்பட வேண்டும்?

பத்திரிகை சுதந்திரம் என்பது நேர்மையாகவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்னும் கருத்தியலின் அடிப்படையில் இயங்கும் ஒன்று. நீதிமன்றம் தனக்கான பாதுகாப்பான வெளி என ஒரு பெண் அணுகும் போதும், ஊடக விசாரணை வேண்டாம் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்த பிறகும், அத்தகைய விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு, அதற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் சமஸ். இன்னும் பல ஊடகங்கள் இன்னமும் அதனைக் கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். விஜயை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, சங்கீதாவின் தனிப்பட்ட விவகாரங்களைத் தமது அரசியல் நியாயங்களுக்காக ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக, சமஸ் இந்த ஆவணம் எங்கே இருந்து வந்தது, இதனை வெளியிடுவதால் தமது தனியுரிமை பாதிக்கப்படும் என சங்கீதாவே முறையிட்ட பிறகும், யாருக்கு லாபம் அளிக்கப் போகிறது முதலான கேள்விகளை அல்லவா ஒரு செய்தி ஆசிரியராக எழுப்பியிருக்க வேண்டும்? ஆனால் இவற்றில் கனத்த மௌனத்தையே வெளிப்படுத்துவதோடு, ‘அடுத்த சில நாட்களில், நீதிமன்றத்தில் சங்கீதா மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்’ என அதே நாளில் தாக்கல் செய்த மனுவைக் குறிப்பிட்டு பேசுகிறார் சமஸ். ஒரு செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியராக அடிப்படை தகவல்களைக் கூட பிழை பார்க்காமல் இருப்பது எத்தகைய மோசமான அணுகுமுறை?

இவற்றின் பொருள், விஜய் குற்றமற்றவர் என வாதிடுவதோ, சங்கீதா முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் பொருளற்றவை எனத் தீர்ப்பளிப்பதோ அல்ல. பொதுவெளியில் அல்லாமல், தனது தனியுரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்ற சங்கீதாவைக் காப்பாற்றுகிறோம் என அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆயுதமாக மாற்றுவதே இந்தச் செய்தியின் பணி.

சங்கீதாவின் மனு கசியவிடப்படாமல், மேலோட்ட தகவலாக மட்டுமே வெளியாகியிருந்தால் இதே விதமான செய்தி உரையாடல்களை சமஸ் உள்ளிட்ட ஊடக நிறுவன ஆசிரியர்கள் வெளியிட்டிருப்பார்களா? இல்லை என்றால், இந்த ‘தனிநபர் பிரச்சினை அல்ல’ என்ற வாதமே கசியவிடப்பட்ட ஆவணத்தின் அடிப்படையிலானது; அதன் உண்மைத்தன்மையைக் கூட ஆராயாமல் வெளியிடப்பட்டது. ஆம் என்றால், பொது நலன் கருதி ஊடகங்களே அதனைக் கைப்பற்றி கசியவிடுகிறார்கள் என்றால் அது இதனைவிட சிக்கலானது. எப்படி பார்த்தாலும், இந்த செய்தி தொடர்பான அத்தனை உரையாடல்களும், குறிப்பாக ஊடக நிறுவனங்கள் மேற்கொள்பவை அனைத்தும், ஒரு பெண்ணின் அந்தரங்க விவகாரங்களை தனியுரிமைக்கான அவரின் சட்டபூர்வ கோரிக்கையையும் மீறி வெளியிடப்பட்டிருப்பவை.

இறுதியாக, மீண்டும் கூறுகிறேன். விஜய் குற்றமற்றவர் என வாதிடவே இல்லை. அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்வு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் வேறு, நான் இங்கே குறிப்பிட்டிருப்பது வேறு. ஒரு பெண்ணின் விருப்பத்தை மீறிக்கொண்டே அவரைக் காப்பாற்றப் போகிறேன் எனப் பேசுவதும் அபத்தம். நீங்கள் எங்கு தகவலைப் பெற்றீர்கள் என்பதை ஆராயாமல், பொறுப்புணர்வோடு பேசுவதாக நடிப்பது எந்த வகையிலும் ஊடக அறம் ஆகாது. அதே போல, இந்த விவகாரத்தில் கேரி ஹார்ட், பில் கிளிண்டன் உதாரணங்களை வைத்து, நேர்மையான ஊடகங்களைப் போல உங்களைக் காட்சிப்படுத்துவதும் அருவெறுப்பானது.

சங்கீதா எதில் இருந்து தான் பாதுகாக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரினாரோ, அதுவே அவரைத் தாக்கியிருக்கிறது. இதைத் தான் நான் பேசியிருக்கிறேன். சமஸ் போன்றோர் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

  • ர. முகமது இல்யாஸ்.

Young bodies, Old Heroes – ர. முகமது இல்யாஸ்

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ரஜினிகாந்த் – கமல் ஹாசன் மீண்டும் இணையும் திரைப்படம் தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாஸ்டால்ஜியாவை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியாக இது இருந்தாலும், 70 வயதைக் கடந்த ஆண் நாயகர்கள் இருவரின் மத்தியில் குறைந்த அளவிலான உடை அணிந்த இளம்பெண்கள் காட்சிப் பொருள்களாக நடக்கவிடப்பட்டிருக்கிறார்கள். அவர்களை ரசிப்பவர்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் இளம்பெண்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், 70 வயதைக் கடந்த நாயகர்களின் ஆண்மையையும், அவர்களின் மீதான ஈர்ப்பு குறையவில்லை என்பதை உணர்த்துவதற்காகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 70 வயதைக் கடந்த ஆண் நாயகர்கள் இருவரும் தத்தமது ஆண்மையை இந்தப் பெண்களின் இளமையில் இருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பெண்களைக் காட்சிப்பொருள்களாக நடத்தும் ‘Item Number’ பாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக பெரிதும் ரசிக்கப்படாமல், திரையை விட்டு அகற்றப்பட்டிருந்தன. அதற்கு சமூக அக்கறை கொண்ட அரசியல் இயக்குநர்களின் வருகை ஒரு முதன்மைக் காரணமாக இருந்திருக்கின்றன. அதே போல, இணையத்தின் வருகையால் பெண்கள் நேரடியாக திரைப்படங்களை விமர்சிக்கும் வாய்ப்பு அமைந்த பிறகு, திரையில் Stalking கதையாடல்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன. எனினும், ஆணாதிக்கத்தின் வேட்கை சற்றும் தணியவில்லை.

2020களிலும் புதிதாக ‘Item Number’ பாடல்கள் தமிழ்த் திரைகளில் தோன்றத் தொடங்கியிருக்கின்றன. நெல்சன் இயக்கி, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் ‘காவாலா’ பாடல், லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கி, ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல், வெங்கட் பிரபு இயக்கி, விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படத்தின் ‘மட்ட’ பாடலின் சில நிமிடங்கள் முதலானவற்றைச் சுட்டிக்காட்ட முடியும். இவை அடிப்படையில் மூன்று காரணங்களுக்காக இயங்குகின்றன.

முதலாவது, Algorithm. நன்கு வடிவமைக்கப்பட்ட Item Number பாடல்கள் இன்று திரைப்படங்களை வியாபாரம் செய்வதற்குப் பயன்படுகின்றன. அவை காட்டும் hookstep நடனங்களும், அவற்றைப் போலவே செய்யும் Content creatorகளும் இருக்கும் வரை, படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கும். லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகிய இருவரும் தொடக்கத்தில் பாடல்கள் இல்லாத, ஹாலிவுட் அழகியல் வடிவங்களின் தாக்கத்தால் திரைப்படங்களை உருவாக்கியவர்கள் என்றாலும், பெரிய பட்ஜெட் காரணமாக பல நூறு ஆண் உடல்களுக்கு மத்தியில் குறைந்த உடையில் நடனமாடும் ஒற்றைப் பெண் உடலைப் பிரம்மாண்டக் காட்சியமைப்பாக விற்பனை உத்தியாக மாற்றியிருக்கின்றனர். இரண்டாவது, pan-Indian சந்தை. இந்தி மொழி பேசும் பகுதிகளிலும், தெலுங்கு பார்வையாளர்களிடமும் ஒரு திரைப்படம் சென்றுசேர Item Number பாடல்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. திராவிட அரசியல் கட்சிகளைப் பின்புலம் கொண்ட திரை தயாரிப்பு நிறுவனங்கள் இவற்றைப் பண்டமாக்கி விற்பனை செய்கிறார்கள் என்பது கவனத்திற்குரியது. மூன்றாவது, நாயகர்களின் வயது. ரஜினியும், கமலும் முதியோர் ஆவதைத் தொழில்முறை தமிழ் சினிமா அனுமதிப்பதில்லை. இருவரும் அவ்வபோது தமது ஆண்மையையும், வீரியத்தையும் வெளிப்படுத்தியே தீர வேண்டும் என்னும் போது, அதனை எளிதில் சாத்தியப்படுத்துவது, அவர்கள் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம்பெண்களே.

KH x RK Reunionல் Item Number இல்லையே எனக் கேள்விகள் எழலாம். ஆனால், முந்தைய திரைப்படங்களின் சித்திரிப்புகளின் தொடர்ச்சியும், அவை மீது எழுப்பப்படாத கேள்விகளுமே இன்றைய சித்தரிப்புகளுக்குக் காரணமாக அமைகின்றன. மேலும், வெறும் வியாபாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது, அவை பார்வையாளர்கள், வியாபார உத்திகள், சமகால platform economy ஆகியவற்றை மையப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. இதன்வழியாக அரசியலின் முற்போக்குத்தன்மை நீக்கப்பட்டும், அழகியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன; வியாபாரம் முதன்மை இடத்தைப் பெறுகிறது. வெற்றி பெற்ற வடிவங்களே மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்து நம் தலையில் கட்டப்படுகின்றன.

Item Number பாடல்களின் மீள்வருகை என்பது திரை யாருக்கு சொந்தம் என்பதையும், எந்த பாலினத்தின் உடல்கள் வீரத்தோடும், கவர்ச்சியோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதையும் மறைமுகமாக சொல்கின்றன. இந்தப் பெண்களுக்குக் கதைகளுக்குள் தனியான மனது என்பது இல்லை; கதையில் பங்கில்லை. அவர்கள் இருப்பதே ஆண்களின் கண்களுக்குத் தீனியாக இருப்பதற்கு மட்டுமே.

சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளிவந்த ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் AI உதவியுடன் உருவாக்கப்பட்ட சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தை இதே கண்ணோட்டத்தோடு காட்சிப்படுத்தியிருந்தார்கள். இன்று நாம் சில்க் ஸ்மிதாவை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறோம் என்றால், ‘மார்க் ஆண்டனி’ தற்கொலை செய்து இறந்து போன சில்க் ஸ்மிதாவை மீண்டும் உயிர்த்தெழச் செய்து, சமகால இளம் ஆண்களின் வக்கிர நுகர்வுக்காகப் பயன்படுத்திக் கொண்டது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஓடாத திரைப்படங்களில் சில்க் ஸ்மிதாவின் ஒரு பாடலை வைத்து கல்லா கட்டிய தயாரிப்பாளர்கள் இருப்பதாக தமிழ்த் திரை ஆய்வாளர் ராண்டர் கய் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமா வெகுமக்களின் பண்பாட்டோடு கலந்தது மட்டுமின்றி, ஓர் நிழல் அரசியல் நிறுவனமாகவும் இயங்கி வருகிறது. இதனுள் Item Number பாடல்களின் மீள்வருகை என்பது டிஜிட்டல் தள முதலாளித்துவத்தின் தேவைகளையும், வயோதிகத்தை அடையும் ஆண் நாயகர்களின் அச்சங்களையும், பெண் கதாபாத்திரங்களை எப்படி திரையில் காட்சிப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொள்ளாத புதிய தலைமுறை திரை இயக்குநர்களையும் சுட்டிக்காட்டுகிறது.

Further Reading:

Laura Mulvey, “Visual Pleasure and Narrative Cinema” (1975)
Steve Neale, “Masculinity as Spectacle” (1983)
Miriam Hansen, “Pleasure, Ambivalence, Identification: Valentino and Female Spectatorship” (1986)

’ஜன நாயகன்’ Vs சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ – தமிழ்நாட்டின் ‘Barbenheimer’ சூழல்! – ர. முகமது இல்யாஸ்

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி, சர்வதேச அளவில் பெரும் கலாச்சார உரையாடல்களை உற்பத்தி செய்தன. இரு திரைப்படங்களின் தலைப்பையும் கலந்து ‘Barbenheimer’ என்ற சொல் உருவாக்கப்பட்டு இணையத்தில் ஒரு கலாச்சார நிகழ்வாக கருதப்பட்டது. அடிப்படையில் இரு நேரெதிர் அரசியல், கலாச்சாரப் பிரதிகள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொள்வதும், அவை சமூக ஊடகங்களில் பெரும் சாராரின் பங்கேற்பை உருவாக்கியதும் இந்த நிகழ்வின் மையமாகக் கொள்ளப்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வெகுமக்களைத் திரையரங்கங்களை நோக்கி வரவழைக்கும் உத்தியாகவும் இந்த நிகழ்வு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ நவதாராளமயத்தின் காலகட்டத்தில் ஆணாதிக்கம், பெண்மை, நுகர்வுக் கலாச்சாரம் முதலான பண்புகள் இயங்கும் விதத்தைப் பகடி செய்திருந்தது. கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் உருவாக்கிய குற்றவுணர்வின் நீட்சியாக, விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் கலாச்சார வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ’பார்பீ’ பொம்மையை முதலாளித்துவத்தின் அதீதமாகவும், நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் விமர்சனம் செய்தது ‘பார்பீ’. அதிகாரத்தின் கருவியாக அறிவியல் இயங்குவதும், அறிவியலை முன்வைக்கும் விஞ்ஞானிகள் அதிகார மையங்களிடம் வீழ்ந்து போவதையும் கடுமையாக முன்வைத்திருந்தது ’ஓப்பன்ஹெய்மர்.’

இரண்டு திரைப்படங்களும் அடிப்படையில் வெவ்வேறான விவகாரங்களைப் பேசின. ‘பார்பீ’ கையாண்ட திரை அழகியல் அதீதமான பிங்க் நிறத்தில் உருவாக்கப்பட்டதோடு, அது குழந்தைகள் விளையாடும் பொம்மையின் கதையாக, அது சார்ந்த அழகியல் பண்புகளோடு முன்வைக்கப்பட்டது. ’ஓப்பன்ஹெய்மர்’ அணு ஆயுதத்தைப் பற்றிய கதையாக இருண்ட அழகியல்களைக் கையாண்டதோடு, ‘பார்பீ’ முன்வைத்த கொண்டாட்ட அழகியலுக்கு மாற்றாக குற்றவுணர்வை முன்வைத்தது. இந்த வேறுபாடுகளைத் தாண்டி இரண்டு திரைப்படங்களும் அமெரிக்காவின் அதிகாரம், பாலினம், தேசிய அடையாளம் முதலான பண்புகளைக் கடுமையாக விமர்சிப்பதில் ஒற்றுமையாக இருந்தன. இது Barbenheimer moment என வர்ணிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டின் பொங்கல் வெளியீடுகளாக வரும் ‘ஜன நாயகன்’ மற்றும் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ ஆகிய இரு திரைப்படங்களும் இத்தகைய Barbenheimer சூழலைத் தமிழ்மயப்படுத்தியிருக்கின்றன. நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இடத்தை அடைந்திருக்கிறார். அதில் இருக்கும் சாதக, பாதகங்களை விரிவாக வேறொரு தளத்தில் பேசி வருகிறோம். அப்படியான சூழலில் அவரது ‘ஜன நாயகன்’ திரைப்படம் அவரது இறுதித் திரைப்படமாக இருக்கப் போவதாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ஜன நாயகன்’ படம் முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கப் போவது உறுதி என்றாலும், ஒரு அரசியல் கலாச்சாரப் பொருள் என்ற வகையில், ‘ஜன நாயகன்’ விஜயைத் தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற மீட்பர் என்பதாக முன்வைக்கப் போகிறது. கதைக்களம், இதுவரை வெளியான பாடல்கள் ஆகியவற்றில் இவை தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே திரை ரசிகர்களைத் தனது அரசியல் கட்சியின் தொண்டர்களாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய்; அடுத்ததாக, அவர்களை வாக்காளர்களாக மாற்றுவதற்கான பணிகளை இந்தத் திரைப்படம் மேற்கொள்ளும்.

மறுபக்கம், திமுக ஆதரவுத் திரைப்படமாக, அதன் தலைமைக் குடும்பத்தைச் சேர்ந்த இன்பன் உதயநிதி வழங்குவதாக உருவாகியிருக்கிறது சுதா கொங்கராவின் ‘பராசக்தி’. இந்தத் திரைப்படத்தை ஒவ்வொரு முறையும் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ எனச் சுட்டிக்காட்டுவதன் காரணம், அதன் தலைப்பு நவீன தமிழ்ச் சமூகம் திரை என்னும் கலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்த கலைஞர் கருணாநிதியின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் தலைப்பை சமகால அரசியல் நலன்களுக்காகவும், திமுகவின் தலைமைக் குடும்பத்தின் பொருளாதார நலன்களுக்காகவும் சுரண்டுகிறது என்பதற்காகவே.

சுதா கொங்கரா பிரபல இந்தியத் தேசிய சார்பு / திராவிட எதிர்ப்புக் கருத்தியல் இயக்குநர் மணி ரத்னத்தின் பட்டறையில் இருந்து வந்தவர். அவர் இந்தி திணிப்புக்கு எதிரான 1965ஆம் ஆண்டின் மொழிப் போரைத் திரைப்படமாக இயக்குவது என்பதே அடிப்படையில் முரணானது. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மறைந்த ஆலடி அருணா எழுதிய ‘இந்தி ஏகாதிபத்தியம்’ நூலில் 1965 மொழிப் போரைக் குறித்துப் பேசும் போது, ‘1938ல் பெரியாரைத் தமிழர்களின் நாயகனாக்கிய வரலாறு, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது எதிரி முகாமில் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்டவராக அவரை மாற்றியது. 1938 ஆம் ஆண்டு ராஜாஜியை துரோகியாக அடையாளம் காட்டிய அதே வரலாறு, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நாயகனாக அவரை மாற்றியது.’ என்று குறிப்பிடுகிறார். இப்படியான நுட்பமான, சிக்கலான வரலாற்றுக் காலகட்டத்தை சுதா கொங்கரா போன்ற பார்ப்பன சார்பு கொண்ட இயக்குநர் எவ்வாறு கையாளப் போகிறார்?

மணி ரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. அடிப்படையில் திராவிட இயக்கத்திற்கு எதிரான திரைப்படம் ’ஆயுத எழுத்து’. அதே பாணியில் அவரின் ‘பராசக்தி’ திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக வெளிவருவதைவிட மிகப்பெரிய நகைச்சுவை எதுவாக இருக்கும் எனத் தெரியவில்லை. தூயத்தமிழ் பேசும் செல்வ நாயகம் (பாரதிராஜா) என்னும் அரசியல்வாதி, நவதாராளமயத்தால் மக்கள் பணியில் இருந்து விலக்கப்பட்ட இளைஞன் அர்ஜுன் (சித்தார்த்), திராவிட அரசியல் மீதான அதிருப்தியில் மாற்று அரசியலை முன்வைக்கும் மைக்கேல் (சூர்யா), திராவிட அரசியலால் தொடர்ந்து சுரண்டப்படும் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த இன்பசேகர் (மாதவன்) ஆகியோர் இடையிலான கதையாக இது அமைக்கப்பட்டிருந்தது.

சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் வெளிப்படையாகவே ஒடுக்கப்படும் மக்கள் கிறித்துவத்திற்கு பணத்திற்காக மதம் மாறுகின்றனர் என்று காட்சி வைத்திருந்தார். வடசென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை துளசி என்பவரின் கதையைத் திரைப்படமாக மாற்றியதோடு, அவருக்கு உரிய அங்கீகாரத்தை மறுத்திருக்கிறார் சுதா கொங்கரா என்பதை துளசி தன்னுடைய பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். துளசி இன்று ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா ‘பராசக்தி’ இயக்கிக் கொண்டிருக்கிறார். கை ரிக்‌ஷாவுக்கு எதிராகவும், அபலைப் பெண்களுக்கு ஆதரவாகவும் ஆளும் வர்க்கத்தைக் கடுமையாக சாடிய அசலான ‘பராசக்தி’ தலைப்பை சுதா கொங்கரா பயன்படுத்தியிருப்பது மாபெரும் முரண்.

கேப்டன் கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்பனிய நீக்கம் செய்து நெடுமாறன் ராஜாங்கம் என்ற திராவிட சார்பு பெயர் கொடுத்து தமிழ்நாட்டின் வெகுமக்களால் நுகரப்படும் பொருளாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. அதே திரைப்படத்தை, இந்தியில் இந்துத் தேசியத்தின் முகமாக அறியப்படும் அக்‌ஷய் குமாரை வைத்து ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் எடுத்தார். அதிலும் நாயகன் பார்ப்பன நீக்கம் செய்யப்பட்டவன். வெகுமக்கள் நுகர்வுக்காக கதாநாயகர்கள் பார்ப்பன நீக்கம் செய்யப்படுவதன் வழியாக, முதலாளித்துவத்தின் மீதும், இந்தியத் தேசிய நாயகர்களாக எவரும் உருவாக முடியும் என்ற போலிக் கற்பனையின் மீதும் நம்பிக்கையை உருவாக்கியபடி, லாபம் ஈட்டுவது சுதா கொங்கராவின் இந்தத் திரைப்படங்களின் தலையாயப் பணியாக இருந்திருக்கின்றன. எனினும் ’சர்ஃபிரா’ பெரும் தோல்வியடைந்தது.

’சர்ஃபிரா’ குறித்த நேர்காணல் ஒன்றில் புரட்சியாளர் ஜோதிபா பூலே குறித்த வரலாற்று நிகழ்வுகளை இந்துத் தேசியவாதி சாவர்க்கரின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாக பேசி சர்ச்சையில் சிக்கி, பிறகு அதே சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கோரினார் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா மீதான இத்தகைய அரசியல் விமர்சனங்களை வரிசையிடுவதன் அடிப்படை காரணமே, இந்த நபர் எத்தகைய கொள்கையோடு தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட மாபெரும் புரட்சி ஒன்றைக் கையாளுவார் என்பதையும், ‘பராசக்தி’ என்ற தலைப்பை இவருக்குக் கொடுக்கப்பட்டதோடு, திமுகவின் வரலாற்றில் முக்கிய நிகழ்வு ஒன்றை இயக்க வாய்ப்பு பெற்றார் என்பதையும் கேள்வி எழுப்புவதற்காகவே. திராவிட அரசியலின் திரை மரபு இன்றடைந்திருக்கும் அவலநிலையின் வெளிப்படையான சான்று சுதா கொங்கராவின் ‘பராசக்தி’.

விஜயின் ‘ஜன நாயகன்’ நாயக வழிபாட்டின் வழியாக, சமகால அரசியல் மீட்பராக விஜயை முன்வைப்பதற்கு எதிராக, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ மூன்று நாயகர்களைக் கொண்டிருக்கிறது; தனிநபர் அரசியலுக்கு எதிரானதாக சித்தரிக்கப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் விஜய் பக்கம் இருப்பதைக் கேள்வி எழுப்பும் விதமாக, தமிழ்நாட்டின் இளைஞர்கள் திமுகவின் தொடக்க காலத்தில் எத்தகைய அரசியல் உணர்வோடு இருந்தனர் என்பதை நேரெதிராக நிறுத்தி ‘Barbenheimer’ போன்ற சூழலைத் தமிழ் திரையில் உருவாக்க முயல்கிறது. எனினும், இதன் பின்னணியில் இருக்கும் போலித்தனங்களை அம்பலப்படுத்த வேண்டியது கடமையாகிறது.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ‘The World of Parasakthi’ கண்காட்சியை ஆய்வின் நிமித்தமாக பார்வையிட நேர்ந்தது. 1960களின் கலைப் பொருள்களை காட்சிப்படுத்தியிருந்ததன் வழியாக, வெகுமக்களால் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. இதன்வழியாக, பொதுமக்கள் அந்த கண்காட்சியில் இருக்கும் பொருள்களோடு எடுக்கும் படங்களைப் பதிவிடுதன் வழியாக, படத்தின் விளம்பரதாரர்களாக அவர்களே மாறிக் கொள்கின்றனர். மேலும், சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ உலகத்திற்குள் வாழும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கிறது. ஏறத்தாழ Disneyland, Squid Game பாணியிலான விளம்பரச் செயற்பாடு இது. இது கட்டணமில்லாமல் நிகழ்த்தப்பட்டாலும், ஏதோவொரு வகையில் திரைப்படத்தின் வருவாய்க்கு உதவும் அனுபவப் பொருளாதாரமாக (Experience economy) இயங்குகிறது.

‘தமிழ் வாழ்க’, ‘இருமொழிக் கொள்கை தேவை’ போன்ற பதாகைகளொடு பொதுமக்கள் படம் எடுத்துக் கொள்வது அரசியலாக அல்லாமல், திரை அழகியல், விளம்பர நோக்கங்களுக்காக அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இறுதியாக, மொழிப்போர் தியாகிகளின் படங்களும், அவர்களை விட பெரிதாக நடிகர் சிவகார்த்திகேயனின் படமும் வைக்கப்பட்டிருந்தது. இவை அடிப்படையில் அவர்களுக்கான அஞ்சலியாக அல்லாமல், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தையும், கலைஞரின் ‘பராசக்தி’ என்ற புரட்சிகர திரைப்படத்தின் நினைவலைகளையும் சமகால திரை வணிகத்திற்காக, சுதா கொங்கரா போன்ற திராவிட எதிர்ப்பு இயக்குநர்களின் வழியாக சுரண்டுவதாகவே இருக்கிறது. உதாரணமாக, 1965 மொழிப்போர் தியாகி ‘கீழப்பழுவூர்’ சின்னசாமி 1964ல் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த முதல் தியாகி; இவரின் வாழ்நாள் காலத்தை 1915-1939 என்று குறிப்பிட்டிருக்கிறது சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ குழு. இதனை சரிசெய்ய யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பது நம் சமகால சமூகத்தின் அரசியல் நீக்க அவலநிலையைச் சுட்டிக்காட்டுகிறது.

’ஜன நாயகன்’, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ தமிழ்ச் சமூகத்தின் சமகால கலாச்சார உரையாடல்களில் பெரும் பங்கை வகிக்கப் போகிறது. சுதா கொங்கராவின் பின்னணியைத் தெரிந்துகொண்டே திமுக ஆதரவுத் தரப்பு அறிவுஜீவிகள் அவரின் ‘பராசக்தி’ திரைப்படத்தை மாபெரும் புரட்சித் திரைப்படமாக அங்கீகரிப்பார்கள். வழக்கமாக ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பே அதுகுறித்த விமர்சனங்களை முன்வைப்பதை நான் எப்போதும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், இது கலாச்சார மாற்றங்களை உருவாக்கும் நிகழ்வாக இருக்கப் போவதுடன், சுதா கொங்கரா போன்ற இயக்குநர்களின் தோள்களில் திராவிட இயக்கத்தின் அரும்பணிகளைக் கிடத்தும் செயல்பாடாக மாறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இதனைப் பேச வேண்டியதாக இருக்கிறது.

இந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த பாகங்களை இரு திரைப்படங்களும் வெளிவந்த பிறகு எழுதப்பட்டு வெளியிடப்படும். அதுவரை, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ ரசிகர்கள் அவரது ‘The World of Parasakthi’ சென்று களிப்படையலாம். விஜய் ரசிகர்களும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் உலகத்தை அனுபவிப்பதற்கான இடங்களாகத் தானே அவரின் அரசியல் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன?

இதுவே தமிழ்ச் சமூகத்தின் அரசியல், கலாச்சார வெளிகளின் சமகால நிலை.

  • ர. முகமது இல்யாஸ்.

‘பைசன் காளமாடன்’: வன்முறை, இணக்கம், ‘நல்ல தேசியம்’ குறித்த விமர்சனங்கள் – மு. அப்துல்லா

மாரி செல்வராஜ் முதல் படமான ’பரியேறும் பெருமாள்’, மணிரத்னம் தனது சரக்கு மொத்தமும் தீர்ந்து, பல்வேறு நடிகர்களை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்ற மார்க்கெட்டை தொடங்கிய ’செக்க சிவந்த வானம்’ ஆகிய இரண்டும் ஒரே நாள் இடைவெளியில் வெளியாகின. தமிழ் சினிமா திரைமொழியில் மணிரத்னத்திற்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, அரசியல் படங்களைத் திறம்பட அவர் கையாண்ட முறை இன்று பேசும் குறியீட்டு அழகியலுக்கெல்லாம் முன்னோடி. ’ரோஜா’, ’இருவர்’, ’உயிரே’ போன்ற படங்களில் மணிரத்னத்தின் அரசியல் நிலைப்பாடுகள் நாம் அறிந்தவை. அதே நேரத்தில், அவற்றைத் தனிமனித உறவுக்குள் வைத்து, மெல்லிய மொழியில், கண்கவர் காட்சிகளில் விவரிக்கும் திறன் அவருக்கு இருந்தது.

மாரி செல்வராஜுக்கு வந்தோமானால், ’பரியேறும் பெருமாளி’ல் நாயகன் அடையும் துயரமானது இரக்கம் ஏற்படும் வகையில் கடத்தப்படுவது பார்வையாளர்களுக்கு ஒரு பிடிமானத்தை தரும். ’மாமன்னனில்’ தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்று இரண்டு பேரின் அரசியல் போட்டியாகச் சூழல் மாறுவது நல்லதொரு மடைமாற்றமாக இருக்கும். ’பைசன்’ நேரடியாக விளையாட்டுக் களத்தை எடுத்துக்கொண்டு, ஒரு சிறந்த கபடி வீரனின் வெற்றிக்காக எல்லோரும் இலட்சியம் கொண்டிருக்கும் பயணமாக இருக்கிறது. 

இதுபோல், தனது அரசியல் தேர்வுகளுக்குள் பொது பார்வையாளர்களை ஈடுபடுத்தவும், குறிப்பாக அவர்களை திருப்திப்படுத்தவும் நன்கு உணர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ். மணிரத்னம் போன்ற தேசியவாத சிந்தனையாளர்கள் பயன்படுத்திய இத்தகைய நுணுக்கம், இன்று மாரி செல்வராஜ் போன்ற விளிம்புநிலை சினிமா இயக்குநர்களுக்கு மாறியிருப்பது ஆரோக்கியமான பரிணாமம். 

’பைசனை’ப் பொறுத்தவரை நறுக்கென்று இருக்கும் துல்லியமான படத்தொகுப்பு, சிறிய ஒரு காட்சிக்கும் பல கேமரா கோணங்கள், தொடக்கம் முதல் முன்-பின்-பின் என்று பயணிக்கும் கதை சொல்லல், இரண்டாம் பாதி தனியாக படம் எழுச்சிப் பெறும் விதம் என மாரி செல்வராஜின் சிறந்த திரையாக்கமாக இருக்கிறது. ‘கிட்டான்’ என்ற தென் தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீரன், தனது விளையாட்டுத் திறனால் இந்திய அணிக்குத் தேர்வாகி உலகளவிலான போட்டியில் சாதனை படைப்பதே கதை. இது முதல் காட்சியிலேயே நமக்குத் தெரிந்துவிட்டாலும், மேற்கூறிய திரைமொழியாலும், எடுத்துக்கொண்ட களத்தாலும் சலிக்காத அனுபவம் தரும் படைப்பாக மாறுகிறது.

‘இப்படம் சாதியின் வன்முறைகளைப் பேசிய அளவிற்கு, சாதியை மறந்து எல்லோரும் இணக்கமாக வாழவேண்டும் என்று அழகாக சொல்லியிருக்கிறது’, ‘சமூகத்தில் ஆயிரம் அடக்குமுறைகள் இருந்தாலும், லட்சியமுள்ள ஒருவனால் அது அனைத்தையும் கடந்து சாதிக்க முடியும் என்று ஊக்குவிக்கிறது’, ‘உண்மை வரலாற்றைப் பேசுகிறது’, ‘உண்மை வரலாற்றில் பல உண்மைக்கு மாறான குழப்பங்களைக் கொண்டிருக்கிறது’, ‘தலித்துகளை வன்முறையாளராகச் சித்தரிக்கிறது’ போன்ற பல்வேறு பார்வைகளை பல்வேறு தரப்பினருக்கு கொடுத்திருக்கிறது. குறிப்பாக, தலித் அறிவுஜீவிகளான டி. தருமராஜ் மற்றும் ஸ்டாலின் ராஜாங்கம், வெளியே சுகுணா திவாகர், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் குறிப்பிடும்படியான விமர்சனங்களை வைத்திருந்தனர். படத்தின் திரைமொழி வழியே இவை அனைத்தையும் கவனப்படுத்த இந்தக் கட்டுரை முயல்கிறது.

மாற்று வரலாறுகளில் வரலாற்றைக் கண்டடைதல்! 

மாற்று வரலாறுகள் (Alternate history) புனைவு பிரதிகளில் உள்ள ஒரு அணுகுமுறை. சிறுகதை, நாவல் என இலக்கியங்கள் தொடங்கி சினிமாவில் பரவலாக அது பயன்படுத்தப்படுகிறது. அடிப்படையில், எந்தவொரு படைப்பும் ஏதோவொரு சமூக அனுபவத்திலிருந்துதான் வருகிறது. ஆனால், மாற்று வரலாற்றுப் பிரதிகள் நேரடியாகக் குறிப்பிட்ட வரலாற்றை எடுத்துக்கொள்கின்றன. இந்தவகை படைப்புகளுக்கு மற்ற படைப்புகளை விடக் கூடுதல் பொறுப்பும், எச்சரிக்கை உணர்வும் அவசியம். குறிப்பிட்ட வரலாற்றை வைத்து உருவாக்கப்படும் கற்பனைகள், எந்தவிதத்திலும் அந்த வரலாற்று உண்மையிலிருந்து விலகக் கூடாது. இங்கு உண்மை என்பது நடந்த வரலாற்றை அப்படியே காட்ட வேண்டும் என்று அர்த்தமில்லை. மாறாக, நடந்த வரலாற்றின் தன்மையை, அதன் பொருள் மற்றும் நோக்கைச் சிதைத்துவிடக்கூடாது. குறிப்பாக, மாற்று வரலாறு கொண்ட படைப்புகள் சமகாலத்தில் அதுசார்ந்த மக்களிடம் எந்தவித மோசமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது.

மாற்று வரலாற்றுப் பிரதிகள் அடிப்படையில் ஓர் அரசியல். ஆதலால், அதை உருவாக்கும் படைப்பாளர்களைப் பொறுத்து ஒரு அரசியல் சார்பை எடுக்கிறது. எனவே, இதனால் வரலாற்றை இட்டுக்கட்டவும், வரலாறுகளின் பேரில் சமகாலத்தில் அரசியல் செய்யவும் முடியும். இதற்கு உதாரணமாக, இலக்கியத்தில் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலையும், சினிமாவில் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ படத்தையும் குறிப்பிடலாம். 

மாற்று வரலாறு சினிமாவுக்கு ஓர் உதாரணமாக பிரபல டைட்டானிக் படத்தை சொல்லலாம். அந்த கப்பல் சென்றது உண்மை, நடுக்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது உண்மை. ஆனால், டைட்டானிக் படத்தின் மையமான காதல் கதை அந்த வரலாற்றுப் போக்கில் எடுத்துக்கொண்ட கற்பனை. அந்தக் கற்பனை நிஜ வரலாற்றுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டது. எனவே, தமக்கு வேண்டிய கதைகளை சுதந்திரமாக படைப்பாளர் சொல்ல முடிந்தது.

இதனை வரலாற்றுப் பிழையாகவோ, துல்லியம் தவறியதாகவோ பார்க்க முடியாது. அதேநேரத்தில், உண்மையிலேயே டைட்டானிக்கில் பயணித்து பலியானவர்களின் உணர்வுகளை இப்படம் களங்கப்படுத்துகிறது என்று சிலர் விமர்சிக்கலாம். இதுபோன்ற பார்வையாளர்களின் ஈடுபாட்டுக்கும் இப்படங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. 

குவெண்டின் டரண்டினோவின் ’Inglourious Basterds’ படம் இதைக் கையாண்ட விதம் முக்கியமானது. நாஜி எதிர்ப்பு படமான அதில், ஹிட்லர் பாரிசில் உள்ள ஒரு தியேட்டரில் கொல்லப்படுவார். நிஜத்தில் ஹிட்லரின் மரணம் அவ்வாறு நிகழவில்லை. ஆனால், வெறுப்பிற்குரிய ஹிட்லர் கொல்லப்பட வேண்டியவர். அவரது கொலையை விதவிதமாக யோசிப்பது பற்றி யாரும் ஆட்சேபிக்கப்போவதில்லை. இங்கே வரலாறு என்பது சமகாலத்தில் வாழும் மக்களின் நியாய மதிப்பீட்டைப் பொறுத்து மாறுகிறது. வரலாற்று உண்மை என்பதை விட, வரலாற்றிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய மதிப்பீடுகள் முன்னே வருகிறது. அதற்காக, வரலாற்றை வளைத்துக்கொள்வது இன்றைக்குத் தேவையான உரையாடல் சூழலுக்கானதாக இருக்கிறது.

தமிழில் சில படங்கள் இந்த வகையில் இருந்தாலும், வெற்றிமாறனின் ’விடுதலை’ (1&2) படங்களைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டில் இதுவரை இருந்த இடதுசாரி இயக்கங்களின் மொத்த அனுபவமும் ‘பெருமாள் வாத்தியார்’ என்ற ஒருநபரின் போராட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும். ‘அவர் யாரைக் குறிப்பிடுகிறார்’, ‘இது வேறு இயக்கம் செய்த செயல்’,  ‘இது இந்தக் காலத்தை சேர்ந்ததல்ல’ என்றெல்லாம் இதனைக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. 

எனவே, மாற்று வரலாற்று வகைமையில் வரும் ’பைசன்’ வரலாற்றை வளைத்துக்கொள்வதை இயல்பாகக் கருதலாம். ஆனால், அந்த முயற்சிக்கு நியாயம் செய்ததா? என்பதே கேள்வியாக இருக்க வேண்டும். 

கந்தசாமி எனும் பொது மனிதர், பாண்டியராஜன் எனும் தனிமனிதர்! 

ஒரு பொருளை சமூகவியல் ஆய்வுகளில் அணுகும் விதமாக ’பைசன்’ இருக்கிறது. கிட்டான் என்ற ஒரு நாயகனின் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் படத்தில் நல்லவன், கெட்டவன், எதிரே இருக்கும் சமூகத் தடை போன்ற எந்தவொரு பொருளிலும் படம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சாதிய முரண் என்ற கூர்மையான பொருளைக் கையில் எடுத்திருக்கும் ஒரு தலித் இயக்குநரின் பொறுப்புணர்வாக இதனைக் குறிப்பிடலாம். அதேநேரத்தில், அவை திரை அழகியலுக்குள் வரும்போது, அது கடத்தும் அனுபவத்தைப் பொருத்து பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ளும் புரிதல்கள் மாறுகின்றன.

தலித் என்ற ஒரே காரணத்திற்காக நாயகன் கிட்டானை இந்த சமூகம் நெருக்குகிறது. அது, எந்தளவிற்கு அவனுக்கு எதிரானது என்று தந்தை அறிவுரை செய்கிறார். நடக்கும் அரசியலை வன்முறை வடிவில் சமூகத் தலைவர் பாண்டியராஜன் உணர்த்துகிறார். சாதி என்ற ஒரே காரணத்திற்காக வேற்று சாதியினர் அவன் கையை உடைக்கிறார்கள். இவை அனைத்தும் இருந்தும், நாயகன் இந்த சமூக அமைப்பை மீறி சிந்தனையிலும், செயலிலும் பரிணாமம் பெறவில்லை. காரணம், இந்த முரணுக்கெல்லாம் மையமான கந்தசாமியும் இந்தத் தேசமும் அவனுக்கு இலகுவான வழியைக் காட்டுகிறார்கள்.

கிட்டான் கந்தசாமியின் உதவியால் முன்னேறுவதும், கந்தசாமி கிட்டானுக்கு உதவ முன்வருவதும் இரு தனிநபர்களுக்கு இடைப்பட்ட உறவு. இதனைச் சமூக பொருளாக எடுத்து ஆராய்வதில் அர்த்தமில்லை. இரண்டும் அதனளவில் சரியானது. கந்தசாமிக்கு நேரெதிரான சமூக பின்புலத்தைக் கொண்டுள்ள கிட்டானுக்கு, தன் நிலைமையை உணர வேண்டிய தேவை ஏதும் இல்லை. ஆனால், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அந்த கேள்வி எழாமல் இருக்கும் அளவிற்கே கந்தசாமி வடிவமைக்கப்படுகிறார். கந்தசாமியின் பெருந்தன்மையும், கொடையுள்ளமும் நம்மைக் கொண்டாட வைக்கிறது. இதுவே, கந்தசாமியை இந்த முரண்களுக்கு அப்பாற்பட்ட பொது மனிதராக உணர்த்துகிறது.

பாண்டியராஜன் மற்றும் கந்தசாமி இருவரும் இரு வரலாற்று மனிதர்களைக் குறிப்பிட்டாலும், இருவரும் அந்தந்த தனிமனிதர்களைத் தாண்டி இரு சமூக நிலையின் பிரதிகள். கந்தசாமி ஒரு ஆதிக்க சமூகத்தின் பிரதி. ஆதிக்க சமூகத்தின் அடக்குமுறைகள், பண்ணையார்தனம், உழைப்பாளர் சுரண்டல் போன்ற எதிர்மறை பிம்பத்தை அவர் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், ஒரு சாதியவாதியின் இருப்புக்கான நிர்பந்தம், அவன் தனிமனித விருப்புகள், அவன் அறமாக கருதும் விஷயங்கள், சமூகம் குறித்த அவனது பரந்த பார்வைகள் போன்ற பல விஷயங்களை வெளிப்படுத்துகிறார். கந்தசாமி மட்டுமின்றி, எந்தவொரு சாதியவாதியும் இந்தத் தர்க்கத்திற்குள் தம்மை உட்படுத்திக்கொள்ள முடியும். இதனைத் தமது நியாயமாகவும் வைக்க முடியும். படம் பார்ப்பவர்களின் ஏற்பையும் இவர்கள் பெற்றுவிடுவதன் மூலமாக சமூகத்தின் பொதுமனிதராக மாறிவிடுகிறார்கள்.

பாண்டியராஜன் ஒரு ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து உருவான எதிர்ப்புணர்வின் பிரதி. அவரும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் தமது அரசியலுக்காக உயிர்ப்பலி வரை விலை கொடுக்கிறார்கள். பாண்டியராஜனைச் சார்ந்த ஊர் மக்களுக்கு அவர் நாயகராக உள்ளார். அவர்களில், தவறு செய்யும் சிலரைப் பாண்டியராஜன் பொறுப்புடன் கண்டிக்கிறார். இவை அனைத்தும் பாண்டியராஜன் முன்னிறுத்தும் அரசியல் என்றில்லாமல், அவருடைய தனிமனித சாகசத்திற்கானதாக இருக்கிறது. ‘நாம எதுக்கு கத்தி எடுத்தோங்கிறதயே மறந்துட்டாங்க’ என தனது தோழர்களிடம் வருத்தப்படுவார் பாண்டியராஜன். ஒருவிதத்தில், அதற்கான காரணம் என்னவென்றல்லாம் நம்மிடமும் சொல்லவில்லை.

ஒப்பீட்டளவில் கந்தசாமியை விட பாண்டியராஜனுக்கு காட்சிகள் குறைவு. மேலும், அது நாயகனுக்கு எதிர்நிலையிலிருந்து வருகிறது. ஆதலால், இயல்பாகவே படம் பாண்டியராஜனிடம் நம்மைப் பொருத்தி பார்க்க வைக்கவில்லை. இந்தப் புள்ளியை சுகுணா திவாகர் கவனப்படுத்தியிருந்தார். குறைவான காட்சி, குறைவான இடம் என்பதைக் கடந்து அந்த சொற்பத்திற்குள் பாண்டியராஜன் தனது நியாய, தர்க்கங்களை எங்கும் பேசவில்லை. நாயகன் மீது சிறிய சந்தேகமும் வராமல், அவனை ஊக்குவிக்கும் கந்தசாமியின் ‘பெருந்தன்மையை’ கொண்டாடும் பார்வையாளர்களுக்கு, பதிலுக்குப் பாண்டியராஜனிடமிருந்து அவரது சுயவிமர்சனம் மட்டுமே திருப்திபடுத்தும் அம்சமாக கிடைக்கிறது.

கந்தசாமியின் வன்முறை பின்னுக்குச் சென்று அவரது கொடையுள்ளம் முன்னே வருவதும், பாண்டியராஜனின் சமூகத் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவரது எதிர்ப்புணர்வின் வன்முறை முன்னே வருவதும் இயல்பாக நடந்திருக்கிறது. இந்தப்படம் வழக்கம்போல் வன்முறையாக இருக்கிறது என்று சொல்வதற்குப் பதிலாக, ‘அதிகம் இணக்கத்தைப் பேசுகிறது’ என்று பலரும் குறிப்பிடுவதற்கு இதுவே காரணம்.

இணக்கம் கோரும் வன்முறை, வன்முறை கோரும் இணக்கம்;

மாரி செல்வராஜ் சாதியைப் பயன்படுத்தி மக்களுக்கு இடையே வன்முறையைத் தூண்டுகிறார் என்று கட்டமைக்கும் “பொது மனநிலை” உள்ளது. அத்தகையவர்களிடம் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் மாரிக்கு இல்லை. ஆனாலும், அவரது படங்களைப் பொருத்தவரை படத்திற்கு உள்ளே இருப்பவர்கள் மட்டும் கதாபாத்திரங்கள் அல்ல. படத்திற்கு வெளியே அவரும் ஒரு பாத்திரமாக உள்ளார். அவருக்கு ஒரு சமூக அடையாளம் உள்ளது. அதோடு, படத்தில் உள்ள மற்ற அடையாளங்களை அவர் எப்படிக் கையாள்கிறார் என்று கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். கந்தசாமி பெருந்தன்மையிலும், பாண்டியராஜன் சுயவிமர்சனத்திலும் நாம் கொண்டாடக் காரணம், அது யாரால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சேர்த்தே இருக்கிறது. 

இவை அனைத்தையும் மனதில் வைத்தே மாரி செல்வராஜ் ஒரு படத்தை எடுக்க வேண்டியுள்ளது. அதனால், தன் அடையாளத்தை எந்தளவிற்குத் திரையில் எச்சரிக்கையாகக் கையாள வேண்டும் என்ற தன்னுணர்வு அவரைத் துரத்திக்கொண்டிருக்கிறது. இதன் இறுதி நிலையாகச் சாதி எதிர்ப்பு சினிமாக்களின் பேசுபொருள், சாதியின் சிக்கல்களைக் கேள்விக்குட்படுத்துவதிலிருந்து விலகி, இணக்கம் என்ற உறைவிடத்தைத் தேடி நிறைவடைகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் உட்பட நம் அனைவரின் விருப்பமும் வன்முறையிலிருந்து மீண்டு இணக்கமான சமூகத்தை அடைய வேண்டும் என்பதுதான். ஆனால், அது அந்த வன்முறைக்கான காரணத்தை ஒழிப்பதிலிருந்துதானே தவிர, வன்முறைக்கான பொருளையே காண மறுப்பதிலிருந்து அல்ல. 

“பைசன் என்ற புனித தலித் இயந்திரம்” என்று பேராசிரியர் டி. தருமராஜ் தனது விமர்சனத்தில் குறிப்பிடுவது, அவன் சாதிய கொடுமைகள் அனைத்தையும் கடந்துபோகிறான் என்பதில் மட்டுமல்லாமல், அப்படி ஒன்று நடப்பதை அங்கீகரிக்க மறுக்கிறான் என்ற விஷயத்திலும் இருக்கிறது. ஒருசில காட்சிகள் புலம்பலாக வந்தாலும், கிட்டானின் அகச்சிக்கலில் அவை எதிரொலிக்கவே இல்லை என்பது டி. தருமராஜின் வாதம். “கிட்டான் என்ற அரசியலற்ற சாதாரண ஒருவன் எதற்கு அனைத்து அரசியல் சுமைகளையும், எச்சரிக்கை உணர்வுகளையும் தாங்கிகொண்டிருக்க வேண்டும். இந்த அதிகாரங்கள் எதனோடும் தொடர்பில்லாத ஒருவன், ஆனால், தனது பிறப்பின் காரணமாக இந்த அதிகாரத்தாலேயே வேட்டையாடப்படும் ஒருவனின் போராட்டமே இப்படம்” என்று நாம் கருதலாம்.

ஆனால், இங்கு ’பைசன்’ சாதிய வன்முறையை விட்டுவிடுகிறது என்பதே முதல் சிக்கல். மாறாக, சாதியவாதிகளின் நியாயங்கள் மற்றும் வேறு வழியே இல்லாத கடந்துபோதல் என்ற நிலையை அடைகிறது . கிட்டான் எதிர்கொள்ளும் ‘கண்ணுக்குத் தெரியாத’ துன்பத்திற்கான நிவாரணம், அந்த துன்பங்களை ஏற்படுத்தும் கண்ணுக்குத் தெரிந்த இந்த சமூகத்திற்குள்ளேயே இருக்கிறது. அது, ஒரு தலித்தின் முன்னேற்றத்திற்கு சாதி இந்துக்கள் சொல்லும் தீர்வாகப் படத்தில் வெளிப்படுகிறது. தலித்துகளின் ஏஜென்சி என்ற ஒன்றையே தவிர்த்துவிட்டு, “நீ முயன்றால் சாதிக்கலாம்” என்று சாதி இந்துக்கள் வழக்கமாகக் கொடுக்கும் அறிவுரையாக அது மாறுகிறது. இதற்கு  அவர்கள் சொல்லும் ஒரே காரணம் ‘இணக்கம்.’ சாதியை மறந்து எல்லோரும் இணக்கமாக வாழவேண்டும் என்ற கருத்து, ஒரு தலித் இயக்குநரின் மொழியில், அவருடைய அக நியாயம் மற்றும் புற நிர்ப்பந்தம் என்ற இரண்டுக்கும் உட்பட்டு உருவாகியிருக்கிறது. அகத்தை விட வலிமையான புறத்தால் அது சமநிலையைத் தவறவிட்டிருக்கிறது.

மீண்டும் சொல்வதென்றால், கிட்டான் கந்தசாமியைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவது, கந்தசாமியின் தனிப்பட்ட நல்லெண்ணம் என்ற இரு தனிமனிதர்களின் உறவைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. ஆனால், இந்த இருவருக்கும் இடையேயான முரண்பாடற்ற உறவைச் சுற்றியிருக்கும் பிற முரண்களைத் திரைமொழி கூர்மையாகப் பேசியிருக்க வேண்டும்.

ஒரு படத்தின் கதைசொல்லி நாயகன். அவனது மனவோட்டமே படம் பார்ப்பவர்களின் எண்ணமுமாக இருக்கும். அப்படியிருக்கையில், கிட்டான் முன் உள்ள இரு தலைவர்களும் அவனுக்கு ஏற்படுத்தும் தாக்கமே, நமக்கும் ஏற்படும். பாண்டியராஜன் வரும் ஆரம்ப காட்சியே மோசமான வன்முறையாக நாயகனை உளவியல் பதற்றத்திற்குள் (trauma) தள்ளுகிறது. பிறகு, கந்தசாமி வீட்டில் இருக்கும் நாயகன் பாண்டியராஜனின் வன்முறையால் இரண்டாம் முறை அதேவித மனப்போராட்டத்திற்கு செல்கிறான். முதல் காட்சியில் பள்ளி ஆசிரியர் புரோட்டா வாங்கிக்கொடுத்து இயல்பாகப் பேசிக்கொண்டிருப்பார். இரண்டாம் காட்சியில் நாயகன் தட்டிலிருக்கும் உணவைக் கந்தசாமி எடுத்து உண்டு சகஜமாக பழகிக்கொண்டிருப்பார்.

இந்த இரண்டு இயல்பான வாழ்க்கையையும் பாண்டியராஜனே சிதைக்கிறார். முதல் வன்முறைக்குப் பிறகு அவனது கபடி ஆசைக்குத் தந்தை தடைபோடுவார். இரண்டாவது வன்முறைக்குப் பிறகு அவனது லட்சியத்திற்கு அவனே தடைபோடுகிறான். அனைத்திற்கும் காரணம் அவனது இயல்பில் குறுக்கிடும் சூழல். இறுதியில், பாண்டியராஜனின் படுகொலையால் ஏற்பட்ட கலவர சூழலுக்கும் அவன் ஏன் என்றே தெரியாமல் விலைகொடுக்கிறான்.

பாண்டியராஜனின் வன்முறை ஒரு எதிர்ப்புணர்வு, அது நெடிய ஆதிக்கத்திற்கு எதிரான அரசியல் குறியீடு என்று நாம் கருதலாம். நாம் இவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் நியாயங்கள் அனைத்தும் படத்திற்கு வெளியே நாம் தீர்மானித்திருக்கும் எண்ணங்களிலிருந்து வருகிறது. படத்திற்குள் அது முழுமை பெறாததற்கு ஒரு காரணமாக வன்முறை குறித்த சித்தரிப்புகளைச் சொல்லலாம்.

பாண்டியராஜன் அறிமுக காட்சியில் ஹோட்டலில் இரு சாதியவாதிகளைக் கொல்கிறார். அந்த காட்சியில் ரத்தங்கள் பெருக்கெடுத்து ஓடுவதும், உடல் திசுக்கள் தெரிப்பதும் நேரடியாகக் காட்டப்படுகிறது. ஒரு மாஸ் நாயகனுக்குரிய அறிமுக காட்சியைத் தாண்டி இதில் வேறு ஒன்றும் இல்லை. வன்முறை காட்சிகளைப் பொருத்தவரை வன்முறையைவிட, அது நடப்பதற்கு முந்தைய சூழலே அவசியம். நேரடியாக வன்முறையைக் காட்டுவதை விட, அது ஏற்படுத்தும் பதற்றமே பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்யும்.

உதாரணம், ’மெட்ராஸ்’ படத்தில் நீதிமன்ற வளாகத்தில் அன்பு கொல்லப்படும் காட்சி. அதில், நேரடியாக அவரை வெட்டுவதைக் காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால், ஒரு கொலையைக் கொந்தளிப்புடன் பதற்றமாகக் கடத்திய முக்கிய காட்சி அது. ஒரு சாதாரண சூழலைக் கொலை எவ்வாறு சிதைக்கிறது என்பதே முக்கியம். அது தவறுவதாலேயே, பாண்டியராஜன் கொல்லப்படும் காட்சி கூட பார்க்க அசௌகரியமாக இருக்கும் அளவிற்கு மனதை உலுக்கவில்லை. 

ஆனால், ’பைசனி’லேயே இரண்டு காட்சிகள் முக்கியமானவை. ஒன்று, கிட்டானின் தந்தை பார்த்து வியந்த ஒரு கபடி வீரன், மோசமாக இழிவுபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சித்திரம். ஒரு தலித் வீரனின் எழுச்சி, அவன் களத்தில் நேரடியாகப் பார்த்திடாத வன்முறையால் அங்கு வீழ்ந்து கிடந்தது. அந்தக் கொலை காட்டப்படவில்லை. ஆனால், அந்தக் கொலை நமக்குக் கடத்தப்பட்டது.

இரண்டாவது, கந்தசாமியின் வீட்டில் பாண்டியராஜன் நிகழ்த்தும் வன்முறை. தனது விளையாட்டு வீரர்களுடன் மகிழ்வாக உட்கார்ந்து உணவு உண்கிறார் கந்தசாமி. கூடுதலாக, கிட்டான் உணவைப் பகிர்ந்துகொண்டதைப் பற்றி தனது விசுவாசியுடன் பரிவுடன் பேசுகிறார். இந்தச் சூழலில் ஏற்படும் வன்முறை, அதுவரை இருந்த இன்பத் திளைப்பை, கந்தசாமியின் பெருந்தன்மையை நிலைகுலையச் செய்கிறது. படம் முழுக்க வெள்ளையாக இருக்கும் கந்தசாமியின் உடை, கொல்லப்பட்ட தனது விசுவாசியின் ரத்தத்தை எடுத்துப் பூசி கறைபடும். பாண்டியராஜனுக்கு நடக்கும் எந்தவொரு வன்முறையிலும் இப்படியொரு உணர்வுப்பூர்வமான விளைவுகள் இல்லை. அதுபோலவே, பாண்டியராஜன் செய்யும் வன்முறைகளும் அதன் அரசியல் பொருளை இழந்து ஊடாடுகிறது.

‘சாதிய சீண்டல்கள் சொல்லப்பட்ட அளவிற்குச் சாதியமைப்பு இயங்கும் விதம் பிரதிக்குள் கொணரப்படவில்லை’ என்று ஸ்டாலின் ராஜாங்கம் தனது விமர்சனத்தில் குறிப்பிடும் இடம் முக்கியமானது. கந்தசாமியின் நியாய தர்க்கங்கள் மட்டுமல்லாமல், அவரது உணர்வுப்பூர்வமான காட்சிகள் அனைத்தும் நேரடியாக வெளிப்படும்போது, பாண்டியராஜனின் அப்படியொரு எந்த தேவையும் இடம்பெறவில்லை. இதற்கு காரணம், மாரி செல்வராஜ் தன்னை பாண்டியராஜனாக நினைத்துக்கொண்டு எடுத்த இணக்க முயற்சியே ஆகும். இது, ஒருவிதத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்திய வணிக வெற்றியாகவும் மாறியிருக்கிறது.

நல்ல தேசியம் எனும் பாசாங்கு 

கிட்டான் மீது இந்திய அணி பயிற்சியாளருக்கு இருக்கும் ஒவ்வாமை என்பது புதியவன், சிறியவன், முதிர்ச்சியற்றவன், அணியை இரண்டாவதாக ஆக்கிரமித்திருக்கும் தமிழ்நாடு வீரன் போன்ற பாதுகாப்பான இடங்களுக்குள் இருக்கிறது. கிட்டான் இரண்டு முறை அணியில் தேர்வாகாமல் புறக்கணிக்கப்படுவதாகக் காட்டும் விதங்களும் பெயருக்கு பாசாங்கு செய்பவை. கிட்டானின் நிலை எந்தவிதத்திலும் இந்தத் தேசத்தால் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், அவனுக்குக் கந்தசாமியின் பெரிய வெர்ஷனாகவே இந்தத் தேசம் உள்ளது. கந்தசாமியின் கருணைக்கு முன் அவரே ஆதிக்கத்தின் உருவாக இருப்பது பின்தள்ளப்படுவது போல், இந்தத் தேசத்தின் நிலையும் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

இந்தியா போன்ற சாதி ஆதிக்க நாட்டில் ஒரு தலித்தின் வெற்றியைப் பொருட்படுத்தாமல் கடக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம் கிடையாது. தலித்துகள் எந்தளவிற்கு வதைபடுகிறார்கள் என்று கண்முன் காட்ட வேண்டும் என்றும் கேட்கவில்லை. ஆனால், தலித்துகள் மீதான ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில், தலித் ஒருவரின் வெற்றி என்பது அந்த ஒடுக்குமுறை தேசத்திற்கு எதிரான ஒரு செய்தி. அவனுடைய வெற்றியை இந்தத் தேசம் தனக்கானதாக வரித்துக்கொள்ளலாம். ஆனால், அது இந்தத் தேசத்தின் வெற்றியல்ல. அதாவது, இந்தத் தேசத்தின் பண்பு அல்ல. 

‘தேசத்திற்காக மக்கள் இல்லை, மக்களுக்காகத்தான் தேசம்’ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதுபோல், ‘இந்தியத் தேசத்தின் உண்மையான அடையாளமானது இங்குள்ள பகுஜன்களின் வெற்றியிலேயே உள்ளது. ஆதலால், உண்மையான ‘பகுஜன் தேசியத்தை’, ‘நல்ல தேசியத்தை’ மீட்டெடுக்க வேண்டும். ’பைசன்’ அத்தகையதொரு சினிமா’ என்று சில விமர்சனங்கள் வந்தன. இவ்வாறு சொல்வது, உண்மையான பகுஜன் தேசியத்தைப் பார்ப்பனியம் என்ற ஆதிக்கம் அதிகாரம் செலுத்தி வருகிறது. அதை வீழ்த்திவிட்டு உண்மையான ஐடியல் தேசியத்தை அடையலாம் என்று அர்த்தப்படுகிறது.

இங்கே கேள்வி என்பது, உண்மையிலேயே பகுஜன் தேசியம் என்ற பொன்னுலகம் இந்த குடியரசில் இருந்திருக்கிறதா? இல்லை. அப்படி இல்லாத, இதற்கு முன்பு எப்போதும் இருந்திராத ஒரு ஐடியல் தேசத்தின் பேரில் தலித்துகளின் போராட்ட வெற்றியை எழுத முடியாது. ‘இதுதான் உண்மையான தேசத்தின் வெற்றி’ என்று சொல்வது இந்த பார்ப்பனிய/இந்து தேசியத்தில் நமக்குத் தேவையான இடம் உண்டு என்ற ஒரு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கிறது. அடிப்படையில், இந்து தேசியத்திற்கு (காங்கிரஸின் செக்குலர் தேசியத்தையும் சேர்த்தே என்று பொருள் கொள்க) எந்தவொரு ஐடியல் உள்ளடக்கமும் இல்லை. இதில், தலித் ஒருவரின் வெற்றி இந்தத் தேசத்தின் தவிர்க்க முடியாத விளைவால் ஏற்படுகிறது. தேசத்தின் கொடையால் அல்ல. நல்ல தேசியம் என்பது அடிப்படையில் ‘நல்ல முதலாளித்துவம்’ போன்றது.

முதலாளித்துவ பொருளாதார முறையின் கீழ் வாழ்க்கை நிலை மாறுவதும், பல தனிமனிதர்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைவதும் அந்த முறை தனக்குள்ளே கொண்டுள்ள தவிர்க்க முடியாத அம்சங்களால் நிகழ்கிறது. முதலாளித்துவ அமைப்பு இதுபோன்ற விளைவுகளைக் கொண்டிருக்கிறது. ஓரளவு இதன்மூலம் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் செய்கிறது. இதில் சாதிக்கும் சொற்ப தனிமனிதர்களின் வெற்றி இந்த அமைப்பின் வெற்றியல்ல. மாறாக, இந்த அமைப்புக்கு எதிராக அன்றாடம் போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தால் கிடைக்கும் பயன்கள். முழுக்க முழுக்க வர்க்க போராட்டத்தின் நீண்ட பயணத்தின் சிறு துளியாகக் கிடைக்கும் வாய்ப்புகள். இந்தத் தேசத்தில் அப்படியொரு போராட்டத்தைத் தினம் தினம் எதிர்கொண்டு வரும் தலித்துகளின் வெற்றி இந்தத் தேசக் கட்டமைப்புக்கு எதிரான அறைகூவலாகவே பார்க்க முடியும்.

பாகிஸ்தான் எனும் பொது எதிரி! 

‘பைசன் படத்தின் கட்டமைப்பில் துவங்கி முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் எதிர்மை என்பது உரத்து ஒலித்தபடி இருக்கிறது’ என்று குறிப்பிட்ட முஸ்லிம் அல்லாத சிந்தனையாளராக யமுனா ராஜேந்திரன் இருக்கிறார். மற்ற யாருக்கும், அந்தப் பொருள் மீது அக்கறை இல்லை என்பதை விட, அதை ஒரு பொருளாக எடுத்துப் பேச அவசியப்படவே இல்லை. அணியின் பயிற்சியாளர் சாதியைக் கடந்த வட இந்திய பெருமிதவாதியாக மட்டும் தோன்றுவதிலிருந்து தேசத்தில் தலித் ஒருவரின் போராட்டத்தை இலகுவாக முடித்தது வரை, ‘பாகிஸ்தான் எனும் பொது எதிரிக்கு’ முன் அனைவரையும் உள்ளடக்கிய தேசியவாதமே உள்ளது. 

பகுஜன் தேசியவாதம் போன்ற புரட்டுகளைக் கடந்து, தேசியவாத சரக்கிற்குத் தேவையான கூறுகளை இங்கு நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். முதலில், பாகிஸ்தான் அணியை எதிரே தேர்ந்தெடுத்தது தன்னிச்சையானது அல்ல. இரண்டாவது, பாகிஸ்தான் எனும் கட்டமைக்கப்பட்ட எதிர்மை எந்தளவிற்குப் படத்தின் மொத்த ஆன்மாவையும் சிதைக்கிறது என்று கவனப்படுத்தலாம்.

ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணியை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று பயிற்சியாளர் நினைக்கிறார். இது இந்திய வீரர்கள் நடுவே உரையாடலாக எழும்போது, சாதி சண்டையைப் போல் ஒரு காரணமில்லாத சண்டை என்று பேசிக்கொள்கிறார்கள். பயிற்சியாளருக்குப் பாகிஸ்தானை வீழ்த்துவது மானப்பிரச்சனையாக இருக்க, அணியின் வீரர்களுக்கு அது ஒரு விளையாட்டு பிரச்சனையாக மட்டுமே உள்ளது. இந்த ஒரு சிறு விமர்சனம் தவிர, பாகிஸ்தானின் வீழ்ச்சி என்ற புள்ளியை நோக்கித்தான் இந்திய அணி கேப்டனின் இறுதி வார்த்தை வரை படம் நகர்கிறது.

ஒரு விளையாட்டின் பரிபூரணத் தன்மை (emancipation) என்பது ஒருவர் அடையும் வெற்றியில்தான் இருக்கிறதே தவிர, எதிரில் இருப்பவர்களை வீழ்த்தியதாக வேண்டும் என்று நினைப்பதில் இல்லை. பாகிஸ்தானுடனான போட்டியின் இறுதி வெற்றிவரை அப்படியொரு ஆன்ம ஈடுபாட்டை (Spirit) ’பைசன்’ தொலைத்திருக்கிறது. கிட்டான் வென்றபிறகு அவன் ஊர்மக்கள் கொண்டாடுவதற்கும், பயிற்சியாளரும் வீரர்களும் கொண்டாடுவதற்கும் வித்தியாசமிருக்கிறது. காரணம், எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் அதன் முடிவு வென்றவர்-தோற்றவருக்கு இடையேயான சக மரியாதையில் (courtesy) நிறைவு பெறுவதே மாண்பு. ’சார்பட்டா பரம்பரை’யில் வேம்புலி, ’ப்ளூ ஸ்டாரி’ல் எதிர் அணி போன்ற தீவிர சமூக முரண் கொண்டவர்களுக்கே அந்த கண்ணியம் கொடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, பெரும்பாலான சினிமாக்கள் அந்த மாண்பைக் கடைப்பிடிக்கத் தவறவில்லை. 

ஆனால், பாகிஸ்தான் மாதிரியான உணர்வுப்பூர்வமான நிலையை எதிரே வைத்துக்கொண்டு, போட்டியின் முடிவில் கைகொடுத்தல், ஆரத்தழுவுதல் போன்ற எந்தவித கண்ணியத்தையும் ’பைசன்’ பின்பற்றவில்லை. இது சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியது அல்ல. பெஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே வழக்கமாக இருக்கும் மரியாதையும், மாண்பும் அரசியல் காரணங்களுக்காகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இது அறிவிக்கப்படாத புதிய விதியாக நிறுவனப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலை இப்படமும் தனது ‘பான் இந்தியா’ தேவைக்காகப் பயன்படுத்தியிருக்கிறது. மேலே சொன்னபடி, பாகிஸ்தான் என்ற எதிர்மை தன்னிச்சையாக அமையவில்லை என்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். 

கபில் தேவின் வாழ்க்கை வரலாறான ’83’ படம் பாஜக ஆட்சியில் வந்த முக்கியமான விளையாட்டு திரைப்படம். குறிப்பாக, மோடி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் வெளியானது. அப்படத்தில், 1980-களில் இந்திய அணி மீது சக அணிகள் கொண்ட இனவாதமும், இலக்காரமும் நேரடியாகக் காட்டப்பட்டிருக்கும். இந்திய அணியை எப்போதும் மட்டம் தட்டுவதே அனைவரின் வேலையாக இருக்கும். அந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மட்டும் இணக்கத்தோடு இருக்கும் (Sistering countries அல்லவா). குறிப்பாக, படத்தில் கபில் தேவ் அப்போதைய பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானை வாஞ்சையோடு தழுவி நலம் விசாரிக்கும் காட்சி நெகிழ்வின் உச்சம். இதில் ஹைலைட் என்னவென்றால், இப்படம் வெளியாகும்போது பாகிஸ்தானின் அதிபர் இம்ரான் கான். அப்படியிருந்தும், இதில் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் காட்சிப்படுத்தினார்கள் ’83’ படக்குழு.

தென்னிந்தியாவில், மாரி செல்வராஜ் போன்ற முக்கிய இயக்குநரிடம் அத்தகைய அறத்தை எதிர்பார்ப்பது கடமை மட்டுமல்லாது அவசியம். ’பைசனி’ல் நாயகனின் கையை உடைத்தவர் தொடங்கி சாதி கடந்து அனைவரும் ஒன்றுசேரும்போது, பாகிஸ்தான் அணியிடம் மட்டும் அந்த மதிப்பைத் தவறவிட்டது தவறுதலாக நடந்திருக்க வாய்ப்பில்லை.

ஒட்டுமொத்தமாக, மாரி செல்வராஜின் மற்ற படங்களைப் போல் பைசனும் சிறந்த சமூக விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் உள்ள முரணையும், கூடுதல் தேவைகளையும் திறந்த உரையாடலுக்குக் கொண்டுவர வேண்டும். இதன்மூலமாகவே, வருங்காலங்களில் சிறந்த படங்களுக்கும் ஆரோக்கியமான உரையாடலுக்கும் முன் நகர முடியும். 

தலித் மக்களின் வெற்றியும், பிரதிநிதித்துவமும் இந்தத் தேசத்திற்கு தவிர்க்க முடியாதது என்று சொல்லும் அதே வேளையில், அவை இந்த அமைப்பை அப்படியே தக்கவைக்க விரும்பும் சாதியத்தின் மனத் திருப்தியிலிருந்தும், சமூக முரணையும், அன்றாட சவால்களையும் பொருட்படுத்தாத பெரும்பான்மைவாத தேசத் திளைப்பிலும் சாத்தியப்படும் என்று இப்படம் அறிவிக்கிறது.

அந்தவிதத்தில், ’பைசன்’ படத்தைத் தமிழ் சினிமாவில் ஓர் பூனா ஒப்பந்தம் என்று குறிப்பிடலாம்.

  • மு. அப்துல்லா

சங்கரபுரமும், வணத்தியும்: ’இட்லி கடை’ மற்றும் ’பைசன்’ திரைப்படங்கள் கட்டமைக்கும் ’கிராமம்’ எனும் வெளி! – அருண் பிரகாஷ் ராஜ்

தலித்திய நோக்கில் இருந்து காந்தியின் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, அவர் காலனியம் அறிமுகம் செய்த நவீனத்திற்கு மாற்றாக இந்திய கிராமங்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையே தான் உருவாக்க விரும்பும் ராம ராஜ்ஜியத்திற்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்தார் என்பது. கிராமங்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டத்தை இந்தியாவைச் சுற்றி பல முறை மேற்கொண்ட பயணங்களில் இருந்து மட்டும் காந்தியார் உருவாக்கிக் கொள்ளவில்லை. மாறாக, கிராமங்களை இந்தியாவின் ‘ஆன்மா’வாகவும், அவை பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றங்களையும் சந்திக்காத, கலப்படமற்ற வெளியாகவும் கற்பனை செய்திருந்த பல கீழைத்தேயவாதிகளின் (orientalists) கருத்துக்களும் காந்தியைப் பாதித்திருந்தன. எனவேதான், தன்னுடைய தென்-ஆப்பிரிக்கா நாட்களில் இருந்தே இந்திய கிராமங்களைப் பற்றி உயர்வான மதிப்பீடுகளை முன் வைத்தார் காந்தி. 

கிராமங்கள் பற்றிய காந்தியின் புரிதலுக்கு நேர் எதிரானது அம்பேத்கரின் பார்வை. பண்பாடு, கலாச்சாரம், ஊர்க் கட்டுப்பாடு போன்ற பெயர்களில் தலித்துகளை உரிமைகளற்றவர்களாக, தீண்டப்படாதவர்களாக நீடிக்க செய்து, அன்றாடம் அவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தும் வெளியாகவே அவர் கிராமங்களைக் கருதினார். எனவேதான், அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்தின்போது இவ்வாறு அம்பேத்கர் பேசினார்:

“நான் கூறுவது, இந்தக் கிராமக் குடியரசுகள் தான் இந்தியாவின் அழிவுக்குக் காரணம். எது கிராமம்? அது ஒரு உள்ளூர்ச்சிந்தனையின் கழிவுநிலம்; அறிவிலியின் குடில்; குறுகிய மனப்பான்மையும், சமூகவெறியும் தங்குமிடம் அல்லவா?”

தமிழ் சினிமாவானது, கிராமம் குறித்தான இவ்விரு முரண்பட்ட பார்வைகளையுமே திரையில் பிரதிபலித்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அமைதியான வாழ்க்கை, இன்பமான கூட்டுக் குடும்ப அமைப்பு, இயற்கை வளம், தற்சார்புப் பொருளாதாரம் முதலிய அம்சங்கள் நிறைந்ததாக கிராமங்களும், இதற்கு முற்றிலும் நேரெதிரான குணாதிசயங்கள் கொண்டதாக நகரங்களையும் பல திரைப்படங்கள் சித்தரித்திருக்கின்றன. இதற்கு ’பட்டிக்காடா பட்டினமா’ (1972), ‘சகலாகலா வல்லவன்’ (1982), ’தம்பிக்கு எந்த ஊரு’ (1984), ’வள்ளி’ (1993), ‘மகாநதி’ (1994), ’கடைக்குட்டி சிங்கம்’ (2018), ’கடைசி விவசாயி’ (2021), ‘பறந்து போ’ (2025) முதலான திரைப்படங்கள் உதாரணம். கிராமம் குறித்தான இத்தகைய உயர்வான சித்திரத்தையும் மதிப்பீட்டையும் கேள்விக்கு உட்படுத்துகிற வகையிலும், ’அலைகள் ஓய்வதில்லை’ (1981), ’தேவர் மகன்’ (1992), ’கருத்தம்மா’ (1994), ’வின்னர்’ (2003), விருமாண்டி (2004), காதல் (2004), போன்ற படங்களும் அவ்வவப்போது வெளியாக தவறுவதில்லை. (’காதல்’ திரைப்படத்தின் கதை மதுரையில் நடந்தாலும், கிராமத்தின் இயல்பு கொண்டதாக மதுரை நகரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது)

எனினும், இத்திரைப்படங்களைக் காட்டிலும், இவ்வருடம் வெளியான ‘இட்லி கடை’ மற்றும் ‘பைசன்’ படங்கள், கிராமங்கள் குறித்து காந்தியும் அம்பேத்கரும் கொண்டிருந்த இரு முரண்பாடான பார்வைகளை மிக நுட்பமாக திரை வெளியில் கட்டமைத்திருக்கின்றன. 

தனுஷின் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான ‘இட்லி கடை’ மிக வெளிப்படையாகவே காந்தியின் லட்சிய கிராம வாழ்க்கையை சித்தரிக்க முயல்கிறது. மதுரைக்கு அருகில் இருக்கும் சங்கரபுரத்தில் இட்லி கடை நடத்தும் சிவநேசன், அகிம்சை கொள்கையைப் பின்பற்றும் ஒரு காந்தியவாதி. தன்னுடைய உணவகத்தில் கிரைண்டர், மிக்சி போன்ற ‘நவீன’ உபகரணங்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, அம்மியிலேயே இட்லி மாவையும், சட்னியையும் அரைப்பார். எந்த இயந்திரங்களும் இன்றி, பாரம்பரிய முறையில் சமைப்பதுதான் தன்னுடைய உணவின் அற்புத சுவைக்கு காரணம் என சிவநேசனும், கிராமத்து மக்களும் நம்புகிறார்கள். 

தந்தையின் சமையல் கலையின் மீது ஈர்ப்பிருந்தாலும், சிவநேசனின் மகன் முருகன், பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என ஆசைப்படுகிறான். எனவே, படித்துவிட்டு, வெளிநாட்டில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான்.  பிறகு, அந்நிறுவன முதலாளியின் மகளையே காதலித்து, திருமணமும் செய்துக் கொள்ளவிருக்கிறான். திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பாக அவனது பெற்றோர்கள் இறந்து விடுகிறார்கள். ஊருக்குத் திரும்பும் முருகன், தன்னுடைய திருமணத்தை நிறுத்திவிட்டு, வெளிநாட்டு வேலையையும் உதறிவிட்டு, தந்தையின் இட்லி கடையைத் தானே எடுத்து நடத்த முடிவெடுக்கிறான். இம்முயற்சியில் எதிர்படும் வெவ்வேறு சவால்களைக் கடந்து, எவ்வாறு முருகன் தனது இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தினான் என்பதே இப்படத்தின் கதை.

அகிம்சை, நவீன உபகரணங்களை நிராகரித்தல், தற்சார்ப்பு பொருளாதாரம், பாரம்பரிய மீட்டெடுப்பு போன்ற பரவலாக அறியப்படும் காந்தியக் கொள்கைகளை, மிக மேலோட்டமாக பேசியிருப்பதோடு, காந்திய வழியில் கிராமத்தைப் பொன்னுலகமாக கற்பனை செய்துள்ளது ‘இட்லி கடை.’ இந்தக் கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களுமே உள்ளூரைவிட்டு வெளியேற விருப்பமற்றவர்கள். எனவேதான், சம்பாதிக்க வெளிநாடு சென்ற முருகனை, தொடக்கத்தில் கிராமத்தார்கள்  வெறுத்தார்கள். ஆனால், தனது தந்தையின்  கடையை அவன் மீட்டெடுப்பதைக் கவனித்ததும், அவர்கள் முருகனை அரவணைத்துக் கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டு முதலாளியால் அவன் பாதிக்கப்படுகையில், அவனுக்கு ஆதரவாக திரள்கிறார்கள். முருகனும், சுதந்திரமற்ற நிறைவற்ற வெளிநாட்டு வாழ்க்கையை விட, உள்ளூரில் இட்லி கடை நடத்தும் வாழ்க்கையே உயர்வானது என உறுதியாக நம்புகிறான். இவ்வாறு, மாற்றத்தையும், வளர்ச்சியையும் நிகழ்த்திட விரும்பாத, கடந்த காலத்தில் உறைந்துப் போன அதிசய கிராமமான சங்கரபுரத்தில் சாதியும் கிடையாது என்பது மற்றொரு வியப்பு.

சங்கரபுரம் போன்ற சாதியற்ற கிராமம் இதுவரை தமிழ் சினிமா  பார்த்திருக்குமா என தெரியவில்லை. சாதியை தனது நேரடி பேசுபொருளாக கொண்டிருக்காத பிற கிராமத்து திரைப்படங்கள்கூட, வெளிப்படையாகவோ, குறியீட்டு ரீதியாகவோ கதாநாயகன் அல்லது பிற முக்கிய கதாப்பாத்திரங்களின் சாதியை சுட்டிக்காட்டுவதுண்டு. ஆனால், சாதி பற்றிய எந்தவொரு சிறிய  குறிப்பையும் தவிர்த்துள்ள ‘இட்லி கடை’, சாதியற்ற அல்லது சாதி நீக்கம் செய்யப்பட்ட சங்கரபுரத்தையே திரையில் உருவாக்கியிருக்கிறது. இங்கிருக்கும் மனிதர்கள் யாரிடமும் எந்த சாதிய அடையாளமும் கிடையாது. சாதி பற்றி எந்த கவலையும் இல்லாதவர்களாகவே சங்கரபுரத்துக்காரர்கள் இருக்கிறார்கள். இவ்வகையில் தான், எதார்த்ததோடு தொடர்பற்ற, காந்தியின் கற்பனாவாத (utopian) கிராம சுயராஜ்ஜியத்திற்கு இணக்கமாக இருக்கிறது சங்கரபுரம். 

’இட்லி கடை’யை, கமல் ஹாசனின் ‘தேவர் மகன்’ திரைப்படத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகளும், மாறுபாடுகளும் இருக்கின்றன. ’இட்லி கடை’யின் முருகனை போலவே, தேவர் மகனான சக்தி வேலும், வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்து, சூழ்நிலை காரணமாக உள்ளூரிலேயே நிரந்தரமாக தங்கிவிடுகிறான். தன்னுடைய நவீன பழக்க வழக்கத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்டு, மரபை/பண்பாட்டை முழுமையாக அரவணைத்துக் கொள்கிறான்.  முருகனைப் போலவே, சக்தி வேலும் தான் காதலிக்கும் நகரந்த  ’நவீன’ பெண்ணுடனான உறவை முறித்துக் கொண்டு, சொந்த சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். இத்தகைய ஒற்றுமைகள், இரு படங்களுக்கு இருந்தாலும் சில துள்ளியமான வேறுபாடுகளையும் நம்மால் கவனிக்க முடிகிறது. ’தேவர் மகன்’ திரைப்படத்தில் களமான தூவலூர் கிராமம் காந்திய இலக்கணப்படி அத்தனை அமைதியானது அல்ல. தேவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான மோதல் தூவலூர் ஜனங்களை அன்றாடம் பாதித்துக் கொண்டிருக்கிறது. குடும்ப/குல கௌரவத்தைக்  காப்பாற்ற மோதிக் கொண்டு, ஒருவரையொருவர் கொல்ல வேண்டாம், கல்வி எனும் நவீனத்தை தழுவங்கள் என தேவர் மகன் உபதேசிக்கிறது. எனினும், சுயசாதி பெருமிதம், தேவர் சமூகத்திற்கு உள்ளேயே உள்ளூரில் நிலவும் சமூகநிலை அடுக்குகள், நிலப்பிரபுத்துவ மனநிலை – இத்தகைய விசயங்களை கொண்டாடி, தான் சொல்ல வந்த மைய கருத்தை சிதைத்திருக்கிறது தேவர் மகனின் திரைக்கதை. ஆனால், ’இட்லி கடை’யிலோ சாதி மட்டும் மறைக்கப்படவில்லை. அது சித்தரிக்கும் சங்கரபுரத்தில், வேறு எவ்விதமான சமூக – பொருளாதார ஏற்ற தாழ்வுகளும் காணப்படவில்லை. ஒருபடித்தாயிருக்கும் (homogenized) சமூக அமைப்பே அந்த அதிசய கிராமத்தில் நிலவிகிறது. 

கிராமம் பற்றிய சித்தரிப்பில் ‘இடலி கடை’க்கு நேரெதிராக இருக்கிறது மாரி செல்வராஜின் ’பைசன்’. இன்னும் சரியாக கூற வேண்டுமானால், கிராமம் குறித்து எதார்த்ததையும், அம்பேத்கரின் பார்வையை உள்வாங்கியதாக ’பைசன்’ விளங்குகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணத்தி எனும் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் எனும் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகவும், அப்பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த பசுபதி பாண்டியனுக்கும், நாடார் சமூகத்தவரான வெங்கடேச பண்ணையாருக்கும் நடந்த மோதலைப் பின்னணியாகவும் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ’பைசன்’. இத்திரைப்பிரதியில், மணத்தி கிராமம் வணத்தியாகும், கணேசன் கிட்டானாகவும் புனையப்பட்டுள்ளார்கள்.  

சிறு வயதில் இருந்தே கபடியின் மீது மோகம் கொண்ட கிட்டானின் திறமையை மேலும் வளர்த்தெடுக்கிறார் அவனது பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் சந்தனராஜ். ஆனால், கிட்டானின் தந்தை, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கபடி வீரராக முயற்சிக்கையில் சந்திக்க நேரும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, அவனது கபடி ஆசைக்கு எதிராக நிற்கிறார். எனினும், தொடர்ந்து தன்னுடைய ஆசிரியர் மற்றும் அக்கா வழங்கும் ஊக்கத்தால் கபடியில் தொடர்ந்து ஈடுபடுகிறான் கிட்டான். திறமையானவனாக இருந்து, பல வெற்றிகளைப் பெற்றாலும், தொடர்ந்து கபடி விளையாடுவதில் அவன் பல சிக்கல்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொள்கிறான். அவற்றையெல்லாம் கடந்து, இந்திய கபடி அணிக்குத் தேர்வாகி எவ்வாறு கிட்டான் சாதிக்கிறான் என்பதே பைசனின் கதை. 

’இட்லி கடை’யானது முருகன் வெளிநாட்டில் இருந்து பூர்வீக கிராமத்திற்கு திரும்புவதைப் பற்றியதாக இருக்க, ’பைசன்’ திரைப்படமோ, கிராமத்தில் இருந்து கிட்டான் தப்பி செல்வதைப் பற்றியதாக இருக்கிறது. சங்கரபுரத்தைப் போன்ற சாதியற்ற, கற்பனாவாத ஊராக பைசனின் வணத்தியும், தூத்துக்குடியும் இல்லை. உணவகம், பேருந்து, மைதானம் என ஊரில் இருக்கும் எல்லா பொது-வெளிகளிலும் கிட்டானின் சாதி விசாரிக்கப்படுகிறது.  சாதிக்கேற்றவாறே அவன் மற்றவர்களால் நடத்தப்படுகிறான். நல்வாய்ப்பாக அவனது திறமையை அங்கீகரித்து, சிலர் அவனை சாதி கடந்தும் ஊக்குவிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும்கூட சாதியம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கிட்டானே, தன்னுடைய திறமையைக் கொண்டு முட்டி மோதி மேலெழுகிறான். 

கிட்டானின் பயணத்தில் சாதியம் மட்டும் தடையாக இருக்கவில்லை. அவனுடைய கிராமத்தில், சொந்தக்காரருடனான குடும்ப பிரச்சனையே, ஒரு கட்டம் வரை அவனை ஊர் கபடி அணியில் சேர விடமால் செய்கிறது. தனது காதலியை கரம் பிடிப்பதற்கும், அந்த குடும்பப் பிரச்சனையே தடையாகவும் இருக்கிறது. மேலும், அவனது சாதியைச் சேர்ந்த தலைவருக்கும்,  ஆதிக்க சாதியைச் சேர்ந்த மற்றொரு தலைவருக்குமான விரோதம் அப்பகுதியை மட்டுமின்றி, கிட்டானின் வாழ்க்கையையும் வெகுவாக பாதிக்கிறது. அவன், தேசிய அணிக்கு தேர்வாகிய தினத்தில் அவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான பிரச்சனை பெரும் கலவரமாக உருவெடுக்கிறது. அதிலிருந்து தப்பிப் பிழைப்பதாலேயே, கிட்டானால் வாழ்க்கையில் அடுத்த நிலை நோக்கி நகர முடிகிறது. 

மாரி செல்வராஜின் பிற திரைப்படங்களும் கிராமத்தில் இருந்து தப்பியோடுவதைப் பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. ‘மாமன்னன்’ திரைப்படத்தில் சிறுவனான அதிவீரன், கோயில் கிணற்றில் குளித்ததால் தனது நண்பர்கள் கொல்லப்படுவதைத் தொடர்ந்து, மலை மீதிருக்கும் சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி, சேலம் நகரத்தில் தஞ்சமடைகிறான். அங்கு அவனுக்கு ஆதரவுக் கொடுத்து வளர்க்கும் பெரியரொருவர், அவனுக்கு தற்காப்பு கலைகள் கற்றுக்கொடுக்கிறார். அதே போலவே, ’கர்ணன்’ திரைப்படத்தின் நாயகன் இராணுவத்தில் சேர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருப்பவன். எனினும், ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காவல்துறை அதிகாரி கண்ணப்பிரானைக் கொன்று, தனது கனவை பலி கொடுத்துவிட்டு, சிறை செல்கிறான். தவிர, ’கர்ணன்’ படத்தின் மைய கருவே, மேம்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, சொந்த கிராமத்தில் இருந்து வெளியேறி நகரத்தை நோக்கி பயணப்பட உதவும் பேருந்து வசதிக்காக தலித்துகள் நடத்தும் போராட்டம்தான். இதற்கு முற்றிலும் மாறாக, கிராமத்தில் இருந்து வெளியேறுவதை மட்டுமல்ல, அனைத்துவித தொழில்நுட்பங்களும் பாரம்பரியத்தை ஊடுறுவி  சீரழிப்பதை சாடுகிறது ’இட்லி கடை.’

இவ்வாறுதான், கிராமங்களை சாதியற்ற, அரவணைக்கப்பட வேண்டிய ’ராமராஜ்ஜியம்’ போன்ற பொன்னுலகாக தனுஷின் ‘இட்லி கடை’ கட்டமைத்திருக்க, கிராமங்களை தலித்துகள் அவதிப்படும் வெளியாக கட்டமைத்து, அவற்றில் இருந்து விடுபடுவதையே விடுதலைக்கான வழியென்றும் கூறியிருக்கிறது மாரி செல்வராஜின் ‘பைசன்’. 

கபிலனும் கிட்டானும் – Some thoughts.. – ர. முகமது இல்யாஸ்

இயக்குநர் மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் தலித் சினிமா மரபில் ஓர் பாய்ச்சல் என்று கூறுவது மிகையாகாது. தலித் தன்னிலையை, குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த சமகால தலைமுறையைச் சார்ந்த தலித் ஆணின் தன்னிலையை மாரி செல்வராஜ் தொடர்ந்து தனது பிரதிகளின் வழியாக பதிவுசெய்து வந்திருக்கிறார். சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக அதனால் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிமனிதர்கள் நம் சமூகத்தில் என்ன வகையான அனுபவங்களைப் பெற்றார்கள், அது அவர்களுக்கு அளித்த புரிதல் என்ன, அதை எவ்வாறு கலை வடிவத்தில் வெளிப்படுத்துகிறார்கள் முதலானவை இதுவரை பொதுச் சமூகத்திற்குப் பழக்கப்படாத ஒரு வாழ்க்கையை, அதன் பகுதியை, கடத்துகிறது; அது தலித் தன்னிலையாக உருவெடுத்திருக்கிறது.

’பைசன் காளமாடன்’ பார்க்கும் போது, ‘சார்பட்டா பரம்பரை’ நினைவுக்கு வராமல் இருக்காது. கபிலனும், கிட்டானும் ஏறத்தாழ ஒரே சூழலில் வெற்றியை நோக்கி ஓடுபவர்கள். அந்த வெற்றியை அடைய இருவரும் தேர்ந்தெடுத்திருப்பது விளையாட்டு. குத்துச் சண்டை, கபடி ஆகிய இரு விளையாட்டுகளும் விளையாடுபவரின் உடல் வலிமையைப் பிரதானமாகக் கொண்டு இயங்குபவை. சாதிய அடுக்குமுறையில் வலிமையோடு இயங்கும் தலித் உடல்கள் இறுதியில் வன்முறைக்காக பலிகொடுக்கப்படுகின்றன; அந்த வன்முறை சாதிய படுகொலைகளாக இருக்கலாம், அரசியல் வன்முறைகளாக இருக்கலாம். எதுவாக இருப்பினும், தலித் இளைஞர்களின் உடல்கள் அவர்களுக்குச் சொந்தமில்லாததாக மாற்றுவதற்கும், சுரண்டுவதற்கும் சாதிய அமைப்பு முறை இயங்கும் தன்மை வழிசெய்கிறது. இத்தகைய சூழலை மீறி, கபிலனும் கிட்டானும் தங்கள் உடல்களைத் தங்களுக்குச் சொந்தமானதாக மாற்றுகின்றனர்; வலிமை கொண்டோராக எழுகின்றனர்; அவரவர் சூழலில் வெற்றியைப் பெறுகின்றனர். இது இந்த இரண்டு கதைகளிலுமே பொது அம்சமாக இடம்பெறுகிறது. கபிலனின் தாய், கிட்டானின் தந்தை ஆகிய இருவருமே தம் மகன்களை முறையே குத்துச்சண்டையோடும், கபடியோடும் விலகல் தன்மையைக் கடைபிடிக்க வற்புறுத்துவதன் பின்னணியில் இத்தகைய அச்சங்களே இருந்திருக்கின்றன. விளையாட்டு என்பது ஒரு தலித்திற்கு வெறும் விளையாட்டாக இருப்பதில்லை என்பதை இரண்டு திரைப்படங்களும் வலியுறுத்துகின்றன.

கபிலனைச் சுற்றி இயங்கும் எழுபதுகளின் அரசியல் சூழல், கிட்டானைச் சுற்றி இயங்கும் தொண்ணூறுகளின் சாதிய கலவரச் சூழல் அவர்கள் இருவரையும் தமது குறிக்கோள்களில் இருந்து விலக்கி வைக்கின்றது. அதனை உடைத்து, தமது வாழ்வின் பயனை இருவரும் உணர்ந்து வெல்வதாக இரண்டு திரைப்படங்களுமே முடிவடைகின்றன. இந்த முடிவில் இருவருமே தமது வெற்றியை ஒரு சமூகத்தின் வெற்றியாக, பாகுபாடு களையப்பட்ட சமூகத்தை அடைய வேண்டிய இலக்காக வடிவமைக்கின்றனர். இத்தகைய நோக்கங்களே பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இரு இயக்குநர்களையும் ‘சாதி இயக்குநர்கள்’ என்று வன்மத்தோடு அளிக்கப்படும் முத்திரைகளை செல்லாதவையாக மாற்றுகின்றன. பா. ரஞ்சித் மீதான விமர்சனங்களில் அதிகம் முன்வைக்கப்படுவது அவர் ஆதிக்க சாதிகளுக்கு எதிராக தலித் இளைஞர்களைத் திருப்புகிறார் என்பது. இதில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்றாலும், ரஞ்சித் தனது ‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகிய திரைப்படங்களில் நேரடியாகவே ஆதிக்க சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்களும் சாதிய அமைப்பு முறையால் பாதிக்கப்படுவதைப் பேசியிருந்தார். மார் செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’, ‘மாமன்னன்’, தற்போதைய ‘பைசன் காளமாடன்’ ஆகிய திரைப்படங்களும் அவர் மீது குத்தப்படும் சாதிய முத்திரை எந்த பொருத்தமும் அற்றது என்பதைக் காட்டுகின்றது. ரஞ்சித்தை விட மாரி செல்வராஜ் இயக்கிய இந்த திரைப்படங்கள் ஆதிக்க சாதிகளோடு சமரசத்தில் ஈடுபடுபவை. அதற்கு தென்மாவட்டங்களில், குறிப்பாக அப்பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களில் சாதி இயங்கும் முறை சென்னை போன்ற நகரத்தில் இருந்து மாறுபட்டது என்பதாக இருக்கிறது.

உதாரணமாக, ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தில் நாயகன் தன்னை ‘ரூட்டு தல’ என அனைவரின் தலைவனாக பாவித்துக் கொள்ளும் கதைக்களங்களாக இருப்பவை பேருந்து, கல்லூரி ஆகியவை. அதே வேளையில், மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கல்லூரிச் சூழலும்,’கர்ணன்’ படத்தின் பேருந்து குறித்த அவரின் பார்வையும் ரஞ்சித்தின் வாழ்க்கை அனுபவத்திற்கு நேரெதிரானவை. ஒரே விதமான களமும், பொருளும் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழும் தலித்துகளின் அனுபவத்தில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகின்றன. இப்படியான சூழலில் இருந்தே இந்த இரண்டு இயக்குநர்களையும் மதிப்பிட முடியும். இரு இயக்குநர்களின் இலக்கும் ஒன்றாக இருந்தாலும், அவரவர் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையில் அவரவர் வாழ்ந்த அனுபவங்களில் இருக்கும் வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.

கபிலன், கிட்டான் இருவருக்குமே ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ஆசிரியராக இருக்கிறார். அவர் ஏறத்தாழ இருவரின் வாழ்க்கையிலும் தன் தந்தைக்கு இணையானவராக இருக்கிறார். பிறரைப் போல அல்லாமல், கபிலனும் கிட்டானும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு ஆட்டத்திலும் தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தான் வெற்றி பெற்றால் மட்டுமே நிரூபிக்க முடியும் என்பது விதியாக இருக்கிறது. சற்றே சறுக்கினாலும், பெரும் தோல்வியில் இருவரையும் கீழே தள்ளிவிட இந்தச் சமூகமும், அதன் விதிகளும் அவர்களுக்கு எதிராக செயல்படுகின்றன. அதனைமீறி இருவரும் வெல்கின்றனர். இந்த ‘வெற்றி’ உண்மையிலேயே வெற்றிதானா என்ற கேள்வியும் இருக்கிறது; அந்தக் கேள்வியைக் கடந்து இத்தகைய திறமையான மனிதர்களைச் சமூகம் ஏன் தடைசெய்து வைத்திருக்கிறது என்பதே நம் உரையாடலின் மையமாக இருக்க வேண்டும் எனக் கருதலாம்.

ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தன் கருத்தை முன்வைக்கும் போதெல்லாம் அது ‘பொது’விற்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. பெரும்பான்மையால் கற்பனை செய்து வைத்திருக்கும் ‘பொது’ என்பது சாதியத்தை இயல்பாக்கம் செய்வதோடு, ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த ’பொது’வோடு என்ன மொழியில் உரையாட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றது. ’பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பெரும்பாலானோரின் விமர்சனங்களில் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இதுவே மாரி செல்வராஜின் சிறந்த திரைப்படம் எனக் கூறுவதைக் காண முடிந்தது. இந்த விமர்சனப் போக்கு என்பது சாதிய சமூகத்தின் தந்திரத்தை வெளிக்காட்டுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ முதலான ‘திருப்பி அடிக்கும்’ கதாபாத்திரங்களை ஓரம் கட்டிவிட்டு, ’பொதுச்’ சமூகத்திடம் இறைஞ்சி, கெஞ்சும் தலித் நாயகர்களுக்கு மட்டுமே ஒரு பொது ஏற்பை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. கபிலன், கிட்டானைப் போல இருப்பதில்லை. ரஞ்சித்தின் எந்த நாயகனும் இவ்வாறு இல்லை என்பது அவரின் வாழ்க்கைப் பின்னணியின் தொடர்ச்சி எனப் புரிந்துகொள்ளலாம்.

அடுத்ததாக, ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த வெற்றியாளர்கள் பொதுவில் கலப்பதைக் குறித்த குறியீடுகள் கபிலன், கிட்டான் ஆகிய இருவரின் இறுதிப் போட்டிகளிலும் இருக்கின்றன. இருவரும் தன் தனித்த திறமையால் மட்டுமே சாதிய சமூகத்தின் படிநிலைகளையும் மீறி மேலே செல்கின்றனர். முதல் போட்டியில் ராமனைக் கபிலன் வெல்லும் போது, அது சாதிய சமூகத்தின் படிநிலையை மீறுவதாக அமைகிறது. இது கிட்டானுக்கு நிகழ்வதில்லை. பேருந்துப் பயணத்தில் யதேச்சையாக கிட்டானின் கிடா சிறுநீர் கழிப்பது தகராறில் முடிகிறது. கபிலனைப் போல அல்லாமல், கிட்டான் சாதிய படிநிலையை மீறாதவனாக இருக்கிறான். அவன் பொதுவில் எந்தவொரு அமைதியையும் சீர்குலைப்பதில்லை. எனினும், இருவரின் மீதும் சாதிய வன்கொடுமை நிகழ்த்தப்படுகிறது. கிட்டான் தான் தேர்ந்தெடுத்த அதே பாதையில் தொடர்ந்து பயணிக்கிறான். அவனது திறமை அவனுக்கான வாசல்களைத் திறக்கிறது. சாதிய மோதல்களின் இடையில் அழுக்கு படியாத வெள்ளைச் சட்டை அணிந்த பெரிய மனிதரின் உதவியால் வளர்கிறான். இறுதிப் போட்டிகளில் தனது அணியின் கேப்டன் (ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்) தன் பொறுப்பைப் பணயம் வைத்து கிட்டானின் வெற்றிக்கு உழைக்கிறார். கிட்டானும் வெல்கிறான். மறுபக்கம், கபிலனின் வாழ்க்கையே அரசியல் வன்முறைகளுக்கு இரையாகிறது; தன் உடலை இழக்கிறான்; சுயமரியாதையை இழக்கிறான். அனைவராலும் புறம் தள்ளப்படுகிறான். கபிலனின் போராட்டத்தில் அவன் குடும்பமும், நண்பர்களும் தவிர யாரும் உடனிருப்பதில்லை. கபிலனின் வெற்றியே அனைவரையும் ஒன்று சேர்க்கிறது. ‘புறக்கணிக்கவே முடியாத வெற்றி’ என்கிறான் ராமன். இவ்வாறான வேறுபட்ட பாதைகளில் ‘பொது’வில் கலக்கின்றனர் கபிலனும், கிட்டானும். இதில் கிட்டானுக்கு உதவியாக பல ‘நல்லவர்கள்’ இருக்கின்றனர்; அவன் சாதியம் விதித்த வரைமுறைகளை மீறுவதும் இல்லை. கபிலன் தன் வெற்றியைத் தானே பெறுகிறான். இந்த வேறுபாடுகளே இருவரையும் தனித்துக் காட்டுகின்றது.

கிட்டானின் ‘பொது’ ஏற்பு என்பது பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, அர்ஜூனா விருது பெறுவதாக இருக்கிறது. இது மணத்தி கணேசனின் கதையாகவே இருந்தாலும், ‘கர்ணன்’ இயக்கிய மாரி செல்வராஜ் அர்ஜூனா விருது என்பது இந்து கலாச்சாரத்தின் சின்னமாக இருப்பது குறித்த விமர்சனங்கள் ஏதுமின்றி இருப்பது பெரும் சமரசமாக இருக்கிறது. படத்தின் தலைப்பு முதல், பாகிஸ்தான் அணியை வீழ்த்துவது, அர்ஜூனா விருது பெறுவதை லட்சியமாக கட்டமைப்பது முதலானவை படத்தயாரிப்புக் குழுவினரின் சந்தைத் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட சமரசங்களாக தென்படுகின்றன. ’பைசன் காளமாடன்’ வெற்றி பெற்ற பிறகு அடுத்தடுத்த நாள்களில் வெளிவந்த போஸ்டர்களில் பின்னணியில் இந்தியக் கொடியோடு கிட்டான் மகிழ்வோடு இருப்பது, மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் சாதி, மதம் முதலான கற்பிதங்களை எதிர்க்கும் அதே வேளையில், ‘தேசிய ஏற்பு’ என்பதை இயல்பானதாக மாற்றுவதைக் குறிக்கின்றது. எதிர்காலத்தில் இது மாரி செல்வராஜ், த்ருவ் ஆகியோருக்கு தேசிய விருதுகள் பெற்றுத் தரலாம்.

கபிலனின் வாழ்க்கையில் இந்தியத் தேசியத்தின் கறுப்புப் பக்கங்களான அவசரநிலைப் பிரகடனம் ஓர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கபிலனின் வாத்தியார் ரங்கனும், திமுகவும் ஒற்றைத் தேசியத்திற்கு எதிரான, அதன் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மாநில சுயாட்சியை இலட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். இந்தியத் தேசியத்தின் மாநிலங்கள் மீதான அடக்குமுறை என்பதில் தொடங்கி, சாதியப் படிநிலையின் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் கபிலன் வரையிலான அடக்குமுறை வரை எவ்வாறு ஒருசேர இயங்குகின்றன என்பதைக் கபிலனின் வாழ்க்கை சுட்டிக்காட்டுகிறது.

இது ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகிய இருவரின் அரசியல் நிலைப்பாடுகளின் தன்மையை வெளிக்காட்டுகின்றன. ‘அமரன்’ வெளியான போது, ராணுவ உடையோடு வன்முறையில் ஈடுபடும் சிவகார்த்திகேயன் போஸ்டரைப் பகிர்ந்த மாரி செல்வராஜ் அந்தப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, ராணுவத்தின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் ’தண்டகாரண்யம்’ படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த அதன் தயாரிப்பாளர் ரஞ்சித், ‘அமரன்கள் செய்த அநீதிகளை பேசும் #தண்டகாரண்யம்’ என்று நேரடியாகவே விமர்சித்திருந்தார். இவை ஒரு தலித் கலைஞன் பொது ஏற்பைப் பெறுவதன் பொருட்டு பேசும் வெவ்வேறு முனைகளை நமக்குக் காட்டுகின்றன.

‘நீட்’ தேர்வை நாம் எதிர்த்தாலும், அதிலும் வென்று, தன் கனவை அடையும் மாணவர்களை நாம் பாராட்டுவதைப் போலவே, அர்ஜூனா விருது மீதான விமர்சனங்கள் இருந்தாலும், கிட்டானையும் பாராட்ட வேண்டும் என்று ஆறுதல்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இங்கு நிலவும் கட்டமைப்புகளுள், எது வெற்றி என்பதை ‘பொது’ தீர்மானிக்கும் போது, அதனையும் அடைவதே இந்த நீண்ட போராட்டத்தின் ஓர் பகுதியாக இருக்கிறது. எனினும், இதே படைப்பாளிகள் சாதியத்தின் வரைமுறைகளை மீறும் திரைப்படங்களை உருவாக்கும் போது அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவதும், சமரசம் செய்தால் மட்டுமே ஏற்போம் எனக் கூறுவதும் நம் சமூகத்தின் விமர்சன மரபில் எழுந்திருக்கும் சிக்கல். கபிலன், கிட்டான் ஆகிய இருவரும் வெவ்வேறு பாதைகளின் வழியாகத் தம் இலக்கை அடைகின்றனர். ஆனால் அந்தப் பாதைகள் நம் சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளை வெளிக்காட்டுகின்றன. இன்றைய சூழலில் இந்த இரண்டு பாதைகளுமே ஒடுக்கப்படும் கலைஞர்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு அவசியமாக இருக்கின்றன. அவர்களின் குரல்களை வலுப்படுத்துவதும் சாதிய சமூகத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும்.

  • ர. முகமது இல்யாஸ்

தமிழக அரசியல் களத்தில் மக்கள் திரட்சியின் பொருள் குறித்து சில சிந்தனைகள்…

1

கடந்த ஆகஸ்ட் 21 அன்று, மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. மாநாட்டின் படங்களில் மக்கள் கடலாக திரண்டிருந்ததும், முழக்கங்கள் இட்டதும், தவெக தலைவர் நடிகர் விஜய் ரேம்ப் வாக் செய்யும் போது அவரைத் தொட முயன்று ஏறியது, தூக்கியெறியப்பட்டது முதலான அனைத்து காட்சிகளும் பல்வேறு மக்கள் தரப்பினரையும் சென்று சேர்ந்திருக்கிறது; பேசுபொருளாகியிருக்கிறது. தவெக சார்பில் நடத்தப்பட்ட இரண்டாவது மாநில மாநாடு வழக்கமான அரசியல் கட்சி மாநாடுகளின் விதிமுறைகளுக்கு உட்படாமல் ஒரு பிரம்மாண்டமான அரசியல் கலாச்சார நிகழ்ச்சியைப் போல நடந்து முடிந்திருக்கிறது. சினிமாவுக்கும், அரசியலுக்கு இடையிலான வேறுபாட்டைக் களைந்ததோடு, அரசியல் களத்திற்குள் அதீத பலம்மிக்க நாயக வழிபாட்டு முறையையும், அதனால் நிகழும் மக்கள் திரட்சியையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தவெக மாநாட்டில் கூடிய இளைஞர்களை ‘முட்டாள் ரசிகர்கள்’, ‘தற்குறிகள்’ என ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்கள் லேபிள் செய்து வருகின்றனர். இது மேலோட்டமான புரிதலாக மட்டுமின்றி, கட்டமைப்பு ரீதியான யதார்த்தங்களை நிராகரிக்கும் நிலைப்பாடாக இருக்கிறது. மதுரையில் தவெக மாநாட்டில் கூடிய இளைஞர் கூட்டம் என்பது திராவிட அரசியல் பொருளாதாரத்தின் கீழ் வாழும் ஓர் பெருங்கூட்டம்; அது காலந்தோறும் அரசியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளதோடு, நவதாராளவாதத்தின் ஒழுங்கின் கீழ், அரசியலற்ற குடிமக்களாக இயங்கி வருபவர்கள் என்ற கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும்.

நடிகர் விஜய் மீதான இத்தகைய பிம்பக் கட்டமைப்பைத் தனியாக ஆராய முடியாது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குக் கூடும் கூட்டங்களும் இத்தகைய கலாச்சார, பொருளியல் சூழல்களில் இருந்தே உற்பத்தி ஆகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பது, நவீனத் தேர்தல் அரசியலின் சடங்குகளைச் செய்வது, ‘ஒரு தலைவர்’ என்ற ஒற்றைப் பிம்பத்தின் பின்னால் இருக்கும் பிரம்மாண்டக் கூட்டங்களைக் காட்டி, வெகுமக்கள் ஒத்திசைவைப் பெறுவது முதலானவற்றின் மூலமாக, அரசியல் தன்மைகளை அழகியலாக்கும் முயற்சிகள் தமிழக அரசியல் சூழலின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியிருக்கின்றன. இந்தக் கூறுகளை முன்வைத்தே, காட்சிகளால் நிரம்பியிருக்கும் சமகால தமிழ் ஊடகச் சூழலின் அரசியல் மாநாடுகளும், தலைவர்களின் புகழ்பாடும் பாடல்களும் உருவாக்கப்படுகின்றன. இதன் பொருள், திமுகவுக்குக் கூடும் கூட்டமும், தவெகவுக்குக் கூடிய கூட்டமும் ஒன்று எனக் குறிப்பிடுவதல்ல. மாறாக, அரசியல் என்ற பெயரில் அரசியல் நீக்கம் மேற்கொள்ளப்பட்டு, ’குடிமகன்’ என்ற நவீனத் தேசிய கருத்தாக்கம், ரசிகன், கட்சிக்காரன், பார்வையாளன் எனச் சுருக்கப்பட்டு, தேர்தல் என்பது போருக்கு நிகரான ஒன்றாக மாற்றுவதாக அமைகிறது.

விஜய்க்குப் பின்னால் நிகழும் மக்கள் திரட்சியை வெறும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தொடர்ச்சியாக சுருக்குவது, சமகால நவதாராளமயத் தமிழ்ச் சூழலில் யதார்த்தங்களைப் புறந்தள்ளும் பார்வை. நவீன காலத்தில் ஒருபக்கம் தனிமனிதன் தொடர்ந்து உழைப்பில் ஈடுபடுவதும், மறுபக்கம் வெகுஜனத் திரட்சி ஏற்படுவதும் ஒரே தொடர்நிகழ்வின் பகுதி எனக் கூறும் வால்டர் பெஞ்சமின், பாசிசம் என்பது இத்தகைய புதிதாக உழைப்புச் சக்தியில் இணைந்த மனிதர்களுக்கு அவர்தம் நீக்க விரும்பும் வேறுபாடுகளைக் களையாமல், குறிப்பாக தனியுடைமையைக் களையாமல், வெகுமக்கள் திரள வழிசெய்கிறது. இங்கு உண்மையான பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசியலில் அழகியல் கூறுகள் இடம்பெறச் செய்யப்படுகின்றன. சினிமாவைப் போல, அரசியல்வாதிகளுக்கும் தற்காலத்தில் பின்னணி இசை, மாஸ் என்ட்ரீ, ramp walk முதலானவை சேர்க்கப்படுவது இத்தகைய தனிநபர் வழிபாட்டை முன்வைத்துதான் எனப் புரிந்துகொள்ளலாம். இத்தகைய வழிபாட்டை வால்டர் பெஞ்சமின் பாசிசத்தின் தர்க்க ரீதியான முடிவு எனக் கொள்கிறார்.

திமுகவோ, தவெகவோ பாசிஸ்ட் கட்சிகள் என்று இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, இந்தக் கட்சிகளின் கட்டமைப்புகள் சினிமா, ஊடக நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள், பிற காட்சி ஊடகங்கள் முதலானவற்றின் வழியாக, நாயக பிம்பத்தின் பின்னால் திரள் வைக்கின்றன; அதே வேளையில், பொருளாதாரக் கட்டமைப்புகளையும், அவை உருவாக்கும் சமத்துவமின்மையையும் பாதுகாக்கின்றன. ஆதலால், இங்கு தேர்தல் என்பது ‘சிங்கம்’, ‘படைவீரன்’, ‘போர்’, ‘வேட்டை’ முதலான சொற்களோடு தொடர்புபடுத்தப்பட்டு, மக்கள் இந்த பிரம்மாண்டங்களின் ஓர் பகுதியாக மாறிவிடுகின்றனர். அவர்களின் உடல்களின் எண்ணிக்கையும், வாக்குகளும் இந்த பிரம்மாண்டத்தின் இடையில் மறைந்துவிடுவதோடு, அவர்களின் அசலான பிரச்னைகளும் மறக்கடிக்கப்படுகின்றன.

இந்தக் கட்டுரையின் நோக்கம் திமுக, தவெக ஆகிய கட்சிகளின் தொண்டர்களைக் கண்டிப்பதோ, கேலி செய்வதோ அல்ல. மாறாக அவர்களின் இருப்பை நவதாராளமய திராவிட அரசியல் சூழலுக்குள் பொருத்துவது, அவர்களை சமகால அரசியல் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக அணுகுவது என்பதோடு, தவெக மாநாட்டின் ‘முட்டாள்’ கூட்டம் என்பது அழகியலுக்காக ஜனநாயகத்தை பலிகொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலின் விளைபொருள் என வாதாடுவது இதன் நோக்கம்.

2

திராவிட அரசியலும், மக்கள் திரளும் பிரிக்க முடியாதவை. 1950களில் இருந்து, திமுகவும், தொடர்ந்து 1970களில் இருந்து அதிமுகவும் சாமான்ய மனிதர்களின் உடல்களின் திரட்சியைத் தேர்தல் அரசியலில் தம்மை மக்கள் பிரதிநிதிகளாக நிறுவிக் கொள்ள பயன்படுத்தி வருகின்றன. இதில் சினிமா என்ற நவீன ஊடகத்தின் பங்கு அளப்பரியது. மக்கள் பேரணிகள், மேடை நிகழ்ச்சிகள், தலைவர்களின் நாயக பாணியிலான வரவேற்புகள் முதலானவற்றிற்கான காட்சிகளின் இலக்கணத்தை சினிமா ஒருபக்கம் உருவாக்க, தமிழ்ச் சூழலில் அவை இணைந்து இயங்குவதால், அரசியல் தளத்திலும் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இது கருத்தியலால் ஈர்க்கப்பட்ட மனிதர்களின் திரள் என்பதில் இருந்து விலகி, காலப்போக்கில் ஒற்றைத் தலைவர் பிம்பத்தின் பின்னால் திரண்ட பிரம்மாண்டக் கூட்டம் என்பதாக மாறியிருக்கிறது. இது சமகாலத்தில் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க பயன்படுவதாக இயங்குகிறது.

இந்தப் பிரம்மாண்டக் கூட்டங்களின் காட்சியமைப்புகளின் வழியாக, நலத்திட்டங்களையும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் பிரசாரப்படுத்தப்படும் ‘திராவிட மாடல்’ என்பது உயிர்ப்புடன் இயங்குகிறது. ஒரு அரசு தான் சேவை செய்யப் போவதாகச் சுட்டிக்காட்டும் ‘குடிமக்கள்’ என்பதற்கு சான்றாக, இந்த மக்கள் திரள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரம்மாண்ட திரட்சிக்குப் பின்னால் பொது மக்களின் வளங்கள், அந்தந்த இடங்களுக்குரிய செல்வாக்கு படைத்த புரவலர்கள், பணம் முதலானவற்றிற்குப் பெரும் பங்குண்டு. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் மாநாடுகளில் வெளிப்படையாகவே பணம் கொடுக்கப்பட்டு, கொடி பிடித்து வரும் மனிதர்களைக் காண முடியும். தவெகவைப் பொருத்த வரையில், நட்சத்திர நடிகரின் மீதான அளவுகடந்த விசுவாசத்தின் அடிப்படையில் ரசிகர்களின் உழைப்பால் மாநாடு நடத்தப்படுகிறது. திமுகவின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, அரசியலும், இலக்கியத் தமிழும் ஓரளவு மேடைகளில் நீர்த்துப் போன அளவிலாவது இடம்பெறுகின்றன. தவெகவின் உருவாக்கம் என்பது நவதாராளவாத திராவிட அரசியலின் நீர்த்துப் போன உச்சகட்ட வடிவமாக, மக்கள் ஆதரவு பெறுவதாக மாறியிருக்கிறது.

இரண்டு விதமான மாநாடுகளிலும், அரசியலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட கூட்டப்பட்டிருக்கும் மக்கள் திரளின் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ஒரு தலைவர், அவரைப் புகழ பிற துணைத் தலைவர்கள், பஞ்ச் டைலாக் கொண்ட பேச்சுகள், Thug Life சொல்ல வைக்கும் பாணியிலான counterகள் ஆகியவை கடந்த சட்டமன்றத் தேர்தல்களின் மக்கள் தொடர்பு உத்திகளாக இருந்தன. திமுகவின் இந்த பாணியிலான உத்தியின் அடுத்தகட்ட பரிணாமமாக இயங்குகிறது தவெகவின் மாநாட்டுப் பாணி. முன்பு, சமூக நீதியின் பெயராலும், மொழியுரிமையின் பெயராலும் கிளர்ந்தெழுந்த மக்கள் கூட்டம் இன்றும் கட்சிகளின் சடங்குகளுக்கான பிரம்மாண்டப் பொருளாக மாறியிருக்கிறது. கூட்டங்களின் பிரம்மாண்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், அவற்றை உருவாக்கும் ஒவ்வொரு தனிநபரின் அரசியல் நிலைப்பாடும் அரசியல் நீக்கம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

3

திமுக, அதிமுக ஆகியவற்றின் கூட்டங்களுக்குப் பின்னால் பணம், செல்வாக்கு, கட்சியின் கட்டமைப்பு முதலான பல காரணங்கள் இருக்கின்றன. அதே வேளையில், தவெகவின் கூட்டங்கள் ரசிகத்தன்மையால் இயங்குபவை. ஒரு திரைப்பட வெளியீட்டு நாளின் விழாக்கோலத்தைப் போல, ஒரு வழக்கமான இசை வெளியீட்டு நிகழ்ச்சியைப் போல தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. பணம், மது, பிரியாணி ஆகியவை கொடுக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக வாகனங்களில் அழைத்து வரப்படும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைப் போல அல்லாமல், நாயக பிம்பத்தை நோக்கி சொந்த செலவில், உழைப்பில் கூடியிருக்கிறது தவெகவின் கூட்டம். இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்பது அரசியலை மாற்றுவது என்பதாக அல்லாமல், நேரடியாகவே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வந்திருக்கும் பார்வையாளர்களைப் போலவே இயங்கியது. இங்கு விஜய் ஹீரோ என்பதில் இருந்து நகர்ந்து ‘தலைவர்’ என்ற இடத்திற்கு வந்திருக்கிறார்; அவரது அரசியல் வில்லன்களை நோக்கி வசனங்களைப் பேசியிருக்கிறார்; புதிதாக கட்சித் தொண்டர்களாக மாற்றப்பட்டிருக்கும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். சினிமா மூலமாக விஜய் உற்பத்தி செய்திருக்கும் நாயக பிம்பம் அவரது முதன்மை மூலதனமாக மக்களைத் திரட்ட வழி செய்திருக்கிறது. விஜய் என்ற வெற்றிகரமான திரை நடிகரின் வாழ்க்கை கதையில் இந்த மக்கள் திரள் அவரை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரித்ததற்கான சான்றாக மாறுகின்றன. அவை தமிழக அரசியல் களத்திலும், தொடர்ந்து வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற வைக்கின்றன.

மறுபக்கம், திமுகவின் மாநாடுகளின் கூட்டங்கள், சாதிக் குழுக்களின் விசுவாசம், உள்ளூர் அமைச்சர்களின் செல்வாக்கு முதலானவற்றை நிரூபிக்கும் இடங்களாகவும் செயல்படுகின்றன. தவெக தொண்டர்களைப் போல ரசிக உணர்ச்சி மிகுந்த கூட்டமாக அல்லாமல், அரசியல் ஆதரவு, அனுதாபம் ஆகிய உணர்வுகளால் கூடுபவர்கள் இருந்தாலும், பெரும்பாலும் பணம் கொடுக்கப்பட்டு, கூட்டம், கூட்டமாக அழைத்து வரப்படுகின்றன. இங்கு கூட்டப்படும் மக்கள் திரளின் பணி, தவெக மாநாட்டைப் போல, வெறும் நாயக வழிபாடாக சுருங்கவதில்லை. மாறாக, இந்த மக்கள் திரள் திமுகவில் நிகழும் வாரிசு அரசியலை பொதுவெளியில் ஆட்சேபனையின்றி செல்லுபடியாக்கச் செய்கின்றது.

வாரிசு அரசியல் நாடகத்தில் ஒரு பின்னணி அலங்காரப் பொருளாக இந்த மக்கள் திரள் செயல்படுகின்றது. கலைஞர் கருணாநிதியின் மரபை நிரூபிப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கூட்டங்கள் இருந்த காலம் தாண்டி, மக்களாட்சியில் வாரிசு அரசியலை அதிகாரப்பூர்வமானதாக, இயற்கையானதாக மாற்றும் கூட்டங்களாக மாறியிருக்கின்றன துணை முதல்வர் உதயநிதியின் கூட்டங்கள். இத்தகைய மக்கள் திரள்களின் வழியாக, ஒரு பொது ஏற்பை, வாரிசுகள் மீதான ஆட்சேபனைகள் இல்லாத பண்பை உற்பத்தி செய்கின்றன. இது கட்சியின் அடிமட்டத்தில் இருந்து மேலிருக்கும் மூத்த நிர்வாகிகள் வரை, மேலிருந்து கீழ் அடிமட்டம் வரையிலும் பண்பு மாற்றங்களை உற்பத்தி செய்கின்றது. இதன் தொடர்ச்சிதான், நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் ஒலித்த ‘சின்னவர் உதயநிதி வாழ்க’ என்ற குரல்கள். அவை அரசியல் முதிர்ச்சியடையாத வாரிசுத் தலைவர்களை ஒற்றை நம்பிக்கையாக மாற்றுவதோடு, தனிநபர் வழிபாட்டை முன்வைத்து, அரசியல் தீர்வுகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. திமுகவின் நிறுவனமயப்பட்டிருக்கும் வாரிசு அரசியல் இவ்வாறு பொது ஏற்பைப் பெற மக்கள் திரளைப் பயன்படுத்தும்போது, தவெகவில் அது ஏற்கனவே உருவாகியிருப்பதன் தொடர்ச்சியாக நிகழ்கின்றது.

திமுக, தவெக ஆகிய இரண்டு கட்சிகளிலும் தலைவர் புகழ்பாடும் பாடல்களில் பல்வேறு ஒற்றுமைகள் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டிலும் துயரோடு இருக்கும் மக்கள் திரளை நோக்கி, மாளிகைகளில் இருந்து தலைவர் வருகிறார் என்ற பொருள்படும் அம்சங்கள், பெருந்தலைவர்களின் தொடர்ச்சியாகவும் மரபாகவும் சித்தரிக்கப்படும் தலைவர், மக்களின் பிரதிநிதியாகக் காட்சிப்படுத்தவதோடு மதச்சார்பின்மை என்பதையும் முக்கியமான ஒன்றாக முன்வைக்கின்றன இந்தக் கட்சிகளின் தலைவர் பாடல்கள். இத்தகைய ஒற்றுமைகளின் விளைவாக, இந்தப் பாடல்கள் அந்தந்தக் கட்சிகளின் தன்மையை விளக்குகின்றன. தனிநபர் வழிபாட்டை அதீதமாக முன்வைக்கின்றன. அதன் மூலமாக, ஜனநாயக விழுமியங்களைச் சுரண்டுகின்றன. இந்தத் தனிநபர் வழிபாட்டை வலிமைப்படுத்தவே மாநாடுகளின் மக்கள் திரள் சமகாலத்தில் பயன்படுகின்றது.

இந்த ஒப்பீட்டில், எடப்பாடி பழனிசாமி போன்ற வெகுமக்கள் கவர்ச்சியில்லாத தலைவர்களை உள்ளடக்கவில்லை. விஜய், ஸ்டாலின், உதயநிதி போன்றோருக்குக் காலப்போக்கில் அத்தகைய கவர்ச்சி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவை கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக அல்லாமல், பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக உற்பத்தி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மேலும், இந்த மக்கள் திரள் இல்லாமல் இருப்பது, அதன் தொடர்ச்சியாக நாற்காலிகள் காலியாக இருப்பது, வட இந்தியத் தொழிலாளிகளை வைத்துக் கூட்டம் சேர்ப்பது முதலானவற்றை தமிழக பிஜேபி மேற்கொண்டு வருவதாலும் அதனை இங்கே சேர்க்கவில்லை. ஆனால், தமிழக பிஜேபியில் இத்தகைய நடவடிக்கைகளும், தொடர்ந்து அதனால் அவர்கள் மீது உருவாகும் கேலிப் பார்வையும் மக்கள் கூட்டம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, மக்கள் பெருமளவில் திரள்வதால் உருவாகும் கலாச்சாரப் பொருளையும் வெளிப்படுத்துகின்றது.

4

ஒரு திரை நட்சத்திரம் என்பது திரைக்கு உள்ளும், வெளியிலும் நிகழும் பல்வேறு நிகழ்வுகளின் வழியாக தனது சமூக, கலாச்சாரப் பொருளை (Cultural Meaning) அடைகிறது. மேலும், விஜய், ரஜினி போன்ற தனிநபர்கள் காலப்போக்கில் தங்கள் சினிமா உழைப்பின் வழியாக தங்களுக்கான ஒரு இமேஜை உருவாக்குகின்றனர். இந்த இமேஜ் நவதாராளமயத்தின் காலகட்டத்தில் சினிமா துறையில் பொருளாதாரத்தை ஈர்ப்பதாக அமைகிறது. திரை நட்சத்திரங்கள் பற்றிய முதன்மை ஆய்வுகளை மேற்கொண்ட ரிச்சர்ட் டையர், அவர்களின் உழைப்பை மார்க்சியப் பார்வையில் ’உறைய வைக்கப்பட்டிருக்கும் உழைப்பு’ (Congealed Labour) என்கிறார். காலப்போக்கில் உழைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இமேஜ் மீது, மற்றொரு மூலதனத்தால் விளைந்த திரைக்கதை, இயக்கம், பின்னணி இசை, தயாரிப்பு, பிற நடிகர்களின் நடிப்பு, பிரம்மாண்ட செட்கள் முதலானவை இணையும்போது, அது சமகாலத்தின் ‘ஸ்டார் திரைப்படமாக’ உருவாகிறது. ஆக, உச்ச நடிகரின் நட்சத்திரத் தன்மை, காலப்போக்கில் அவர் உருவாக்கிக்கொண்ட இமேஜ் ஆகியவை ஒரு முதலீடாகவும், அதன் மீது தயாரிப்பாளர்களின் முதலீடு மற்றொரு மூலதனமாகவும் இணைந்து ஒரு திரைப்படம் உருவாகிறது. நட்சத்திர நடிகருக்கு அதன் மூலம் சம்பளமாகவும், தயாரிப்பாளருக்கு லாபமாகவும் பணம் பெருக்கப்படுகிறது.

தமிழ்ச் சூழலில் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களுள் பலவற்றை திராவிடக் கட்சிகளோடு தொடர்புடைய தனிநபர்கள் தயாரிப்பாளர்களாக இருந்து முதலீடு செய்திருக்கின்றனர். துணை முதல்வர் உதயநிதியே விஜய் திரைப்படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்; விநியோகமும் செய்திருக்கிறார். ஆக, விஜய் என்ற உச்ச நட்சத்திரம் தனது புகழையும் பணத்தையும் பெருக்க திராவிடக் கட்சிகள் அதிகாரத்தால் சேர்த்த சொத்து பயன்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் அதிகாரத்தில் இருந்த தனிநபர்கள் தங்கள் சொத்துகளைப் பெருக்கிக்கொள்ள, விஜய் என்ற உச்ச நடிகரின் புகழும், திரையில் நடிப்பும் பயன்பட்டிருக்கிறது. அரசியலோடு தொடர்புடைய இந்தத் தனிநபர்கள் தம் லாபத்தைப் பெருக்கும்போது, இன்று தாம் ‘தற்குறி’ என்று விமர்சிக்கும் இதே ரசிகர்களைத்தான் நம்பியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும், இதனை ஊக்குவித்தது இன்றைய சூழலில் அவர்களுக்கே பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

எம்ஜிஆர் காலத்தைப் போல அல்லாமல், தற்போதைய நவதாராளமய சூழலில், பெரும்பாலான இளைஞர்கள் கல்வியறிவு பெற்றிருக்கும்போது, இத்தகைய நடிகர்கள் அரசியலில் பெரும் ஆதரவு பெறுவது ஆபத்தான போக்காகத் தெரிந்தாலும், இது கட்சி வேறுபாடின்றி, சினிமா என்பதே அரசியலுக்கான திறவுகோலாக மாற்றப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. பகுத்தறிவுடன் வழங்கப்படும் கல்வி என்பது மாணவர்களைச் சிந்திப்பவர்களாக மாற்றியிருக்க வேண்டும். எனினும், அவை தனிநபர் வழிபாட்டின் பூசாரிகளாக சமகால இளைஞர்களை மாற்றியிருக்கிறது. தவெக கொடியுடன் விஜயின் ரேம்ப் வாக்கை மறித்து மேலே ஏறிய இளைஞர்களாக இருந்தாலும் சரி, உதயநிதி படத்தை வெள்ளைச் சட்டை பாக்கெட்டில் வைத்து ‘அரசியல்’ அரிதாரம் பூசிக்கொண்ட இளைஞர்களாக இருந்தாலும் சரி, இரு தரப்பினருமே விதிவிலக்கல்ல. நவதாரளமயக் கல்வி என்பது சமகால இளைஞர்களுக்குத் தொழில்நுட்ப அறிவை வழங்கியிருந்தாலும், அது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சில தலைமுறைகளை உருவாக்கியிருக்கிறது. தவெக மாநாட்டில் கூடிய இளைஞர்களை திராவிட அரசியலின் விளைபொருள்கள் என அழைப்பது மிகையாகாது. விஜய்க்குக் கூடும் மக்கள் கூட்டமும், உதயநிதிக்குக் கூட்டப்படும் மக்கள் கூட்டமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அவை காலப்போக்கில் நிகழ்ந்த அரசியல் நீக்கச் செயல்பாடுகளால் விளைந்தவை.

சமீபத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகளிடையே பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடையே ‘விசில் அடிக்கக் கூடாது!’ முதலான கவர்ச்சிகர அரசியல் பண்புகளைக் கைவிடக் கோரி பேசியதோடு, தாம் கொள்கைக் கட்சி என்று நினைவுகூரச் செய்தார். இதன்மூலமாக, திமுக தொண்டருக்கும் தவெக தொண்டருக்கும் இடையிலான வேறுபாட்டை அவர் உருவாக்க முயன்றிருப்பது ஆரோக்கியமான அரசியல் போக்கு. அதே வேளையில், இளைஞரணி என்பதன் பணி, கட்சியின் பிரச்சாரக் கண்ணோட்டத்தில் மட்டுமே இயங்காமல், இளைஞர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தோ, சாதி குறித்தோ, விஜய் தரப்பிடம் திமுக பத்திரிகையாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கான பதிலோ செயல்திட்டமோ இல்லாமல் இருப்பதையும் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதன் விளைவாகவே அணுக வேண்டும்.

திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் மாநாடுகளில் இடம்பெறும் மக்கள் திரட்சி என்பது அக்கட்சிகளின் குறியீட்டு மூலதனமாக இயங்கி, அவர்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வ பொது ஏற்பு இருப்பதாகக் கதையாடல்களை உற்பத்தி செய்கின்றது. அவர்களை ‘முட்டாள்கள்’ எனப் புறந்தள்ளுவது, திராவிட அரசியல் சமூக, பொருளாதாரச் சூழலை விலக்கிப் பேசுவதாகும். இதனைத் தீவிரமாக கணக்கில் கொள்வது என்பது, தமிழக அரசியலின் காட்சியமைப்புகளும், உணர்வுகளும், மக்களின் உடல்களும் எவ்வாறு அரசியல் களத்தின் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பதை விளக்கும்.

  • ர. முகமது இல்யாஸ்.

‘கூலி!’ – ஒரு புரட்சிகர சொல்லை அரசியல் நீக்கம் செய்தல் – ர. முகமது இல்யாஸ்

ஒரு காலம் இருந்தது. ‘கூலி’ என்ற சொல் தொழிலாளர் ஒற்றுமை, வியர்வை, வர்க்கப் போராட்டம் முதலானவற்றைத் தாங்கியிருந்த காலம் அது. உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக உரிமைகளைக் கேட்கும் குரல்களைக் குறிக்கும் சொல்லாக இருந்த ‘கூலி’, எண்பதுகளின் இந்திய சினிமாவின் முதன்மை ஹீரோக்களுக்கான அடையாளமாக இருந்தது. அமிதாப் பச்சன் நடித்த ‘கூலி’ (1983) மட்டுமின்றி, அவர் ஏற்று நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் அன்றைய இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பையும், இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் அவர்களை ஏமாற்றியதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அமிதாப் பச்சனின் பெரும்பாலான திரைப்படங்களைத் தமிழில் ரீமேக் செய்து, அதே போன்றவொரு இமேஜைக் கட்டியெழுப்பியவர் ரஜினிகாந்த். ‘முள்ளும் மலரும்’, ‘தீ’, ‘உழைப்பாளி’, ’மன்னன்’ முதலான பல்வேறு திரைப்படங்களில் சாமான்ய தொழிலாளர்களின் குரலாக ஒலித்திருப்பார் ரஜினி.

’கூலி’ (2025) தற்போது வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்திருப்பதோடு, பல கோடிகள் மூலதனமாகக் கொட்டப்பட்டும் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ரஜினியின் ‘தொழிலாளி’ இமேஜ் என்பது வெறும் நாஸ்டால்ஜியாவுக்காகவும், ரஜினியைப் பார்த்து, ரசித்து வளர்ந்திருக்கும் சமகால இளைய தலைமுறையின் பொழுதுபோக்கு நேரத்தை டிக்கெட் கட்டணத்தின் வடிவில் சுரண்டுவதற்காகவும் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ’கூலி’ என்ற சொல் அன்றாடம் உழைக்கும் ஒரு தொழிலாளியிடம் இருந்து திருடப்பட்டு, அதன் உழைப்புச் சக்தி தூக்கியெறியப்பட்டு, அரசியல் பண்பு முழுவதுமாக நீக்கப்பட்டு, கேளிக்கை சந்தையில் ரஜினியின் பெயரால் விற்பனை செய்யப்படும் ஒரு விளைபொருளாக மாறியிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றம், வெறும் ஒரு சொல்லுக்கு மட்டுமே நிகழ்ந்திருப்பதாக சுருக்கிவிட முடியாது; இது திராவிட நிலத்தின் சினிமா, அரசியல் முதலானவை உருமாறியிருப்பதையும், நவதாரளமய காலத்தில் உழைக்கும் வர்க்கத்தின் சின்னங்கள் சந்தைப் பொருள்களாக மாற்றப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றது.

இந்திய சினிமா வரலாற்றில் எண்பதுகளுக்கு அதிமுக்கிய இடமுண்டு. ‘Angry Young Man’ திரைப்படங்கள் என்று அழைக்கப்பட்ட அமிதாப் பச்சன் படங்கள் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியாவில் பிரித்தானிய அரசு வெளியேறி, அதிகாரப் பரிமாற்றம் ஏற்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த வளர்ச்சியும் அடையாத கோபத்தை வெளிப்படுத்தும் ஹீரோவின் முகமாக உயர்ந்தார் அமிதாப் பச்சன். தமிழ்நாட்டில் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஜிஆரின் ஆட்சியிலும் மக்கள் நினைத்த வளர்ச்சியை அடையவில்லை என்பதால், அமிதாப் பச்சனின் தமிழ் ரீமேக் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. ரஜினியின் பெரும்பாலான தொடக்க கால வெற்றித் திரைப்படங்கள் அமிதாப் பச்சனின் திரைப்படங்கள் தாம். இந்தப் பின்னணியில் உருவானது தான் ‘கூலி’ என்னும் ஹீரோயிச வகையினம். சிவப்பு அல்லது நீலம் முதலான வண்ணங்கள் தாங்கிய உடை, எண் பொறிக்கப்பட்ட பேட்ஜ் போன்ற அலங்காரங்களுடன் தோற்றம் கொண்ட கூலி நாயகன், அன்றைய காலகட்டத்தின் நிறுவனமயப்பட்ட சமூகத் தோல்வியின் சின்னமாக இருந்தான்; அவனது கோபம் உழைப்புச் சுரண்டலுக்கும், ஊழலுக்கும் எதிராக இருந்தது. தொழிற்சங்கத்தின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்ட கூலி ஹீரோவின் வசனங்கள் திரையைத் தாண்டி, அன்றாடம் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்தன. இதன் பொருள், Angry Young Man திரைப்படங்கள் பெரியளவிலான புரட்சிகர அரசியல் பேசிய திரைப்படங்கள் என்பதல்ல; மாறாக, மக்களின் குரல்களை, ஏக்கங்களைத் திரையில் பிரதிபலித்தவை என்பது. இந்த நாயக பிம்பம் இன்று ஒரு நடிகரின் திரைப்படத்தை விற்பனை செய்வதற்கான நாஸ்டால்ஜியாவுக்காக பயன்படுத்த சுருக்கப்பட்டிருக்கிறது.

முன்பு ரஜினி அணிந்திருந்த கூலி சீருடையை தற்போது மீண்டும் அணிந்திருக்கிறார். ஆனால் அதில் இருந்து தொழிற்சங்கங்களும், இடதுசாரி அரசியலும், முழக்கங்களும், இன்னமும் சொல்லப் போனால் உழைப்பாளியின் வியர்வையும் கூட நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ‘தீ’ படத்தில் ரஜினியின் கூலி எண்ணாக ‘786’ கொடுக்கப்பட்டிருக்கும்; அது அப்போதைய காலகட்டத்தின் மத நல்லுறவின் பிரதிபலிப்பாகவும் இருந்தது. தற்போதைய ‘கூலி’ எல்லா விதமான அரசியல் குறியீடுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.

மக்களிடையே வர்க்கப் போராட்டங்கள் குறித்து பேசுவதோ, அதுகுறித்த சிந்தனையோ இல்லாமல், ‘கூலி’ ஒரு சந்தைப் பொருளாக மாறி, ரஜினிகாந்த் என்னும் மற்றொரு சந்தைப் பொருளின் வழியாக, தன்னை ஒரு நாஸ்டால்ஜியாவை உற்பத்தி செய்து, சுமார் மூன்று மணி நேரக் கேளிக்கையை உறுதிசெய்வதாகவே தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. நவதாரளமயக் காலகட்டத்தில் தமிழ் சினிமா அடைந்திருக்கும் பரிணாமத்தை இவை நமக்கு உணர்த்துகின்றன. ’கூலி’ என்ற சொல்லை, ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இருவரும் திரைப்பிரதிக்குள் அரசியல் நீக்கம் செய்திருக்கிறார்கள் என்றால், மறுபக்கம், திரைக்கு வெளியில், இந்தத் திரைப்படத்தோடு தம்மை தொடர்புபடுத்தி, அதே அரசியல் நீக்கப் பணியைச் செய்திருப்பவர்கள், தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும்.

சுமார் 13 நாள்களாக, சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கு வெளியில் ஏறத்தாழ 1000 தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்திரம் கோரியும், தனியார்மய எதிர்ப்பையும் முன்வைத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். ஒரே இரவில் அவர்களை காவல்துறையினரை வைத்து பலவந்தமாக அப்புறப்படுத்தியிருக்கிறது திமுக அரசு. பொதுத் துறையைத் தனியார்மயப்படுத்துவது, ஆபத்தான சூழல்களின் பணி மேற்கொள்வது, தொழிலாளர் சட்ட உரிமைகளைப் படிப்படியாக இழப்பது முதலானவற்றை மையமாகக் கொண்டு இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில், சென்னை மாநகரத்தின் தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் எதிரிகளைப் போல தூக்கியெறிந்து கொண்டிருந்த போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கூலி’ திரைப்படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம், 13 நாள்களாக தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் பக்கமே போகாத துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ’கூலி’ படத்தின் முதல் விமர்சனத்தைப் பதிவிட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார். இது நாம் வாழும் காலத்தின் முரணை உரக்கச் சொல்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்டு திரையில் வெளிவரும் ‘கூலி’ அரசு ஆதரவைப் பெறும் அதே வேளையில், உரிமைக்காகக் குரல் கொடுக்கும் உண்மையான ‘கூலிகள்’ மீது காவல்துறை நடவடிக்கை பாய்கிறது.

முன்பு குறிப்பிட்டதைப் போல, ஒரு காலத்தில் ‘கூலி’ என்ற சொல் கடுமையாக சுரண்டப்பட்ட உழைப்பாளியின் பலத்தையும், போராட்ட குணத்தையும் குறித்தது. ஒருவரைக் ‘கூலி’ எனச் சுட்டுவது, அவரது உழைப்பையும், வர்க்கப் போராட்ட மனநிலையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. இன்று சந்தையை இழந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவரின் மிச்ச சொச்ச சந்தை மதிப்பையும் லாபமாக மாற்றுவதற்கான கருவியாக இந்த சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ‘கூலி’ என்ற போஸ்டர் இருக்கும் பெரும்பாலான மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களில் லுங்கி அணியும் உண்மையான கூலிக்களுக்கு அனுமதியில்லை. ’கூலி’ படத்தில் ரஜினி மீண்டும் கூலி சீருடை அணிந்திருக்கிறார் என்றாலும், அந்த சீருடையில் முன்பிருந்த அரசியல் இன்றில்லை; முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் நீக்கச் செயல்பாட்டில் அரசியல் இல்லாமல் இல்லை.

ஒரு அரசும், அதில் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் பதவியேற்றிருப்பவர்களும் நிஜமான கூலிகளின் போராட்டத்தை ஒடுக்கிவிட்டு, மறுபக்கம் ‘கூலி’ என்ற திரைப்படத்திற்காக விளம்பரம் செய்வதே, ஒரு நவதாரளவாத அரசு எப்படிப்பட்ட தொழிலாளர் அரசியலைப் பொறுத்துக் கொள்ளும் என்பதை உணர்த்தும் செய்தியாக அளிக்கிறது. மக்கள் போராட்டங்களின் குறியீடுகளை விற்பனைப் பொருள்களாக மாற்றுவதும், மக்கள் போராட்டங்களை நசுக்குவதும் நவதாராளமயக் காலத்தின் கலாச்சார உற்பத்தியின் மூலக்கூறாக மாறியிருக்கிறது. திராவிட மூலதனமும், அதனைப் பாதுகாக்கும் முயற்சிகளும், இந்த இரண்டு வெவ்வேறு ‘கூலி’ தரப்புகளிடம் இருப்பதை மனதில் கொண்டு, இந்த விவரங்களைக் கணக்கிட வேண்டும்.

  • ர. முகமது இல்யாஸ்.

தேவர் மகள் – முத்தையாவின் நாயகிகள் பற்றிய சில குறிப்புகள்! – ர. முகமது இல்யாஸ்

சமகால தமிழ் சினிமாவில் தேவர் சமூகத்தின் கதையாடல்களை வன்முறையோடும், பெருமிதத்தோடும் முன்வைக்கும் படைப்பாளிகளுள் முக்கியமானவர் முத்தையா. ’குட்டிப் புலி’ தொடங்கி, ‘கொம்பன்’, ‘மருது’, ‘தேவராட்டம்’, ’விருமன்’ முதலான அவரது அனைத்து திரைப்படங்களும் சாதியப் பெருமிதக் குறியீடுகளாலும், சாதியக் கட்டமைப்பை வீரம் பொருந்திய கலாச்சாரமாக சித்தரிக்கும் காட்சியமைப்புகளாலும் நிரம்பியிருப்பவை; மேலும், அவை குடும்பப் பிணைப்பு என்ற புள்ளியில் இருந்து சாதிய, ஆண் மையவாதக் கண்ணோட்டத்தை மீண்டும் சமகால சமூகத்தில் உற்பத்தி செய்பவை. மண்வாசனைத் திரைப்படங்கள் என அழைக்கப்படும் கிராமம் சார்ந்த, குறிப்பாக தென் மாவட்டங்களின் நிகழும் கதைக்களங்களைக் கொண்ட இந்த வகைத் திரைப்படங்களில் இத்தகைய பண்புகள் இருப்பது பல அறிஞர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், முத்தையாவின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்கள் முற்றிலும் வேறுபடுவதோடு, சாதியப் பெருமிதத்தின் பெண் முகமாக அடையாளம் பெறுகின்றனர்.

கிராமப் புற சினிமாவுக்கே உரிய, குறும்பு செய்யக்கூடிய, வெள்ளந்தியான, நகரத்தின் கலாச்சாரத்தால் சீண்டப்படாத பெண் கதாபாத்திரங்களின் தொடர்ச்சியைப் போல தோற்றம் கொண்டிருந்தாலும், வழக்கமாக ஆண் நாயகர்களுக்கு உரிய மிடுக்கும், தோரணையும் முத்தையாவின் பெண்களுக்கு இருப்பதைக் காண முடியும். இது அவரின் எல்லா திரைப்படங்களிலும் பல்வேறு பெண் கதாபாத்திரங்களில் இடம்பெற்றிருக்கின்றன. தன் சொந்த சாதி ஆண்களோடு மல்லுக்கு நிற்பதையும், தனக்கான வெளியைக் கோருவதிலும் இந்தக் கதாபாத்திரங்கள் தைரியமான பெண்களாக முன்வைக்கப்படுகின்றனர். எனினும், இத்தகைய கதாபாத்திரங்கள் சாதியக் குழுவின் விசுவாசத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், சாதியின் மானம், சொத்து, உள்சாதித் திருமணம் முதலானவற்றைப் பாதுகாப்பவர்களாக இந்த சித்தரிப்புகளைக் கருத முடியும். சமீபத்தில் திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் கவின் விவகாரத்தில் அவரது காதலி சுபாஷினி பேசிய வீடியோவில் தனது பெற்றோரைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் இதனோடு பொருத்த முடியும். சுபாஷினியின் கையறுநிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய அதே வேளையில், சாதியத்தின் இயங்குமுறை அவரை வைத்தே மீண்டும் சாதிய ஒழுங்கைப் பாதுகாக்க வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முத்தையாவின் பெரும்பாலான திரைப்படங்கள், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அறிமுகப்படுத்தும் பெண் கதாபாத்திரங்கள் வழக்கமான மென்மை, தாய்மை முதலான பண்புகளில் இருந்து விலகி, வீரம், மானம், துணிவு முதலான பண்புகளோடு காட்சிப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெண்களின் ‘சரியான’ கோபத்தில் இருந்தே, சாதியைப் பாதுகாக்கும் கூறுகளின் வழியாக, கதையின் மையத்தை விளக்குகின்றன முத்தையாவின் திரைப்படங்கள். உதாரணமாக, ‘குட்டிப் புலி’ திரைப்படத்தின் தாய்-மகன் உறவின் பிணைப்பைக் காட்டும் எல்லையில், மகனின் எதிரியைத் தாயே கொலை செய்வதாக திரைப்படம் முடிவடைகிறது. இறுதியில் ‘பெண்மையே வீரம்’ என்று பார்வையாளர்களுக்கு கூறப்படுகிறது. அவரது ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’,.’தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ ஆகிய அனைத்து திரைப்படங்களிலும் இப்படியான பெண் கதாபாத்திரங்கள் முதன்மையாக இடம்பிடித்திருப்பதைக் காணலாம். மென்மையோடும், ஆணின் துணையாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்ட கிராமத்துப் பெண்களைப் போல அல்லாமல், முத்தையாவின் நாயகிகள் ஒப்பீட்டளவில் துணிச்சல் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இவை முற்போக்காக தோன்றினாலும், இந்தப் பெண் கதாபாத்திரங்களின் மையம் என்பது சாதியைப் பாதுகாத்தலில் ஊன்றியிருக்கிறது.

முத்தையாவின் பெண்கள் ஆண் நாயகர்களைப் போல ‘வீரம்’ என்பதை வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். அவரது குரல்கள் துணிச்சலாக எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றன. எனினும், அது சாதி தரும் உயர்வான மனநிலையில் இருந்தும், பெருமிதத்தில் இருந்தும், ‘மானம்’, ‘கற்பு’ முதலான பழமைவாத நெறிகளிலும் வேரூன்றியிருக்கின்றது. முத்தையாவின் பெண்கள் எழுப்பும் குரல்கள் சாதியை எதிர்த்து அல்ல; சாதியைப் பாதுகாப்பதற்கு எழுகின்றன. இந்தப் பெண்களுக்கு முத்தையா வழங்கும் ‘வீரம்’, ‘துணிச்சல்’ ஆகிய குணநலன்கள் சாதியையோ, நிலவும் பிற அசமத்துவ இடைவெளிகளையோ எதிர்த்துக் கேள்வி எழுப்புவதில்லை. மாறாக, அவை சாதிய ஒழுங்குமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்த பயன்படுகின்றன. இத்தகைய வழமையான சினிமாவில் இடம்பெறும் ஆணுக்கே உரிய குணநலன்களைப் பெண் கதாபாத்திரங்களுக்கு மடைமாற்றவும், அவர்களுக்கும் நாயக பிம்பத்தை வழங்கவும் தமிழ் சினிமாவின் வெகுஜனத் திரைப்பட வடிவம் இடமளிக்கிறது.

தமிழ் சினிமாவின் மதுரையை மையப்படுத்திய தேவர் சாதி பெருமிதத்தைப் பேசும் திரைப்படங்கள் குறித்து நேர்த்தியான ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ’மதுரை ஃபார்முலா’ திரைப்படங்கள் என அழைக்கப்படும் இந்தத் திரைப்படங்களில் பொது அம்சமாக, நிலம், சொத்து முதலான மூலதனங்களைக் கொண்டிருக்கும் தேவர் சமூகத்தின் ஆண்மையைப் போற்றுபவையாக இருக்கின்றன. இதனை வன்முறை, சாதிய கிராம அளவீடுகளின் அடிப்படையிலான நெறிகள், மானம், பழிவாங்குதல் முதலானவற்றின் வழியாக இந்தத் திரைப்படங்கள் கட்டமைக்கின்றன. இங்கு ஆண்மை என்பது சாதியோடு நேரடியாக தொடர்புபடுத்தப்படுகிறது. அதற்கு அரிவாள் முதலான ஆயுதங்கள், முறுக்கு மீசை, முழங்காலுக்கு மேல் மடித்து கட்டப்படும் வேட்டி, சுற்றிலும் அடியாள்கள் முதலான பொருள்களும், அலங்காரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ‘மானம்’ காப்பதே சாதிய வாழ்வின் முதன்மைக் குறிக்கோள் என்னும் கருத்தை சமூகத்தின் பொதுப்புத்தியாக கட்டமைக்க இந்தத் திரைப்படங்கள் அதற்கு ஆண்கள் ’வீரம்’ என்பதையும், பெண்கள் கற்புநெறி தவறாமல் — பிற சாதி ஆண்களோடு புழங்காமல் — இருப்பதையும் முன்வைக்கின்றன மதுரை திரைப்படங்கள்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளியான மண்வாசனைத் திரைப்படங்களின் நாயகிகள் பாலியல் ரீதியாக அடிபணிபவர்களாக, நவீனத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாலும், மீண்டும் ஆணாதிக்க, சாதிய சுழலுக்குள் சிக்கியவர்களாக, தனது ஆசைகளைக் கைவிட்டு முடிவை ஏற்பவர்களாக சித்தரிக்கப்பட்டனர். 2000களின் மதுரை சார்ந்த திரைப்படங்களைச் சேர்ந்த பெரும்பாலான நாயகிகள் சாதியை எதிர்த்து, காதலை முதன்மைப்படுத்துபவர்களாகவும், அதன் காரணமாக கொல்லப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். சாதியின் யதார்த்தத்தைக் கலைக்க முயன்றதற்காக இந்த நாயகிகளை அந்தந்த கதையாடல்களே தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. 2010களுக்குப் பிறகு, முத்தையாவின் நாயகிகளின் சித்தரிப்பு சாதியை மீறி காதலிக்கும் பெண்களாக அல்லாமல், சாதியைப் பாதுகாக்கும் பெண்களாக இருக்கின்றனர். உணர்வு, உறவு முதலானவற்றின் பெயரால் சாதியை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யும் பொறுப்பு கொண்டோராக இருக்கும் முத்தையாவின் நாயகிகள், சாதிய ஆணாதிக்கப் பெருமிதத்தின் நீட்சிகளாக செயல்படுகின்றனர். பிற பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கினாலும், வன்முறையின் சுழற்சி தொடர்ந்தாலும், சாதி மானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முத்தையாவின் நாயகிகளின் முதன்மைப் பணி. ’16 வயதினிலே’ மயிலு, ‘தேவர் மகன்’ பஞ்சவர்ணம், ‘பருத்தி வீரன்’ முத்தழகு ஆகிய நாயகிகளோடு முத்தையாவின் நாயகிகளை ஒப்பிடும்போது இதனைத் தெளிவாக உணர முடியும்.

முத்தையாவின் நாயகிகள் இப்படியாக உருவாக்கப்படுவதன் மூலமாக, தேவர் சாதியின் பெண்ணுக்கான இலக்கணமும், குணநலன்களும் பொதுப் புத்தியில் உருவாக்கப்படுகின்றன; ‘இதுதான் இயற்கை’ என்று இயல்பாக்கம் செய்யப்படுகின்றன. 2010களின் தொடக்கத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் உருவாகப்பட்ட தலித் அல்லாத அனைத்து சாதியினர் கூட்டமைப்பு என்பது திராவிட இயக்கத்தின் நீண்ட வரலாற்றில் ஒரு அவமானகரமான நிகழ்வு. அதில் சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்களைப் பாதுகாப்பது முதன்மை நோக்கமாக சொல்லப்பட்டது; அதன்மூலமாக சாதியையும், சொத்துகளையும் பாதுகாப்பதை அந்த இயக்கம் முன்னெடுத்தது. முத்தையாவின் நாயகிகளை இந்த சமூக, அரசியல் நிகழ்வுகளின் விளைபொருளாகக் கருதுவதற்கு இடமுண்டு. ஆதிக்க சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் சாதியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆணவக் கொலைகளில் ஆதிக்க சாதிப் பெண்கள் தனி நபர்களாக பாதிக்கப்பட்டாலும், பிற பெண்கள் சாதிய நிறுவனத்தின் துணையுடன் சாதியின் மானத்திற்கும், அகமணமுறைக்கும் அரணாக செயல்படுகின்றனர். திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை விவகாரத்தில் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் சுர்ஜித்தின் தாய் இந்த வகையைச் சேர்ந்தவர். சாதி மானத்தையும், குடும்ப மானத்தையும் காப்பாற்றும் பொறுப்பு, அவருக்கு அடுத்ததாக சுபாஷினிக்கு அவர் விரும்பியோ, விரும்பாமலோ திணிக்கப்படுகிறது; சாதியமைப்பின் தூய்மை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை நிகழும் சாதிய வன்முறைச் செயல்கள் திராவிட அரசியலின் போதாமைகளை வெளிக்காட்டுகின்றன. நவீன திராவிட அரசியலின் இயக்கச் செயல்பாடுகளும், அரசியல் கணக்குகளும் இடைநிலைச் சாதிகளின் உருமாற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. முத்தையாவின் பெரும்பாலான திரைப்படங்கள் திமுக, அதிமுக முதலான திராவிடக் கட்சிகளின் மூலதனத்தால் உருவானவை. தேவர் ஜெயந்தி போன்ற சாதிய அடிப்படையிலான குருபூஜை நிகழ்ச்சிகள் கடந்த சில பத்தாண்டுகளில் தோன்றியவை என்னும் போது, அவற்றை அரசியல் ரீதியாக அங்கீகரித்திருக்கின்றன திராவிடக் கட்சிகள். இது ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு தலைவர் என்று படர்ந்திருக்கிறது. முத்தையாவின் திரைப்படங்களில் வெளிப்படும் பிரம்மாண்ட காட்சியமைப்புகள் (Spectacle) இத்தகைய சாதியக் கலாச்சார நிகழ்வுகளின் மூலமாக யதார்த்தத்தை வந்தடைகின்றன. திரைக்கும், உண்மைக்கும் இடையிலான வெளி சுருக்கப்படுகிறது. இப்படியான புற யதார்த்ததை சினிமா உற்பத்தி செய்யும் சூழலில், சாதியத்தை முன்னிறுத்தி, பொருளாதார ஆதாயத்திற்காக எடுக்கப்படும் திரைப்படங்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பது இன்றியமையாத தேவையாக உருவெடுத்திருக்கிறது.

முத்தையாவின் பெண் கதாபாத்திரங்களை மேலோட்டமாக அணுகும் போது, ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்தவர்களாக தெரியலாம். திரையில் காட்டப்படும் ஆண்களைப் போன்ற துணிச்சலும், நிலக்கிழார்களைப் போன்ற உடல்மொழியையும் கொண்டிருந்தாலும், இந்தப் பெண் கதாபாத்திரங்கள் சாதியமைப்பின் அலங்காரப் பொருள்களாக இயங்குகின்றனர். அவர்களின் அதிகாரத் தோரணை ஆண்களையே எதிர்த்தாலும், வன்முறையை ஊக்குவித்தாலும், அது சாதி, குடும்ப மானம், குலப்பெருமை முதலானவற்றைக் காப்பதற்காக மட்டுமே பணியாற்றுகிறது. தேவர் சமூகப் பெண்களைக் கடவுளர்களாக, சினிமாவின் அழிக்க முடியாத ஹீரோயிச தன்மை கொண்டவர்களாக முத்தையாவின் திரைப்படங்களில் காட்டப்படும் சித்தரிப்புகள் சாதியமைப்பை மீறுவதைத் தடுக்கின்றது; பெண்களை மீண்டும் சாதிய குடும்ப அமைப்புமுறைக்குள் விதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நிலைநிறுத்துகிறது; வன்முறையை நியாயப்படுத்துகிறது.

பல்வேறு துறைகளில் சமகாலத்தில் நிகழ்ந்திருக்கும் பெண்களின் முன்னேற்றம் காரணமாகவும், குடும்ப உறவுகளுக்கு இடையிலான பிரச்னைகளைப் பற்றிய, மக்களைக் குடும்பங்களாக திரையரங்கிற்கு வரச் செய்யும் சந்தைப் பொருள்களாக உருவாக்கப்படும் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் பாரம்பரியத்தின் பல கூறுகளை மீறுவதாக உருவாக்கப்படுகின்றனர்; குடும்பங்களைக் கவரக்கூடிய தொலைக்காட்சி சீரியல்களும் இத்தகைய துணிச்சலான பெண்களின் கதைகள் தாம். இந்த இழையை முத்தையாவின் திரைப்படங்கள் சாதிய நோக்கில் திரிக்கின்றன.

தமிழ்நாட்டில் நிகழும் ஆணவக்கொலைகள் குறித்த ஈ.பி.டபிள்யூ ஆய்வில், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்கள் இத்தகைய வழக்குகளில் மூன்று விதமான களங்கங்களைச் சுமப்பதாகக் கூறப்படுகின்றது. முதலாவதாக, சாதி மீறி காதலிப்பதால் உருவாவது; இரண்டாவது, கொல்லப்பட்ட தனது காதலனுக்காக நீதி கேட்கத் தவறுவதால் உருவாவது; மூன்றாவதாக, கொல்லப்பட்ட தனது காதலனுக்கு நீதி கேட்டு, சொந்த குடும்பத்தையே எதிரிகளாக்குவதால் உருவாவது. கவின் ஆணவக் கொலையில் சுபாஷினியின் நிலையும் இத்தகைய களங்கங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வது மட்டுமே அவர் முன் இருக்கும் வாய்ப்புகள். எனினும், சுபாஷினி வெளியிட்ட வீடியோ காலம் காலமாக சாதியச் சமூகம் உற்பத்தி செய்யும் ஒழுங்குமுறையின் திரைக்கதை வடிவமாக இருக்கிறது. தனது காதல் குறித்த உண்மையைச் சொல்லத் துணிந்த சுபாஷினி, தனது பெற்றோர் குறித்து பேசும் போது தடுமாறுகிறார். முத்தையாவின் திரைப்படங்கள் அரசியல், கலாச்சார வெளிகளில் உருவாக்கும் தாக்கத்தின் விளைவுகளாக சுபாஷினி, அவரது தம்பி சுர்ஜித் ஆகியோரைக் காண முடியும். காதலுக்கு, சாதியத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டிருந்தாலும், சுபாஷினியும் முத்தையாவின் நாயகிகளைப் போலவே வளர்க்கப்பட்டிருக்கிறார். மானம் என்பது காதலில் அல்ல; சாதியின் பெருமிதத்தைக் காப்பதில் இருப்பதாக அவருக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. தான் மிகவும் நேசித்த காதலனே கொல்லப்பட்டாலும், உண்மையை எதிர்கொள்ளாமல், புதைக்கும் அளவுக்கு சாதியைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்மீது இன்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பெண் என்னும் இயல்பே சாதியின் காவலாளியாக மீள்கட்டமைப்பு செய்யப்படுகிறது. அவளின் காதலும், காதலின் இழப்பும் சாதிய மானத்திற்குக் கொடுக்கப்பட்ட விலையாக மாறுகிறது.

  • ர. முகமது இல்யாஸ்.

NOTES:

  1. ஆணவக் கொலைகளின் காலம் : காதல்-சாதி-அரசியல் / ஸ்டாலின் ராஜாங்கம். நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2016
  2. Con-scripts of cinema: caste and criminal spaces in select contemporary Tamil films – Dickens Leonard – 2011 – M. Phil dissertation, University of Hyderabad.
  3. Honour killings in Tamil Nadu. (2025, July 6). Economic and Political Weekly. https://www.epw.in/journal/2025/26-27/perspectives/honour-killings-tamil-nadu.html
  4. Madurai formula films: Caste pride and politics in Tamil cinema – K Damodaran, H Gorringe. South Asia Multidisciplinary Academic Journal, 2017
  5. Narrating seduction: vicissitudes of the sexed subject in Tamil nativity film – Sundar Kaali – Making meaning in Indian cinema, 2000 – Oxford University Press, New Delhi.